அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


குட்டு வெளிப்படுகிறது

இப்போது சிம்லா மாநாட்டில் கலந்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர்களிடையே, என்றைக்கும் ஏற்பட்டிராத ஒரு பெருத்த கிலி ஏற்பட்டிருக்கிறதாம், அதாவது, வேவல் திட்டத்தின்படி, காங்கிரஸ் சபை மத்திய அரசாங்கத்தில் பதவி ஏற்றுக் கொண்டால், காங்கிரசுக்கும் அதன் கொள்கைகளுக்கும் அழிவு நேரிட்டு விடுமோ என்ற அச்சம் அவர்களைப் பெரிதும் வாட்டுவதாகத் தெரிகிறது. ஏனோ இந்த அச்சம்?

காங்கிரசும், அதன் தலைவர்களும், அவர்களால் வகுக்கப்பட்ட வேலைத் திட்டங்களும், உண்மையானதாயும், நேர்மையானவர்களாயும், நாட்டு மக்களின் நலனுக்காக வகுக்கப்பட்ட ஒழுங்குமுறையான வேலைத் திட்டங்களாயும் இருப்பினும், இப்போது இவர்களுக்கு இந்த இடி விழுந்தது போன்ற அச்சம் ஏற்படக் காரணம் இல்லை. ஒரு கட்சியும் அதன் கொள்கைகளும் பொது நல நோக்கோடு மக்கள் அனைவருடையவும் நலனுக்கென்றே அமைக்கப்பட்டவையாய் இருப்பின், அக்கட்சியின் தலைவர்கள் எங்கிருந்தால் என்ன? அதிலும் நாட்டின் முன்னேற்றத்தையே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுவதாகச் சொல்லப்படும் ஒரு சர்க்காரில், பொறுப்பு வாய்ந்த பதவிகளை ஏற்கும் சமயத்தில், அக்கட்சியின் தலைவர்களுக்கு, “இதனால் நமது கட்சிக்கு என்ன ஆபத்து நேர்ந்துவிடுமோ” என்ற அச்சமும் கிலியும் ஏற்படுகிறதென்றால், அக்கட்சியின் நேர்மையும் - ஒழுங்கும் - பொது நலநோக்கும் எத்துணை அளவுக்கு உண்மையாய் இருக்கும் என்ற முடிவுக்கு வரும் பொறுப்பைப் பொதுமக்களுக்கே விட்டு விடுகிறோம்.

1937-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி, மாகாண அரசியல் பொறுப்பை ஏற்று நடாத்தியபோது, அக்கட்சியின் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் வெளியில் இருந்துகொண்டு, காங்கிரஸ் மந்திரிகளை ஆட்டிப் படைத்ததையும், அதனால் பொதுமக்களின் விருப்பத்திற்கும் தேவைக்கும் மாறான காரியங்களை அம்மந்திரி சபைகள் கையாள நேர்ந்ததையும் பொதுமக்கள் இதற்குள்ளாக மறந்துவிட மாட்டார்கள் என்றே நம்புகிறோம்.

எனவே சர்க்கார் பதவிகளை ஏற்காது வெளியில் இருந்து கொண்டே, தங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட - தங்களிலும் பார்க்கத் திறமையில் குறைந்தவர்களை மந்திரிகளாக்கிவிட்டுத், தங்கள் கண்காணிப்பிலேயே சர்க்கார் காரியங்களையும் தங்கள் கட்சியின் வேலைத்திட்டங்களையும் நடத்தியதாக நாப்பறையடிக்கும் இந்த நவீனத் “திறமைசாலிகள்”, இப்போது தாங்களே தாங்களே, அப்பதவிகளிலும் பார்க்கப் பொறுப்பும் உயர்வும் வாய்ந்த பதவிகளை ஏற்பதால், தங்கள் கட்சியின் வேலைத் திட்டங்களுக்கு வீழ்ச்சி நேரிடுமோ என்று அஞ்சுவதன் காரணம் என்ன?

இப்புது ஏற்பாட்டின்படி; காங்கிரசும் மற்றக் கட்சியினரும் மத்திய சர்க்காரின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டால், பல கட்சிகளின் தலைவர்களும் கலந்துள்ள அச்சபையிலே, காங்கிரசும் அதன் வேலைத்திட்டங்களும் எதிர்க்கட்சியினரால், எள்ளி நகையாடக் கூடிய அளவுக்கு அமைக்கப்பட்டிருக்கிறதே - குட்டு வெளிப்பட்டு விடுமே என்ற அச்சம் தான் அவர்களை இந்த இரங்கத் தக்கநிலைக்குக் கொண்டு வந்திருக்கதென்பதைக் - வேலைத் திட்டங்கள் ஆகியவற்றையும் நம்பும் நம்மவர், இனிமேலாவது தங்கள் தவறை உணர்ந்து திருந்த வேண்டாமா என்று கேட்கிறோம்.

(திராவிடநாடு 8.7.1945)