அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கீவும், போச்சா!

“ஜெர்மன், படைகள், ஒரு நகருக்குள் நுழைந்துவிட்டால், பிறகு அப்படையினரை வெளியே விரட்டும் சக்தியே, உலகிலே இல்லை” என்று இறுமாப்புடன் பேசிய ஹிட்லர், இப்போது, என்ன சொல்கிறார்!!

ஸ்டாலின்கிராட் வெற்றியிலிருந்து தொடங்கி, சோவியத் படை வெற்றிமேல் வெற்றி அடைந்தவண்ணமிருக்கிறது. பிடித்த இடங்களைவிட்டு நாஜிகள் பிடரியில் கால்பட ஓடுகின்றனர்!
கோடைகாலத்திலே, நாஜிகள் சூரர்கள் என்ற சொல் எங்கே?

சோவியத் சேனை சோர்ந்துவிட்டது என்ற சூதுரை எங்கே?

ரஷியாவிலே முக்காலே மூன்றுவீசம் தீர்ந்துவிட்டது என்று பேசிய பஞ்சாங்கப் படையின் வாய் என்ன சொல்லுகிறது?

இதோ, பிரமாதமான கோட்டை,, என்று நாஜிகள் கூறிவந்த கீவ், சோவியத் படைகளிடம் சிக்கிவிட்டது. சிதறி ஓடுகின்றனர் ஜெர்மானியர்.

கீவ், ஜெர்மானியரிடம் முன்பு பிடிபட்டபோது, இங்கு எதிரிகளிடம் கைக்கூலி கிடைக்காதா என்ற ஈன எண்ணங்கொண்ட கூட்டம், எவ்வளவு ஆர்ப்பரித்தது!

கீவ், உக்ரைனின் தலைநகரம். உக்ரைன் சோவியத் களஞ்சியம்!

கீவ், தொழிற்சாலைகள் நிரம்பிய முக்கிய நகரம்.

கீவ், நீப்பர்நதியின் வலதுபுறத்திலே முக்கியமான பாலம்; இங்கிருந்து ஜெர்மானியரை, மேலும் விரட்டியடிக்க வசதி அதிகம்.

கீவ், நகரிலே, ஜெர்மானியர், பலமான அரண்கள் அமைத்துக் கொண்டிருந்தும் பயனில்லாமற் போய்விட்டது.

இரண்டாண்டுகளாகக் கீவ் ஜெர்மானியர் வசமிருந்தது. 1941 செப்டம்பர் 22ந் தேதி கீவ் ஜெர்மானியரிடம் சிக்கிற்று. 1943, நவம்பர் 6ந் தேதி விடியற்காலை, கீவை ரஷ்யர் திரும்பப் பிடித்தனர்.

இச்செய்தி மாஸ்கோவிலே மட்டுமன்று, மாநிலமெங்குமே குதூகலத்தை உண்டாக்கியிருக்கிறது.

தோழர் ஸ்டாலின் ரஷ்யப் பொதுஉடைமை ஆட்சி ஸ்தாபனத்தின் 26வது ஆண்டு விழாக்கூட்டத்திலே, உணர்ச்சியும், உற்சாகமும் கொண்டதோர் சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறார். கீவ் வெற்றியைப் பாராட்டியுள்ளார்.

சோவியத் வெற்றிகள், மாஸ்கோ மாநாட்டு முடிவுகள், சேர்ந்து, ஹிட்லருக்குக் கலக்கத்தைத் தராமலிருக்குமா!

புள்ளி விவரமே, போதும், பெர்லினில் பீதியைக் கிளப்ப, மாஸ்கோவிலே சுவஸ்திகக் கொடியை நாட்டச்சென்ற நாஜிகள், கடந்த வருஷத்தில் மட்டும் கொடுத்திருக்கும் “காவு” சொல்லுந் தரத்ததன்று., 4,000,000 ஆட்கள் நஷ்டம், நாஜிகளுக்கு! 20,000 டாக்கிகள், 40,000 பீரங்கிகள் நஷ்டம்!! இவைகளுடன் பிடித்த இடங்கள் பெரும்பாலும் கைவிட்டுப் போய்விட்டன.

சென்னை மாகாணத்தளவுள்ள பிரதேசம் இதுவரை ரஷ்யரால் ஜெர்மானியரிடமிருந்து மீட்கப்பட்டிருக்கிறது.

சோவியத் நாட்டின் ஆயுத உற்பத்தி அதிகரித்திருப்பதையும், உணவுப் பொருள் பிரச்னை சரியாக இருப்பதையும், தோழர் ஸ்டாலின், தமது சொற்பொழிவிலே குறிப்பிட்டிருக்கிறார். கீவ் வீழ்ந்ததும், மாஸ்கோவிலே 324 பீரங்கிகளிலிருந்து கிளம்பியது வேட்டுச் சத்தம்!! விரைவிலே, சோவியத் படை, ஜெர்மனியைத் தாக்கவருமே, என்ன செய்வது என்ற கலக்கம் ஹிட்லருக்கு!! இந்நிலையில், ஹிட்லர், முனிச்சில் முடுக்குடன், “விஸ்வாசமே, கௌரவம்” என்று பேசினாராம். அவருக்கு நாம் அனுப்பும் வாசகம், படு மனமே, படு! என்பதே.

படுமனமே, படு!!

14.11.1943