அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கோலேந்திவிட்டார்!

ஆச்சாரியார் மந்திரிசபை அமைத்துவிட்டார், ‘பஜகோவிந்தம்‘ பாடியவர் பாராளத் துவங்கிவிட்டார்.

ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு, சர்வாதிகாரம் தன் கையிலே கோலேந்தி விட்டது. தவிக்கும் மக்களின் துயர் துடைக்க காங்கிரஸ், ஆட்சிபீடம் அமர்ந்து விட்டது.

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கட்சி, மார்தட்டிப் புறப்படுகிறது – மக்களை ஆளப் புலிகள் புறப்பட்டு விட்டன – பசுக்கூட்டம் நோக்கி பச்சை இரத்தம் நாவிலே வழிய பதவி ருசிகொண்ட காங்கிரஸ் பாசீசம், மீண்டும் மக்களைச் சுரண்டக் கிளம்பிவிட்டது.

ஆச்சரியத்தோடு பார்க்கிறான், ‘ஹிட்லர்‘ இந்த அற்புதத்தை ‘நம்மையும் மிஞ்சிவிட்டார்களே இந்த காங்கிரஸ்‘ என்று, நோக்குகிறான் முஸோலினி, ஜார் சிரிக்கிறான்! லூயி, வெட்கப்படுகிறார்! ஜனநாயகம் இரத்தம்பட்ட உடலோடு கிடக்கிறது!!

தோற்ற கட்சி, தோள்தட்டிக் களிம்பிய அற்புதத்தை எவரும் கண்டிருக்க முடியாது. ‘நாங்கள் இருக்கிறோம், அதைச் செய்து காட்ட‘ என்று கூறாது கூறுகிறது டில்லி ஏகாதிபத்தியம்.

மக்கள் மதியாத கட்சி, மக்களை ஆளவருகிறது மதோன்மத்தர்களைக் கொண்டுள்ள, காங்கிரஸ் மாநிலத்தை ஆளத்துவங்கிவிட்டது நீதியை ஒதுக்கிவிட்டு ‘கொல்லைப்புறமாகத் தலைவரைத் தேர்ந்தெடுத்து, பதவி நாற்காலிகளில் அமர்ந்து கேலியோடு பார்க்கிறது – நாட்டை.

நாடு எதிர்பார்க்கவில்லை – இவர்களை விரும்பவும் இல்லை இந்த வீணாசைக்காரர்களை விரட்டி, விரட்டி அடித்தனர் – ஓடஓடத்துரத்தினர், மந்திரிகள் தோற்றார்கள்! பிரதம மந்திரி மூக்கறுபட்டார்! பெரும்பாலான உறுப்பினர்கள், மக்களால் ஓட்டப்பட்டனர். ‘மெஜாரிட்டியில்லாத கட்சியாயிற்று காங்கிரஸ். இப்போது! அது ஆட்சி நடத்துகிறது. தோற்றோர் துந்துபி பாடுகிறார்கள்! நொண்டி, நடனம் ஆடுகிறான் – ஊமை, பாடுகிறான் – எங்கே காணமுடியும் இதனை!

375ல் 152-ஐ பெற்ற கட்சி ஆள்கிறது – அற்புதமான காட்சியிதை எங்கே காண்பீர்? 166 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஐக்கிய ஜனநாயக முன்னணியை அழைக்கவில்லை – கவர்னர் டில்லியில் அனுப்பப்பட்ட கவர்னர்! காங்கிரஸ் கவர்னர்!

அழைக்காதது மட்டுமல்ல, ‘பரமானத்நம்‘ காணப்போவதாக தியாகர் திருநாமம் கொண்ட நகரிலே ‘ஒதுங்கி கிடந்த‘வரை, ஊராளச் செய்திருக்கிறார் – ஊராளவருமாறு ‘கொல்லைப்புறமாக‘ அழைப்பு தந்தார் – தனது விசேஷ அதிகார மூலம் எம்.எல்.சி. ஆக்கியிருக்கிறார்.

மக்களால் விரட்டப்பட்ட கட்சிக்கு,மக்களைச் சந்திக்க ‘பயப்படும்‘ மகானுபாவர் தலைமை வகிக்கிறார் – தர்பார் நடத்தத் துவங்குகிறார்.

கோரத் தாண்டவம் ஆரம்பமாகி விட்டது – மூர்க்கத்தனம் துவங்கி விட்டது – முதலைகளாக மாறிவிட்டனர் ‘காங்கிரஸ் மூலவர்கள் – வேறென்ன கூற முடியும், இந்தக் கேவலத்தைத் துணிந்து செய்திருக்கும் அவர்களைப் பற்றி?

நாடு, ஐந்தாண்டு காலமாக நலிந்தது, மெலிந்தது – மக்கள் கதறினார்கள், பட்டினியால் மட்டுமல்ல, குண்டுகளைக் கண்டு, அத்தகைய குணாளர்கள் கையில் மீண்டும் நாடு சிக்கிவிட்டது.

சிக்கும்படி செய்துவிட்டார்கள் – யார்? . மக்களா – அல்ல! அல்ல!! எதிர்க்கட்சியினரா – இல்லை! இல்லை!! டில்லி ஆதிபத்தியக்காரர்கள், தமது திருத்தொண்டராம் ஆச்சாரியார் மூலம் இத்திருப்பணியைச் செய்திருக்கிறார்கள். இதற்கு கருவி, இங்குள்ள ‘துரோகிகள்‘ – ஆமாமம்வேறு வார்த்தை கிட்டவில்லை எமக்கு, இதைவிட வீரப்பரம்பரையெனக் கர்ஜித்தனே திருப்பரங்குன்றத்திலே! அந்த விவேகிகள் இருக்கத்தான் இருக்கிறார்கள்! இறந்துபோய்விடவில்லை – அவர்கள் கண்முன்பாக ஆச்சாரியார் அரியாசனத்தில்! ஐந்து ஆண்டுகளுக்கு முன்,எவர் கூடாதெனக் கூறி ‘இங்கே இடமில்லையென விரட்டப்பட்டாரோ அவர் சென்னை சர்க்கார் மாளிகையில்! நாட்டை வீழ்த்திய இனத்துக்குப் பணியோமெனப் பரணி பாடினரே, அவர் இன்று பாதசாரிகளாய் நின்று பார்க்கிறார்கள்! பவனிவருகிறார் ஆச்சாரியார்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆச்சாரியார், டில்லியின் பக்கபலத்தோடு, மணிமுடிசூட்டப்பட்டிருக்கிறார் – பிரதமர் ஆக்கப்பட்டிருக்கிறார்.

ஆகவில்லை – ஆக்கப்பட்டிருகிக்றிார், இரண்டு வார்த்தைகளுக்கு முள்ள வித்தியாசமிருக்கிறதே அதுதான் ஜனநாயகத்தின் அரிச்சுவடி அது கொலை செய்யப்பட்டுவிட்டது. டில்லி மூலவர்களால்.

“இல்லை! நாங்களே விரும்பித்தான் அழைத்தோம் இவரை, சென்னை சட்டசபை காங்கிரஸ் கட்சியன்றோ தீர்மானம் போட்டது டில்லிக்கும் இதற்கும் என்ன சம்பந்தமாம்!“ என்று கேட்கலாம் தேசிய நண்பர்கள் தோழர்களே! “ஏகமனதாக ஒரே உள்ளத்தோடு“ என்று அகராதியிலுள்ள அத்தனை வார்த்தைகளையும் காட்டி எழுதலாம், பாதந்தாங்கிக் பத்திரிகைகள் அவர் போனார் –இவரே வேண்டிக் கொண்டார் என்றெல்லாம் செய்திகள் வரலாம். அதனால் உண்மையை மறைத்துவிடமுடியாது! ‘எல்லோரும் ஆச்சாரியார் வரவேண்டுமென்றுவிரும்பியிருந்தால் இதுபோலவா பேசுவார்கள்?

“ஆச்சாரியார் வருவதில் காமராஜருக்கு இஷ்டமில்லை“

யார் பேசியது என்பீர்கள் சட்டசபைக்கட்சித் தேர்தல் நடைபெற்ற அன்று பேசிய காமராஜ் கூறியிருக்கிறார் இப்படி.

என்னபொருள் இதற்கு? சிலர் இப்படிப் பேசுகிறார்களாம் யாராயிருக்க முடியும் அந்தச் சிலர் நாமா? நாம்தான் எதிர்க் கட்சிகளாயிற்றே! எதிர்க் கட்சிக்குப் பதிலளிக்கும் அவசியமே இல்லையே இப்போது என்ன காரணம் காமராஜரே இதை வெளியிடுவதற்கு! ஏதோ, அவர்களுக்குள்ளாகவே இந்தப் பேச்சு பலமாகியிருக்க வேண்டும். பானையில்லாமல் அகப்பையில் வருமா!

காமராஜரும், முன்பு கர்ஜனை புரிந்தோரும் இன்று ‘தாளடியே சரணம்‘ என ஓடும்படி – அல்லது ஒத்துக் கொள்ளும்படிச் செய்யப்பட்டதற்குக் காரணம் என்ன?

திறமையான நிர்வகம் வேண்டுமென்ற ஆசையால் – என்று பதில் கூற முனைவர். இது கூறுவோரது ஆசையை வெளிப்படுத்துமேயொழிய, உண்மை அதுவல்ல, ஆச்சாரியாருக்கு சமீப வருடங்களில் ஏற்பட்ட – ஏற்படுத்தப்பட்ட – அந்தஸ்தைக் காட்டி விளையாட விரும்புகிறார்கள். டில்லியினர் ஆச்சாரியார் என்றால் ‘அந்தப் பதவி வகித்தவர் – இவர்களெல்லாம் பாராட்டப்பட்டவர். இவ்வளவு பெரியவர் நேருவையும் ஆட்டிப் படைப்பவர்‘ என்றெல்லாம் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறதல்லவா? இந்த அந்தஸ்தைக் காட்டி, மனமொடிந்து கிடக்கும் மக்களை மயக்கப் பார்க்கிறார்கள். இதனால்தான் இன்று காங்கிரஸ் ஏடுகள் எழுதுகின்றன – ‘ராஜரிஷி சம்மதித்தார்‘, பெரிய அதிர்ஷ்டம்‘ ‘சென்னை பிழைத்தது‘, ‘ராஜாஜி ஒத்துக்கொண்டார்‘ என்று மலையிலிருந்த ‘மகாதேவர்‘ இறங்கிய போலும், அவர் இறங்காததால்தான் இங்கே பட்டினியும்பசியும் தாண்டவமாடியது போலவும், பிரமாதப்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. பாவம், இங்கே ‘இடமில்லை‘யென்று விரட்டியோட்டப்பட்ட காட்சியை மக்கள் மறந்துவிட்டனர் என்ற எண்ணம் போலும்!

சென்னை சிரிப்பாய்ச் சிரிக்கிறது என்றால் அதற்குக் காரணம் நிர்வாகச் சீர்குலைவு என்று சொல்லுகிறார்கள். அதைப் போக்கவே, ஆச்சாரியார் மந்திரியானார், என்று கூறப்படுகிறது. இது, மக்களை மயக்கும் சொல்வித்தை, ஆச்சாரியாரின் அந்தஸ்த்தைக் காட்டி, ‘கவர்னர் ஜெனரலாகவும் கவர்னராகவுமிருந்தவர் மந்திரியாக வந்திருக்கிறாரப்பா! எல்லாம் இனி சரியாப் போய்விடுமப்பா! என்று மக்கள் கருதுமாறு செய்ய விரும்புகிறார்கள் அவர்கள் கூறுவது போலவே ஆச்சாரியார் நிர்வாகத் திறமையுள்ளவராக வைத்துக் கொள்வோம். அதனால் என்ன? எல்லாம்வல்ல ‘எம்பிரானா‘ அவர்! சக்கரத்தைச் சுழற்றிவிட அதன் காற்றுவேகத்தில் எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லிக் கொள்ள! பிரிட்டிஷ்காரன் ஆக்கிவைத்துச் சென்ற நிர்வாக இயந்திரம் அப்படியே இருக்கிறது – அது எப்போதும் போல இயங்கிக் கொண்டு தானிருக்கும் அதில் இவரென்ன சீர்திருத்தம் செய்வது? அப்படித்தான் செய்வதென்றாலும எதைத்தான் செய்ய முடியும்! இப்போதிருக்கும் சர்க்கார் காரியதரிசிக்குப் பதில் மற்றொருவரைப் போடலாம் – அல்லது கலெக்டர்களையும் தாசில்தார்களையும் கண்டிப்பாக இருக்கம்படி கட்டளையிடலாம் – கிராம முன்சீபுகளைக் கூட்டிப் போதனைகள் புரியலாம் இதைத் தவிர வேறென்ன செய்ய முடியும், நிர்வாகச் சீர்திருத்தம் – போதுமா! முடிந்துதான் விடுமா! ஆம் என்று கூறக்கூடிய அசடுகளல்ல இங்குள்ளோர்.

வாழ்க்கை வாழும்படியாக இருக்க வேண்டும் – இதுதான், மக்களுடைய ஆவல் இந்த ஆவலோடுதான் காங்கிராட்சிக்கு வரவேற்பு கூறினார்கள் முன்பு காங்கிரஸ் இது சம்பந்தமாகக் கூறிய கொள்கைகளை அப்படியே ஏற்றார்கள். போராடினார்கள். இன்று! அந்தக் கொள்கைகளால் பலனில்லை என்பது மக்களுக்குப் புலப்பட்டுவிட்டது. காங்கிரசின் கொள்கை முதலாளிகளுக்கு சார்பாக இருப்பது தான் – ஏழைகள் எலும்புகளைவிடப் பணக்காரன் விரலில் படும் சிறுகாயமே அவர்களைக் கவலைப்படச் செய்யும் என்கிற உண்மைகளை உணர்ந்திருக்கிறார்கள்.

அதனால்தான், காங்கிரசை விரும்பவில்லை – தோற்கடித்தார்கள்.

காங்கிரஸ் தனது கொள்கைகளைக் கூறித்தான் தேர்தலுக்கு வந்தது.

தேர்தலில் தோல்வி மக்கள் காங்கிரசின் கொள்கைகளை – போக்கை – வேலை முறையை விரும்பவில்லை, வெறுக்கிறார்கள்.

கண்முண் தெரியும் இந்த உண்மைக்குத் திரைபோட பார்க்கிறது காங்கிரஸ் ஏகாதிபத்தியம் – திரை போடுவதோடு தெற்கில் வளரும புதுவேகத்தைப் பொசுக்கிடவும் விரும்புகிறது, வடநாட்டு முதலாளித்துவம். இந்த எண்ணத்தை வெளிப்படையாகக் கூறிடவா முடியும்? முடியாதே! அதனால்தான் மேகானாஸ்திரத்தை வீசுகிறார்கள் – ‘முனபுங்கவர்‘ என வர்ணிக்கப்பட்ட வண்ணம் முடிசூட்டப்பட்டிருக்கிறார், “முன்பு மூக்கறுபட்டவர்!“

நிர்வாகம் ஒழுங்காக நடக்கும் – இதை இங்குள்ள காங்கிரஸ்காரர்கள் – முன்பு ஆச்சாரியாரை விரட்டித் துரத்தியவர்கள் – கூறுகிறார்கள். டில்லி சொல்லியபடி! ஆமாம், டில்லி சொல்லியபடி!! தெற்கில் தன்னுடையது அல்லாத ஆட்சி ஏற்படுவதை விரும்பாத டில்லி தனது பிரதிநிதியாக காங்கிரஸ்காரர் ஒருவரைக் கவர்னராக அனுப்பியது – முதலில் பிறகு, ‘கல்கத்தாவில்‘ கூடி ‘சென்னை‘பற்றி முடிவு செய்து – சென்னையிலிருந்து சென்றோர் மூலம் அனுப்பியது இங்கு அந்த முடிவுதான் – இன்று ஆச்சாரியாரை அமர்த்தியிருக்கிறது. ஆசனத்தில்!

“டில்லி கட்டளையிட்டுவிட்டால் போதுமா? காமராஜர் போன்றோர் உடனே ஒத்துக் கொண்டாவிட முடியும்! இவர்களுக்கும் ஆச்சாரியார் வரவேண்டும் என்கிற ஆசையல்லாவிடில் எப்படி நடக்கும் இது!“ என்று கேட்கலாம்.

உண்மைதான், ஆனால் ஒத்துக் கொள்ளும்படி நிலைமை கொண்டு விட்டிருக்கிறது, ஒத்துக் கொள்ளவிடில் டில்லி பழிசாட்டும் இவர்கள்மீது! பழி ஏன், என்பதொரு பக்கமும் டில்லி காட்டும் யோசனையால் பலன் தரலாம் என்கிற ஆளையுமே ‘திருப்பரங்குன்றத்து வீரரர்கள்‘ திருவடி சரணம் பாடச் செய்திருக்கிறது.

அந்த ஆசையெது வென்பீர்கள்! அதுதான், ஆச்சாரியாரின் அந்தஸ்தைக்காட்டி மக்களை மயங்க வைப்பது, சட்டசபையில் ஆதரவு தேட முனைவது.

இந்த யோசனைகளின் முடிவாக, ஆச்சாரியார் பதவியேற்கும்படிச் செய்யப்பட்டிருக்கிறார். அவரது மந்திரிசபையில் சேரப் ‘பல்லிளித்து வருவோர் எவராவது உண்டா?‘ என்று வலைவீசுகிறாராம், அவரும்.

காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்றோரை, சேர்க்க முனைகிறது கரையும் கட்சி. முகத்திலே துப்பியவனுக்கு முத்தம்!

இந்தக் கேவலத்துக்கு இரையான கட்சிக்கு ஆதரவு தர எவரே செல்வர் – கொள்கையும் முதுகெலும்பு மற்றோரைத் தவிர கோணங்கிக் கூத்துக்கு நல்லோரா கை கொடுப்பர்! நாளை – மக்களைச் சந்திப்பதைவிட இன்று ‘மனோரம்யமாக வாழ்ந்தால் போதும்‘ என்கிற மதோன்மத்தரைத் தவிர, எவரும் ஒப்பார் இதனை!

ஆச்சாரியாரின் அந்தஸ்து அழகில் மயங்கி, தமது அரசியல் வாழ்வைக் ‘குப்பைத் தொட்டி‘யாக்கிக் கொள்ள விரும்பும் அரசியல்வாதிகள், எதிர்காலத்தின் இகழ்ச்சிச் சின்னங்களாகத்தான் ஆவர் – பாசீசம் வளர கைகொடுக்கும் எவரையும் இனி உலகம் மதிக்காது – நாமும் மதியோம்.

“இப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரசல்லாத சட்டசபை உறுப்பினர்கள் காங்கிரஸ் ஆதிக்கம் கூடாது என்று தீர்மானித்த பொது மக்களின் காங்கிரஸ் எதிர்ப்புணர்ச்சியாலேயே வெற்றி பெற்றவர்கள். எனவே, மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஆதிக்கம் ஏற்படுவதற்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ, துணையாகவோ உடந்தையாகவோ காங்கிரசல்லாத சட்டசபை உறுப்பினர்கள் எவரேனும் இருப்பாரேயானால், அச்செயல் பொது மக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகமாகும். ஆகவே, காங்கிரசின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகாமலும், அரசியல் வலையில் வீழாமலும், எச்சரிக்கையாக இருந்து காங்கிரசின் ஆதிக்கத்தை ஒழிப்பதில் தீவிரமாக முனைந்து பாடுபடவேண்டும்‘‘ என்று காங்கிரசல்லாத உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டு, ஈரோட்டில், திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழு முடிவு செய்திருக்கிறது.

இந்த முடிவை, எல்லோரது பார்வைக்கும் வைக்கிறோம்.

பாசீசம் வளர வகைதரும், சமூக விரோதிகள் வளர்வது – ஆபத்து! மிக மிக ஆபத்து! இதை வளர விடோம் – ஏற்பட்டிருக்கும் பாசீச ஆட்சி ஒழி பாடுபடுவோம் – ஈரோடு பொதுக்குழு முடிவு செய்திருப்பது போல, “காங்கிரசின் பாசீச ஒழிப்புக்காக முற்போக்குக் கட்சிகள் ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற பெயரால் மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்கிறது“ என்ற முடிவுப்படி உருவெடுக்கத் துவங்கியிருக்கும் டில்லி ஏகாதிபத்தியத்தையும் அதன் பிம்பங்களின் போக்கையும் ஒழிக்கப் பாடுபடுவோம். ஒழிக காங்கிரஸ் ஆட்சி! ஒழிப்போம் பாசீச ஆட்சியை!!

திராவிட நாடு – 13-4-52