அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கவிதைக் குயில் மறைவு

தித்திக்கும் தமிழில், தெள்ளத் தெளிந்த கருத்தில், முத்து முத்தான வரிகளைத் தந்து மகிழ்வித்த நாஞ்சில் ஒளி, கவிமணி தேசிக விநாயகம் அவர்களைத் தமிழகம் இழந்துவிட்டது என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.

எதுகைமோனைச் சண்டைகளிலும், சமயவாதக் குழப்பங்களிலும், கவிதை புனைவோர் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த நிலைமாறி கவிதைகள் மக்களின் மனப் பண்புகளை வளர்க்கும் வகையில் மலர வேண்டும்! - என்கிற நம்பிக்கை கொண்டிருந்த கவிஞர்களில் அவரும் ஒருவர் நல்ல உள்ளமும், அடக்கமான சுபாவமும், அன்புக் குணமும் கொண்ட ‘கிழவர்‘ அவர்! தள்ளாத வயதிலும் தமிழ் மீதும், தமிழகத்தின்மீதும் அவருக்கிருந்த பற்று, கொஞ்சமல்ல!! அண்மையில் நடைபெற்ற நாஞ்சில் உரிமைப் போருக்கும் தன்னுடைய ‘வாழ்த்தை‘ வழங்கியிருந்தார்.

அவர் பல ‘விஷயங்களைப்‘ பற்றிக் கவிதைகள் எழுதியிருக்கிறார் ஆராய்ச்சி நூலும் தந்திருக்கிறார் – பொதுப் பிரச்னை பற்றி கருத்துக்களையும் எழுதியிருக்கிறார். புத்தரின் பொன்னொளியினை விளக்கும் வகையிலும், குழந்தைச் செல்வங்களின் உள்ளத்தைக் கவரும் சின்னஞ்சிறு கவிதைகள் மூலமும், சாகாத நிலைபெற்ற நல்லதோர் பணியினைச் செய்திருக்கிறார். அத்தகைய ஒரு தமிழ்க்குயிலை, அரசு எப்போதோ கௌரவித்திருக்க வேண்டும்! செய்யவில்லை!! யார் யாருக்கோ பொன்னாடை போர்த்தியதே அன்றி அந்த முதுகிழவருக்கு ஏதும் செய்யவில்லை.

அவருடைய மறைவு கேட்டு மலையாள முதலமைச்சர் பட்டம் தாணு, ‘நீண்டதோர் அறிக்கை விட்டு தன்னுடைய வருத்தத்தை வெளியிட்டிருப்பதைக் காணும்போது, கவிமணியின் தமிழ்ப்பாடல், பிறமொழியினரின் உள்ளங்களையும் வளைத்திருக்கிறது என்பது விளங்கும். அத்தகை அருமணியை இழந்த தாயகம், வருந்துகிறது! தன்னுடைய அன்பு மரியாதையையும், நன்றியையும் காட்டிக் கொள்கிறது!! அவர் மறைந்த அதே நாளில் ‘சிருங்கேரி‘ எனும் சிங்கார மடத்தின் ‘குரு‘ மறைந்தாராம்! அந்த மறைவு கேட்ட உடன் டில்லித் தலைவர் பிரசாத்திடமிருந்து, வருத்தமும் அனுதாபமும் பெரிய அறிக்கையாக வந்திருக்கிறது!! ஆனால் நமது கவிமணியின் மறைவு கேட்டு...? நாமும், தமிழகமும்தான் கலங்குகிறோம்.

கவிமணி, சராசரி காலத்தைவிட அதிகநாள் வாழ்ந்தவர். தன்னுடைய எழுத்துக்கள் மூலம், மக்கள் மனதில், சாகாத இடம் பெற்றுவிட்டவர். அவர் போய்விட்டார் எனினும் அவரது கவிதைகளும் கருத்துக்களும் என்றும் நம்மிடையே இருக்கும்! அவைகளை எண்ணித் துயரினை மறப்போம்!! வாழ்க கவிமணியின் புகழ்!!

திராவிட நாடு – 3-10-54