அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கோலார் கொடுமை!

இருபது இளங்காளைகள்,கடந்த 19-ந் தேதி கோலார் தங்கச் சுரங்கத்துக்குப் பலியான செய்தி அறிந்தோம் – திடுக்கிட்டோம். ‘சாம்பியன் ரீப்மைன்‘ சுரங்கம், திடீரெனச் சரிந்ததால், தொழிலாளச் சகோதரர்கள் இருபது பேரும், பிணமாகி விட்டனர். அவர்களது பிணங்களைக்கூட இன்னும் காண முடியவில்லையாம் 8000 அடிக்குக்கீழ், தங்கம் தேடியபோது, பாறைகள் பிளந்து பூமிசரிந்து, புதைபட்டுப் போயினராம். இருபதுபேர்! அத்தனைபேரும வாலிபர்கள், பல பாகங்களிலிருந்தும்அங்கே குடும்பத்தோடு சென்று, கும்பி கழுவ, சுரங்க வேலைக்குச் சென்றவர்கள் அவர்களை நம்பியிருந்த குடும்பம் – சாதாரணமானதாயிருக்க முடியாது. தாயும் தந்தையும் மனைவியும் மக்களும், தமது ‘குடும்ப விளக்கு‘களுக்கேற்பட்ட கோரச் சாவு கேட்டு, எப்படிச் பதறினரோ! என்று எண்ணும்போது மெய் சிலிர்க்கறிது, நமக்கு ஏழை உலகை எண்ணி, இதயம் வேகிறது. சுரங்கத் தொழில் சாதாரணமானதல்ல! அங்கிருந்துகிடைக்கும் ‘தங்கம்‘, அகில உலகத்தையும் ஆட்டிப் படைக்கக் கூடியதாயிருக்கலாம். அதைப்பெற்று மகிழ்வோர் தொகை, அதிகமிருக்கலாம். ‘தங்கச் சுரங்கங்களுக்கு அதிபதி‘ என அவைகளை நிர்வகிப்போரை, பயத்தோடு பார்க்கலாம் உலகம். ஆனால், அந்த ‘தங்கத்தை‘ எடுக்கப் பாடுபடும் ஏழைகள் உலகு இருக்கிறதே அதுபடும் கஷ்டத்தை எண்ணினால்! இருபது உயிர்கள் – ஒரே வினாடிக்குள் – 8000 அடிக்குக்கீழே அப்பப்பா எவ்வளவு கொடூரமாயிருக்கிறது இந்தச் செய்தி! ‘கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக் கருவியெல்லாம் செய்து தந்தை கைதான் யார் கை?“ என்று பாரதிதாசன், கேட்பதை எண்ணிப் பார்த்தால், வேதனை விரியும்! பாறைகளைத் தோண்டிஅங்கே பதுங்கிக் கிடக்கும் தங்கத்தை எடுக்கப் பாட்டாளித் தோழர்கள் பாடுபடுவதை நினைத்தால், ‘என்ன உலகமடா!‘ என்ற வேதனை நம்மை அறியாமலே எழும்பும்!

இவ்வளவு கஷ்டங்களுக்கிடையே தங்கம் தரும். உழைப்பாளர்கள், தமது வாழ்க்கைக்கான வசதிகளின்றி வதைகின்றனராம். வசதிகள் என்றால், மாடமாளிகையோ பூஞ்சோலையோ அல்ல அவர்கள் விரும்புவது மிகமிகச் சாதாரணமான வசதிகள் – தினசரி குடும்ப வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான வசதிகள், வாழ்க்கையையே ஒப்படைத்து, கனிக்குள், இறங்கும் தொழிலாளி வீட்டுக்குத் திரும்பியதும் சிறிது நேரங்கூட தொல்லையில்லாமல் இருக்க முடிவதில்லை கனியிலே, இறங்கும்போது வயிர்வை சிந்துகிறது! கனிக்கு வெளியில் வந்தாலோ மனைவியின் கண்ணீர் சிந்துகிறது!

உரிகம் சுரங்கத் தொழிலாளர் மத்தியில், பேசிய மைசூர் சட்டசபை உறுப்பினர் தோழர் கே.எஸ்.வாசன் கடந்த 22ந் தேதியன்று, சுரங்கத் தொழிலாளரின் துயரங்களை, தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். அவர் பேசுகையில், குறிப்பிட்ட முக்கிய விஷயம், அல்லலுற்று அவதிப்படும் தொழிலாளர்கள், வயிறாரவாவது சாப்பிட உணவு கிடைக்கும்படிச் செய்ய வேண்டுமென்பதாகும். உழைத்து வாழ்வோருக்குப் போதிய உணவில்லை! உணவுப் பொருள் கிடைத்தாலும தேவையான அளவுக்கு வாங்க முடிவதில்லை!! இந்த அடிப்படைப் பிரச்னையைத் தெளிவாக்கிய, அவர், ‘உணவுப் பொருள்களை சுரங்கக் கம்பெனிகளே வாங்கி, குறைந்த விலைக்கு தொழிலாளருக்கத் தரவேண்டும்“ என்று கூறியிருக்கிறார். அதிக விலைக்கு வாங்கிக் குறைந்த விலைக்குத் தருவதா? எனத் திகைக்கலாம். தங்கச் சுரங்கங்களின் நிர்வாகத்தினர் பெறும் பெருமிதமான பலனுக்கும் லாபத்துக்கும், இந்த முறையினால் ஏற்படக்கூடிய நஷ்டம், மிகவும் சாதாரணமாகும். பாடுபட்டு, உயிரிழக்கும் கூட்டத்துக்கு இத்தகைய உதவிகளைச் செய்ய நிர்வாகிகள் முன்வரவேண்டும்! தமக்காக வாழும் ‘உலகுக்கு‘, தேவையான உணவுப் பொருள்களை, சர்க்கார் மூலம் பெற்று, அவைகளை எல்லோரும் தத்தமக்குத் தேவையான அளவுக்கு, வாங்கி உபயோகிக்கும்படியான வசதியைச் செய்து தரவேண்டும். அப்போதுதான், மக்களின் ‘வயிறு‘ நிறைய முடியும்! இந்த நல்ல காரியத்தை, சுரங்க நிர்வாகிகள் செய்து தரவேண்டும் – துடிக்கும் தொழிலாளரக்ள் துயர்துடைக்க.

இருபது தொழிலாளர்களின் மரணம் குறித்து அனுதாப அறிக்கை விடுத்த மைசூர்ப் பிரதமர், மாண்ட ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் நஷ்டஈடு தரும் நடவடிக்கை விரைவில் துவக்கப்பட வேண்டும் என்பதாகத் தெரிவித்திருக்கிறார். இதை நாம், மிகமிக வலியுறத்த விரும்புகிறோம். கணவனையிழந்த குடும்பங்களைக் காக்க எவருமில்லை! உழைப்பை மட்டும் நம்பி வாழும் கூட்டத்திற்கு உடனடியாக உதவாவிடில், அந்தக் குடும்பங்கள், இலவம் பஞ்சாக ஆகிவிடும் இந்நிலை வராமல் போதுமான நஷ்டஈடுத் தொகையைத் தர வேண்டும். இதுதுரிதமாக நடக்கும்படி, மைசூர் சர்க்கார், செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் வாடும் தொழிலாளர்களுக்கான குறைகளை நிவர்த்திப்பதில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும்.

மேற்படி பொதுக்கூட்டத்தில் பேசிய மைசூர் தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத் தலைவரும் சட்டசபை உறுப்பினருமான தோழர் பி.எம். சாமிதுரை வலியுறுத்தியிருப்பிதுபோல, தொழிலாளர்களுக்கான பிராவிடடெண்ட் பண்டு, கூலி நிர்ணயம், வேலையின் தரம், ஆகியவைகளை நிர்ணயிக்குமாறு, சுரங்க நிர்வாகிகளை வலியுறுத்த வேண்டும்.

இலாபமில்லாத இடமல்ல, அது! அங்கே ஏழைகளின் பிணங்கள்மீது அகப்படும் தங்கத்தைக் கண்டு மகிழும் சுரங்க நிர்வாகிகள் இந்த சிறுசிறு நன்மைகளைக்கூடச் செய்து தரத் தயங்கின்றனராம். இத்தயக்கத்தைத் தட்டிக் கேட்கவேண்டிய மைசூர் சர்க்காரே, வாய்மூடி மௌனியாயிருக்கிறது.

உயிரிழந்து, ‘தங்கம் தருவோர்‘ தவிக்க, அவர்கள் வேதனையின்மீது தமது உல்லாசபுரியை அமைத்துக் கொண்டிருப்போர் ஒய்யாரமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

சாவு! சஞ்சலம்! உணவுப் பஞ்சம்! கூலிக் குறைவு! இத்தனை வேதனைகளுக்கு ஆளாகும், தொழிலாளத் தோழர்களில் பலரை, வேலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பவும் திட்டமிட்டுக் கொண்டுள்ளனராம். தங்கத்தின் விலை, வீழ்ந்து விட்டதல்லவா! அதைக் காரணமாகக் காட்டி, பல தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கும் திட்டத்தோடு இருக்கிறார்களாம். வேதனைமேல் வேதனை! தொல்லைமேல் தொல்லை! துடிக்கும் புழுக்களா, அவர்கள்? துரைமகனார் பலர் ஒய்யாரமாக இருக்கின்றனர், கொள்ளைச் சம்பளம் பெற்றுக் கொண்டு! அசர் ஐரோப்பியதுரை மகனார்கள்! ஆனால், கனிபிளந்து, சாவுக்கும் வாழ்வுக்குமிடையே திண்டாடுவோர் விரட்டியடிக்கப்படுவதாம்.

இந்த விசித்திரக் கொடுமையைத் தடுத்து, பரிதவிக்கும் சுரங்கப்பாட்டாளிகளுக்கான உதவிகளைச் செய்துதர, மைசூர் சர்க்கார் முன் வரவேண்டும் – ‘துரைகளுக்குப் பல்லிளிக்காது, துணிய வேண்டும்.

வாழ்விழந்துபோன, ‘இருபது பிணங்களின்‘ சார்பில், இதை வலியுறுத்துகிறோம்.

திராவிட நாடு 27-4-52.