அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


குன்றத்தூர் ‘கோரத்’ தாண்டவம்!

எட்டுமுறை சுட்டுப் பொசுக்கினர்
இதயங் கொதிக்கும் அடக்குமுறை

‘ஊருக்குள்ளேயும் நுழையக்கூடாது’ என்று கூறிவிட்டனர் போலீசார். ஐயோ, வயல்களிலே வேலை செய்துவிட்டு திரும்பி வந்த உழைப்பாளிகள் எங்கே செல்வர்? ‘ஐயா, ஊருக்கு வெளியே தினமும் வந்து வயிற்றுப் பாட்டுக்கு வேலை செய்வோம்-திரும்புவோம்’ என்று கெஞ்சினர். மன்றாடினார்; மண்டியிட்டனர், தொழுதனர்; அழுதனர். கனத்த குரலில், கண்டிப்பான முறையில் ‘முடியாது போங்கள், சேற்றிலே சகதியிலே படுத்துக்கிடங்கள்’ என்று விரட்டினர்.

‘அடுத்த கிராமம் ஐயா, வேறு வழி கிடையாது. இப்படித் தான் நுழைந்து போகவேண்டும்’ என்றனர். கிராமமக்கள், அவர்கள் கோரச்சிரிப்பை வீசினர். ‘புதுப்பாதை போட்டுப் போங்களேன், என்றனர். வந்தவர் தயங்கினர். அவர்களோ துப்பாக்கியை நீட்டினர்.

ஊருக்கு வெளியே, அதுவும் ஒருபுறம், இருபுறம் மட்டுமல்ல, எங்கெங்கு வழியுண்டோ அங்கெல்லாம் போலீஸ் படையினர் நின்றுகொண்டு, வெளியிலிருந்து வருபவர்களையெல்லாம் விரட்டி யடித்துக்கொண்டிருந்தனர்.

ஊருக்குள்ளேயோ, சொல்லவும் முடியாத அளவு, எழுதவும் கை நடுங்குகிற அளவு கொடூரம். பயங்கரம் தலை விரித்தாடிற்று!

ஊர் சிறிய தென்றாலும், வந்திருந்த ஆட்சியாளரின் அதிகார அம்புகளின் எண்ணிக்கை மிகப்பெரியது. காணவே நடுக்கந் தரக்கூடிய அளவு பெரியது!

தெரு முனைகளில், ஒவ்வொரு தெருவிலும் மூன்று நான்கு வீடுகளுக்கிடையில், கடை வீதியில், பொது இடங்களில் போக்கு வரத்து அதிக முள்ள திருப்பங்களில் எங்கெங்கும் போலீஸ், போலீஸ், போலீஸ் மயம்!

நிமிடத்திற் கொருமுறை மேலதிகாரிகளின் எச்சரிக்கை உத்தரவுகள் பறந்துகொண்டிருந்தன.

போலீஸ் லாரிகள் சுழன்றடிக்கும் சூறாவளியைப் போல பயங்கர இரைச்சலோடு ஊரை வட்டமிட்டவண்ணமே இருந்தன!

தெருக்களிலே மக்கள் நடமாடக்கூடாது என்று தடுத்தனர். அடுத்து இரண்டடியெடுத்து வைத்துவிட்டால் அடி, உதை!

நாலைந்து பேர் கூடிச் சென்றால் அவர்களின் வாய் பேசாது கை பேசும், தடிகள்தான் உத்தரவுகள் பிறப்பித்தவண்ண மிருக்கும்! வாங்கும் அடிகள், அதனால் வீங்கும் வீக்கங்கள்தான் கஷ்டங்களைச் சொல்லும்!

திறந்து கிடந்த கடைகள் அரை மணிக்குள்ளாக மூடப்பட்டன. உணவுக்கடைகள் இருந்த இடந்தெரியவில்லை.

அடி, உதை, குத்து, வெட்டு என்ற அகங்காரக் குரல் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது. ஐயோ, மண்டை உடைந்ததே! கால் போயிற்றே! கண்ணிழந்தேனே! கை யொடிந்ததே! என்ற பரிதாபக் குரல்களும் இடையிடையே! செவியுள்ளோர் எவரும் கண்ணீர் சிந்தாமலிருந்திருக்க மாட்டார்கள்.
ஆம், அவர்கள் அவதிக்குள்ளாக்கப்பட்டனர். அபாயத்திற் காளாயினர். ஆனால், அவர்கள் செய்த குற்றம் அவர்களுக்கும் தெரியாது. தண்டனை தந்த ‘தடி தாங்கிகளுக்கும்’ தெரியாது! ஆம், அவர்களுக்கு அடிக்கத்தான் தெரியும் அதற்காகவே அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே அடித்தார்கள். அடித்தார்கள், பரிதாபம் சிறிதும் இன்றி, பதை பதைப்பு துளியுமின்றி, அடிபட்டவர்கள் வீதியிலே பிணம் போலக் கிடப்பதைக் கண்டும் கவலையின்றி! ஆம், அவர்கள் அம்புகள் அடிக்கச் சொன்ன அதிகாரிகள் வில்லின் தன்மையினர்! ஆனால் அதனை வளைத்து விட்டவர்களே, நம் கவனத்திற்குரியவர்கள். அவர்கள்தான் எதேச்சாதிகார மதுவருந்தி, ஆணவவெறியாட்டமாடும் காங்கிரஸ் சர்க்கார்!

தடியடியோடு மட்டும் அவர்கள் நிறுத்தவில்லை. அடக்கமுறையின் கடைசி எல்லையையும் கடந்து விட்டனர்.

குண்டும் பேசிவிட்டது. ‘ராமராஜ்யத்திலே!’ துப்பாக்கியை ஏந்தி விட்டனர். அன்பால் உலகாண்ட அசோக, சக்கரக் கொடியினர்!

சட்டனர், சுட்டனர், கடைசிவரை நிறுத்தவே இல்லை! ஏழுமுறை என்றுகூட தவறு-எட்டு ரவுண்டுகள்! எங்கும் கேட்டிராத நிகழ்ச்சி-இதயமுள்ளவரே இரக்க சிந்தனையாளரே, கருணை மனம் படைத்தோரே, கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள்!

‘ஐயோ, அம்மா என்று பதறியோடும்போது இடறி விழுந்தோர் எத்தனை எத்தனை பேரோ, அறியோம்! வீறிட்டழுதிடும் குழந்தைகள், பதறிக்கதறிய தாய்மார்கள், இலட்சிய வெறியேறிய இயக்க இளஞ்சிங்கங்கள், அச்சத்தால் தாக்கப்பட்ட பொதுமக்கள் பதட்டம், பரபரப்பு, அவசரம், அச்சம், ஆவேசம் எல்லாம் தலைகால்புரியாமல், நர்த்தனமாடினர்.

அடிபட்டோர், மிதிபட்டோர் கையொடிந்தவர், காலிழந்தவர், மண்டை பிளக்கப்பட்டவர் எண்ணிச் சொல்லமுடியாது குண்டுவெடி சப்தம் கேட்டதும் இத்தனை துயரங்களும் பறந்தோடின. இயக்கத்தவரின் துவண்ட இதயமும் நிமிர்ந்து நின்றது.

மூவர் பிணமென வீழ்ந்தனர். எட்டுமுறை சுட்டத்தில் மூவர் உயிருக்கு ஆபத்து வருமளவு அடிபட்டது! அவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாக்கிடந்தனர். அவர்கள் ஆவி, சாவு மண்டலம் போய்த்தான் திரும்பி வந்தது! சாக்காட்டில் விளையாடுந்தோள்கள் என்று பாடிய பரம்பரையினர். உயிர் வெல்லமல்ல என்று ஊருக்கு உரைத்திடும் உத்தமர்கள் வழிவந்தனர். சாவைக்கண்டு சிரித்தவர்கள், ஆறிலும் சாவு நூறிலும் சாவு அது ஒரு இலட்சிய வெற்றிக்காக இருப்பதானால் அஞ்சாமல் ஏற்போம் என்ற வீரர் வழிவந்தோர். ஆகவே அவர்கள் அஞ்சாது நெஞ்சைக்காட்டினர். சுட்டனர். குண்டுகள் பாய்ந்தன. புகை மண்டலத்திலே ‘அந்தோ சாகிறோம்’ என்று கூறத்துடிக்கும் உதடுகளைப் பிரிக்கவும் முடியாமல் வீழ்ந்தனர். அவர்கள் சாகவில்லை. உயிரோடுதான் இருக்கிறார்கள். ஆனாலும் உயிரைக் காப்பாற்ற உன்னத இலட்சியத்தைவிடத் தயாராக இல்லை! சாவைக்கண்டு அவர்கள் அஞ்சவில்லை. சாவு தான் அவர்களைக்கண்டு அஞ்சி ஓடிவிட்டது!

இந்த நிகழ்ச்சிக் குறிப்புகள் எங்கு நடந்தன என்று கேட்கிறீர்களா? கொரியா போராட்ட ஒருநாள் வருணைனையல்ல. திபேத் படையெடுப்பின் நிகழ்ச்சிச் சித்திரமல்ல. அகிம்சாமூர்த்தி காந்தி அண்ணலின் வழிவந்தவர்கள் ஆட்சியிலே உள்ள குன்றத்தூர் என்ற சிற்றூரிலே நடந்தது இது!

பேச்சுரிமையைக்காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தினர், 14 தடையுத்தரவை மீறிடத் திட்டமிட்டனர். அறவழியில், முறையும், கட்டுப்பாடும் கைகோர்த்து நிற்கும் வகையில்!

சென்ற 26.10.50 ல் தான் இந்தக்கோரப் போராட்டம்!

ஆண்டிடும் பொறுப்பிலே அமர்ந்துள்ளோர் அக்கிரம் வழி நடந்து ‘அப்பாவி’ மக்களை கொடுமைக்குள்ளாக்கினர் அன்று!

ஆம், குன்றத்தூரில்தான் இந்தக்கொடுமை!

குன்றத்தூர் எதிர்கால திராவிட சரித்திரத்திலே குருதியால் குறிப்பிடப் படும் இடமாகிவிட்டது! வரலாற்றிலே வரும் இரத்தத்தடாகம் கண்ணீர்ப் பெருவெள்ளம் அது! அங்கு பிணவாடை வீசும், நிச்சயம்!

கோலேந்திய காங்கிரஸ் கனம்கள் பேயாட்டம் போட்ட மயான பூமியாக்கப்பட்டுவிட்டது அது!

அங்கு பேச்சுரிமைக்கு சமாதிகட்டினர். அத்தோடு நிறுத்தினரா? இல்லை, இல்லை அதற்கு இரத்தாபிஷேகம் செய்தனர். அதுமட்டுமா? ‘எலும்புப் பொங்கலிட்டுப் படைத்தனர். என்று தணியும் சுதந்திரதாகம், என்று மடியும் அடிமையின் மோகம்’ என்று தொண்டை காயக்காய கத்திய கனவான்கள்!

குன்றத்தூர், ‘அகிம்சா’ ஆட்சியாரின் அநியாய அடக்குமுறை ஆர்ப்பாட்டங்களுக்கு குன்றேறி நின்று சான்று பகரும்!

சென்ற வாரம் குன்றத்தூர் குண்டுவீச்சு பற்றிக் குறிப்புகள் தரப்பட்டிருந்தன. கருத்துடையோர் அனைவரும் கண்டு கண்ணீர் சிந்தியிருப்பர். ஆத்திரக்காரர் தினவெடுக்கும் தோள்களைத் தட்டியிருப்பர். ‘ஆகா ஆகுமா’ என்று துடித்தெழுந்திருப்பர். ஆழ்ந்த சிந்தனையாளர் மட்டுமே சிரிப்பர்! ஏன்? ஆபத்திலே சிக்கிக்கொண்டு அழிவை அணைத்துக்கொள்ளப்போகும் நிலையிலிருப்பவன் சிந்திக்கவும் நேரமின்றி கையில் கிடைப்பதை யெல்லாம் வாரியெறிவான்.
காங்கிரஸ் சர்க்கார் கையில் அகப்பட்ட ஆயுதங்களை எடுத்து வீசுகின்றனர். வீசட்டும் கை ஓய்கிற வரை, பிறகு சாயட்டும் என்று எண்ணிச்சிர்பர். அணையும் விளக்கின் கடைசி ஜோதி சற்று அதிகப் பிரகாசமாகத் தானிருக்கும். அப்படித்தான் படிப்படியாக அடக்குமுறைகளை பெரிதாக்கிக் கொண்டே வந்து விட்டனர். கூட்டங்களுக்குத் தடை, ஊர்வலங்கள் கூடாது, கொடியேற்றம் ஆகாது, நூல்களுக்குத் தடை, நூலாசிரியர்கள் புத்தகம் வெளியிட்டோர் மீது வழக்கு, நாடகங்களுக்கு தடை, சிறைவாசம், தடியடி, கண்ணீர்ப்புகை, துப்பாக்கிப் பிரயோகம் வரை வந்துவிட்டனர். இனியும் ஏதேனும் ‘மிச்சம் மீதி’ இருந்தாலும் எடு“த்து வீசட்டும்!

குன்றத்தூரில் அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளை நம் கண் முன்னால் கொண்டுவந்தால் நெஞ்சு கொதிக்கிறது!

பேச வந்தவர்கள், கொடியெடுத்துச் சென்றவர்கள், துண்டறிக்கைகள் வெளியிட்டவர்கள், சுவரொட்டிகள் ஓட்டியவர்கள், கூட்டங்கூட்டமுயற்சித்தவர்கள்-எல்லோரையும் அடித்து நொறுக்கினர்.

அன்று அங்கு, தலையிழந்த சார்லஸ் மன்னனின் குரலைக் கேட்டனர். பிரஞ்சு லூயியின் உருவத்தைப் பார்த்தனர். ரஷ்ய ஜாரின் ஆவி உலவிற்று. இட்லரின் சாயல் தெரிந்தது. இத்தாலிய முசோலினியின் சிரிப்புக் கேட்டது. குன்றத்தூரில் ஆணவ ஆர்ப்பாட்டம் உச்சநிலைக்குப் போய்விட்டது!

ஆளவந்தாரே, இதை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! அறப்போரில் குதித்துள்ள அவர்கள் அத்தனை பேரும் பயணம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்ட பட்டாளம் மரண சாசனம் எழுதிவைத்துவிட்டுப் புறப்பட்டுள்ள உரிமைச் சேனை-உயிர் பெரிதல்ல. மானந்தான் பெரிது என்று கூறிடும் போரணி வகுப்பு-ஆகவே துப்பாக்கி முனையை நீட்டி, அவர்களின் தூய இலட்சியத்திலிருந்து பிரித்துவிட முடியாது! குண்டுகள் பாயப் பாய, இன்னும் அதிகமாக மக்கள் திரண்டு நிற்பர்.

‘குன்றத்தூர்’ அவர்களின் உணர்ச்சியைக் குன்றிடச் செய்யவில்லை. ஊக்கத்தைப் பொன்றிடச் செய்யவில்லை- ‘குன்றத்தூரால்’ அவர்கள் உள்ளத்திலே ஒளிவிடும் இலட்சியங்கள் அகன்று விடாது-மேலும் அதிக வலுவாக வளரும்! இதனை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

குன்றத்தூர் கொடுமைக்கு இலக்காகி, அகிம்சா ஆட்சியினரால், கைது செய்யப்பட்டு அடக்குமுறைக்கு ஆளானோர்:-

என்.வி.நடராசன்
முனுசாமி
பாலசுந்தரம்
பக்கிரி
மாங்காடு கண்ணப்பனார்
தாமோதரன்
தாந்தோனி
சுப்பராயலு
சி.திராவிடமணி
முத்து
வரதன்
ராஜவேலு
டி.கே.சிவகுமாரன்
காஞ்சி சபாபதி
என்.திருநாவுக்கரசு
காஞ்சி பாலகிருஷ்ணன்
வேலாயுதம்
காஞ்சி ஏழுமலை
சுப்பிரமணியம்

கைதான இருபது தோழர்களில், தோழர்கள் என்.வி.நடராசன், பாலசுந்தரம், ஆகியோர் பூந்தமல்லி சப் ஜெயிலில் கிடக்கின்றனர்.

ஏனைய தோழர்கள் சைதாப்பேட்டை சப் ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

குண்டுக்கு இரையானோர்
குண்டடிபட்டு படுகாயமடைந்த மூவரில் கீழ்க்கண்ட இரு தோழர்களும் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் கிடக்கின்றனர்.

பச்சையப்பன்

சாமிநாதன்.

(திராவிடநாடு 5.11.50)