அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கோவணாண்டிகளிடை குபேரர்!

இல்லையே! என்று எங்கும் ஏழை மக்கள் எங்கும் ஏராளமாகத் தவித்துக்கிடக்க, அவர்களுக்கிடையே சில சீமான்கள் காணப்படுவது சரியா? கோவணாண்டிகளிடையே குபேரர்கள் இருந்தால், அழகா? இல்லை! அது கூடாது! பராரிகள் தொகை அதிகமாகவும், சிலர் மட்டும் பணக்காரராகவும் இருக்கும் சமுதாய அமைப்புமுறை ஆகாது, என்று கூறுகிறார். யார்? ஐக்கியமாகாணக் கவர்னர், சர். மாரிஸ் ஹாலாட்! ஏழைகளின் பசிப்பிணியைப் போக்குவதே சர்க் காரின் இன்றைய முக்கியமான கடமை என்று கூறுகிறார். தொழி லாளரின் துயரம்போக்க முனையவேண்டுமென்கிறார். கான்பூரில் சென்ற கிழமை, ஐக்கியமாகாண கவர்னர் ஆற்றிய சொற் பொழிவிலே இத்தகைய கருத்துகளை வெளியிட்டார், என்பதறிந்து பாராட்டு கிறோம். இதற்காக அவர் கூறும் மருந்து, நாட்டின் பொதுச் செல்வத்தைப் பெருக்குவது என்பதாகும். இம்முறை மட்டும், கோரிய பலனைத் தருமா, என்றால், தராது, என்று திட்டமாகக் கூறி விடலாம். பொருள் உற்பத்தி அதிகரிப்பதுடன், அதனைச் சகலரும் அனுபவிக்கக்கூடியதான அமைப்பு இருக்க வேண்டும் - அதாவது, சமதர்மம் நிலவவேண்டும். பொருள் உற்பத்திக்காக உழைப்பவன் பாட்டாளி, அதற்குத் திட்டம் கூறவும், கணக்கெடுக்கவும், பெரும்பாகத்தை “இலாபம்” என்ற பெயரால் எடுத்துக்கொள்ளவும் முதலாளி, என்ற முறை இருந்தால், சர். மார்ஸ் ஹாலட் கூறும் நோய் தீராது. நாட்டு நெளிவுதீர செல்வம் விருத்தியானால் மட்டும் போதாது. மாஸ்கோ மணம் கமழவேண்டும்!

14.11.1943