அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


குன்றத்தூர்க் கொடுமைகள்

எட்டு முறைகள் சுட்டு, காங்கிரஸ் ஆளவந்தார். தங்கள் ‘அகிம்சா’ பாதையை அகில உலகுக்கு அறிவித்த ஊர் குன்றத்தூர்! அங்கு நடைபெற்ற அவர்களின் ஆர்ப்பாட்டம் சொல்ல முடியாது. அணுகுண்டு வீசப்பட்ட ‘ஹிரோஷிமா’ ஆகவே, ஆயிற்றாம்! குன்றத்தூர்.

குன்றத்தூர் கோரங்களில் சில நமக்கு எட்டி வரையில்!

26.10.50 இரவு 9.30 மணிக்கு பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டரும், காங்கிரஸ் அபிமாணி திருவாளர் கே.இராகவ (பிள்ளை) யும் பெரிய தெருவில் போய்க்கொண்டிருக்கும் பொழுது, நகரப் பெரியவர், உயர்திரு டி.எம்.துரைசாமியார் அவர்களை அழைத்து, ‘என் வீட்டில் ஆனைபுத்தூரைச் சேர்ந்த பதின்மர், பய்நது கொண்டிருக்கிறார்கள். அவர்களை நீங்கள்தான் வெளியில் அனுப்பவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அவர்களை அழைத்துக்கொண்டு போய், நடுகடைவீதியில் விட்டு, நாய்களை அடிப்பதைப் போல அடித்து விரட்டினார்கள். அடிபட்ட அவர்கள் மீண்டும் நகரப்பெரியவர் வீட்டிற்கே ஓடினார்கள். அவர் கண்ணீர் சிந்தினார். ‘காலைவரை இருந்து போங்கள்’ என்று கருணையோடு கூறினார். வீட்டிலிருப்போரையும் வெளியில் இழுத்துச் சென்று கொடுமைக்காளாக்கும் சர்க்காரின் போக்கே போகுக!

மாலை 5.30 மணிக்கு, டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த நெசவுத் தொழிலாளி ஐம்பதையும் கடந்த பெரியவர் திருவாளர் மயிலை. சுப்பையா என்பவரை இருபது முப்பது ‘அதிகார அம்புகள்’ சுற்றி வளைத்துக்கொண்டு, கண்டபடி ஏசி, காலாலும், கையாலும் உதைத்தும் அடித்தும் மிதித்தும் போட்டுவிட்டனர். அவர் கையிலே பலமான அடி-சென்னை மருத்துவமனையில் கட்டு கட்டிக்கொண்டு வந்துள்ளனர். காயம், ஆறி சுகமடைந்து மீண்டும் தொழில் செய்ய இன்னும் ஆறுமாதங்களுக்கு மேலாகும் என்று டாக்டர் கூறியதாகத் தெரிகிறது-ஐயோ, அவர் இனி என்ன செய்வார்?

கூட்டம் நடக்க இருந்த இடத்தில் நட்டிருந்த, 30 உயரமுள்ள கொடிக்கம்பத்தையும் 7 நீளம் 3 அகலமுள்ள பெஞ்சியையும் பகல் 10.30 மணிக்கே கொண்டுபோய்விட்டார்கள். காகிதத்தினால் செய்யப்பட்ட கொடிகளையும், கொளுத்திவிட்டனர். துணியினாலாக்கப்ட்ட கழகக் கொடிகள் மூன்றை அவர்களே எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்! ஐயோ, சுதந்திரமே, நீ இப்படியா வளரவேண்டும்!

144 தடையுத்தரவை வாங்கப் பெரும்பாடுபட்டவர் உள்ளூர் திருவாளர் பாலப் (பிள்ளை) என்பவர் என்ற குன்றத்தூர் கூறுகிறது! அதற்கு மந்திரி ஒருவர் தோன்றாத் துணையாயிருந்து உதவினாராம். இப்படியும் பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள். அந்தப் ‘பெரும்புள்ளி’ ஜில்லாபோர்டு உறுப்பினராம். திராவிட இயக்கத்திலிருந்து விலகிவிட்டேன் என்று கையெழுத்துப் போட்டுத் தராவிடில் ஊரைவிட்டே விரட்டிவிடுவேன் என்று மிரட்டி வருகிறாராம். தெருவுக்குத் தெரு நின்று கூவி வருகிறாராம் பூந்தமல்லி போலீஸ் நிலையமே என் விரல் ஆடினால் ஆடும். குரல் கேட்டால் ஓடிவரும் என்று கூறி தன் வீரப்பிரதாபங்களை விளம்பரப் படுத்தாத நேரமே இல்லையாம்!

எட்டுமுறைசுட்டார்களல்லவா. ஏழைபங்களா ஆட்சியினர்! அதுபோது ஒருகுண்டு மின்சாரக்கம்பியைத் தாக்கி அறுத்து வீழ்த்திற்றாம்!! நல்லவேளை, வீழ்ந்த கம்பி கூட்டத்தின் மத்தியிலோ வீட்டுக்கூரையிலோ விழுந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ?

144க்கு காரணமாயிருந்த காங்கிரஸ் பிள்ளைக்கு வேண்டாதவர்கள் எல்லாம் அன்று தாக்கப்பட்டனராம். அவர்கள் வீடுகளில், கழகத் தோழர்கள் மறைந்திருப்பதைக் கூறி அவர்களை எல்லாம் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டனராம்!

(திராவிடநாடு 12.11.50)