அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


குளிர்ந்த காற்று!

வசந்தம் வீழ்கிறது, மாரி மலர்கிறது! இடியும் மின்னலும், மழையும் புயலும்தரும் மாரிக்காலத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். காதலை மாதரைப் புகழ்ந்துரைக்கும் கவிவாணரின் கருத்துக் கிசைந்த வசந்தகாலத்தைப் ‘போ’ என்கிறோம். ஈதென்ன புதுமை என்று கேட்பர். புதுமையன்று. வசந்தம், வாட்டத்தைத் தரும் செய்திகளையே நமக்குத்தந்தது, மாரி, மனமகிழ்ச்சி பிறக்கும் செய்திகளைக் கூறிற்று. கடந்த வசந்தத்தின்போது வஞ்சக நாஜிகள் மாஸ்கோவரை பாய்ந்தனர், மருண்டோம், மனங்குழம்பினோம். மாரி பிறந்தது, இடியோடு இடியாகக் கிளம்பிற்று. சோவியத் படை ஒலி, புயல்போல் புறப்பட்டது செஞ்சேனை, மழைகண்டு மிரண்டோடும் மாதுபோல் ஓடிற்று நாஜிக்கும்பல், மாரிக்காலம் மனதிற்குகந்ததான ‘ரஷிய வெற்றிகளை’த்தரக் கண்டோம், களித்தோம். இந்த வசந்தமோ, செபாஸ்டபூல், ரஸ்டாவ் வீழ்ச்சி, காகசசுக்குள் நுழைவு, மெய்காப் அழிவு என்ற செய்திகளையும், டோப்ரூக் வீழ்ச்சியையும், மலாய், பர்மா எதிரிவசமானதையும், சீனாவில் சித்திரவதையையும், செய்திகளாகத் தந்தன, சோகித்தோம். எனவே வசந்தமே போ! மாரியே வா! என்றழைக்கிறோம். மாரிவரும் பின்னே, மனமகிழ்ச்சி வரும் முன்னே என்ற புதுமொழி போன்று ரஷியாவிலிருந்து செய்தி வெளிவந்திருக்கிறது. மத்தியப் போர்முனையிலே, கடந்த 15 நாட்களாக நடந்துவந்த கடும் போரிலே ரஷியர்கள் முக்கியமானதோர் வெற்றியைப் பெற்றனராம். நாஜிப்படைகள் பல நாசமாயினவாம். 32 மைல் பின்வாங்கி ஓடினவாம், பிடித்த பிரதேசத்தை இழந்தனவாம்! 610 இடங்களுக்குமேல் நாஜிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டனவாம்! ரிஜாவ் கோட்டையை நோக்கி, சோவியத் படைகள் பாய்கின்றன. ரிஜாவுக்குக் கிழக்கே பத்தாவது மைலில் உள்ள ஜுப்ஸ்டாவ் நகரத்தை ரஷியப்படை பிடித்துவிட்டது.

ஸ்டாலின் கிராட் நாஜிகளின் தீவிரமான தாக்குதலில் இருக்கிறதென்பது உண்மையே! ஜெர்மன் டாங்கிப்படை டான் நதியைக் கடந்து மிக மூர்க்கமாகப் போரை நடத்துகிறது. ஸ்டாலின் கிராட், ரஷிய ராணுவ ஜீவநாடி. பெரிய டாங்கித் தொழிற்சாலை உள்ள இடம். ரஷியாவின் முக்கியமான பாதைக்குக் காவற்கூடம். பெயர், பொருளழகு வாய்ந்தது. அதற்கு ஆபத்து அதிகரிக்கிறது என்பது மனதை மருட்டத்தான் செய்கிறது. பல்லாயிரக்கணக்கான படையினர் மட்டுமல்ல, ஸ்டாலின் கிராடிலே உள்ள தொழிலாளர்கள் பல ஆயிரவர், சமரிடத் தயாராகி விட்டனர். ஸ்டாலின் கிராடுக்கு அருகாமையிலுள்ள குக்கிராமங்கள் காலிசெய்யப்பட்டு அங்கெல்லாம் வீதிக்கு வீதி களமாக்கிப் போரிட ரஷியர் உறுதிகொண்டுள்ளனர். இதைப்போலவே வட காகசசில் கோர்ஜினி எண்ணெ பிரதேசத்திலே மோப்பம் வைத்து நாஜிகள் பாய்கின்றனர். அங்கு, குன்றுகளிலே, மலைச்சரிவுகளிலே வழிநெடுக வீரர்கள் உள்ளனர். மண்ணில் குருதி கொட்டி மாற்றானைத் தடுக்க காசாக் வீரர்கள் குதிரை மீதேறிக் காவல் புரிகின்றனர். கடந்த ஜெர்மன் சண்டையிலே கோரமான கட்டம், வேர்டூன் போர் என்பர். அதற்குச் சமமாகக் கூறப்படுகிறது ஸ்டாலின் கிராடுக்காக நடக்கும் போர். இங்குள்ள நிலைமைகண்டு நொந்திடும் நமக்குக் குளிர்ச்சிதரும் செய்தியை மத்தியப் போர்முனை தந்திருக்கிறது. இராணுவ நிபுணர்கள், இதனை, மாரிக்கால ஆரம்பத்தைக் கருதி ரஷியர் நடத்தும் எதிர்த் தாக்குதலின் முதல் கட்டம் என்று கூறுகின்றனர். இதைத் தொடர்ந்து மாரி முழுவதும், வெற்றிமேல் வெற்றி பெறும் போரை ரஷியப் படைகள் நடத்தும் என்று தெரிவிக்கின்றனர். செப்டம்பர் பிறந்தது. செஞ்சேனையின் வெற்றியும் பிறந்தது என்ற செய்தியைக் கேட்க உலகப் பாட்டாளி மக்கள் துடிக்கின்றனர். மாரிக்காலம் இந்த மகிழ்ச்சியைப் பெய்யவேண்டும்! சீனாவிலிருந்தும், சிந்தைக்கினிய செய்திகள் கிடைக்கின்றன. வீரச்சியாங்கின் படைகள் நோக்கியாங் மாகாணத்திலிருந்து ஜப்பானியரை விரட்டி அடிக்கின்றனர். அமெரிக்கக் கடற்படை சாலமன் தீவுகளில் உள்ள ஜப்பானிய தளங்களைத் தாக்கிப்பிடித்து எதிர்த்த ஜப்பானிய கப்பல்களை மூழ்கடித்தன. பிரான்சுக் கரையோரத்திலே பிரிட்டிஷ் படை டாங்கிகளுடன் இறங்கி ஜெர்மன் படைகளின் நாடியைப் பிடித்துப் பார்த்தன. பிரிட்டிஷ் அமெரிக்க விமானப் படையோ, விடாது ஜெர்மனியைத் தாக்குகின்றன. ஆப்பிரிக்காவிலோ ரோமலின் படைகள் ஆகின்லெக் அணைக்கண்டு அடங்கிவிட்டன. பெர்லின்மீது வட்டமிட்டன ரஷிய விமானங்கள் கடந்த புதனன்று, ஜெர்மன் ரேடியோவே இதைக் கூறிவிட்டது. மாரி பிறக்கும் முன்னம் நமது மனதுக்கு ரம்மியமான இந்தக் குளிர்ந்த காற்று வீசிடக் காண்கிறோம். மாரியே வருக! மாற்றாரை மருட்டுக! நேசநாடுகளுக்கு வெற்றி பொழிக!!

30.8.1942