அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


குன்றத்தூரில் ‘ஜாலியன் வாலாபாக்’!

ஏழு முறை துப்பாக்கி பிரயோகம்
ஊரடங்கு சட்டம் அமுல்-தடியடி, படுகாயம், சோதனை!
‘அகிம்சா ஆட்சியினர்’ தர்பார் என்.வி.என். 15 பேர் கைது

குன்றத்தூர், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிற்றூர். இங்கு 144 தடையுத்தரவு போட்டனர். காங்கிரஸ் சர்க்கார், சென்ற 26.9.50 ல் முதலில் ஒருவாரம், பிறகு ஒரு மாதம் கடைசியாக இரண்டு மாதம் என்று நீட்டிக்கொண்டே வந்துவிட்டனர்.

26.10.50ல் தி.மு.க தோழர்கள், பேச்சுரிமையை பறிக்கும் தடையை மீறிவிடுவது என்று முடிவுசெய்து கூட்ட அறிக்கையை வெளியிட்டு விட்டனர்.

கூட்டத்தில் தி.மு.க. மாகாண அமைப்பு குழுச் செயலாளரும் ‘திராவிடன்’ ஆசிரியருமான என்.வி.நடராசன், பாலசுந்தரம், தணிகாசலம், கணபதி, இபுராகிம் ஆகியோர் பேசுவரென விளம்பரப்படுத்தப்பட்டது.

காலையிலிருந்து ஆயுதந் தாங்கிய அணிவகுப்பு பட்டாளம் ஊரை முற்றுகையிட்டு விட்டது. ஊரின் நான்கு புறங்களிலும் போலீஸ் லாரிகள் கொண்டு நிறுத்தப்பட்டுவிட்டன. ஊருக்குள் எவருமே வர முடியாமல் தடுக்கப்பட்டனர். வருகிற மோட்டார்கள், வண்டிகள் எல்லாம் சோதிக்கப்பட்டு விடப்பட்டன.

மாலை மூன்று மணிக்கெல்லாம் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்ட இடத்தைச் சுற்றிலும் ‘அகிம்சா’ ஆட்சியின் அதிகார அம்புகள் ‘சக்கரவியூகம்’ வகுத்துவிட்டனர்.

இத்தனை காவலிருந்தும், குன்றத்தூரின் சுற்றிலுமுள்ள கோவூர், பட்டு, மாங்காடு, பூந்தமல்லி இன்னும் பல ஊர்களிலிருந் தெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிவிட்டனர்.

ரிசர்வு லாரிகள் வாயுவேகத்தில் ஊரின் எல்லாப் பகுதிகளிலும் சுற்றிக்கொண்டே இருந்தன. நாலைந்து பேர் சேர்ந்திருந்தாலும் தடியடி! ‘அடி, உதை, குத்து, ஓடு, நிற்காதே’ என்ற ஆணவ ஆர்ப்பாட்டம்!!

தனி காரில் சென்னையிலிருந்து வந்த தோழர்கள் என்.வி.நடராசன், பாலசுந்தரம் ஆகியோர் ஊருக்கு வெளியே இரண்டு பர்லாங்கு தூரத்திலுள்ள நால் ரோடில் கைது செய்யப்பட்டனர். கூட்டத்திற்குப் போன பிறகு வேண்டுமானால் கைது செய்யுங்கள் என்று என்.வி.என்.அறிவித்தும், அவர்கள் இருவரையும் போலீஸ் லாரியில் ஏற்றிச் சென்றனர்.

இந்தச் செய்தியை ஊரில் வந்து சொன்ன சந்திரா பஸ் சர்வீஸ் டிரைவர் கணேசனையும், கிளீனர் கணேசனையும் ‘அகிம்சா ஆட்சியினர்’ தாக்கினர்.

உணவுக் கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த, ‘திராவிட நாடு’ ஏஜண்ட் தோழர் திருநாவுக்கரசுவை, இரக்கம் துளியுமின்றி கண்டவர் கண்ணீர் மல்கும்படி அடித்தும், உதைத்தும் துன்புறுத்தி லாரியில் ஏற்றிக்கொண்டனர்.

துண்டறிக்கைகளைக் கொடுத்த தோழர்கள் திராவிட மணி வரதன் ஆகியோரும் அதே மாதிரியில் கொடுமைக்குள்ளாக்கப் பட்டனர்.

மாலை ஆறுமணியளவில், தோழர்கள் செல்வராஜ், கணேசன், தேவராசன், சம்பந்தன், எம்.தேவராசன் ஆகியோர், கரங்களிலே கழகக் கொடிகளேந்தி, ‘அடக்குமுறை ஒழிக’ ‘பேச்சுரிமையைப் பறிக்காதே’ 144 ஐ மீறுவோம்’ ‘நம் உரிமையை நிலை நாட்டுவோம்’ என்று முழக்கமிட்டு, கூட்டம் நடைபெறும் இடத்தை நோக்கி நடந்தனர். கொஞ்சதூரம் செல்வதற்குள்ளாகவே, படை புகுந்து, கூட்டத்தை சின்னாபின்னமாக சிதறடித்து விட்டது. அவர்களையும் அடித்தும், மிதித்தும், துவைத்தும், வதைத்தும் லாரியில் ஏற்றினர்.

பேசுபவர்கள் என்று அறிவிக்கப்பட்ட உள்ளூர்த் தோழர்கள் தணிகாசலம், கணபதி இபுராகிம் மாலையிலே வெளிக்கிளம்ப முடியாதபடி தடுக்கப்பட்டனர்.

இரவு ஆக, ஆக, ‘அகிம்சா’ ஆட்சியின் மூர்க்கத்தம் வளர்ந்து கொண்டே போயிற்று. கடைகளை அடைக்கச் சொல்லிவிட்டனர் கண்ட கண்ட தோழர்களை மிருகங்கள் போலக் காரணமின்றி தாக்கினர்.

தேரடிக் கடைத்தெருவில் கூடியிருந்த மக்களை மிகவும் கொடுமையான முறையில் தடிகொண்டு அடித்தனர்.

அந்தோ, அகிம்சா ஆட்சியிலே கட்டனர். கட்டுக்கொண்டே இருந்தனர். மக்கள் சுருண்டு விழும்வரை சுட்டனர். ஒருமுறை இருமுறை மட்டுமல்ல! எண்ணி ஏழு முறைகள் காந்தியார் வழிவந்த காருண்ய வான்கள் சர்க்காரிலே துப்பாக்கி துரைத்தனம் நடந்தது-குண்டும் தாக்கி மூவர் படுகாயமடைந்தனர்.

சூட்டி என்னும் பச்சை, தேவராஜ், இன்னொருவர் ஆக மூன்று தோழர்கள் குண்டடிபட்டு விழுந்தனர்-பிணமென சாய்ந்தனர். ‘பஞ்சாப் படுகொலை’ யும் தோற்றிடும் வகையில்! இருவர் சென்னை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கூட்டத்திற்கு வந்தவர்கள் ஆயிரமாயிரம் பேரும் அன்று பட்டினி ஊரடங்குச் சட்டம் போட்டுவிட்டனர்.

இரவில் வீடுகளிலும் புகுந்து மிரட்டினர்-கண்டபடி திட்டினர் காரணமின்றித் தாக்கினர்.

வெளியூர்த் தோழர்களுக்கு தங்க இடம் தந்தார் என்று காரணங்காட்டி மேட்டுத்தெரு மாணிக்கனார், சொக்கலிங்கனார், ஜம்புலிங்கனார். துரைசாமியார் போன்ற ஊர்ப் பெரியவர்களின் வீடுகளின“ உள் நுழைந்தும், கதவுகளைப் பிளந்தும், மாடி வழி ஏறிக்குதித்தும் வீட்டுத்தாய்மார்கள் வீறிட்டுக் கதற, குழந்தைகள் பயத்தால் கோவென அழ அழ, ஆபாசமான வார்த்தைகளால் திட்டி அவமானப் படுத்தியும், பயங்காட்டியும் காட்டுப்போக்கிலே நடந்து கொண்டுள்ளனர். மக்களை ஆளவந்த சுயராஜ்ய ஆட்சியினர்!

கூட்டத்து நடவடிக்கைகளைக் கவனிக்க ‘போர்வாள்’ சார்பில், காஞ்சி கல்யாணசுந்தரம், ‘திராவிட நாடு’ சார்பில் ஆர்.கே.மூர்த்தி ஆகியோர் முதல் நாள் சென்றிருந்தனர்.

27.10.50 காலை காஞ்சியிலிருந்து, தோழர்கள் ஈழத்தடிகள், புட்டாசாமி, கணபதி, தில்லை வில்லாளன், ஆகியோர் குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி ஆகிய ஊர்களுக்கு நேரில் சென்று விவரங்களை அறிந்து வந்தனர்.

இதுவரை சேகரிக்கப்பட்ட தகவலிலிருந்து நாம் அறியும் விவரங்கள்:-

துப்பாக்கிப் பிரயோகத்தால் மூவர் படுகாய மடைந்தனர்.

தடியடியால் தாக்கப்பட்டவர்கள் பட்டியல் பெரிது, கிடைத்தவரை கீழே தரப்பட்டுள்ளது.

துரைக்கண்ணு, இரத்தினம், பார்த்தசாரதி, சுப்பிரமணியன், மாசிலாமணி, குப்புசாமி, பி.எம்.மணி, கே.முனுசாமி, மேப்பூர் கோவிந்தராசு, முனிசாமி, சோமசுந்தரம், வி.எல்.ராஜபாதர், தாமோதரன், நடேசன், பாலகிருஷ்ணன், கங்காதரன், தெய்வசிகாமணி, சபாபதி, ஏழுமலை, எம்.நடராஜன், தேவராசன் இன்னும் நூற்றுக்கணக்கானவர்.

காஞ்சி திராவிட மறுமலர்ச்சிக் கழக செயலாளர் தோழர் சபாபதிக்கு மண்டையிலே பலத்த அடி இரத்தம் ஒழுக ஒழுகத் தாக்கப்பட்டார். அவரும் கைது செய்யப்பட்டார்.

இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர் பதினைந்து பேர்களுக்கு மேல் தோழர்கள் என்.வி.நடராசன், பாலசுந்தரம், செல்வராஜ், திருநாவுக்கரசு, திராவிட மணி, வரதன், தாமோதரன், காஞ்சி சபாபதி, பாலகிருஷ்ணன், ஏழுமலை மற்றும் அறுவர் அவர்கள் பெயர் விபரம் இன்னும் கிடைக்கவில்லை.

(திராவிடநாடு.5.11.50)