அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


குரங்காட்டம்

கிராப்பு இருந்தால், உடனே எடுத்துவிட்டு, உத்கிருஷ்டமான உச்சுக்குடுமியை அமைத்து கொள்ளுங்கள். திருநாமத்தை நன்கு அணியுங்கள்; திருத்துழாய் மாலையை கழுத்திலே புரளவிடுங்கள்; சட்டைகளைக் கழற்றி வீசி எறிந்து விடுங்கள், திருமேனி தெரியும்படித் திருவீதி வலம் வாருங்கள்!!

ஏன்? என்று கேட்கிறிர்களா? ஏனெனில், மேற்படி சின்னங்களும், சங்கார்த்தாதிகளும் கேவலம்; மேனாட்டு முறைகள்; நமது புராதன தர்மமாகா! மேனாட்டு முறைகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின் பற்றுவது “சத்கர்மமாகாது”, ஆகவே, பாரத கண்டத்து மகானுபாவர்களே! பகவந்நாமாவளி பாடிடும் பக்தசீலர்களே! ஆரிய தர்மோத்தமத்தின்படி, இனி ஆதி நாட்களிலே இருந்து வந்த ஆச்சாரி அனுஷ்டானாதிகளிலே அக்கறை காட்டுங்கள்!!

இது, யாரப்பா, இத்தகைய பழைய பஞ்சாங்கப் பேச்சுப் பேசுவது? இது எந்த ஊர் வைதீகக் குடுக்கையின் வாய் வீச்சு! இத்தகைய பழைய பசலிகள் இன்னமுமா நாட்டிலே நடமாடுகின்றன. குளக்கரைகளிலே உட்கார்ந்திருக்க வேண்டிய இப்பேர்வழிகளை, போதனை புரிய யார் அனுமதித்தனர். கூட கோபுரத்துக்குக் குட்டிச்சுவர் போதனை புரிவதா? இளநீர் இனிப்பன்று என்று பழய பனங்கள்ளு பகர்வதா? சந்தனம் நாறுகிறது என்று சாக்கடை நீர் சாற்றுவதா? புதிய முறை சரியன்று வென்று, பழைய பசலிகள் பேசுவதா? என்று நேயர்கள் துடித்துக் கேட்பர். ஆனால், மேனாட்டு முறை கூடாதென்றும், அவைகளை அப்படியே பின் பற்றுவது ஆகாது என்றும், திருவாய் மலர்ந்தருளியவர், சவுண்டிக்குப் போய்வரும் சனாதனியன்று, அர்ச்சனை செய்து வேதகர்ஜனை புரியும் வைதீக உருவன்று, இந்திய பூமண்டலத்தின் பிரதம நீதிஸ்தலமிருக்கிறதே, பெடரல் கோர்ட், அங்கே, நீதிபதியாகக் கொலு வீற்றிருப்பவரும், ஆங்கில சட்டங்களைக் கரைத்துக் குடித்திருப்பவரும், சர், பட்டத்தைத் தாங்கி நிற்பவருமான, சர். வரதாச்சாரியார், எனும் உத்தமோத்தர்!!

அவர் படித்தது ஆங்கிலம், பேசுவதும் அஃதே; சாற்றுவது மேனாட்டுச் சட்டங்கள், பணம் ஈட்டியதும், பதவி பெற்றதும் அச்சட்டங்களிலே சமர்த்தராக இருந்ததால்தான்! ஆனால் மேனாட்டு முறையினால், மேதினியில் மேலிடம் பெற்று வாழும் இவரே, மேனாட்டு முறைகளைக் கையாள வேண்டாம் என்று உபதேசிக்கிறார்!

மேனாட்டுக் கண்டுபிடிப்பான மோட்டாரிலே சவாரி! மேனாட்டு உடைகளால் உடலை மறைக்கிறார், மேனாட்டுக் கல்வியினால் செல்வத்தைப் பெருக்குகிறார், மேனாட்டாரின் சர் பட்டத்தால் வாழ்க்கைக்கு மெருகிட்டுக் கொள்கிறார், இத்தகைய மேனாட்டு ரசங்களைப் பருகி ஆனந்தமாக வாழும் இந்த அன்பர், சின்னாட்களுக்கு முன்பு, ஹைதராபாத் நகரிலே ஆற்றிய ஒரு சொற்பொழிவிலே, மேனாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டாம்! மனிதன் செய்வதைப் பார்த்து குரங்கு அதைப்போலவே சேஷ்டை செய்வதைப்போல, மேனாட்டாரின் முறைகளைப் பார்த்து அவைகளைப் பின்பற்ற வேண்டாம்! என்று திருப்பாசுரம் பாடினார்.

மேனாட்டார் மேதினியில் உயர் நிலை பெற்றதற்குக் காரணமாக உள்ள, அறிவுத் தெளிவு ஆண்மை அறம், விஞ்ஞானத்திறம், நாகரிக நடவடிக்கைகள் ஆகியவற்றை நாமும் மேற்கொள்ளுவது, குரங்காட்டமாகச் சர். வரதாச்சாரியாருக்குத் தோன்றியிருப்பது சரியன்று! சரியென்று கொண்டாலும், மேனாட்டு முறையைப் பின்பற்றுவது குரங்காட்டம் என்று தெரிந்தும் இந்த திருப்பிரம்மம் உபதேசகர்த்தராக மட்டுமிராது. உடனே தம்மிடமுள்ள மேனாட்டு முறைகளைக் களைந்துவிட வேண்டாமா! இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம், ஓதவேண்டிய வேதியர், ரோமன், கிரேக்கு, பிரிட்டிஷ் சட்டங்களைப் படிக்கலாமா! திருவாய் நாறுமே, நீசநாட்டினரின் நிகண்டுகளைப் படித்தால்! தர்ப்பையைத் தாங்க வேண்டிய திருக்கரங்கள், கேவலம், பேனாவைத் தாங்குவதா. பண்டைப் பெருமைக்கு இத்தகைய பங்கம் விளையலாகுமா! பனை ஓலையிலே எழுத்தாணி கொண்டு எழுத வேண்டியவர், பாபாத்மாக்களான மேனாட்டாரின் முறையான பாழும் காகிதத்திலே எழுதுவதா, இந்தப் பாபக்கிருத்தியத்தை இப்பரம பாகவத சிரோமணி செய்யலாமா! ஆற்றோரத்திலே, ஆஸ்ரமம் அமைத்துக்கொண்டு, அந்தி வானத்தைக்கண்டு சிந்துபாடியும், அக்னி தேவனுக்கு ஆகுதி தந்தும், சோமேசனுக்குச் சுலோகம் இயற்றியும் சோமரசத்தின் சொகுசில் சொக்கியும், வாழ வேண்டிய, பண்டை முறை பாழ்பட, உயர்தர நகரங்களிலே உன்னதக் கட்டிடங்களிலே, வெல்வெட்டு பீடங்களிலே, வெள்ளையர் பக்கலிலே வீற்றிருந்து, வேதாந்தமறியாத வீணர்கள், விஞ்ஞானச் சேற்றிலே உழலும் பாபிகள், பழமையை மாய்த்த துரோகிகளாம் மேனாட்டார் இயற்றிய பரலோகப்பற்றில்லா சக்கையாம் சட்டங்களைப்பற்றி விவாதித்து வாழும் வேதனை தரும் அதர்மத்திலே இவ்வந்தணர் உழலலாமா! செயலிலே, எது சுகமும் சம்பத்தும் செல்வாக்கும் தருகிறதோ அதை மேற்கொள்வதும், சொல்லிலே எது பழங்குடி மக்களை பாழ்படச் செய்யுமோ, பகுத்தறிவற்றவராக்குமோ, ஆரியதாசராக்குமோ, அதனைப் பேசுவதும் இத்தகைய பிரகிருதி களின் போக்காக இருக்கிறதென்பதை நாம் பலமுறை எடுத்துக் காட்டியுள்ளோம். பாமர மக்கள், இவர்கள் மொழி கேட்டு, சர். வரதாச்சாரியாரே இங்ஙனம் கூறிவிட்டார் என்று சபலப் புத்தி கொள்ளக்கூடும், ஆனால் அறிவுடையோர், எந்த மேனாட்டு முறை யைக் கொள்வது குரங்காட்டமென்று, இத்தகைய பிராமணர்கள் கூறுகின்றனரோ, அதே குரங்காட்டமாடியே அவர்கள் தமது குலத்துக்கே மேலிடம் தேடிக்கொண்டனர் என்பதை நன்கு அறிவர்.

உண்மையில், குரங்காட்டமாக நமக்குத் தென்படுவது, மேனாட்டு முறையைப் பின்பற்றுவதன்று! கோல் கொண்டோன், குரங்குக்கு, ஆடை அணிவித்து, கொப்பும் வளையும், கொண்டைத் திருகும் கோணல் மாலையும், பூட்டி நாட்டிய மாட்டிவைத்தாலும், கோல் இல்லாநேரத்திலே, குரங்குக்குச் சொந்த புத்தி தோன்றி, சேட்டையிலே இறங்குவதுபோல, சனாதன உருவங்கள், வாழ்க்கையைச் சுவையுள்ளதாக்கிக் கொள்ளவேண்டி, எந்த முறையை மேற்போட்டுக் கொண்டும் வயது கழுவும், ஆனால், அடிக்கடி, பழைய நினைப்புதோன்றிக் கூத்தாடும், குளறும். அச்செயலே, நமக்குக் குரங்காட்டமாகத் தோன்றுகிறது. அவ்வித குரங்காட்டம் கூடாது! தமிழருக்கு அது ஆகாது!!

20.6.1943