அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கொசுவைக் கொல்லும் இசை!

நாம் என்ன செய்வது! நம்மால் என்ன ஆகும்! என்ற பெருமூச்சுப் பேச்சு நமது பாரம்பரிய வித்தை!

என்ன நேரிட்டாலும், இயற்கைக் கோளாறு முதற்கொண்டு வேந்தனின் கொடுங்கோன்மை வரையிலே, நாம் அதே மனப்பான்மையைத் தான் காட்டி வந்திருக்கிறோம்.

ஆறு, வெள்ளமானாலும், நாடு காடானா லும், மன்னன் மிருகமானாலும், நாம் இவைகளைக் கட்டுக்குக் கொண்டு வரவோ, திருத்தவோ, முயன்றதில்லை- அந்த எண்ணத்துக்கே இடமளிப்பதில்லை. எல்லாம் சரியாக நடை பெறும்படி கவனித்துக் கொள்ள ஒருவர் இருக்கிறார்- அவர் இருக்கும்போதே, சில விபரீதங்கள் நேரிட்டால், நாம் எப்படித் தடுக்க முடியும்! நம்மால் ஆகிற காரியமா! என்று எண்ணியே, நமது முன்னோர்கள், பல பிரச்னை களைக் கவனிக்காமலிருந்து விட்டனர்.

ஆழி கரையின்றி நிற்கவில்லையா! நம்மாலா இந்த அற்புதம் நடைபெறுகிறது- கல்லினுள் தேரைக்கும் கருப்பைக்குள் முட்டைக் கும் ஆண்டவன் உணவளிக்காமலா போகிறார்- காட்டில் வளரும் பலகோடி உயிர்க்கு ஊட்டி உணவளிப்பதாரோ- என்றும் பேசி, மேதாவிகள் என்று மடடுமல்ல, ஞானவான்கள் என்றும் பெயர் எடுத்துக் கொள்வதிலேயே பலருடைய நாட்டம் இருந்து வந்தது. சிற்சில சமயங்களிலே, ஆண் பனையைப் பெண் பனையாக்கி விடுவது, எலும்பை எழிலுடை மங்கையாக்குவது என்பன போன்ற அற்புதங்கள் நடைபெற்றன என்று கூறுவதும் கூட, தேவலீலைகளாகக் கருதிக் கூறப்பட்டவையேயொழிய ஆராய்ச்சியினால் ஏற்பட்ட விளைவுகள் என்ற முறையிலே அல்ல.

குஷ்டம் அவனுக்கு- அவனைக் கண்ட தும் என்ன தீவினை செய்தானோ முன்பு, இப்போது இப்படி அனுபவிக்கிறான் என்று எண்ணத்தான் இன்றும் நம்மில் பலருக்கு முடிகிறதே தவிர, குஷ்ட நோய் ஏற்படும் காரணம் என்ன, இதை நீக்கும் முறைகள் யாவை, என்பன போன்றவைகளிலே, மனம் செல்வதே இல்லை. நமக்கு மட்டுமா! வைத்தியருக்கே கூடத்தான்!

என்னமோ அப்பா, என்னிடம் உள்ள அபூர்வ மருந்தைத் தருகிறேன் `உன் விதி' எப்படியோ அதன்படி நடக்கட்டும், கூறித்தானே அவரும் மருந்தளிக்கிறார்.

இவ்வளவு, சோர்வு- சந்தேகம்- சலிப்பு இருப்பற்குக் காரணம், ஒரு சம்பவத்தையோ, நிலையையோ காணும்போது, ஏன் இவ்வித மிருக்கிறது, இதை என்ன செய்தால் மாற்றலாம் என்ற அறிவுச் சுறுசுறுப்பு ஏற்படாததுதான். ஆயிரமாயிரம் விஷயங்களை, இந்த மனப் பான்மை காரணமாக, நாம் கவனிக்காமலிருந்து விட்டோம்- காலமாற்றத்தை, உலகின் மற்றப் பகுதிகளிலே உள்ள நிலைமைகளைக் கவனிக் கும் பண்பை இழந்துவிட்டோம். காக்கை ஏன் கருப்பாகவே இருக்கிறது- கருப்புக் கோழி ஏன் வெள்ளை முட்டை வைக்கிறது- கடற் தண்ணீர் ஏன் உப்பாகவே இருக்கிறது. என்று வேடிக்கைப் பேசிவிட்டு, எதற்கும் விளக்கம் பெற முயற்சிக் காமலேயே இருந்து விட்டோம்.

மற்றவர்கள் இதுபோல் இல்லை- நல்ல வேளையாக இல்லை- அவர்களும் நம்மைப் போன்றே இருந்துவிட்டால், உலகின் நிலை எப்படி இருந்திருக்கும்!

நோய்க்குக் காரணம், தடுப்பு முறைகள், போக்கும் வகைகள், பரவ விடாதிருக்கும் வழிகள், இவைகளைப் பற்றிய ஆராய்ச்சியிலே, கவனம் செலுத்தினர்- செலுத்துகின்றனர்.

மழை பொழியவில்லை என்றால், கொடும் பாவி கட்டி இழுப்போமா, கோபால பஜனை செய்வோமா, என்று தான் புத்தி போகிறது. இது வெறும் ஏமாளிப் புத்தி, இதிலேயே, எத்தரின் புத்தியும் வேலை செய்ய ஆரம்பித்தால், மழை பெய்வதற்கு வருண ஜெபம் செய்வது என்று ஆரம்பிக்கிறார்கள். இப்படிப்பட்ட விதமாகத் தான் நம்மவர்களின் சிந்தனை சென்று கொண்டி ருக்கிறதேயொழிய, மேனாட்டு விஞ்ஞானிகள் போலவா மழை இயற்கை நிகழ்ச்சிதான் என்றா லும், அதையே ஏதேனும் செயற்கை முறையால் நாம் உண்டாக்க முடியாதா, என்றா செல்கிறது! அவர்களின் சிந்தனை அந்தத் துறையிலேயும் சென்று, இப்போது மழையை உண்டாக்கும் முறையையும் விஞ்ஞான ரீதியாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள்- இனி இத்துறையில் மேற்கொண்டு ஆராய்ச்சி நடத்திய வண்ணம் உள்ளனர் இங்கு?

``வானமழை போலே
மேனி வண்ணம்
கொண்டான்''

என்று பாடிக் கொண்டே காலந் தள்ளு கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வடக்கே ஒரு ஊரில், மழை இல்லாமல் போகவே, அவ் ஊர்ப் புத்திசாலிகள், சூரியன் மீது கல்லை விட்டெறிந்தார்கள். மழை வேண்டும் என்று, பயிர் வளரவில்லை எதிர்பார்த்தபடி என்றால், விதையால் வந்த தவறா, உழவுமுறையால் வந்த தவறா, ஏதேனும் பூச்சி புழு அரிக்கிறதா அல்லது மண்ணின் சத்தே கெட்டுவிட்டதா என்பன போன்றவைகளிலே நம்மவர்களின் எண்ணம் போவதில்லை- பச்சையம்மனுக்குப் பொங்க விடுவது- அரசமரத்துக்கு மஞ்சள் பூசுவது என்று இப்படி ஏதாவதொரு அர்த்தமற்ற விஷயத்தின் மீதுதான் எண்ணம் போகிறது.

தமிழ்நாட்டுப் பிற்கால மன்னர்கள் பலர், மழை காலாகாலத்திலே பொழியாமற் போனால் என்ன செய்வதென்று, பயந்து, மழையைப் பொழியச் செய்ய, வருண ஜெபம் செய்வதற் காகப் பார்ப்பனர்களை, ஆஸ்தானத்தின் செலவிலே நியமித்தனர். வருண ஜெபம் செய்வ தற்காகவே அவர்களுக்கு மானியங்கள்? இனாம்கள்- தரப்பட்டன. தஞ்சை மாவட்டத்திலே, இப்படி வருண ஜெபம் செய்வதற்காக அளிக்கப்பட்ட இனாம்கள், இன்றும் அந்தப் பரம்பரையினரிடம்ம் உள்ளன.
இயற்கை முறையிலே, ஏதேனும் கோளாறு காணப்பட்டால், அதாவது மழையே பெய்யாம லிருப்பது அல்லது மழை அளவுக்கு மீறிப் பெய்வது முதலிய ஏதேனும் நேரிட்டால், கடவுளின் கோபமே அதற்குக் காரணம் என்று தான், பற்பல நாடுகளிலேயும் ஆதி நாட்களிலே எண்ணம் இருந்தது. பயங்கரமான இடியை, பகவானின் கோபச்சிரிப்பு என்றும், விழியைப் பழுதாக்கும் விதமான மின்னலை, அவருடைய கைவேலின் வீச்சென்றும்தான். அக்கால மக்கள் நம்பினர். எனவே ஏதேனும் பூஜை செய்து கடவுளின் கோபத்தைப் போக்கினால், அவர் மனம் மகிழ்ந்து, இயற்கையை முறைப்படி நடந்து கொள்ளச் செய்வார் என்று நம்பினர்- அதற் கேற்றபடியே நடந்து கொண்டனர். ஆனால் அறிவுத் தெளிவு அங்கெல்லாம் ஏற்பட்டுக் கற்பனைகள், கட்டுக் கதைகள் ஆகியவற்றை மறந்து,, காரண விளக்கத்தில் கவலை செலுத்தி ஆராய்ச்சி மனப் போக்கினராயினர்!

இங்கு மட்டுந்தான், இன்றும் அந்தப் பழைய நம்பிக்கை பழுதுபடாது இருக்கிறது. காரணம், அந்தப் பழைய நம்பிக்கையை அப்படியை வைத்துப் பாதுகாப்பதால் இலாப மடையும் சூது மதியினர் இங்கு இருப்பதுதான்.

``பஞ்ச பூதங்களாம் அப்பு, பிருதிவி, தேயு, வாயு, ஆகாயம் என்பனவற்றைப் பற்றி'' என்று ஆரம்பித்து பஜனை பாடுவதே போதும் என்று நாம் இருந்துவிட்டோம், மற்றவர்களோ, அவை களை ஆராயத் தொடங்கிப் பல அரிய காரியங் களைச் சாதித்தனர்- இன்றும் சாதித்த வண்ணம் உள்ளனர்.

எவ்வளவு பெரிய இயற்கைக் கோளாறை யும் கண்டு, அவர்கள் மிரண்டு, மனதை மறக்கடித்துக் கொண்டதில்லை, எவ்வளவு சிறிய சம்பவத்தையும் ஆராய்ந்து பயன்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை.

கோளங்களையும் ஆராய்கிறார்கள், கொசுவைப் பற்றியும் ஆராய்ச்சி நடத்துகிறார்கள்.

வானத்திலே வட்டமிட்டுப் பார்க்கிறார்கள். கடலுக்குள்ளே மூழ்கிப் பார்க்கிறார்கள்- எங்கெங்கு என்னென்ன காட்சிகள் உள்ளன, கருத்துகள் கிடைக்கின்றன என்று கண்டறிய,

அதன் பயனாக அவர்களால், நேற்று இல்லாததை இன்று உண்டாக்கிக் காட்ட முடிகிறது- நாளைய வாழ்வு நேற்றைய வாழ்வை விட, வசதிகள் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறுகிறது.

நாமோ, ``இன்றைக்கு இருப்பாரை நாளைக்கு இருப்பரென்று எண்ணவோ திட மில்லை'' என்று சோகக் கீதம் பாடிச் சோம்பிக் கிடக்கிறோம்.

கோளங்கள் முதற்கொண்டு கொசு வரையிலே, அவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள் என்று கூறினது, சொல்லடுக்கு அல்ல, உண்மை.

சென்ற கிழமை, ஒரு ஆஸ்திரேலிய விஞ்ஞானி, ஏற்கனவே, ஆராய்ச்சிக்கு அகப் பட்ட நட்சத்திரங்கள் தவிர, வேறோர் புது நட்சத்திரம் இருப்பதாகவும், அந்த நட்சத்திரத் திலிருந்து ஒலிச் சக்தி கிளம்பிய வண்ணம் இருப்பதாகவும் ஆராய்ச்சியால் கண்டறிந்து கூறினார்.
எங்கே இருக்கிறது, அந்த நட்சத்திரம். எவ்வண்ணம் இருக்கிறது என்பன போன்றவை கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட பகுதியிலே, அந்த நட்சத்திரம் இருந்தாக வேண்டும் என்று நிர்ணயித்துவிட்டார். மேற்கொண்டு ஆராய்ச்சி கள் நடந்தவண்ணம் இருக்கிறது- சில காலத்தில், புது உண்மைகள் பல வெளிவரக்கூடும்- புது நலன்களும் கிடைக்கக்கூடும்.

சென்ற கிழமை, மற்றோர் பிரபல விஞ்ஞானி, பிக்கார்டு என்பவர், கடலுக்கு அடியிலே உள்ள நிலைமைகளைக் காணும் கருத்து, அதற்கான கருவியை அமைத்துக் கொண்டு கடலுக்குள்ளே சென்றார். அவருக்கு வயது அறுபத்து மூன்று! இந்த வயதிலேயும் அவருடைய ஆராய்ச்சி ஆர்வம் அப்படி இருக்கிறது. இனிக் கடலுக்குள் இரண்டரை மைல் ஆழம், சென்று பார்க்கப் போகிறாராம் என்ன உள்ளன என்பதை எல்லாம்.

செவ்வாய், சந்திரன் இவைகளை எல்லாம் கண்டறியும் ஆராய்ச்சி நடந்தபடி உள்ளன.

கிரஹங்களிலே காணப்படும் நிலைமை களை எல்லாம் ஆராய்கிறார்கள்.

இந்த மனப்பான்மையின் காரணமாக, எவ்வளவோ, பயனுள்ள முறைகளையும், வசதி தரும் வழிகளையும் கண்டுபிடிக்க முடிகிறது.

கோளம் மட்டுந்தானா, ஆராய்ச்சியாளர் களின் கவனத்திற்கு வந்தது முன்னாலே கூறியிருக்கிறபடி கொசுவும்தான்!

சில பூபாகங்களில் வளம் உண்டு, மழை இருப்பதால்- ஆயினும் அவை, மனிதர் வாழ்வ தற்கு ஏற்றபடி இல்லாமல் போய்விட்டன.

நாம் கூறுவோம், கல்லிலே நார் உரிப் பாயோ! மணலைக் கயிறாக்குவாயோ!- என்று.

அவர்கள் அவ்விதம் கூறுவதில்லை. மக்களின் வாழ்க்கைக்கு வசதியற்ற முறையிலே உள்ள அந்தச் சதுப்பு நிலத்தையும் அவர்கள், ஆராயாமலில்லை.

சில சதுப்பு நிலப் பகுதிகளிலே மனிதனை யும், பச்சைப் பயிரையும் வாழ விடாமல் செய்வது, துஷ்டமிருகங்கள் கூட அல்ல, மிக மிகச் சாதாரணமாக ஜீவன் கொசுக்கள்!

இவைகளின் தொல்லையை நீக்க முடியாது, தத்தளித்தே, அந்த நிலப்பகுதிகளை, விட்டுவிட நேரிட்டது.

அமெரிக்க கண்டத்திலே கியூபா எனும் பிரதேசத்திலே, இப்படிப்பட்ட சதுப்பு நிலம் இருக்கிறது- கொசுத் தொல்லை சகிக்க முடியாததாகி விட்டது. நோய் பரவலாயிற்று! கொசுக்களை அழித்தாலன்றி, வாழ்வு சுகப்படாது என்று தெரிந்தது. அதற்கு என்ன வழி என்றும் ஆராயத் தொடங்கினர்.

மார்டின்- சி- கான் என்ற ஆராய்ச்சியாளர், இந்தத் துறையிலே வேலை செய்து, வெற்றியும் பெற்றுவிட்டார். கொசுக்களைப் பிடித்து அழிக் கும், ஒரு அற்புதமான `வலை'யை அவர் கண்டுபிடித்து அமெரிக்க சர்க்காருக்குத் தந்திருக்கிறார். எவ்வளவு நுண்ணறிவு இந்த `வலை' அமைக்க உபயோகப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

ஆறடி உயரம்- மூன்றடி அகலம் உள்ள, ஒரு பெட்டி, அதனுள் மின்சாரத்தால் இயங்கும் திரைகள். இந்தப் பெட்டி, பாடுகிறது- கொசுப் பாட்டு- அதிலும் காதல் பாட்டு!

பெண் கொசுவின் சத்தத்தை மின்சாரத் துணையால் பதிவு செய்து கிராமபோன் பிளேட்டு களைத் தயாரிக்கிறார். இந்தப் பிளேட்டுகளினால் பெட்டிக்குள்ளே பெண் கொசுவின் பாட்டுக் கேட்கிறது. இந்த `இசை' கிளம்பியதும், காதற் பாட்டல்லவா, கொசுக்கள், இலயித்து விடுகின்ற னவாம். `கீதம் கேட்கும் இடத்துக்கு வருகின்றன. கும்பல் கும்பலாக- பெட்டிக்குள்ளே போகின் றன- அங்கே அமைக்கப்பட்டுள்ள திரைகள் உள்ளனவே, அவைகளிலே சிக்கிச் சாகின்றன!

எவ்வளவு சிந்தனையைச் செலவிட்டி ருக்க வேண்டும், இப்படி ஒரு கருவி அமைக்க.

கொசு விஷயந்தான், என்றாலும், ஆராய்ச்சியாளர்களின் `மூளை' இது பற்றியும் சிந்திக்காமலில்லை. இந்தக் கருவி கண்டறி வதற்கான செலவை, அமெரிக்க சர்க்கார் ஏற்றுக் கொண்டதாம் இந்த `பாடும் பெட்டி'யின் விலை சுமார் இருநூறு டாலர் ஆகிறதாம்.

கோளங்கள் முதற்கொண்டு கொசு வரை யிலே, விஷயங்களை அறியவும், விளக்கம் பெறவும், அவர்களின் அறிவு வேலை செய்கிறது. நாமோ, இன்னமும் `கல்லானை கரும்பு தின்ற' கதையைப் படித்து மகிழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

(திராவிட நாடு - 14.11.1948)