அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கொடுமை! கொடுமை!!

சூது நிரம்பியதல்ல அவர்கள் பாதை; சூழ்ச்சியைக் கருத்தாலும் தீண்டாத காளைகள்! துயரமும் சோகமும் பின்னிப் பிணைந்து கிடக்கும் வழிகெட்ட சமுதாயத்தின் முரசொலி வீரர்கள்! துடிக்கும் இளமையால் தொண்டு செய்யப்புறப்பட்டு மக்கள் மன்றத்தை மகிழ்விக்கும் மணிவிளக்குகள்!

‘நேர்மை நீதி, நியாயம்’ ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு வீழ்ந்து கெட்ட சமுதாயத்தை வீரபுரியாக்கும் விவேக வேலையில் சுற்றித் திரியும் சுநத்திரப் புறாக்கள்!

அவர்களுக்குச் சிறைவாசம்-கடுங்காவல்! அபராதம்!

கேட்கவே, நடுங்குகிறது-நல்லோர் என்று கூறி நாடான வந்தோரின் போக்கை! எழுத்துச் சுதந்திரம் பேசி, ஆட்சிப் பீடம் அமர்ந்தோரின் ஆட்சியில் எழுத்து மூலம் தன் கருத்தைக் கூறியமைக்காக வழக்கு-தண்டனை!

நீதி சிரிக்கிறது-ஆட்சியாளரைப் பார்த்து! நேர்மை தலை குனிகிறது அகிம்சா வீரர்களைக் கண்டு!!

ஆறு மாதமாம் ஆசைத்தம்பிக்கு. மூன்று மாதமாம் கலியபெருமாளுக்கும் தங்கவேலுக்கும்!

கடுங்காவல் தண்டனையாம். அதோடு ஐந்நூறு ரூபாய் அபராதம் வேறாம்!

நினைத்தால்-நெஞ்சு குலுங்குகிறது. பொதுவாழ்வுப் பாதையின் பெருமையைக் குலைக்கும் காங்கிரஸ் ஆட்சியின் கண்மூடிப் போக்கைக் கண்டு எதிர்காலம் ஏளனம் செய்யும்! இழித்துப் பேசும்!!

‘காந்தியார் சாந்தியடைய’ என்ற நூலை எழுதினார் தோழர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி. அதை வெளியிட்டார் தோழர் கலியபெருமாள்.

‘அழியட்டுமே திராவிடம்’ என்ற நூலைத் தந்தார் துறையூர் தோழர் து.வீ. நாராயணன்-நூல் வெளிவருமுன் ஆட்சியாளரின் அடக்கு முறைப் பாணம் பாயுமுன் சாவுக் குகைக்குச் சென்று விட்டார்! மறைந்த நண்பரின் நூலை வெளியிட்டார் தோழர் தங்கவேல்.

இவை குற்றமாம் கூறி வழக்குத் தொடர்ந்தது காங்கிரஸ் ஆட்சி. இப்போது, அவர்கள் சிறைக்குள்ளே மூடப்பட்டுவிட்டார்கள்!

வேல்கொண்டல்ல, வேற்றுமை மனத்தாலல்ல; பொதுச் சேவையின் ஆர்வத்தால், மக்களுக்குப் பணியாற்றும் ஆசையால், எழுத்துக்கள் மூலம் சேவை செய்ய விரும்பிய அவர்களை ‘சிறைச்சாலை’க்கு இழுத்துக் கொண்டுவிட்டனர்-கருணாமூர்த்திகள்!

‘மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை’ என்ற எஃகு உள்ளம் கொண்ட இதயத்தோர் அவர்கள், எதற்கும் அஞ்சாப் புலிகள்! தங்கள் இலட்சியப் பாதையில் கிடைத்த இந்த அம்பு வீச்சைக் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல.

ஆனால், சுதந்திரத்தைப் பறித்து, சிறைக்குள்ளே வீழ்த்திய ‘சுயராஜ்ய சர்க்காரின்’ முரட்டுப் போக்கை நாடு கண்டிக்காமல் விடாது! நல்ல பாடம் கற்பிக்காமல் போகாது!!

வீசுங்கள் பாணங்களை-மிரண்டோடும் கோழைகளல்ல நாங்கள் வீரரின் பெரும் படை!

தியாக முத்திரையைப் பெற்றுக் கொண்டுவிட்ட சீயங்கள் மூவரையும் வாழ்த்துகிறோம்-பாராட்டுகிறோம்! அதோடு ‘தோள் தட்டி நிற்கிறோம்-எமக்குத் தூசு உமது அடக்குமுறை’ என்பதை எச்சரிக்கையாகத் தருகிறோம் இந்த ஆளவந்தாருக்கு!

(திராவிட நாடு-23.7.50)