அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கிலிஸ்தான்!

``கர்தகளே! கற்பழிக்கவா துணிகிறாய்!’’

``கண்ணாளா! கட்டிலறைக்கு வா!’’

``கள்னெஞ்சமா உனக்கு? கைபிடித்திழுத் தாலும் வாரேன் என்கிறீரே!’’

இவை, கற்புக்கரசி, காதலரசி, கலவிக் கடைக்காரி எனும் மூன்று விதமானவர்களின் மூன்று வித மொழிகளாக இருப்பின், யாரும் வியப்படையக் காரணமில்லை. ஆனால், ஒரே மாது, மாலையிலே கற்பு பேசி, நடு நீசியிலே காதலுரையாடி விடியும்போது விரகதாபத்தோடு சொல் வீசினாள் என்றால், வியப்பு மட்டுமா இருக்கும், அந்தப் பெண்பால் பேதையா, பித்தம் பிடித்தவளா, என்ற சந்தேகம் உண்டாகுமல்லவா?

இதுகூட அவ்வளவு விந்தையல்ல! எதிரி கிட்டே வருவதற்கு முன்பு வீறாப்பு பேசி எதிரி நெருங்கினதும் பல்லிளித்து நின்று, அவன் அசட்டையாகத் திரும்பிய பிறகு, ``ஏறெடுத்தும் பாரேன் என்கிறாரே, நான் இவரிடம் எவ்வளவு நேசமாக இருக்கிறேன், இவருக்கு ஏனோ என்னிடம் இவ்வளவு வெறுப்பு?’’ என்று கூறுவது மாக ஒருவர் இருந்திடக் கண்டால், அந்தப் பேர்வழியின் பெயர் எந்தப்பட்டியிலே பொறிக்கப்பட வேண்டுமென்று யோசிக்க வேண்டாமோ!
அதிலும் இவ்விதமான விந்தை மிகுந்த மொழி மாற்றங்கள், ஒரு பெரிய பிரச்சினையிலே, ஒரு நாட்டு எதிர்காலத்தைப் பொறுத்த விஷயத் திலே, மதிப்பிற்குரிய ஒரு அரசியல் தலை வருக்கு இருக்குமானால், அது விந்தை மட்டுமல்ல, விபரீதமும் கூட என்று கூறுவோம்.

பாரத மாதாவை வெட்டுவதா? அடுக்குமா? இயற்கை இடந்தருமா? அரசியல் அறிவுடைமை யாகுமா? ஜனநாயகக் கோட்பாடு என்னாவது? பாகிஸ்தானா, பாதகஸ்தானா? இதென்ன கொடுமை! என்று ஆத்திரம் பொங்கப் பொங்க அன்று ஆச்சாரியார் பேசி, முஸ்லீம் லீகை ஏசி, குட்டிக் கதைகளை வீசினாரே, அது உண்மை யாக அவருடைய கருத்தா அல்லது நடிப்புத் திறனா?

பாகிஸ்தானால் பாதகம் ஏற்படாது! பரங்கியை விரட்ட வேண்டுமென்றால் பாகிஸ் தானுக்கு இணங்கத்தான் வேண்டும். பழைய துணி நைந்து விட்டால் இரு துண்டுகளாக்குவது அவசியம் என்று பேசி வரத் தொடங்கினாரே, இது உண்மைக் கருத்தா, உயர்தரமான நடிப்பா?

பாகிஸ்தானுக்கு நான் சம்மதிக்கிறேன் காந்தியாரும் ``ததாஸ்து’’ கூறிவிட்டார். ஜின்னா சாயபுதான், நானாக, வலிய, பாகிஸ்தான் தர இசைந்தும், சமரசத்துக்கு வர மறுக்கிறார், என்னே அவர் போக்கு, நாட்டினரே! இதை நோக்குக, என் முயற்சி முறிந்துவிட்டது, என்று இதுபோது அறிக்கைகள் விடுகிறாரே, இது உண்மையான மனப்பாங்கா அல்லது புதுவிதமான நடிப்பா?

வீரம், சாந்தம், சோகம் என்ற முறையிலே அந்த நாட்களிலே கனல் கக்கும் விழியுடன் நின்றார், பின்னர் புன்னகை முகத்தோரானார், இன்றோ சிந்தாகூலராகக் காட்சித் தருகிறாரே, ஆச்சாரியார், இந்த மூன்று விதமான காட்சிகளிலே எது நிஜஸ்வரூபம், எது வேடம் என்பது நமக்குத் தெரியவில்லை. நாட்டிலே உள்ளோரிலே எத்துணை பேருக்குத் தெரியுமோ நாம் அறியக்கூடவுமில்லை. வேளைக்கொரு பேச்சுப் பேசும் விபரீதம் நம்மைத் தூக்கி வாரிப் போடுகிறது! ஒரு சரியான விளம்பர இயந்திரம் உதவி செய்வதால் மட்டுமே, இப்படி மாறி மாறிப் பேசுபவர், இன்னமும் அபிப்பிராயம் கூறுமளவு அரசியல் அந்தஸ்து பெற்றிருக்கிறார். ஆரியராக இருப்பதாலேயே இப்படி அவருக்கு எவ்வெப் போது எதெது தோன்றுகிறதோ அவைகளைக் கூறவும், வாதிடவும் முடிகிறது. ஆனால், பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட மட்டிலே, ஆச்சாரி யார், முடிவான, இருதயப்பூர்வமான அபிப் பிராயத்தைத் தெரிவித்துவிட்டாரா, அல்லது வேறு மாற்றங்களும் நேரிடக்கூடுமா என்பது பற்றி நாம் ஏதும் கூறுவதற்கில்லை. அவருடைய மொழிப்படி, ``வேளைக்கேற்ற மூளை’’ அவருக்கு இருக்குமாம்! நல்ல தலைவர்! ஈடில்லை அவருக்கு! அன்பர் ஆச்சாரியாரிடம், குறிப்புப் புத்தகம் இருக்குமோ இராதோ நாமறியோம், நம்மிடம் இருக்கிறது இவருடைய பலரகப் பேச்சுகள் பொறிக்கப்பட்ட ஏடுகள். ஒருமுறை அந்த ஏடுகளைப் புரட்டினால், கண்காட்சியிலே வைக்கப்பட வேண்டியவர் அவர், என்று நமக்குத் தோன்றுகிறது. அவ்வளவு அபூர்வமான தலைகீழ் மாற்றங்கள் உள்ளன அவருடைய பேச்சுகளிலே!
அவருடைய பேச்சின் ரகங்கள், அரசியல் போர் முறையைக் காட்டிக் கூடியன என்றுரைப் பவர் உளர். முதலிலே எதிரியை மிரட்டிப் பார்ப்பது, பிறகு, எதிரியிடம் மித்ரன் போல நடித்துக் காட்டுவது, பிறகு எதிரி மிக முரட்டுத் தனமாக இருப்பதாகப் பிறர் நம்பும்படி பேசிக் காட்டுவது, என்ற முறையிலே ஒருவேளை ஆச்சாரியார், முதலிலே பாகிஸ்தானிகளைப் பதைக்கப் பதைக்கத் தூற்றியும் பிறகு பரிவு கொண்டவர் போல அவர்களைப் பக்கத்திலே வருமாறு அழைத்தும், இதுபோது, பாகிஸ்தானி கள் வேண்டுமென்றே சமரசத்தை வெறுத்துத் தள்ளுகிறார்கள் என்று பேசியும் வருகிறார் என்று கூறவும் கூடும். இவை உண்மை எனில், ஆச்சாரியார், ஆபத்தான ஓர் தந்திரசாலி! இவையல்ல உண்மை, அவருக்கு முதலிலே பாகிஸ்தான் என்றால் நயமாகத்தான் இருந்தது. பிறகுதான் அவருக்கு அது கேடு பயக்காது என்பது புரிந்தது என்று கூறுவரேல், ஆச்சாரியார், மிக மிக மந்தமதி படைத்தவர் என்று ஏற்படும். ஆபத்தான தந்திரசாலியானாலும், அறிவுக் கூர் மழுங்கியவரானாலும், இரண்டும், இடையூறு மட்டுமல்ல, நாட்டுக்கு இழுக்குங்கூட!

பாகிஸ்தானால் கேடு இல்லை, நாட்டு அடிமைத்தளை போக வேண்டுமானால், லீகுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டேயாக வேண்டும், என்று இப்போது உரைக்கும் ஆச்சாரியார், முதலிலே என் முப்புரியை உருவிக்கொண்டு, லீகின் மீது உக்கிரமாகப் பாய்ந்தார். ஆர அமர யோசித்து அன்றே இந்த நல்ல முடிவுக்கு வந்திருந்தால், நாட்டிலே நிலைமை எவ்வளவு மாறி இருக்கும்! ஆச்சாரியார் என்ன, கொடி தூக்கும் குப்பனா, கதர்க்கடை கந்தனா, விஷயம் புரியாமலிருக்க! தலைவர், வக்கீல், உபநிடதம் முதற் கொண்டு ஊராளும் முறைவரை படித்தவர். முதலமைச்சர். இப்படிப்பட்ட யோக்யதாம்சங்கள் பெற்றவருக்குப் பாகிஸ்தான் பாதகம் விளைவிக் காது என்பது புரிய, இவ்வளவு காலமா பிடிக்கும்! நமக்கு ஆச்சரியமும், அச்சமும் பிறக்கிறது, இதை எண்ணும்போது, தாமதித்துத்தான் தெளிவுவு பிறந்தது என்றே வைத்துக் கொள்வோம். ஜனாப்ஜின்னாவுக்குத் தாக்கீது அனுப்பினார். பாகிஸ்தானை ஏற்றுக் கொள்ளுகிறோம் இன்னின்ன நிபந்தகைளுடன் என்று. ஜனாப் ஜின்னா லீக் காரியக் கமிட்டியைக் கலந்து பிறகு பதில் கூறுகிறேன் என்று சொன்னார். இதற்குள் அவசரப்பட்டு, சமரசப் பேச்சு முறிந்துவிட்டது, சகல முயற்சியும் தோற்று விட்டது, இணங்கி வர ஜின்னா மறுத்துவிட்டார், என்று நாட்டவருக்கு அவ்வளவு பதைப்புடன் கூற வேண்டிய அவசியமென்ன நேரிட்டு விட்டது என்று கேட்கிறோம். இரண்டாண்டு களுக்கு மேலாகவே, பாகிஸ்தானை இவர் எதிர்த்தார், இவருடைய மனம் மாறியோ, நிலைமை மாறியோ, போர் முறை மாறியோ, எக்காரணத்தை முன்னிட்டோ பாகிஸ்தானை ஆதரிக்கிறார்.

(திராவிட நாடு - 23.7.1944)