அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கொடை வள்ளல், செட்டி நாட்டரசர் அவர்கட்கு,

பெரியோய்!

தங்களின் பெருங்கொடையின் சிகரமாக விளங்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே அண்மையில், திருவிதாங்கூர் மன்னர் ஆற்றிய பட்டமளிப்பு விழாச் சொற்பொழிவிலே, தங்களின் சீர்மிகு குணமதைச் சித்திர மொழியிலே செப்பியிருப்பது கேட்டுச் செந்தமிழ்நாடு மகிழ்கிறது சேர நாட்டரசரின் பாராட்டுக்குரியர் தாங்கள். மற்றைய மன்னரும், மன்னர் மன்னருங்கூட தங்களை மனமாரப் பாராட்டுவர். காரணம், தாங்கள் தமிழ் மரபுக்கேற்ப, மக்களுக்கு உதவும் மாண்பு மக்களின் அறிவுக்கண் திறக்கும் அரிய செயல், தங்களின் பயன்தருகொடை, யாவரையும் தங்கள்பால் கனிவுடன் இருக்கவே செய்யும்.

மூவேந்தர் மும்முரசு கொட்டி வாழ்ந்த ஒரு இடம் இன்று, வேதனைக்காடாகி இருப்பது கண்கூடு. முன்னமோர் முறை இத்தாலி நாடு நிலைகுலைந்து, நெறி இழந்து, எடுப்பார் கைப்பாவையாய், யாவர்க்கும் அடிமையாய் இருந்த காலை வான்டே எனும் கவி, கசிந்து கண்ணீர் மல்கிக் கதறினாராம். “ஓ! என் இத்தாலியே ஒளியிழந்த வைரமே. வல்லரசுகளின் வைப்பாட்டியே! வலுத்தவனிடம் வதையும் அடிமையே” என்று.

திராவிடமும் அந்நிலையே பெற்று விட்டது. ஆண்ட பரம்பரை அடிமைகளாயினர். கடலில் மரக்கலம் செலுத்தி, வாணிபம் செய்தவர்கள், தோணியிலே சென்று மீன் பிடிக்கவும் வகையற்றுப் போயினர். புலியையும் வேழத்தையும் வேட்டையாடியவர்கள், பூனைக்கும் பூசுரர்க்கும் (சகுனத்தடை என்று கருதி) பயப்படும் நிலைபெற்றனர். கவிதை இயற்றியவர்கள் கட்டுக்கதைகளை நெட்டுருப் போடுபவராயினர். இத்தகைய இடத்திலே தோன்றி, பாடுபடு, பொருள் ஈட்டு, பணியாற்று என்ற மும்மணிக் கோவையை வாழ்க்கை வழியெனக் கொண்டு, வளமுற வாழ்ந்து, மக்களின் வாழ்வும் வளம்பெற உதவி செய்து கொடை கொடுக்கும் கையராய், குளிர்முகக் கோமானாய், உலவுகிறீர். பழந்தமிழ் மரபு, பட்டுப்போனது, இதோ துளிர் விட்டிருப்பது காணீர் என்று பலரும் போற்றுவது மிகையாகாது.

தர்மப்பிரபுக்கள் இந்நாட்டிலே பலருண்டு. பஜாஜ், பிர்லா போல, வியாபார நோக்கத்துடன் வாரி வாரி இறைக்கும் வள்ளல்கள் உண்டு. அத்தகையதன்று தங்கள் கொடை. திருவாங்கூர் மன்னர் அதனைத் தெளிவுபடக் கூறினார்.

“அவர்களுடைய இனத்தார்களும் குடும்பத்தார்களும் பரம்பரையாய் நடத்திவந்த தருமமுறையன்றி இவர்கள் செய்துள்ள இத்தருமம் உன்னதமான வரவேற்கத்தக்க நல்ல பலன்களையளித்துள்ளது.” என்று மன்னர் மொழிந்தார்.

தருமம் செய்வது என்ற முறையிலேயே தாங்கள் முதல் புரட்சி செய்தீர்கள் ஜான் ஹாப்கின்ஸ், ராக்பெல்லர் போன்றார் போல!

இசை உலகிலும், அது போன்றே தாங்கள் செய்தது ஒரு புரட்சியே! தமிழிசையைத் தாங்கள் துலக்கினீர்கள், அது இதற்குள், பூத்துக் காய்த்து கனிந்து வருகிறது.

செல்வவான்கள், சங்கீத வித்வான்களுக்குச் சன்மானம் தருவது, கிருதிகள் பாடும்போது பொருள் விளங்காவிடினும் தலையை அசைப்பது என்று இருந்தனர். தமிழகத்திலே தமிழ் இசை வேண்டும் என்று கேட்டீர்; எதிர்த்தோருக்கு இதமொழி உரைத்தீர், இன்று எங்கும் எவரும் என்னென்ன தமிழ்ப்பாட்டுகள் கிடைக்கும் என்று தேடும் நிலை உண்டாகி விட்டது. தரும உலகில் தாங்கள் செய்த புரட்சி போலவே இசை உலகிலும் தங்கள் புரட்சி, பொன் மலர் மணம் பெற்றது போலாயிற்று.

இவைகட்காகத் தங்களைப் போற்றும் தமிழர், மற்றோர் துறை யிலே தங்களின் மகத்தான புரட்சியை எதிர் நோக்கி நிற்கின்றனர்.

தமிழகத்தின் வளம் சுருங்கி, வாணிபம் வளைந்து, தொழில் தேய்ந்து, செல்வம் சிதைந்து போகிறது. ஜீவநாடியான வாணிபம், வடநாட்டவரிடமே இருக்கக் காண்கிறோம். வைரத்துக்கு சுராஜ்மல், தங்கம் வெள்ளிக்குப் பாபாலால், இரும்புக்கு டாடா, மருந்துக்கு தாதா, கப்பல் விமானத்துக்கு லால்சந்த் ஹீராசந்த், ஆடை அணிக்குச் செல்லாராம், உண்டி வகைக்கு ஆரியபவன், என்று இருக்கும் நிலைமை மாற வேண்டாமா! தமிழகச் செல்வம் இவ்வளவு வாய்க்கால் வழியாக வழிந்தோடி வடநாடு வளமாகச் செய்கிறது, இங்கோ வரண்ட வயல், இருண்ட முகம், பசித்த உள்ளம், பாடுபட்டும் பலனடையாக் கூட்டமாக இருக்கக் காண்கிறோம்.

ஏழடுக்கு மாடியிலே எத்தனையோ இலட்சாதி பதிகள் வடநாடுகளில் உலவ, இங்கு தரித்திர நாராயணர்கள் தாண்டவமாடுகின்றனர்.

வாணிபவேந்தராம் தாங்கள் இதனைத் தெரிந்து கொள்ளாதிருக்க முடியாது. போர் நெருக்கடியும் பணமுடையும் அதிகரித்துள்ள இந்நாளிலே, நமது நாட்டிலே சின்னஞ் சிறு ரயில்வே நிலையங்களிலும், கண்ணைப்பறிக்கும், பாவையரும் பூங்காவும் பல வர்ணங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள விளம்பரப் போஸ்டர்கள் வரிசை வரிசையாக ஒட்டப்பட்டுள்ளன.

அரவிந்த மில்லிலே ஆடைவாங்குங்கள், மினர்வா மில்லிலே துணி வாங்குங்கள் என்று, வடநாட்டு மில் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. வியாபார மந்தமோ, பொருள் முடையோ, வடநாட்டு வியாபார உலகில் இருந்திருக்குமானால், விந்திய மலையைக் கடந்து வித விதமான போஸ்டர்கள், இங்குள்ள சிறு ரயில்வே ஸ்டேஷன்களிலும் வருமா!
வடநாடு, மான்செஸ்டர், லங்காஷயர், போலாகி விட்டது. தமிழகமோ, வற்றாத நதியிருந்தும் பாலைவனமாக இருக்கிறது.

வடநாட்டுக்குத் தென்னாடு வெள்ளாட்டியாக, வெண்சாமரம் வீசும் அடிமையாக இருக்கும் நிலைமாற வேண்டாமா?

இந்தப் பொருளாதார சுதந்திரம் திராவிடத்துக்குக் கிடைக்கும் திட்டமே, திராவிடநாடு திராவிடருக்கே! என்பதாகும்.

பொருள் அபிவிருத்திக்கு இதைவிடச் சிறந்த வழி வேறு இல்லை!

ஆகவே தான், தாங்கள், இந்தத் துறையிலே நுழைந்து வேலை செய்ய வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்ளுகிறேன்.

தங்கள்பால்,
மட்டில்லா மதிப்புக் கொண்ட,
திராவிடன்

27.12.1942