அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


குறைமதியல்ல!
சென்னை கோகலே மண்டபத்திலே அவர்கள் கூடினர் சென்றகிழமை. அவர்கள் என்னால் மக்கள் என்று தவறாகக் கருதிவிடாதீர்கள். பாமர மக்களல்ல கூடினவர்கள். பாமரரைப் பராமரிக்கப் பண்பும் பக்குவமும பயிற்சியும் கொண்ட தலைவர்கள் கூடினர்! சாமான்யர்கள் போலப் பிரசங்கம் செய்யவா கூடினர்? செச்சே! அதுதானே அவர்கள் வேலை! அதுதான் யாரும செய்துவிடுவார்களே!! அவர்கள் கூடியது அதற்கன்று, அவர்களில் பலருக்கு அத்தகைய சாதாரண காரிங்களைச் செய்ய அவகாசமுமில்லை. நேரத்தின் அருமை அறிந்தவர்களல்லவா! அவர்கள் கூடியது, நிர்வகிக்க!! ஆமாம்! நிர்வாகக்கமிட்டி கூடிற்று; ஆசசரியப்படாமற் கேளுங்கள், ஜஸ்டிஸ் கட்சி நிர்வாகக் கமிட்டி கூடற்று, ஆனால் அதிலே பெரியார் கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக கமிட்டி அங்கத்தினர்களுக்கோ, பொது மக்கட்கோ, அப்படி ஒரு கூட்டம் நடக்கும் என்பது தெரியாது. யுத்தகாலத்திலே முதலமைச்சர் இன்ன இடம் போகிறார். இன்னவரைக் கண்டு பேசுவார் என்ற அறிவிப்பது, எதிரிக்கு இரகசியத்தை வெளியிட்டுவிடு செயலல்லவா! திடீரென வாஷிங்கடனில் சர்ச்சில் - ரூஸ்வெல்ட்டுடன் மந்திராலோசனை - நிருபர்களுக்கு அனுமதி இல்லை - என்று செய்திகள் வெளிவரக் காண்கிறோமே அதுபோலத் தலைவர்கள் ராஜதந்திர முளைப்படி நடந்துகொண்டனர்!! ஜஸ்டிஸ் கட்சியின் நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் கோகலே மண்டபத்தில் நடைபெற்றது என்றுதான் செய்திவந்தது! அவ்வளவு தலைமறைவு ஏன் என்று கேட்பர் மக்கள்! மக்கள்!! இவர்கள் அறியார்கள், அந்த ராஜதந்திரப் போக்குக்கு அவசியம் இருப்பதனை. ஜஸ்டிஸ் கட்சியின் நிர்வாக்க் கமிட்டி கூடுவதானால் கட்சித் தலைவர் பெரியார், அறிக்கை விடுவார், மக்களுக்கு அறிவிப்பார், இடம் நேரம முன் கூட்டித் தெரிவிக்கப்படும. பிறகே நடைபெறும் முகமூடி முறையோ, திடீர் வேட்டுவித்தையை தெவையில்லை. ஆனால் ஜஸ்டிஸ் கட்சி நிரிவாகக் கமிட்டியினர் என்ற தங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொண்டு அயன் ஸ்தாபனம அயராது வேலை செய்து கொண்டிருக்கும் போதிலே, போலி கமிட்டி ஒரு மூலையில் கூடுமபோது, எப்படி முன் கூட்டி மக்களக்கும் தெரிவிக்க முடியும்! விசித்திரப் பிறவிகளின் போக்கு சாதாரணமாக இருக்க முடியுமா? அது போலத்தான், ஜஸ்டிஸ் கட்சி தங்களிடமே இருப்பதாகக் கூறிக்கொள்ளும் விசித்திரப் போக்கினரின் நடவடிக்கையும், விந்தையாக இருக்கிறது. இந்த விந்தையின் முக்யஸ்தர்கள் நமது சொந்தக்காரர்கள் (இனத்தால்) ஆகவேதான், இந்த விந்தை நமக்குத் தரும் சிந்தனையல் சீற்றம் வரவில்லை. சிரிப்பு வருகிறது!! பாபம் எவ்வளவு அவல் அவர்களுக்கு, எத்துணை அவசரம், ஏனோ இவ்வளவு சஞ்சலம்!

ஜஸ்டிஸ் கட்சியின் பெயரைச் சேலத்திலே மாற்றினதாலேயே மாறுதலை விரும்பாதாருக்கு அந்தக் கட்சி சொந்தமாகிவிட்டதாம். இதுதான் அவர்களின் வாதம்! இந்த வாதம் செவிக்குக் கீதமாகச் சில கனதனவான்களுக்கும், கனதனவான்களுக்குக் காகிதக் கோட்டை அமைத்துத தரும ஞாயிறு நோக்கிகளுக்கும் தோன்றக்கூடும். யோசித்துப பார்ப்போர், ஏன் இவ்வளவு செல்வாக்குள்ள, சொற்றிறமும் செயல் உரமும் படைத்த சீமான்கள், ஒரு சொத்தை வாதத்தைக் கட்டியழ வேண்டும். மன்றமேறி மார்தட்டி, மக்களை ஈடேற்ற இப்போது திராடிர் கழகம் என்ற புதுப்பெயருடன் விளங்கும் அமைப்பினால் முடியாது. இதோ நாங்கள் அமைக்கிறோம் ஓர் அருமையான கட்சியை, இதிலே சேரீர் பிறகு பாரீர் உமது நிலை உயர்வதை! என்று கூறிக் கட்சி அமைத்துக் காரியத்தில் இறங்கலாமே, ஏன் ஜஸ்டிஸ் கட்சி பெரியாரிடம் இல்லை. எங்களிடந்தான் இருக்கிறது, என்ற வறட்டுவாதத்திலே ஈடுபடவேண்டும் என்றே கேட்பர்.

பெரியார் பலமுறை பொது மேடைகளிலே பலர் அறியக் கூறியிருக்கிறார். தைரியத்தோடு, தன்னம்பிக்கையோடு தளராத உழைப்பின் மீது ஆணையிட்டு எந்தக் கட்சியின் உதவியோ கூட்டுறவோ இல்லாமலேயுங்கூட என்னால், தனியாக இயங்கமுடியும், ஏனெனில் நான்கொண்டுள்ள கொள்கைகள் மக்களுக்குத் தேவையானவே, அவைகளைக் கூறிக்கொண்டிருப்பது துரல் உள்ளவரை என்பதுவே என் கொள்கை என்று. அவருடைய ஆர்வம் அவருக்குத் தரும் ஆண்மை இருக்கிறதே அதனை கட்சி எம்மிடந்தான் இருக்கிறது; அவரிடம் இல்லை; நாங்களே கட்சிக்குக் கர்மபாத்யதை பெற்றவர்கள்; பெரியார் கட்சியிலே இடத்தை இழந்து விட்டார்; நாங்களல்ல, என்று நடுமுக்கல் நாதத்தைக் கிளப்பும் தலைவர்கள், ஏன்பெற்று, இதோ எமது கட்சி! இனி இந்தப் பெரியார் ஜஸ்டிஸ் கட்சியைத் திராவிடர் கழகமென்று புதுப்பெயரிட்டு வைத்துக்கொண்டு ஏதாகிலும செய்யட்டும, திறமையுடன் வேலை செய்ய இனி நாங்கள் திக்கெட்டும் முரசு கொட்டுவோம் என்று ஏன் கூறவில்லை! ஏன், தாயாதிச் சண்டைக்கே ஜல்லடம் கட்டுகிறார்கள்?

அவர்கள் பேசியதிலிருந்து ஒரு மர்மம் வெளியாகிறது. அதாவது யாரோ, இவர்களைக் கேட்கிறார்கள், ஜஸ்டிஸ் கட்சி எங்கே? யாரிடம் இருக்கிறது? அதன் போக்கு எப்படி இருக்கிறது? நீங்கள் அஅதிலென்ன நிலைமையில் இருக்கிறீர்கள்? என்று. எங்கோ ஓரிடத்தில் இதுபோல உரையாடல் நடைபெற்றிருக்கவேண்டும்.

குட்மார்னிங், சார் . . .! என்ன இது சேலத்திலே, என்னமோ பட்டம் வேண்டாம், பதவிவேண்டாம் என்றெல்லாம் உங்கள் கட்சி தீர்மானம் செய்துவிட்டதாமே

நான்சென்ஸ்! எங்கள் கட்சியா, பட்டம் வேண்டாம் பதவி வேண்டாம் என்று கூறும், இந்தச் சுயமரியாதைக்காரர்கள் கூடிக்கொண்டு, அப்படியெல்லாம் தீர்மானம் நிறைவேற்றினர்

என்னசார் வேடிக்கை! எப்படி நீங்கள் அத்தகைய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதைப் பார்த்துககொண்டிருந்தீர்கள்? எதிர்ர்த்து, அத்தகைய தீர்மானங்கள் தோற்றுப் போகும்படி செய்துவிட்டிருக்கவேண்டாமா?

ஆமாம் . . ஆனால் . . . . நாங்கள்

என்ன ஆமாம் ஆனால்! செச்செச்சே! இப்படிக் கையாலாகாதவர்கள் என்று முன்மே தெரிந்திருந்தால். . .
அப்படி நினைக்கப்படாது! நாங
்கள் முயன்றிருந்தால் முறியடித்து விட்டிருப்போம்
ஏன் முயற்சிக்கவில்லை?

கட்சியிலே நீங்கள் தூண்கள், தலைவர்கள், அதிலும் மேதாவிகள் உலகம் சுற்றியவர்கள்! நிர்வாகப் பதவிகளிலே இருந்தவர்கள்! இன்னமும் இருக்கவேண்டும் என்ற எண்ணுபவர்கள். உங்களுடைய கட்சியின் மகாநாட்டிலே அதிலும் இப்போதுள்ள தலைவர் இனி இருககக் கூடாது என்ற கூச்சலைக் கிளப்பிவிட்ட பிறகு, நீங்கள் போகாதிருநதால். என்ன சார் அர்த்தம்! இல்லை, நான் கேட்சிறேன், நீங்களே கூறுங்கள் இதற்கு என்னதான் பொருள்?

போகாததன் காரணம் இருக்கிறது. சேலத்திலே நடைபெற்றது ஜஸ்டிஸ் மகாநாடு அல்ல. அது திராவிடர் கழகமென்று சுயமரியாதைக் காரர்கள் ஒரு புதுக் கட்சியை அமைப்பதற்காகக் கூட்டிய மகாநாடு. அதிலே எங்களுக்கு என்ன வேலை

இது வக்கீல் வேலை சார், வக்கீல் வேலை செய்கிறீர், கட்சித் தலைவர்கள் பேச்சல்ல இது. திராவிடர் கழகமென்ற பெயரை அந்த மகாநாட்டிலே மாற்றிய பிறகு, அது திராவிடர் கழகமாயிற்று, அது கூடும்போது ஜஸ்டிஸ் கட்சி மாநாடுதான். குழந்தையும் சொல்லும், உங்களுக்கும் அது புரியும்படியாகத்தான், பத்திரிகைகளிலே ஜஸ்டிஸ் கட்சி மநாடு நடைபெறுகிறது என்று விடாமல் விளம்பரமும் வந்தது. அதைப் பிரதி தினமும் பார்த்துக்கொண்டிருந்தீர்கள். ஆனால் மகாநாட்டுக்குப் போகவில்லை ஏன் போகவில்லை என்று கேட்டால் பச்சையாகப் புளுகுகிறீர், திட்டமாகச் சொல்லுமய்யா, பேப்பரிகளிலே ஜஸ்டிஸ் மாநாடு நடக்கும் என்றுதானே போடப்பட்டிருந்தது.

ஆமாம்
உமக்கு வந்த அழைப்பிலே என்ன இருந்தது? புதிதாக ஒரு கட்சி உண்டாக்கப் போகிறோம் என்றா எழுதியிருந்தது

இல்லை, ஜஸ்டிஸ் மாநாடு நடைபெறுகிறது என்றுதான் இருந்தது

அந்த மாநாட்டுத் தலைவர் யார்?

இராமசாமி நாக்கர்
நாய்க்கர்! அவர் எதிரிலே பெயரியார், பெரியார், என்ற பேசுவது இங்கே நாய்க்கர் என்ற கூறுவது, ஒழியட்டும், அவர்தானே, நீங்கள் முன்பு ஜஸ்டிஸ் கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது?

ஆமாம்
வேறு தலைவர் தேர்தெடுக்கப்படும் வரையில் அவர்தானே நியாயப்படி தலைவர்

ஆமாம்
ஆக, ஜஸ்டிஸ் கட்சி மாநாடு ஜஸ்டிஸ் கட்சித் தலைவரின் தலைமையிலே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தும் ஜஸ்டிஸ் கட்சியின் பிரமுகர்கள், அங்கு போகவில்லை போகவில்லை. . . இழுக்காதே, போதும். போகவில்லை. இப்போது, அங்கே நடந்தது ஜஸ்டிஸ் மாநாடு அல்ல என்று கூற வாய் கூசவில்லை! இல்லை நான் கேட்சிறேன், போர் நடக்கும் போது, அணிவகுப்பிலே காணப்படாத சோல்ஜர், பந்திவரிசை அமைக்கப்பட்டதும், இடத்தில் அமராத விருந்தாளி படுக்கையறையிலே பாவை காத்திருக்க, தெருத்திண்டையில் உறங்கும் கணவன், இவர்கள் போற்றப்படுவார்களா? நான் சொல்கிறேன் கேளும். செயலிலே நீங்கள் சுத்த சூன்யம்.

நடந்தது நடந்துவிட்டது இனி நடக்க வேண்டியதுதானே நாங்கள் கவனிக்கிறோம். அதற்காகத்தான் சேலத்திலே ஜஸ்டிஸ் மாநாடு நடைபெறவில்லை என்று கூறுகிறோம், அப்படி நடத்தியிருப்பினும், கட்சியின் பெயரை மாற்றியது, முறைப்படி சட்டதிட்டப்படி நடந்ததல்ல ஆகையால், கட்சித்தலைவரும அந்தத் தீர்மானத்தை ஆதரித்தவர்களும், கட்சியின் அங்கத்தினர் பதவிகளை இழந்துவிட்டார்கள் என்ற அறிக்கை விட்டிருக்கிறோம்.

அதாவது, தலைவரையும் ஜனங்களையும் தள்ளிவிட்டீர்கள். கட்சியைக் கைப்பற்றுகிறீர்களாக்கும்.
தலைவரையும் அவருக்குத் தலையட்டும சிலரையுந்தான் தள்ளிவிட்டோம், ஜனங்கள் இருக்கிறார்கள்!

எங்கே இருக்கிறார்கள்? சேலத்திலே, மகாநாட்டிலே, அவர்கள் கட்சியின் பெயரை மாற்றியபோது இருநத பல்லாயிரக்கணக்கான மக்களும், உமது வாதத்திப்டி, தலைவரைப் போலவே, கட்சி அங்கத்தினர் பதவியை இழந்துவிட்டவர்கள்தானே! அவ்வளவு பேரும் பேய்விடுகிறார்கள், நீங்கள் இருக்கிறீர்கள் கட்சியும் கையுமாக, இதைக்கண்டு நான் களிக்க வேண்டும். அதுதானே உமது பேச்சின் பொருள்?

அப்படி இல்லை! ஜனங்களை நாங்கள் சேர்த்துககொள்வோம், இனிமேல் எதைச்சொல்லி? இந்தத் திராவிடர் கழகம், பட்டம் வேண்டாம் பதவிவேண்டாம் என்று சொல்கிகிறார்கள், ஆகையினால் பாட்டாளி மக்கள் பாமரரே! பொது மக்களே ! பார்ப்பனலல்லாத பெருங்குடிமக்களே! பட்டத்தையும் பதவியையும் வெறுக்கம் பாவிகளுடன் சேராதீர்கள், எம்முடன் சேருஙகள், என்ற சொல்லி ஆள் சேர்ப்பீர்கள் போலும்

அப்படியே பேசுவோம்! எங்களுக்கென்ன பிரசார முறையா தெரியாது? திராவிடர் கழகத்தார், மதமில்லை சாமியில்லை என்று சொல்கிறார்கள், ஆகவே அவர்களோடு சேராதீர் என்ற பிரசாரத்தைக் கிளப்பிக் கும்பல் கும்பலாக ஆள் பிடிக்கமாட்டோமா?

பிணத்தைப் படகாகக் கொண்டு வெள்ளத்திலிருந்து தப்பமுயன்றவன் கதை போலிருக்கிறது. கிடக்கட்டுடத, உங்களுக்குக் கட்சி ஏது?

ஜஸ்டிஸ் கட்சிதான்! அதன் பெயரை மாற்றினார்கள் ஆகவே அதனை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்று சொன்னேனே வக்கீல் வாதம்! அதைத்தான் நம்புகிறீர். சரி செய்து பாரும் அதையும் ஒன்று சொல்லிவிடுகிறேன், ஜஸ்டிஸ் கட்சியைத் தீவிரமாகத் தாக்கி விட்டார்கள் அவர்கள், ஆகவே இனி அதன் பெயரைக்கூறி, பரிசு பெற முடியாது.

ஜஸ்டிஸ் கட்சி அவர்களிடம் இல்லை எங்களிடந்தான் இருக்கிறது என்ற நாங்கள் அறிக்கைகள் விட்டு, பிரிட்டிஷ் சர்க்கார், கமிட்டி இப்பத் தீவிரமானதாகி விட்டதே என்று திகில் கொண்டிருப்பதைப் போக்கு,.ம் திருப்பணியைத் திருப்தி ஏற்படுமவரை செய்கிறோம், தங்கள் ஆதரவு மட்டும் . . . அதற்கென்ன ஆகட்டும்! எவ்வளவு சத்தற்றதாக உங்கள் வாதம் இருநதாலும், நாங்கள் உங்களைத்தானே ஆதரித்துத தீரவேண்டும். உங்களைவிட்டால் வேறு ஆட்கள் யார் எங்களுக்கு! ஜஸ்டிஸ் கட்சியும் சர்க்காரோடு ஒத்துழைக்கப் போவதில்லை என்று உலகு தெரிந்துகொண்டால் அப்படியானால், பிரிட்டிஷ் சர்க்காருக்கு ஆதரவுதரும் கட்சி எதுவுமே இல்லையே, என்ற கூறிவிடுவர். அந்தச் சொல்லை இச்செவி ஏற்குமா? அதற்காகவேதான், நீங்கள் ஜஸ்டிஸ் கட்சி என்ற சொல்லிக் கொள்வதை அனுமதிக்கிறேன், அதன் மூலம், ஜஸ்டிஸ் கட்சி என்று சொல்லிக் கொள்வதை அனுமதிக்கிறேன், அதன் மூலம், ஜஸ்டிஸ் கட்சி சர்க்காருக்கு ஒத்துழைத்தே வருகிறது, திலிருந்து விலக்கப்பட்ட சிலர் காங்கிரசைப் பின்பற்றி, தீவிரப் போக்கைக் கைக்கொண்டுவிட்டனர். ஆனால் அவர்கள் சாமான்யமானவர்கள். சர்களும் திவான்பகதூர்களும், நிர்வாகப் பதவிகளிலே இருந்தவர்கள், இருப்பவர்கள், இருக்கும் இலட்சணம் கொண்டவர்கள் இன்னமும், ஜஸ்டிஸ் கட்சியை நடத்துகிறார்கள் ராஜபக்தியுடன் என்று உலகுக்குச் சொல்லிக்கொள்ள எங்களுக்கும் உங்களை ஆதரிப்பதைத் தவிர வேறே வழி என்ன இருக்கிறது. ஆகையினால் என் ஆதரவு இருக்கிறது அதுபோதும், அதுபோதும் அதுபோதும் என்று கூறி ஆனந்தப்பட்டால் போதாது. வேலை செய்யவேண்டும்.

அந்த வேலைகளிலே ஒன்றுதான். கோகலே மண்டபத்திலே கூடிய நிர்வாகக் கமிட்டிக்கூட்டம். சிரமப்பட்டு, செய்திச் சித்திரம் தீட்டச் சீமான்கள் சிலர், பலர் அறிந்து கொள்ள முடியாதபடி பக்குவமாகப் பாதுகாப்புத் தேடிக்கொண்டு நடத்திய வெற்றிகரமான கூட்டம்! வெட்கம்! வெட்கம்!! என்று கூறி உங்கள் மனம் தூண்டும் அவர்களுக்கு அதுபற்றிய கவலை இல்லை. ஜஸ்டிஸ் கட்சியின் நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது என்று பத்திரிகையிலே செய்தி வந்ததல்லவா, அதுபோதும் அவர்களுக்கு பார்க்க வேண்டியவர்கள் பார்த்துக் கொடுகக கூடியதைக் கொடுப்பார்கள் குமரன் அருளும் கூட்டுவித்தால் என்ற திருப்தியுடன் அவர்கள் இதுபோது, தமது வழக்கமான அலுவல்களிலே இரண்டறக்கலந்து விட்டிருப்பார்கள். கேலிக் கூத்துதான் நடந்ததே, அதிலேயாவது சொஞ்சம் கார சாரம், காட்டக் கூடாதா? அதுவும் இல்லை!

சேரவாரும் ஜகத்தீரே! என்று அன்பழைப்பு விடுததனராம் மக்களுக்கு; யார்? கும்பலுக்கு இடஙகொடேல்! என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் குணாளர்கள்!

யாரும் சேரலாம், ஜாதி, மத, குல பேதமின்றி - என்று சொள்கையை விரிவுபடுததிவிட்டார்கள், என்று, அவர்களின் அர்த்தமற்ற செயலின் அர்த்தம் பார்க்கலாம் என்ற கூறித்தானா ஒருவன் விவேகி என்ற பட்டம் பெறமுடியும், விழி இருப்பதே பார்வைக்குத் தானே! அதுபோல, இது வரையிலே இன்ன ஜாதி, இன்ன மதம் இன்ன குலத்தார் மட்டுமே ஜஸ்டிஸ் கட்சியிலே சேரமுடியும் என்ற ஏதாவது நிபந்தனை இருந்ததா, இப்போது இவர்கள் யாரும் சேரலாம் என்று கூற! எவ்வளவு பொருளற்றப் போக்கு!!

மதத்தை ஆதரிக்கவோ, கண்டிக்கவோ இவர்களின் மேடையைப் பயன்படுத்த மாட்டார்களாம். இது கோகலே மண்டபத்தில் பேசப்பட்ட பொன்மொழியாம்! திராவிடர் கழகம், மத்தைக் கண்டிக்கும் மேடை, அதிலே சேராதீர், நாங்கள் நட நிலைமையாளர்கள், எம்முடன் சேரும் என்ற கூறுகிறார்க.ள். இது அவர்கள் நினைப்பு. திராவிடர் கழகம், மத எதிர்ப்பு ஸ்துபன மல்ல! ஆனால் அது நிச்சயமாக ஆரிய மார்க்கத்தைத் திராவிட வாழ்க்கையிலிருந்து நீக்கித் தீரவேண்டும் என்ற கொள்கை கொண்டதுதான்! அதிலே மறை திரை இல்லை! அதைக் கூறிக் கொள்ள நாம் வெட்கப்படவுமில்லை. இஸ்லாத்தையோ, கிருஸ்தவ மார்க்கத்தையோ இயற்கை வழிபாட்டையோ, திராவிடர் கழகம் எதிர்க்கவில்லை, எதிர்க்கவேண்டும் என்று சொன்னதுமில்லை, அறிவுக்குக் கேடும் திராவிட இனத்துக்கு அதுவும் கேடும், ஆரிய மார்க்கத்தை மட்டும், திராவிடர் கழகம், திராவிட நாட்டிலே அரசோச்சவிடப் போவதில்லை. இதுதான் உண்மை. இதைத் திரித்து, திராவிடர் கழகம், மதவைரிகள் கூட்டம் என்று மருட்சியூட்டவோ, பிளவு உண்டாக்கவோ, அவர்கள் பேசுவது, சின்னாட்கள் நடக்கக் கூடும, ஆனால் அதனால் விளையக்கூடியது என்ன? நம்மைப் பற்றி சிலர் சந்தேகிப்பர்! எதுவரை? நமது கொள்கை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் வரையில். தெளிவு பெற்றதும், நமது கழகம். அன்பு நெறியை அருவமான ஆண்டவ வழிபாட்டை, அறிவூட்டும் மார்க்கத்தைப் பழிப்பதுமல்ல ஒழிக்கக் கிளம்பியதுமல்ல. ஆனால் பல தெய்வழிபாடு அர்த்தமற்ற ஆரிச் சடங்கு, அவைகளால் விளையும் அவதிகள் ஆகியவற்றை ஒழித்து, திராவிடர்களை, விடுதலையும் விவேகமும் பெற்ற வீரர்களாக்கப் பணுபுரியும், அமைப்பு என்பதை உணருவர். அந்தத் தெளிவு பெறத்தகுதியே அறற்வர்கள் சிலர் இருக்க்கூடும! தெளிவுக்கு இலாயக்கற்றவர்களின் ஆதரவைத் தேடுவது வீணர் செயல், நாம் வீணரல்லர், விடுதல் இயக்கப் பணியாளர்கள்.

இவை தெரியாமலா, கோகவே மண்டபத்திலே பிரமுகர்கள் கூடி, பொருளற்றன பேசினர் என்ற பலர் கேட்பர். நாம், அங்கு கூடினவர்கள் குறைமதியினர் என்று கூறவில்லை. ஏன்! அவர்களிலே ஒரு சிலர், நாம் பயிற்சிபெற்ற பகுத்தறிவுப் பாடசாலையின் பேராசிரியர்களாக இருந்தவர்கள்! ஆகவே குறைமதியல்ல அவர்களின் கோணற்போக்குக்குக் காரணம். அவர்கள் நிலை, ஆம்! மக்களை இனத்தை, அவர்கள் கைவிட்டு விடுகிறார்கள், மக்களின் பணியே மகத்தானது என்ற தத்துவத்தை அவர்கள் நமக்குப் போதித்தார்கள். ஆனால் என்னென்பது அவர்தம் நிலையை, அந்தத் தத்துவத்தை அவர்கள் மறந்துவிட்டார்கள். அந்த மறதிக்குக் காரணம் இருக்கிறது.

உலகே பயந்தது அவனுடைய வீரதீரத்தைக் கண்டு, ரோமாபுரியின் மூலலை முடிக்குகளிலும் அந்த ரணகளச் சூரனின் வெற்றி பற்றியே பேச்சு! சீர்த்தியை அவன் தனது கட்கத்துக்குக் குவலயம் தரும் காணிக்கையாகப் பெற்றன்! ஆனால். . . .!

அவள் தோற்றாள் போரிலே! ஆனால் சேல்விழியால், மன்னர்களையே தனது மாளிகைக்குச் சிலைகளாக அமைத்துக் கொள்ளக்கூடிய ஆணை அடிமை கொள்ளும் அபூர்வமான வித்தைக்காரி! அவள் உறதி சிதறிவிட்டது. வலைவீசும் வனிதையின் முன் அலை வீசும் கடலையொத்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாத மாவீரன், பணிந்தான். களத்திலே வெற்றி பெற்றவனைக் காரிகை கட்டிலறையிலே கைதியாக்கினான். துரத்தவந்தான், தொழ ஆரம்மித்தான்! சீறினான், பிறகு சிந்து பாடினான் அவளுடைய முகம் சந்திரபிம்பம் என்ற! மோகம், அவனை, முடியுடை வேந்தர் பலரைப் புடிசாம்பலாக்கும் வீரனை, வெற்றியன்றி வேறு அறியாத் தீரனை, வேகமாக இழுத்துச் சென்றது போகப்படுகுழிக்கு! முதலையிடம் சிக்கிய யானையானான், முடி தரிக்க வேண்டிய அவன் சிரம் அவள் காலடியிலே கிடந்தது. அவளை வெல்ல வந்தான், வெற்றி அவனுக்குக் கிடைத்தது. எகிப்து நாட்டு எழிலுடை அரசி, கிளியோ பாட்ரா, தன் சாகசத்தால், ரோம் நாட்டு மாவீரன், அண்டனி என்பவனை அடிமைகொண்ட வரலாற்றை, மையல் ஊட்டி அவனை மண்டியிடவைத்த நிகழ்ச்சியை நாம் குறிப்பிட்டோம், மேலே. பதவிக்கு உருவமில்லை, ஆனால் அது ஊட்டிடும் பாசம், பல கிளியோ பாட்ராக்களின் சாகசங்களை ஒன்று கூட்டினால் உண்டாகக் கூடிய சக்திக்குச் சமம்! இல்லையானால், நமது ஆசிரியர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடத்தையே மறந்து விடமுடியுமா? அந்த மறதிதான் அவர்களின் போக்குக்குக் காரணமே தவிர, குறைமதி அல்ல காரணம்! நமது மொழி, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மறதி எனும் நோயை நீக்கும் மருந்து என்ற நன்னோக்கத்தால் கூறப்படுவது. மாறாக நாம் அவர்களை நிந்திக்கிறோம் என்ற நினைப்பார்களானால், நாம் சோகிப்பதன்றி வேறென்ன செய்தல் முடியும். மறதி மறைக, நோய் குறைக!! என்று அவர்கள் மனம் மாறும் வரை கூறிக்கொண்டிருப்போம்!!

(திராவிடநாடு - 10.12.44)