அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கொடுவாள் தடுப்பீர்!

“கத்திரிக்கோல் பாய்ந்ததா?”

“பாய்வதா! படமே, போய்விட்டது பிரதர்!”

“ஏன்?”

“என்னமோ! இருபத்துஎட்டு இடங்களைக் கத்தரிக்கணுமாம். இல்லாட்டா, ‘சென்சார் சர்டிபிகேட், தரமுடியாதாம்...”

“இருபத்து எட்டு இடங்களா?”

“ஆமாம், பிரதர் அடிவயிற்றையே கலக்குது. ஆறுலட்சம் கொடுத்திருக்கிறேன். எல்லாம் போய்விடும் போலிருக்கு!”

கடந்த சில மாதங்களுக்கு முன் தென்னாடெங்கும், வெற்றிகரமாக ஓடியது. ஒரு திரைப்படம் அதைப் பார்த்த பத்திரிகைகளெல்லாம் வெகுவாகப் பாராட்டின. “காதலில்லாத புதுக்கதை!” “நல்ல கொள்கைகள் சொல்லும் திரைச் சித்திரம்” என்றெல்லாம் பார்த்தோர் புகழ்ந்தனர். மக்களும், திரள் திரளாகச் சென்று களித்தனர்!

ஆனால், அது சினிமாத் தியேட்டர்களுக்கு வருமுன், தாண்டிவர நேர்ந்த சங்கடங்கள் மிகப்பலவாகும். படம் எடுத்து முடித்தாயிற்று. படத்தை, இலட்சக்கணக்கில், விலை கொடுத்தும் பலர் வாங்கி விட்டனர். இந்நிலையில், திரையிடப்படும் தேதியும், முடிவு செய்யப்பட்டு “சென்சார்” ஆகவேண்டி, சென்சார் போர்டு முன் காட்டப்பட்டது.

அன்றைய தினம்தான், நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல தலையில் கைவைத்த வண்ணம் வந்து சோகத்தோடு புலம்பினார், படத்தை வாங்கியவர்.

படம் வெற்றிகரமாக ஓடும், என்று அவர்கள் நம்பிய காட்சிகள் அத்தனையையும் கத்தரிக்கச் சொன்னாராம் சென்சார் போர்டு தலைவர் எப்படியிருக்கும். படம் எடுத்தவருக்கு! தலையிலே கைவைத்துக்கொண்டு தவியாய்த் தவித்தார்! போய் வாதாடினார்! என்னென்னமோ எடுத்துச் சொன்னார்! பலன், நினைத்த அளவு கிடைக்கவில்லை. என்றாலும் மறு முறையும் படத்தைப் போட்டுப் பார்த்து, கத்தரிக்கோல் வீசவேண்டிய இடங்களைக் குறைத்தனராம்!

சினிமாத் தொழில் இன்றைய தினம், மக்களின் சிந்தையைக் கவர்ந்ததோர், தொழிலாகிவிட்டது. நாட்டின் முக்கிய துறைகளிலே அதுவும் ஒன்றாகப் பரிணமித்துக் கொண்டிருக்கிறது. தினசரி வாழ்க்கைச் சுழலில் வாடுபவன், சிறிது நேரமாவது தனது மனத் துயரங்களை மறக்கவும், இசை நடனங்களைக் கண்டு களிக்கவும் திரைப்படத்துக்குச் செல்கிறான் அவன் தரும் ஒருசில அணாக்களில் ஓரளவு மனதுக்குத் தெம்பும் உள்ளத்துக்குத் தெளிவும் பெற்றுத் திரும்புகிறான்.

சினிமாத்துறையில், ஓரிரு ஆண்டுகளாக ஒரு புது மலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் புராணக்கதைகளை மக்கள் விரும்புகிறார்கள் என்று காரணங் காட்டி, ஏராளமான புராணக்கதைகள் படங்களாக்கப்பட்டன. அந்த நிலை இந்த ஓரிரு ஆண்டுகளில் மாறி, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படங்கள் உருவாகத் துவங்கியிருக்கின்றன. பொழுது போக்கோடு சமுதாயத்துக்குத் தேவையான நல்லது கெட்டதுகளை எடுத்துக்காட்டி, மனித இதயங்களின் உளப்பண்புகளை காட்சிகளாக அமைத்து, உலக முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டி, மக்களுக்குத் தேவைப்படும் நல்ல கருத்துக்களைக் கூறும் கதைகளை படமாக்கும் நிலை மலர்ந்திருக்கிறது.

சமுதாய நல்வாழ்வே முக்கியமெனக் கருதுவோர், இந்த மலர்ச்சியை வரவேற்கவே செய்வர். தமது ஆசைகளை மக்களிடம் பரப்பும் பணி மக்கள் சிந்தையைக் கவர்ந்து இத்துறை மூலம் அதிகரிப்பது காண காடும் மேடும் சுற்றிகனிகாண விரும்புபவனுக்கு கரத்திலேயே கனி வந்து விழுந்தால், மகிழாமலா இருப்பான்-வெறியனையும் பித்தனையும் தவிர?

ஆனால், இன்றைய ஆட்சி, இந்த மறுமலர்ச்சியைக்காண மருள்கிறதென்பது, அதன் போக்கால், தெரிகிறது. முன்பு, நாம் குறிப்பிட்டோமே ஒரு படம் அதில் ஒரு காட்சி ஒரு சிறுவன் தோட்டத்திலே காய்த்த கனியொன்றை பிச்சைக்காரிக்குப் பறித்துத்தர அதைக்கண்டு தோட்டத்துக்குரியவன் வந்துகோபிக்க அப்போது ஒரு பழம் போனால் என்ன? என்று அச்சிறுவன் தோட்டக்காரனைப் பார்த்து கேட்பதுபோல், எடுக்கப்பட்டிருந்தது.

இதில், கம்யூனிச கோட்பாடு இருப்பதாகக் கூறப்பட்டதாம்!

இதுபோல, பலப்பல காரணங்களைக்காட்டி, ‘காரசாரமான வசனம், ‘இது சட்டப்படி தவறு’ என்றெல்லாம் கூறப்பட்டு, பல்லாயிரக்கணக்கான ரூபாய்களில் படமாக்கப்பட்ட காட்சிகள் வீசியெறியப்படுகின்றன. ஒரு சிறு உத்திரவு மூலம்.

தணிக்கை போர்டு குழுவினரின் ஆசாபாசங்களையொட்டியே, கதைகள், படமாக்கப்படவேண்டும் என்கிற இந்த நிலையையே, படத்துறையிலீடுபட்டோர், சங்கடத்தால், வெறுத்ததுண்டு-மனங்கசந்து பேசியதுண்டு.

ஆனால், இப்போது படத்துறையிலீடு பட்டோரின் வாயையும் கையையும் கட்டிப்போட வழிமுறைவகுக்கப் போகிறார்களாம்!

இந்திய தணிக்கை போர்டுத்தலைவராகயிருக்கும் அகர்வாலா ஒரு யோசனையொன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த யோசனையை விரைவில் டில்லி சர்க்கார், சட்டமாக ஆக்கினாலும் ஆக்கலாம்.

அதன்படி யாராவது திரைப்படம் எடுக்க விரும்பினால், முதலில் அவர்கள் படமெடுக்க விரும்பும் கதை, அதன் வசனங்கள் முதலியவைகளை, தணிக்கை போர்டாருக்கு சமர்ப்பித்து அவர்கள் அனுமதியைப் பெறவேண்டும்.

இந்த யோசனை, விரைவில், சர்க்காராலும் ஏற்கப்படுமாம்!

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தணிக்கை போர்டை நியமிக்கும் அதிகாரம் அந்தந்த மாகாண சர்க்கார் வசம் இருந்தது.

இந்த அதிகாரத்தையும் டில்லி, புது உத்திரவு மூலம் கைப்பற்றிக் கொண்டதோடு தனது பார்வைக்குக் கீழ் மூன்று வட்டார அதிகாரிகளை நியமித்து, புது ஏற்பாட்டைக் கொண்டு வந்தது.
டில்லியின் இந்த நடவடிக்கையை படத் தொழ‘லில் ஈடுபட்ட பலர் எதிர்த்தனர்.

ஆனால், இப்போது அடுத்த கட்டமாக, கதைகளையும் வசனங்களையும் கூட காட்டி அனுமதி பெறவேண்டும் என்கிற யோசனைக்கு வந்திருக்கின்றனர்!

டில்லியின் இந்த முடிவு படத்தொழிலில் ஈடுபட்டோரின் சுதந்திரத்தை மட்டுமல்ல பறிப்பது எல்லாவற்றையும் டில்லியிடம் ஒப்படைக்கும் காரியமுமாகும்.

இந்த யோசனை, சட்டமானால், டில்லி தன் இஷ்டப்படி எவரையும் ஆட்டுவிக்கும், கதாசிரியர்களின் கற்பனையும், புதுமலர்ச்சி காணவிரும்புவோரின் ஆசையும், அந்தந்த வட்டார தணிக்கை போர்டாரால்தான் வரையறுக்கப்படுமாம்!

பல கோடி மக்களின் உள்ளங்கள் ஒருசில தனி மனிதனின் தணிக்கைப்படி தான் நிர்ணயிக்கப்பட வேண்டுமாம்!

இந்த உத்திரவு சட்டமாக ஆகிவிடுமானால், படத்துறை, ஒரு பம்பரம் போலவும் அதை ஆட்டிவைக்கும் கயிறுபோல சர்க்காரின் அதிகாரமும் வந்துவிடும்.

இதனால், இப்போது ஏற்பட்டிருக்கும் புதுமலர்ச்சி, வளராமல், டில்லி ஆதிபத்தியம், தன் அம்புகளை வீசலாம்.

அவர்கள் காட்டும் வழியிலேயே இயந்திரம் போல, படமெடுப்போர் இயங்கும்படிச் செய்யப்படலாம்.

மக்கள் சிந்தனையைக் கவருமளவுக்கு வளர்ந்துவிட்ட இத்துறையை தமதாக்கி அதன் மூலம் அறிவு வளர்ச்சிக்கேற்ற பணிகளையும் புரியத் தைரியமில்லாத சர்க்கார் வளரும் அறிவுப் பணியின் மீது பாணத்தை வீசி அடக்கு முனைவது, அக்கிரமம்! அநீதி!!

இதனால் விளையும் ஆபத்துக்களை எண்ணிப்பார்த்து, தடுப்பதற்கான வழி வகைகளை படத்தொழிலில் ஈடுபட்டோர் காணவேண்டும்.

டில்லி வளருகிறது! அதன் ஆதிபத்தியம் ஒரு கொடுவாள்! அதைத் தடுக்கவேண்டும் இன்றேல் நம் வாழ்வு அழியும்.

சுயமரியாதை பலியாகும்!

சுதந்திரம் நாசமாகும்!

நாம் நடைப்பிணமாவோம்!

(திராவிடநாடு 18.11.51)