அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


குடுகுடுப்பை!

(ஜஸ்டிஸ் கட்சியில், புதுப்போக்கு உண்டாக்க, சென்னையில் சில பிரமுகர்கள் கூடிப் பேசிய செய்தியை நமது “குடுகுடுப்பை” சித்தரிக்கிறார்! பெரியாரைத் தலைவராக இருக்கவிடக்கூடாதென்று யாரோ கருதுகிறார்கள் என்பது தெரிந்து, அவ்விதம் சூது நடந்தால், நஷ்டம் யாருக்கு என்பதைக் குடுகுடுப்பைக் கூறக் கேளீர்.)

நல்ல காலம் பொறக்குது! ஆமாம், பொறக்குது, பொறக்குது நல்ல காலம்! யாருக்கு? யாருக்கு? மலைமேலே வீற்றிருக்கும் மங்கம்மா, சொகுசுக்காரி சொக்கம்மா, நடந்ததைக்கூறு, உள்ளது உள்ளபடிக் கூறு, உண்மையைச் சொல்லடி ஊத்துக்காட்டம்மா!

கூடாதவங்க கூடிப்பேசுறாங்க, கொஞ்ச விஷயத்தை மூடிப் பேசறாங்க ஒரு தாடி விஷயமா, தலையை ஆட்டிப் பேசறாங்க, அடிமூச்சுக் குரலாலே, படிச்சிப் பேசறாங்க!

சும்மா இருந்தவங்க, சுறுசுறுப்பு கொள்ளறாங்க, சோர்ந்து இருந்தவங்க ஜோராகக் கிளம்பறாங்க, சொக்கம்மா அவுங்க சொன்னதையும் நினைச்சதையும் மறைச்சி வைச்சிருக்காதே!

கட்சித் தலைவரிடம் பட்சம் ரொம்ப இருக்குது, சிட்சை இனி வேண்டாம். சிலம்பெடுப்போம் என்று சில சீமான்கள் பேசறாங்க, மங்கம்மா, அவுங்க மனசிலே உள்ளதை நீ மறைக்காமே எடுத்துச் சொல்லு.

கூட்டமில்லை, கமிட்டியில்லே, திட்டமில்லை, வட்டமில்லை, என்றெல்லாம் பேசறாங்க, பேசுகிற பெரியவங்க இதுவரை எங்கே இருந்தாங்க, ஏன் சும்மா இருந்தாங்க? மங்கம்மா, இப்போ வந்த அக்கறை அப்போ எங்கே போச்சுதடி? சக்கையாக இருந்தது சக்கரைக் கட்டியாச்சா? கட்சிக்குக் காவல் செய்யக் கங்கணம் கட்டினாங்க. கட்சியிலே கூடிப்பேச களைப்புன்னு சாக்கு சொன்னாங்க. சொக்கம்மா, இப்போ சுறுசுறுப்புத் தேடுறாங்க, இதிலே சூது இல்லையே? வாது கிடையாதே? நீயே பார்த்துச் சொல்லு அவங்க நினைப்பை அறிந்துச்சொல்லு.

திட்டத்தை மாத்தாமல், தில்லுமுல்லு நினையாமல், தீவினையைத் தேடாமல் தோழர்களைச் சாடாமல், தலைவர் பதவிக்கு வலை ஏதும் வீசாமல், கலை என்றும், சிலை என்றும் கருத்தைக் குழப்பாமல், கண்ணியமாக இருப்பவங்க, கண்மணியா ஜொலிப்பாங்க! குத்தம் குறைசொல்லி, குடையவிட்டுக் கூத்தாடி, படை எடுப்பு விலைவாசி பக்குவமாப் பேசிவந்தா பலிக்காது, பலிக்காது, நிச்சயமா பலிக்காது, சொக்கம்மா, நீயே சொல்லு, முடியாதுன்னு சொல்லு, மூணு முறை சொல்லு.

ஊரெல்லாம் சுத்திச்சுத்தி ஒத்தைக் குரல் சத்தமிட்டு, பாரெல்லாம் எதிர்த்தாலும் பயப்படாமல் போரிட்டு, பயங்கொள்ள மக்களையும் திடங்கொள்ளச் செய்தவரை, மறைவாக நின்று முடி பறிக்க வேலை செய்தால், கட்சிப் பெயர்தான் மிஞ்சும், சத்து தங்கி இருக்காது. சொக்கம்மா இந்த சூட்சமத்தை அவுங்களிடம் சொல்ல மறக்காதே.

பார்ப்பனரைக் குறை சொல்ல பாசாங்குக் கட்சி வேண்டும், பாராளும் பசைதேடும் பணத்தாளர் கூடிவிட்டால், பதவி கிடைச்சாலும் மக்கள் உதவி கிடைக்காது, சொக்கம்மா அதிகாரம் கிடைச் சாலும், ஆள்கட்டு நிற்காது, மணமில்லாப் பூபோலே, மாளிகைக் கூளிபோலே, மங்கிவிடும் கட்சி நிலை, மறக்காதே இதைச்சொல்ல. கட்சியிலே புதுமுறுக்கும், நடையிலே புது முறையும், திட்டம் திருத்தி வைச்சும் திருவிழா நடத்தணுமாம்! திக்கெட்டும் திணறும்படி, தீயும் பரவும்படி பெரியார் இராமசாமி பாடுபட்ட போதெல்லாம், பேசாதே இருந்தவங்க வீசுறாங்க இந்த வாசம்! ஆகாது சொக்கம்மா, ஆசைமிகப் பொல்லாது! நேசம் மறந்துவிட, பாசம் முறிந்துபோக, பார்த்துக்கொண்டு இருக்காதே!

ஜஸ்டிஸ் கட்சியிலே ஜரிகைக்காரர் இல்லைன்னு, ஜனங்கள் உணரும் இந்த சரியான நேரத்திலே, ஜல்லடம் கட்டிக்கொண்டு, ஜல்லியர்கள் வேலை செய்ய ஜக்கம்மா நீ விட்டா, கட்சியிலே மிச்சமாக என்ன இருக்குமோ, கணக்கெடுத்து நீயே சொல்லு!!

27.6.1943