அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது!

கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது! கோடு, குன்றம் இரண்டும் ஓரேபொருளைக் குறிக்கும் சொற்களன்றோ என்பர் அன்பர், உண்மை. அதுபோலவே இங்கு நாம் விளக்க எடுத்துக் கொண்ட பிரச்னை சம்பந்தப்பட்டமட்டில், உயர்ந்தது தாழ்ந்தது என்னும் இருசொற்களுமம் கூர்ந்து நோக்கும்போது, ஒரே பொருளையே தருவதும் விளங்கும்.

எந்தப் பிரச்சனை? எந்தக் கோடு? எந்தக் குன்றம்? அச்சாரியார் பிரச்சனை! திருச்செங்கோடு! திருப்பரங்குன்றம்! இவையே சிலபல திங்களாக வீடு, நாடு, மன்றமெங்கும் பேசப்பட்டவை. இப்போது திருச்செங்கோடு தேர்தல் செல்லுபடியாகக் கூடியதே என்று எற்பட்டுவிட்டபடியால், கோடு உயர்ந்தது என்றோம், திருப்பரங்குன்றத்திலே காங்கிரஸ் ஊழியர்கள் கூடிச் செய்த முச்சி இதன் பயனாய் முறிகிறதாகையால், குன்றம் தாழ்ந்தது என்றோம். இதுதானா? இதை ஏனோ, முதலிலே புரியாதபடி கூறத் தொடங்கினீர் என்று கேட்பீரேல், கூறுவோம். இந்தப் “பிரச்சனையை” அதற்கு நேரடியாகச் சம்பந்தப்பட்ட கட்சியினர், மக்கள் புரிந்துகொள்ளக் கூடாது என்ற நினைப்புடனேயே, பேசி வந்தனர். மக்கள், எங்கே, இந்தப் பிரச்னையைக் கூர்ந்து நோக்கி, ஊட்பொருளைத் தெரிந்து கொள்கிறார்களோ என்று அச்சம் கொண்ட ஆச்சாரியார், செல்லுமிடமெங்கும் “வெல்ல மொழியிலே” இது சாமான்ய விஷயம்! இதுபற்றி நீங்கள் சிந்திக்க வேண்டாம்! தேசப்பிரச்னையைக் கவனியுங்கள் என்று பேசி வந்தார். வெல்லமொழி என்று குறிப்பிட்டது, இனிமை இருந்தது, ஆனால் கொஞ்சம் மட்டரகமானது அந்த இனிமை என்பதைக் குறிப்பிடத்தான்.

ஆச்சாரியாரால் “சின்னவிஷயம்” என்று குறிப்பிடப்பட்ட பிரச்னை, உண்மையில் அப்படிப்பட்டதா, மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லாத சாமான்யப் பிரச்னைதானா? இல்லை! மிகச்சாமான்யப் பிரச்னையாக இருந்திருப்பின், தமிழகத்திலே கடந்த சில திங்களாக ஒரு கிளர்ச்சி இருந்திராது, பத்திரிகைகளிலே, தூற்றல் மொழிகள் குவிந்திராது. அசப்அலி வந்திருக்கவுமாட்டார். பிரச்னை, பெரிது என்பது மட்டுமல்ல, போர், புகைப்படலத்துக்குப் பின்புறம் நடத்தப்பட்டது; மக்கள் கண்களுக்கு அமளியின் போக்கு தெரியக்கூடாது என்பதற்காக. மதியூகமுள்ள மன்னன், தன் படையிலே புரட்சி கிளம்பினால், வெளியே தெரிய விடாமலேயே, புரட்சியை மடக்கப் பார்ப்பான்; ஆச்சாரியாரும் அதுபோலவே, இந்தப் பிரச்னையை மூடி வைத்தார்.

பிரச்னையோ, முக்கியமானது, ஒரு மூலாதாரப் பிரச்னையின் விளைவு. எரிமலை கக்கிய தீக்குழம்பு இன்று ஆறிவிட்டது, ஆறுவதற்கு முன்பு எதிர்க்கப்பட்ட பொருளைக் கருக்கியும் விட்டது, அது மட்டுமல்ல, தீக்குழம்பு மீண்டும் கக்கும் நிலையிலேயே எரிமலை இருக்கிறது. இதனைச் சிறு பிரச்னை என்று ஆச்சாரியார் கூறுவது, சிறுமதியாலல்ல, மக்களின் மதியைச் சிரிதாக்க! நடந்தது என்ன? வேவல்பிரவு, மாளிகைக்குள்ளே நுழைவதா கூடாதா என்று, அவருடைய மெய்ப்பாதுகாவலர், உத்திரவிட ஆரம்பித்தனர் என்றால் தூக்கிவாரிப் போடுமல்லவா? அதுபோலவே, தமிழ்நாட்டுக் காங்கிரசுக்குத் தலைமை பூண்டு நடத்தத் தகுதியும் திறமையும் உள்ளவர், தவக்கோலக் காந்தியாரின் சம்பந்தி என்ற நிலைபெற்றவர், தத்துவார்த்த ஊரையும் தாத்தாக் காலக் கதையும் கூறி, தகர்ந்து போன கொள்கைகளை எல்லாம்கூட நாட்டிலே விலைபோகச் செய்பவர், வேதியகுலச் சிரேஷ்டர், வாதாடுந் தொழிலிலே வல்லவர், பிரச்சார யந்தரங்கள் சகிதம் பக்தகோடிகள் வரவேற்க பட்டினப்பிரவேசங்கள் நடத்தி வந்தவராம் ஆச்சாரியாரை, இரண்டாம் காந்தியாரை, கட்டளைத் தம்பிரானை, காமராஜர், மடாலய காரிய கர்த்தா, உள்ளே நுழையாதே, என்று கூறினால், தூக்கிவாரிப் போடாதா? நடக்கக்கூடிய காரியமா, என்றே எவரும், நடந்ததற்கு முன்னாள்வரை கூறியிருப்பர். ஆனால் நடந்தது! தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர் காமராஜர், ஆச்சாரியார் திருச்செங்கோடு கமிட்டி மூலம் காங்கிரசில் நுழைந்தது தவறு என்று கூறினார், தடை விதித்தார், படை திரட்டினார் ஆச்சாரியார், விடை இறுத்தது காமராஜரின் படை, திருப்பரங்குன்றம் நடந்தது, “கோபாலசாமிகள்” நடந்தன! இது, சாமான்யப் பிரச்னையா? சீ.ஆர். கட்சியா? காமராஜ் கட்சியா? திருச்செங்கோடா? திருப்பரங்குன்றமா? என்று கேட்காத இடமோ, நாளோ கிடையாது? இதனைத்தான் ஆச்சாரியார், “மக்கள் கவனிக்க ஆரம்பித்தால், சி.ஆரா? காமராஜா, என்று கேட்பதோடு நிறுத்தமாட்டார்கள். ஏயரா, நாடாரா? என்று ஆரம்பிப்பர், பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதவரா? என்று மேலால் பேசுவர், முடிவில் ஆரியரா? திராவிடரா? என்ற மூலப் பிரச்னைக்கே வந்து சேருவர்; இதைத் தடுக்கவே ஆச்சாரியார், இது சாமான்யமான பிரச்னை, என்று கூறினார். ஆனால், மக்கள், இதனால், சிந்திக்காமலே இருந்து விட்டனர் என்று ஆச்சாரியார் கருதினால், அவர் ஏமாளியாவார். மக்கள் மிகக்கூர்ந்து கவனித்தனர். திருச்செங்கோடு இதரவாளர்கள், நமது இயக்கத் தலைவர்களை காணும்போதெல்லாம், கிண்டியில் தோற்றவன் போலக்காட்சி தந்தனர்; திருப்பரங்குன்றத்துக் கட்சியினர், போட்டிப் பரிசிலே வெற்றி பெற்றவர்போல விளங்கினர். திருச்செங்கோட்டாரின் திருவிழிகள் “உன் முகத்திலே விழிக்க வேண்டுமா” என்று கேட்டன நம்மை நோக்கி; குன்றத்தாரின் கூத்தாடும் கண்களோ, “இப்போது என்ன சொல்கிறீர்கள்?” என்று நம்மை நோக்கிக் கேட்டன. இது, சர்வசாமான்யமான, சின்ன விஷயமானால், ‘இனம் இனத்தோடு’ என்ற நிலையே ஏற்பட்டிராது. இரு கட்சியின் பல விசேஷத்தைக் கவனிப்பவர்கள், இதிலே “இனப்பிரச்னை” இருந்ததை அறிவர், அறிந்தும் சிலர் மறுப்பர். விளைவு எண்ணி அஞ்சி அறியாதாரும் இருப்பர், புரியாத காரணத்தால்.

இந்தப் பிரச்னையின் உட்கருத்து இருக்கட்டும், இந்தப் போரிலே, வீசப்பட்ட ‘வாசகங்களைக்’ கவனிப்போம், மிகச் சாதாரணப் பிரச்னைக்காகவா, கடுஞ்சொற்கள், நஞ்சு தோய்ந்த சொற்கள், வீசப்படும்! காமராஜரோ, ஆச்சாரியாரோ, ‘மட்டரக’ வேலையிலே ஈடுபட்டவர்களா? ஒருநாட்டை மீட்டிடும் படைத்தளபதிகளாயிற்றே! அவர்கள், ‘சின்னவிஷயத்திலே’ ஈடுபட முடியுமா, நேரமிருக்குமா? உண்மையில் பிரச்னை, அடிப்படை உண்மையின் விளைவு. அடிப்படை உண்மை, ஆரிய-திராவிடப் போர்; காங்கிரஸ் ஆரிய ஆதிக்க அமைப்பு என்பது. இதனை உரத்த குரலிலே மறுத்து ‘உத்தமர்கள்’ என்று ஊராரிடம் விருது பெற்றவர்களெல்லாம், வழக்கமாக, ஆரிய திராவிடப் போர் பிரச்னைப்பற்றி பேசும் நமது இயக்கத்தவர் பேசக் கூசும் மொழிகளைத் தாராளமாக வீசிக்கொண்டனர். இன்று சுமுகமான முடிவு ஏற்பட்டுவிட்டது, என்று இருசாராரும் களிக்கக்கூடும்! களிப்பு இருப்பதாகக் காட்டிக் கொள்ளாவிட்டால், திராவிட இயக்கத்தார், இப்போதாவது தெரிகிறதா ஆரிய-திராவிடப் பிரச்னையின் உண்மை என்று கேட்பரே என்ற அச்சம்.

எப்படியேனும் போகட்டும், எதைக்கொண்டேனும் மூடட்டும் தங்கள் முகாமுக்குள்ளே நடக்கும் அலங்கோலம் வெளியே தெரியாதிருக்க. நாடு, மறுபடியும் காணவேண்டிய அவசியமில்லாத அளவுக்கு ‘அந்த அவலட்சணத்தை’ மக்கள் பார்த்து விட்டார்கள்.
சூக்ஷம புத்தியுள்ள எல்லோருக்கும்

1. ஆச்சாரியார் - காமராஜர் சண்டை.
2. காமராஜரின் கை ஓங்கியது
3. கல்கத்தாவுக்கு டாக்டர் ராஜன் தலைமையில் பார்ப்பனர், காவடி தூக்கிச் சென்றது.
4. அசப்அலி அனுப்பப்பட்டது.
5. அவர் அளித்த தீர்ப்பு.
6. அதன் பயனாகத் தேர்தல் கமிட்டியை ஆச்சாரியாரைக் கலந்துபேசி அவருடைய சம்மதம் பெற்றுக் காமராஜர் அமைத்தது.

என்ற நிகழ்ச்சிகள் தெரியும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நினைப்பைத் தந்துதான் இருக்கும்.

“என்ன இது, இவர்கள் இருவருக்குள் சண்டையா? காமராஜர் அப்படியொன்றும் சண்டைக்காரரல்லவே. சாது தியாகி” என்று துவங்கிய நினைப்பு.

“ராஜாஜி எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்ததால்தான் என்ன? காங்கிரசின் கட்டுப்பாட்டை அவர் உடைத்தார். அதை எப்படி மறப்பது. அவரை ஆதரித்துச் சிலர்பேசியும் எழுதியும் வருகிறார்கள். பணம் வேலை செய்கிறது! ஆனால் நாடு காமராஜரின் பக்கம் இருக்கிறது. சத்தியம் ஜெயிக்காமல் போகுமா?” என்று வளர்ந்தது,

“பார்த்தீர்களா இந்தப் பார்ப்பனர்கள் செய்த காரியத்தை? தமிழ்நாடு முழுதும் காமராஜர் பக்கம் சேர்ந்தது, கடைசியில் இந்த டாக்டர் ராஜன், சில பார்ப்பனர்களை இழுத்துக்கொண்டு கல்கத்தாவுக்கு ஓடுகிறார், காமராஜர்மேல் கோள் சொல்ல. இந்தக் கூட்டத்தின் சுயஜாதி அபிமானம இப்படி இருக்கே! ஒரு தமிழனையும் தலைதூக்க விடவில்லையே இந்தக் கும்பல். காங்கிரஸ், இந்த ஜாதிக்கு ஆதிக்கம் தேடுவதற்கா இருக்கிறது?” என்று - மாறி, அசப்அலி சென்னை வந்ததும், “பார்த்தீர்களா அக்ரமத்தை? இங்கே தங்கள் ஜம்பம் சாயாது போகவே வடநாட்டிலே இருந்து இறக்குமதி செய்கிறார்கள் அசப் அலியை” என்று கசப்புடன் பேசி, அவர் தீர்ப்பளித்தபோது கோபமும் வெட்கமும் கொண்டு மௌனமாகி கடைசியில் காமராஜர் ஆச்சாரியாரைக் கலந்து கமிட்டி அமைத்தார், என்ற நிலை ஏற்பட்டதும் பெருமூச்சு பிறந்தது! அந்தப் “பெருமூச்சு” - பெரும்புயலாக மாறும், இன்று இல்லாவிட்டால், நாளை!!

காங்கிரஸ், நாட்டு விடுதலைப் போரை நடத்தும் ஸ்தாபனம் என்று நம்பி அதில் சேர்ந்தது, பிறகு, அது வெறும் பார்ப்பனப் பாதுகாப்புச் சபை என்பதைத் தெரிந்து அதிலிருந்து விலகி பார்ப்பனியத்தோடு பலமானதோர் போர் தொடுத்தார் பெரியார் - போர் நடந்து வருகிறது - கடைசி சொட்டு இரத்தம் திராவிடன் ஊடலிலே இருக்குமட்டும் போர் நடந்தே தீரும். காமராஜர்கள், காங்கிரசிலே இருந்து தேசப்பணி செய்தனர் - ஏயனே! நீங்கள் தேசப்பணி என்று எண்ணிக்கொண்டு எதைச் செய்கிறீரோ, அந்தக்காரியம், ஆரியப்பணியை நாட்டிலே பரப்பவே பயன்படும் என்று பெரியார் கூற, காமராஜர்கள், காங்கிரஸ் ஒரு ஜனநாயக ஸ்தாபனம், எனவே, பெரும்பான்மை மக்களாகிய திராவிடர்கள் காங்கிரசைக் கைப்பற்றி ஆரியருக்கு அதிலே ஆதிக்கமின்றிச் செய்துவிட முடியும் என்றனர், முடியவே முடியாது ஏனெனில் முப்பரியினர், வடநாட்டவரைத் துணைக்கு அழைத்து நமது முயற்சியை முறியடிப்பர் என்று பெரியார் எச்சரித்தார் - காமராஜர்கள் சிரித்தனர் - அனறு இன்று கதறுகின்றனர், அசப்அலி கொடுத்த அறைபெற்று, நியாயமும் சத்தியமும், உறுதியும் கட்டுப்பாடும், பிரச்சாரமும் சுற்றுப்பயணமும் எங்கே போயின! போட்டிக் கூட்டங்களும், தீட்டிய திட்டங்களும் என்னவாயின! நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்ற முழக்கம் ஏன் அடங்கிவிட்டது! எங்கே அந்த வீரம்? சரிந்தது! சரியத்தான் செய்யும். இது தெரிந்துதான் பெரியார் திராவிடர் காங்கிரஸில் சேர்ந்துழைப்பதைக் கண்டித்தார். காமராஜர்கள் இனியேனும் கண் திறப்பரோ? நாம் நம்பவில்லை!
என்ன நடைபெறும் இனி? காமராஜரையும் அவருடன் கூடினவர்களையும், இந்நாட்டுப் “பார்ப்பனர்” நமது பட்டியிலே பொறித்துவைத்துக் கொள்வர் - ஒரு சமயம் வரட்டும் என்று காத்துக் கிடப்பர் - சமயம் வரும்படியாகவும் செய்வர் - வந்ததும் பாய்வர் - பாய்ந்தால், காமராஜரைப் பாதுகாக்க, வடநாடு ஆள் அனுப்பாது!

தமிழ்நாட்டுக் காங்கிரசுக்கு இவர் தலைவர் - இவருடைய தீர்ப்புக்குத் தமிழ்நாட்டுக் காங்கிரசாரின் பேராதரவு கிடைத்தது - தொண்டர்களின் ஆதரவு கிடைத்தது - கிடைத்தும் பயனற்றுப் போகும்படி, வடநாட்டுத் தலைமையந்திரம் வேலை செய்தது. இதற்குப் பணிந்தார்! - குற்றேவல் புரிவோர் கொற்றவனாக முடியுமோ - காமராஜரின் கரத்தின் பலம், குன்றத்தோடு முடிந்தது, வடநாடோ, காமராஜர் குனியுமளவு குட்டிற்று! இதுவா, தேசசேவை? இதற்காகவா, தியாகி கர்மவீரன் அஞ்சாநெஞ்சன் என்றெல்லாம் விருதுகள் பெற்றது!!

எவ்வளவு ‘பாபக்கிருத்யம் செய்தாலும், ஆச்சாரத்தை மறந்தாலும், பிராமணனுக்குள்ள பிறவி ஊரிமை போகாது என்பது மனுவின் திட்டம். அதே ஆட்சிதான் இன்றும் அமுலில் இருக்கிறது, சூரிய பக்தி இருக்கிற காரணத்தால், இகவேதான், திருவிளையாடற் புராணத்தின்படி, தாயைப் புணர்ந்து தகப்பனைக் கொன்ற மாபாவி ஒரு பிராமணனாக இருந்ததுபற்றி, இலவாயப்ப்ன, அருள்சுரந்து, அவன் பாபத்தைப் போக்கினார் என்று கதை இருக்கிறது. இங்கு, ஆச்சாரியார் எதை எதைக் காங்கிரசும், காமராஜர் போன்ற மற்றத்தலைவர்களும், சிலாக்கியம்’ என்று கொண்டாடினரோ, அதனை அவர் கேலி செய்தார், கண்டித்தார், கேவலப்படுத்தினார். ஆகஸ்ட்டுக் கலவரம், எமது ஜீவனின்துடிப்பு என்றார் காமராஜர், ஆச்சாரியார், அது பித்துப்பிள்ளை விளையாட்டு என்றார். ஆகஸ்ட்டு இயக்கத்தில் சேராதவர், அதனைக் கண்டித்தவர், ஆகஸ்ட்டுத் தியாகிகளைப் பழித்தவர் இந்த ஆச்சாரியார், இவரைத் தமிழ்நாடு ஏற்காது என்று கூவினார். ஆச்சாரியாரோ, ஆகஸ்ட்டோடு ஆண்டு முடியவில்லையப்பா, என்றார்! கடைசியிலே, காமராஜர் ஆச்சாரியார் மாளிகைக்குக் சென்று, அவரைக் கலந்து ஆலோசித்துச் சம்மதம் பெற்று, கமிட்டி அமைத்தார்! ஆச்சாரியார் மட்டுமல்ல பார்ப்பனர்களால், எதையும் ஜீரணம் செய்து கொள்ளமுடியும். அவர்கள் விரும்பினால் காந்தியாரை மகாத்மா என்பார்கள், இல்லையோ, வெறும் பனியா என்று தள்ளுவார்கள், ஊபயோகப்படுத்துகிற வரையிலே காங்கிரசை ஆதரிப்பர், பயனில்லை என்றால், அதனையே அழிப்பர், என்பதைக் காமராஜர் உணரவேண்டும். அவர் பட்ட கஷ்டம் அவ்வளவும் அவருக்குப் பிரம்மதுவேஷி என்ற பட்டத்தை வாங்கித் தந்ததன்றி, காரியத்திலே வெற்றி கிடைக்கவில்லை. நேரடியாக நின்று வெளிப்படையாகப் பேசி, பிரச்னையை மூடிவைக்காமல் ஆரியத் திராவிடப்போர் என்று நேர்மையாகக் கூறி, திராவிடர் ஒன்றுகூடினாலன்றி, காங்கிரசுக்குள்ளே இருந்தே போராடுவோம் என்று பேசுவது பயனற்றுத்தான் போகும். ஆச்சாரியாருடன் போராடியபோது காமராஜர், கேள்விப் பட்டது என்ன? ஆச்சாரியார் ஒழிக்கப்பட வேண்டியவர்தான், அவர் மண்டைக்கர்வி, பதவிப்பித்தம் பிடித்தவர் - என்று பலரும் பகிரங்கமாகக் கூறினர். திருப்பரங்குன்றத்திலே ஆச்சாரியாரை ஆதரிக்க வந்த ஒரு ஒயர் அடிபட்டார் என்று வதந்தி வந்தது. அவ்விதம் கோபாலசாமி ஏற்பட்டு, என்ன செய்ய முடிந்தது?

“தமிழ்நாடே! நீ தகுதியைத்தான் ஆதரிக்கிறாய்! நான் ஏழை, சாமான்யன், என்னுடன் கட்சி நடத்தும் ஆச்சாரியாரோ, பிரபலஸ்தர், காந்தியாரின் சம்பந்தி, ஆற்றல் மிக்கவர். ஆனால், தமிழகமே! நீ அவருடைய ஜொலிப்பைக் கண்டு மயங்கவில்லை உழைப்புக்கே மதிப்பளித்தாய், தியாகிக்கே சிரம் சாய்த்தாய் ண்மைக்கே உயரிய இடமளித்தாய், கட்சி பெரியது, ஆள் அல்ல; கொள்கை பெரியது, கட்டுப்பாடும் ஒழுங்கும் பெரிது என்ற தீர்ப்பளித்தாய். தமிழகமே! ஊனக்குத் தலைவணங்குகிறேன் என்று காமராஜர், கூறிமகிழ்ந்து, மெய்மறந்திருந்த வேளையிலே வந்து சேர்ந்தார் அசப்அலி; ஆச்சாரியார் - காமராஜர் தகறாரைத் தீர்த்து வைக்க, “தகறாரு” என்ற பதத்தைப் பிரயோகித்ததே, தவறு. ஏனெனில், தமிழ்நாட்டுக் காங்கிரசின் தலைவர் காமராஜர். அவர், தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டியின் பெரும்பான்மையோரின் அனுமதி யுடன், ஒரு தீர்ப்பளித்தார். கட்சியின் கட்டுப் பாட்டுக்காக அந்தத் ‘தீர்ப்பை’ ஏற்றுக் கொண்டிருக்க வேண்டியதே முறை. ஆனால் ஆச்சாரியார், ‘காமராஜர்’, தமிழ்நாடு காங்கிரசின் தலைவரென்றால் எனக்கென்ன? பிரம்ம குலத்தவன் நான், நான் தவறு செய்ததாகவே வைத்துக் கொள்வோம், அதற்குத் தண்டனைதர காமராஜ் துணிவதா, ஒரு திராவிடனுக்கு இந்தத் தைரியம் வருவதா? என்று எண்ணினார். தமது சகாக்களைக் கல்கத்தாவுக்கு ஏவினார் காமராஜர் முகத்தில் கரி பூசினார். இதுபோலத்தான் நடக்கும், வீராதி வீரனையும் அந்த வீணர்குலம், இழிவுபடுத்தியதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன என்று நாம் பன்முறை கூறினோம் - அதற்காகவே பழிக்கப்பட்டோம். நம்மைப் பழித்தவர்களின் நிலை என்ன இன்று? எப்படிப்பட்ட ஆச்சாரியார் என்று எண்ணிக் கொண்டு காமராஜர், போர் துவக்கினார்! காமராஜரை ஆதரித்த ஏடுகள், ஆச்சாரியாரைப் படம்பிடித்துக் காட்டியவைகளைக் கண்டபோது, காமராஜர், உண்மையிலேயே ஊராரின் கண்டனத்துக்கு ஆளான ஒருவரை நீக்குவது எளிது என்றுதான் எண்ணியிருப்பார். ஊராரின் கண்டனத்துக்கு ஆளான ஒருவரை நீக்குவது தன் நீங்காக் கடமை என்றும் கருதியிருப்பார். அவ்விதம் அவர் எண்ணும்படி எழுத்தோவியங்கள் பல தீட்டப்பட்டன.

எப்படியோ ஆச்சாரியார் அசப்அலியால் பிழைத்தார் என்ற போதிலும் அவரை மதிக்கக் காங்கிரஸ் தமிழர்கள் தயாராயில்லை. காங்கிரஸ் தமிழர்களின் மனப்புண் எவ்வளவு இழமாக இருக்கிறது என்பதற்கு இக்கிளர்ச்சி ஓர் எடுத்துக்காட்டு. புண் இருப்பது உண்மை, ஆனால் புன்னகையுடன் ஆச்சாரியார், உலவுவதும் உண்மை. அன்று - அசப்அலியின் தீர்ப்பின்படி - வடநாட்டார் தாக்கீதின்படி காமராஜர், ஆச்சாரியார் வீடுசென்றபோது, எப்படிப்பட்டவரிடம் “கலந்து ஆலோசித்துச் சம்மதம்பெற” நாம் போகிறோம், எவ்வளவு கர்ஜித்தோம், தமிழகம் எவ்வளவு களித்தது, இருந்தும் என்ன, இதோ நுழைகிறோம், குனிந்த தலையுடன்; என்றுதானே கருதியிருப்பார்! உள்ளே உலவும் ஆச்சாரியார் என்ன எண்ணுவார். “வருகிறான் பார் வீராதிவீரன்! என்னை ஒழித்துக்கட்டக் கிளம்பிய சூரன்! கட்சிபெரிது ஆளல்ல என்று மார்தட்டிய தீரன்! தமிழ்நாட்டுக் காங்கிரசின் தலைவன் வருகிறான். தாசர் குலத்துதித்தவன், பூசுரர் குலத்தவனாம் என்னையன்றோ நீக்கலாம் எனறு மனப்பால் குடித்தான், இப்போது, என் சக்தியை ஊணர்ந்து, உள்ளே நுழைகிறான், வீரத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு, என்றுதானே எண்ணியிருப்பார். ஒருவிநாடிதான் இருக்கும் அந்த எண்ணம், ஆனால் எப்படிப்பட்ட விநாடி! வீரன், விப்பிரருக்கு அடங்கிய விநாடி! தமிழகம் தலையைத் தாழ்த்திய விநாடி! வலையிலே வீழ்ந்த மான்போல், காமராஜரின் கண்கள், கவலையுடன் இருந்த விநாடி! ஆச்சாரியாரோ அதுசமயம், மன்னர்களை ஆண்ட மனுபோல, சந்திரகுப்தனை இட்டிவைத்த சாணக்கியன்போல், சிவாஜியைப் பணியவைத்த கங்குபட்டர்போல, வெற்றிக் களிப்புடன் நின்று வரவேற்றிருப்பார். காமராஜரை! மறக்க முடியாத விநாடியல்லவா அது? ஆகவேதான் குன்றம் தாழ்ந்தது, கோடு உயர்ந்தது என்றோம்.

ஆனால் முடிந்துவிட்டதோ போராட்டம்? இல்லை! முடிவு கிடையாது! ஆச்சாரியாரை வேண்டுமானால் கெட்டகனவு போன்றது அந்தப்பிரச்னை. அதனை இனி மறப்போம் என்கிறார். பிரச்னை கனவு அல்ல, ஆரியருக்கு என்றென்றும் ‘பிடி’ இருந்தே தீரும் என்ற நிலை வெறும் கனவாகப் போகிறது. காமராஜர் அமைத்த கமிட்டி, ஆச்சாரியாரைக் கலந்துதான் அமைக்கப்பட்டிருக்கிறது; ஆனால் அந்தக் கமிட்டி, களத்திலே ஒரு பகுதிதான் என்பது இனி விளங்கும். ஒருமுறை அல்ல, இனியும் பலமுறை வடநாட்டுக்குக் காவடி எடுக்கும் காட்சியும் காணவேண்டித்தான் இருக்கும். கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது, என்றால், நிரந்தர நிலை அல்ல! ஊசல் ஆடுகிறது!

இந்த “ஊசல் ஆட்டம்” கடைசியில், இரு இனங்களும் வேறு வேறு, முரண்பாடுகள் கொண்டது என்ற இனஎழுச்சிக் கருத்தை, முத்துரங்கங்களும் உணரும் நிலையைத் தந்து தீரும். கோடு உயர்ந்து குன்றம் தாழ்ந்ததும், குன்றமும் கோடும் மீண்டும் மீண்டும் போராடும் கடைசியில், உரோடு மார்க்கமே திராவிடருக்கு ஏற்றது என்ற உண்மையை விளக்கும். இது உறுதி.

(திராவிட நாடு - 6-1-46)