அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


குறிப்புகள் 2

பொது மக்களின் கட்டுப்பாடான கிளர்ச்சியும், அந்தக் கிளர்ச்சியை நடத்திச் செல்லும் தலைவர்களுக்கு; கஷ்ட நஷ்டம் ஏற்கும் துணிவும், அத்தகைய கிளர்ச்சியை ஆதரிக்கும் பண்புள்ள பத்திரிகைகளின் பலமும், ஒன்றுகூடினால், மமதை கொண்ட மன்னராட்சியின் மனப்போக்கையும் மாற்றிவிட முடியும், என்ற உண்மை மீண்டும் விளங்கும் வகையில், மைசூர் பொறுப்பாட்சிக் கிளர்ச்சி வெற்றிபெற்றது. உலக அரசியல் நடவடிக்கைகளையும் மக்களின் எழுச்சிக் காதைகளையும் நன்கறிந்த ஆற்காட்டு முதலியார், ஏணோ கிளர்ச்சி முற்றுகிற வரையில் வாளா இருந்தார். வீண்தொல்லை பொதுமக்களுக்கு. அவருக்கும் பழிபல.

மன்னராட்சி இனி முன்போலிருக்க முடியாது என்பது தெரிந்த விஷயம். ஏன், அடக்குமுறை கொண்டு, சுயாட்சி வேட்கையைத் தடுக்கலாம் என்ற ஆசை கொள்ளவேண்டும்? ஏதோ, நடந்தது நடந்துவிட்டது என்று இப்போது, திவானும், சமஸ்தானக் காங்கிரஸ் தலைவரும் கூறிவிவர். ஆனால், இடையே, எவ்வளவு தொலைகள்!

மைசூர் மக்கள் பெற்ற வெற்றி கண்டு நாம் மகிழகிறோம்.
***

அந்தப் போராட்டத்திலே ஈடுபட்டவர்களைப் பாராட்டுகிறோம். திராவிடர் கழகத்தார், மைசூர் மக்களின் கிளர்ச்சியை ஆதரிக்கவில்லை என்றும், திவானாக, சர். இராமசாமி முதலியார் இருக்கும் காரணத்தால், பொறுப்பாட்சிக் கிளர்ச்சியையே கண்டித்தனர் என்றும், சிலர், மைசூர் சமஸ் தானத்திலும், இங்கும், கூறுவதாக அறிகிறோம். திராவிடர் கழகக் கோட்பாடுகளை ஆதரிக்கும் இதழ்களில் பல, மைசூர் மக்களின் பொறுப்பாட்சிக் கிளர்ச்சியை ஆதரித்தே எழுதின. திராவிடர் கழகம், மைசூர் போராட்டம் பற்றி அதிகார பூர்வமாக ஏதும் தீர்மானம் நிறைவேற்றவில்லை. எனவே திராவிடர் கழகம், சமஸ்தான மக்களின், சுயாட்சிக் கிளர்ச்சியை ஆதரிக்கவில்லை, மன்னருடன் குலவிற்று, திவானுடன் கொஞ்சிற்று என்றெல்லாம், பழிசுமத்துவது, தவறு என்று கூறுகிறோம். பொதுவாகவே, திராவிடர் கழகம், சமஸ்தானங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலே தலையிடவில்லை. எனவே, மைசூர் விஷயமாகவும், ஏதும் தீர்மானம் நிறைவேற்ற வில்லையேயொழிய, கழகம், முற்போக்குச் சக்திகளுக்க ஆதரவாக இல்லை என்று பொருள்படாது. “திராவிடநாடு” மைசூர் மக்கள் போராட்டததைத் துவக்க முதலே ஆதரித்து வந்ததை, நேயர்களுக்குக் கவனப்படுத்துகிறோம். வெற்றி பெற்ற மைசூர் மக்கள் தங்கள் சமஸ்தானத்தில், சகலவகுப்பினருக்கும், திருப்தி தரத்தக்க, அரசியலை வகுத்து, உண்மைக்குடி அரசுக் கோட்பாட்டை மதித்து, புதுமணம் பெறவேண்டும்.
***

மைசூர் சம்பவத்தைக் கண்டும், ஹைதராபாத் போன்ற, சில சமஸ் தானங்கள், இன்னமும் பிடிவாதமாக, மக்களின் எழுச்சியை அடக்கும் அசட்டுக் காரியத்தைக் கைவிடாம
லிருப்பது, ஓங்கியபடியும், பரவிய படியுந்தான் இருக்கும். அதை ஒடுக்கும் வித்தையைக், குருவே செய்து பார்த்துத் தோற்றுவிட்ட பிறகு, குட்டிச் சீடர்கள், ஏன் முயற்சிக்க வேண்டும்? மனக்கசப்பு முற்றா முன்னம், மதிவழி நடந்து, மணிமுடி தாங்கும் மதிப்பையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும்- மக்களை எதிர்த்துக்கொண்டு, மன்னர்கள் வாழ முடியாது.
***

இதை நன்கு தெரிந்து கொண்டுள்ள, காஷ்மீர் மன்னர், தமது கையிலே சிக்கியுள்ள பணம், நவரத்னம், பொன், இவைகளை எல்லாம் மூட்டையாகக் கட்டி வைத்துக் கொண்டு, வேகமாகச் செல்லக்கூடிய நூதன விமானத்தையும், தயாராக வைத்துக் கொண்டிருக்கிறாம், பொதுமக்களின் கிளர்ச்சி, புயலென வீசத் தொடங்கினால், சீமை போய் விடுவது என்ற எண்ணத்துடன். காஷ்மீர் மக்களின் தலைவராக விளங்கும் ஷேக் அப்துல்லா, சிறையினின்றும் வெளிவந்துவிட்டார். அவருடைய தலைமையில், விடுதலைப் போர் துவக்க, காஷ்மீரம் தயாராக இருக்கிறது.
***
ராஜபுதன மன்னர்கள், தந்திரசாலிகள். அவர்கள், வட நாட்டிலே ஏற்பட்டுள்ள, இந்து முஸ்லீம்பிணக் கைச்சாக்குக் காட்டித், தத்தமது சமஸ்தானங்களிலே, சுயாட்சிக் கிளர்ச்சிகளை நசுக்கி வருகிறார்கள். திடீரென்று ஒரு ராஜா, இந்து ரட்சகனாகிறான்! எல்லாம், வெளி வேஷம்!! பொதுமக்கø ஏய்த்துவிட, புதிய தந்திரம். மக்களை ஏய்த்துவிட, புதிய தந்திரம். மக்கள் இதிலே கொஞ்சம் மயங்குகிறார்கள். மக்களை, இம்முறையிலே மயக்குவதுடன் இல்லை. இந்தியாவுடன் சேருகிறோம், என்று ஆசைகாட்டித் தமக்கு, பாதுகாப்பும், உதவியும் தேவை என்று, கேட்கின்றன - பெறுகின்றன. ஆக, வகுப்புக் கலகத்தைக் காட்டி, மக்களையும், மத்யசர்க்காரையும் ஏக காலத்தில் மயக்கிக் கொண்டிருக்கிறார்கள், மன்னர்கள். இந்த அல்லல் நிறைந்த வகுப்புக் கலவரம் இல்லாதிருந்தால், இதற்குள், இந்த ராஜபுதன சமஸ்தானங்களிலே, மக்கள், மேலும் ஒருபடி முன்னேறி, சுயாட்சி பெற்றிருப்பார்கள். இந்தக்குட்டி சமஸ்தானங்களால் ஏற்படும் விஷமம், எங்கே விபரீத நிலைமையை உண்டாக்கி விடுகிறதோ என்று அஞ்சக்கூடியபடி, ஜுனகாத்சமஸ்தானப் பிரச்னைவளருகிறது. இந்தநிலைமைகளை எல்லாம், வட்டமிடும் வல்லூறுபோல், பார்த்த வண்ணம் உள்ளன, வெளிநாட்டு வல்லரசுகள். உலக அரங்கிலே, அமெரிக்க, ரஷிய, மனத்தாங்கல் வளருகிறது. உலகமே, இரு கூடாரமாகி, விடுமோ, என்று, ராஜதந்திரிகள் பயப்படக் கூடிய நிலைமை. இந்நிலையில், இந்தச் சமஸ்தானங்களின் பிரச்னை குழப்பத்தை ஊட்டுவது, வல்லரசுகளுக்கு, மிகத்திருப்தி தருகிறது.
***

மோப்பம் பிடிக்கும் போக்கிலே அவை உள்ளன. இன்னுமோர் இரண்டாண்டுகள், மக்களும் தலைவர்களும், கண் விழிப்பாக இல்லாவிட்டால், சுயாட்சிசுக்கு நூறாகும் என்று விஷயமறிந்தோர் விசாரப்படுகின்றனர். முன்பெல்லாம் தலைவர்களின் அறிக்கைகள் தீப்பொறி கிளப்புவனவாக இருக்கும். இப்போது அவ்விதம் இல்லை. சமரசத்தின் அவசியத்தை உணர்ந்து சர்வதேசக் கண்÷tõட்டமும் இங்கு பாய்கிறது என்பதை அறிந்து, அவர்கள் அறிக்கைகள் விடுகின்றனர் - அடிக்கடி கூடிப் பேசுகின்றனர். - நிலைமையில் உள்ள நெருக்கடியைப் பற்றி உண்மையிலேயே கவலைப்படு கிறார்கள். ஆனால் பத்திரிகைகள் சில, பொறுப்பற்ற முறையிலே, விஷமத்தனமான பிரசாரம் புரிகின்றன. வடநாட்டு இரத்தவெறியைக் கண்டிக்கவும், அடக்கவும் வேண்டிய நேரம் இது. தீர்த்துக் கொள்ளவேண்டிய பிரச்னைகளைக் கூடச் சிலகாலம், ஒத்திவைத்தாவது, இங்கு, அமைதியான நிலையை நிலைக்கச் செய்ய வேண்டும். இதற்கு, மாறான மனப்பான்மையை வளர்க்கும் யாரும் நிச்சயமாக, நாட்டுக்குப் பெருங்கேடு தேடுகிறார்கள் என்று கூறவேண்டும். மக்கள் மிக மிக விழிப்பாக இருக்க வேண்டிய காலம் இது. ஒரு மகத்தான புதிய நிலை, அன்னியாட்சி விலகிய நிலை ஏற்பட்டிருக்கிறது, இதனைச் சாதகமாக்கிக் கொள்ள, மதவாதிகள், மன்னர்கள், முதலாளிகள், முனைவர் காரணம் பல காட்டுவர்! சாக்குகள் கூறுவர். மக்கள், இந்த மாயவலையில் விழாதிருந்தால்தான் சுயாட்சிநிலைக்கும், சுகம் பிறக்கும். பல தலைமுறைகளுக்குப் பிறகு கிடைத்திருக்கும், தன்னாட்சி நிலையை, தந்திரக்õகரர்களின் பேச்சில் மயங்கிக் கெடுத்துக் கொள்ளவேண்டாம் என்று மக்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். இந்தியா பூராவும், இங்குள்ள அமைதியை, சமரசத்தைக்கண்டு, பாராட்டுகிறது - வழி காட்டி என்று புகழ் கிறது - இந்த நல்ல நிலையைக் கெடுக்க வேண்டாம், என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.
***

ஒரு அவசரச்சொல், ஒரு தவறான நடவடிக்கை, ஒரு சிறுவதந்தி, ஒருதந்திரமான விஷமம், ஏற்பட்டாலும், அமைதிக்குக் கேடுவரக் கூடிய விதமான, மனநிலை இருக்கிறது. இதை அறிந்து, மக்களை நடத்திச் செல்பவர்களும், பத்திரிகைகளும் நடந்து கொள்ள வேண்டும்.

பெற்ற சுயாட்சியின் பலனை அனுபவிக்க வேண்டுமானால், சமஸ்தானாதிபதிகளின் எதேச்சாதிகாரம், மதவாதிகளின்பிடி, முதலாளித்துவத்தின் ஆதிக்கம், காட்டுராஜாக்களின் ஆதிக்கம், ஆகியவைகளிலிருந்து மக்கள் விடுபட்டு, இயற்கைச் செல்வத்தைப் பெருக்கி, வளம் சகலருக்கும் பயன்படும்படியான திட்டம் வகுத்துக்கொண்டு, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். அப்போதுதான், சுயாட்சி பெற்றதனால், சுகப்பட்டோம் என்ற பொருள் பொருந்தும். அன்னிய ஆட்சியின் போது இங்கு ஒரே கலவரமயம் இப்போது அந்நிலை இல்லை! அப்போது தொழில் முடக்கம் - இப்போது தொழில் பெருக்கம், அப்போது, வாழ்க்கைத்தரம் மிகமட்டம், இப்போது உயர்ந்திருக்கிறது என்று உலகின் முன், பெருமிதத் தோடு நின்று பேசவேண்டும். ஏகாதிபத்யக் காவலன் சர்ச்சில் கேலிபேசக்கூடிய நிலையிலல்லவா நாடு இருக்கிறது! இதைத் திருத்துவது, நாட்டுத் தலைவர்களின் அவசரமான கடமையாகும். அகதிகள் பிரச்சனையும், அதை யொட்டிப்பரவிய அமளிப் பிரச்னையும், அடங்கிவிட்டதென்று பண்டிதநேரு அறிவிக்கிறார். அகமகிழ்கிறோம். அடியோடு, அந்த நாகரிக நிலைமாறி, எப்படிப்பட்ட சிக்கலான பிரச்னையையும், கூடிப்பேசித் தீர்த்துக் கொள்வோம், இரத்தவெறி பிடித்தலைய மாட்டோம், மக்களின் வாழ்வு மதிப்புள்ள பொருள், என்ற சீரிய நோக்கத்துடன் பணிபுரிவோம், மன்னர்கள், அவர்களின் மண்டல சூத்ரதாரிகள், முதலாளிகள், வகுப்பு வெறியர்கள் எனும் எவர், முயற்சி செய்தாலும், நாங்கள் ஏமாறமாட்டோம் - என்று மக்கள் உறுதி கொள்ளவேண்டும். பலப்பல தலைமுறை களாக கிடைத்திராத அரிய நிலை கிடைத்திருக்கிறது, இதை மதித்து, மதிவழி நடந்து, சூழ்நிலையை மாற்றிச் சுயாட்சியின் பலனை மக்கள் அடையவேண்டும். இந்த நோக்கத்துக்காகப் பாடுபடுவதே பத்திரிகைகளின் இலட்சியமாக இருக்க வேண்டும். விஷமத்தை வளர்க்கும். வகையில் உள்ளவைகள், சாவோலைகள்! வல்லமை பொருந்திய பிரிட்டனால் நம்மவரின் இரத்தத்தைக் குடிக்க முடியவில்லை, ஓரளவுக்கு மேல் - இதோ வகுப்புக்கலகம், ஏராளமான இரத்தத்தைக் குடித்து விட்டது. பெரும் போரின் போது கூட ஏற்படாத அவதி இன்று வந்தது. இன்னமுமா, இந்த நிலை நீடிக்க வேண்டும்? எண்ணிப் பாருங்கள், ஆரஅமர.

திராவிடநாடு - 19-10-1947