அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


லேபில் வேண்டாம்!
லேபில்! - வியாபார உலகோடு நின்றுவிடவில்லை, லேபிலைப் பற்றிய பிரச்சினை - இப்போது அரசியல் உலகுக்கும் வந்துவிட்டது. காந்தா மார்க் புகையிலைக்கு மார்க்கெட்டிலே அதிகமான கிராக்கி என்று தெரிந்த வணிகரொருவர், சாந்தா மார்க் புகையிலை வெளியிட்டால் காந்தா-சாந்தா, என்ற இரண்டுக்கும் இடையே அதிகமாக வித்யாசம் கண்டுபிடிக்க முடியாமல், சாந்தா மார்க்கை வாங்கி உபயோகிப்பார்கள் என்று ஆசை கொள்கிறார் - ஓரோர் சமயம் அந்த ஆசை ஈடேறவும் செய்கிறது - சில சமயம் சிக்கலும் வருகிறது தன் லேபிலுக்குள்ள செல்வாக்கைக் கண்டு கெட்ட எண்ணம் கொண்டு ஏறக்குறைய அதே விதமாகத் தோற்றமளிக்கக் கூடிய லேபில் போட்டு, வாடிக்கைக்காரர்களைக் குழப்பி, மார்க்கட்டிலே இடம் பிடிக்கிறான் புதிய ஆள், என்று எண்ணி, வழக்கும் நடப்பதுண்டு. இதற்காகப் பாதுகாப்பு முறையாக, லேபிளை ரிஜிஸ்டர் செய்து கொள்வதுமுண்டு. சரக்குகளோடு இருந்து வந்த பிரச்சினை, மெள்ள மெள்ள, அரசியலுக்குள்ளும் படை எடுத்து வந்துவிட்டது.
*****
தட்டுக்கடை தர்மலிங்கம், நித்தம் எட்டணா கொடுத்து ஒரு ஏடுபிடியை வேலைக்கு அமர்த்திக் கொண்டு, வியாபாரம் செய்கிறார் - நாட்டுப்புகையிலையை நல்ல முறையிலே பதப்படுத்திப் பொடியாக்கி அதை விற்கிறார். ஏடுபிடியும் கடையின் முதலாளியும் கூடி கடைக்கு வாடிக்கைக்காரர்கள் அதிகமாகிறார்கள், பொடியும், பெயரெடுக்கிறது, ஆனால் அதற்கென்று ஒரு ஆழகான பெயர் இல்லையே என்று வருத்தமடைந்து யோசிக்கிறார்கள்.
பொடி நல்ல முறையிலே செய்யப்படுவதால், பலருக்கும் அதை உபயோகிக்க விருப்பம் இருக்கிறது ஆனால், கடை ஒரு மூலை. ஆகவே, சாதாரணமாக, ஜனங்கள் மூலைக் கடைப்பொடி என்று பேசிக் கொள்வார்கள். முதலிலே, பெயர் ஆழகாக இல்லையே என்பது தெரியவில்லை, வியாபாரம் கொஞ்சம் வலுத்ததும் பெயர் ஆழகாக, கவர்ச்சிகரமானதாக இல்லையே என்ற எண்ணம் உண்டாயிற்று. ஏடுபிடிதான் ஒருயோசனை கூறினான், புதிய பெயரே வைத்துவிடலாமென்று. அந்த யோசனையின் விளைவாக, மூலைக்கடைப் பொடி, மூவர்ணப் பொடி என்ற புதிய லேபிலுடன், கடைவீதிக்கு வந்தது, சரக்கு, ஏற்கனவே மார்ககெட்டில் பிடித்திருந்த காரணத்தால், பொடிக்குக் கிராக்கியும் வளர்ந்தது. “இப்போது நம்ம மூலைக்கடைப் பொடி ரொம்ப ஜோராக இருக்கிறது, ஆழகான லேபில் கூடப்போட்டு விட்டார்கள் அதற்கு, மூவர்ணப் பொடி என்று பெயர் இப்போது” என்று மக்கள் பொடிபோடுவாரகள் - பேசிக் கொண்டனர்.
*****

மூவர்ணம் என்ற பெயர், காரணம் கண்டுபிடித்தல்ல வைத்தது. ஏடுபிடிக்கு காங்கிரஸ் அபிமானம். மூவர்ணக் கொடியைச் சொக்காயில் கூடப்பொறித்துக் கொண்டவன். அவன், அதற்காகவே பொடிக்கு அந்தப் பெயரிட்டான். பெரியவர்கள் கேட்கும்போது தட்டுக்கடை தர்மலிங்கம் இந்தக் காரணத்தைக் கூறுவதில்லை - அவர் சொல்வார் புகையியைப் பொடியாக்கும்போது, அது வர்ணம் மாறிக் கொண்டே வரும் - பதம் பார்த்துக் கொண்டே, பக்குவமான நேரத்தில், பொடியாக்க வேண்டும். நமது கடையிலே பொடி செய்கிற முறையே தனி. மூன்று முறை புகையிலையின் வர்ணம் மாறிக்காட்ட வேண்டும், அந்தச் சமயத்திலே பொடியாக்குவோம், ஒவ்வொரு மறை வர்ணம் மாறும் போதும் ஜாக்கிரதையாகக் கவனிப்போம் - மூன்றாவது மாற்றம் ஏற்படும்போது, சட்டியைக் கீழே இறக்காவிட்டால் தீர்ந்தது, பதம் கெட்டுவிடும், பொடி கன்னங்கரேலென்றாகி, நெடி அதிகமாகி, பலவிதமான வியாதிகள் கூட உண்டாகும் என்று கூறுவார்.அதுதான் உண்மையான காரணமோ என்னமோ அந்தப் பெயரிட்டதற்கு; நமக்குத் தெரியாது. நமது நண்பரொருவர் வேடிக்கைக்கு வேறோர் காரணம் சொல்வார் - மூவர்ணம் என்பது பொடிக்காக அல்லய்யா, தட்டுக்கடை தர்மலிங்கத்தின் நெற்றிக்காசு! நீ கவனத்ததில்லையா நெற்றியை, வெள்ளை நிற விபூதி இருக்கும், அதிலே மஞ்சள் நிறப்பொட்டு இருக்கும். அதை ஓட்டி சிகப்பு நிற குங்குமம் இருக்கும் - ஆக மூவர்ணம் - அவர் கடைப் பொடிக்கு அதனாலேதான் மூவர்ணப் பொடி என்று பெயர் கொடுத்திருக்கிறார் என்று சொன்னார், இருக்கலாம் என்ன காரணத்துக்காக அந்தப் பெயரிட்டாரோ அது கிடக்கட்டும். பிறகு நடந்தல்லவா, முக்கியம்! ஏடுபிடிக்கும் கடை முதலாளிக்கும், மனபேதம் ஏற்பட்டது. பிரியவும் நேரிட்டது. பொடிக்கடை புதிதாக வைத்தான் ஏழுமலை - ஏடுபிடி. “எனக்கும் அவருக்கும் ஆயிரம் தகராறு இருக்கலாம் - ஆனால் உண்மையை நான் ஒளிக்க முடியாது. பொடியிற் சிறந்தது மூவர்ணப் பொடிதான் நானும் அதே பொடியேதான் விற்கிறேன்” - என்று சொல்லி வந்தான் லேபிலும் பழைய கடையில் போட்டது போன்றே மூவர்ணம் என்றுதான் இருந்தது. கடை முதலாளி வழக்குத் தொடுத்தார். மூவர்ணப் பொடி என்ற லேபிலை ஏழுமலை உபயோகிக்கக் கூடாது என்று உத்தரவாயிற்று. ஏழுமலை கொஞ்சம் குறும்பன். “நூறுபேர் நூறு சொல்லட்டும்டா ஏழுமலை நாம் ஆத்திரப்படாமல், நமது காரியத்திலேயே கண்ணாக இருந்தால் போதும்” என்று தர்மலிங்கம் எத்தனையோ தடவை புத்தி கூறி இருக்கிறார். ஏழுமலை, அந்தப் பாடத்தை மறக்கவே இல்லை. வழக்கு முடிந்தது, மூவர்ணப்பொடி என்ற லேபிலை உபயோகப்படுத்தக்கூடாது என்று தடைபிறந்ததும், லேபிலை விட்டுவிட்டான் - புதிய லேபில் தயாரித்தான், கீழ்க்கண்ட முறையில்,
மூவர்ணப்பொடி
கடையில் முன்பு இருந்த
ஏழுமலை தயாரிக்கும் பொடி.
இப்படி இருந்தது லேபில், முதலாளிக்குக் கோபம் - சட்டம் குறுக்கிடவும் முடியாது என்று வக்கீல் சொன்னார். வேறோர் யோசனையும் அவரே சொல்லி அனுப்பினார் - அதன்படி தருமலிங்கம் புதிய நோட்டீஸ் போட்டு, ஊரெங்கும் வழங்கினார்.
மூவர்ணப் பொடி
மூவர்ணப்பொடிக் கடையில் இருந்த ஏழுமலை,
வேலையிலிருந்து தள்ளப்பட்டான்.
அவருக்கும் மூவர்ணப் பொடிக்கடைக்கும் ஒரு
சம்பந்தமும் கிடையாது.
மூவர்ணப் பொடி செய்யும் முறையே வேறு.

இந்த நோட்டீசை, ஏழுமலை வரவேற்றான் - அச்சாபீசுக்குச் சொல்லி இதே நோடீசை ஒரு ஆயிரம் தயாரிக்கச்சொல்லி, தன் கடைக்கு வருகிறவர், வீதியில் செல்பர்கள், அனைவருக்கும் தந்தான். சும்மா தருவானா! ஒரு குட்டிப் பிரசங்கத்தோடுதான்!!

“என்ன இருந்தாலும், தருமலிங்கம் பெரிய மனுஷர் பெரிய மனுஷர்தான், சிலதுகள், நான் அவர் கடையிலேயே இருந்ததில்லை என்றுகூடப் பேசுகின்றன. பார்த்தீர்களா அவர் வெளியிட்டிருக்கிற நோட்டீஸ் - அவரே சொல்கிறார் - ஏழுமலை ஏன் கடையிலேதான் முன்னே இருந்தான் என்பதை. அவர் கடையிலே இருந்தவனுக்கு, அந்தக் கடையில் தயாரிக்கும் பொடியின் முறை தெரியாமலா இருக்கும்! சட்டம் தடுக்கிறது, ஒரே பெயரை இரண்டுபேர் வைத்துக் கொள்ளக்கூடாது என்று. ஆகவேதான், அவர் தடுத்தாரே ஒழிய, அவர் ஒன்றும், சிலதுகள் சொல்வதுபோல அவனுக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது என்று சொல்லவில்லை. அவர் நோட்டீசிலேயே, சொல்லியிருக்கிறார், ஏழுமலை ஏன் கடையில் முன்பு இருந்தவன் என்று” - இவ்விதம் பேசினான் ஏழுமலை. கோபம், கடை முதலாளிக்கு; இருந்தாலும், என்ன செய்வது, ஏழுமலை இருந்துவிட்டுப் போனவன் எனப்தையும் மறைக்க முடியவில்லை, மூவர்ணப் பொடிக்கடையில் இருந்த ஏழுமலை தயாரிக்கிற பொடி, மூவர்ணம் என்ற லேபில் இல்லையே தவிர, பொடி ஜோர்தான் என்று பலர் பேசக்கேட்டார் தடுக்க முடியவில்லை. நெடுநாள் இருந்துவந்தது இந்த லேபில் சண்டை, எங்களூர் கடைவீதியில்.
*****

வியாபார விஷயத்திலே வரலாம் இப்படிப்பட்ட லேபில் சண்டை. அரசியலில் வருவானேன் என்று கேட்பீர்கள். ஐனோ, தெரியவில்லை, ஆனால் வந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில் படித்துமிருப்பீர்கள்.

தோழர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணன், அச்சுதபடடவர்தன், அருணா இசப் ஆலி ஆகியோர் காங்கிரஸ்காரர்களே, ஆனால் காங்கிரஸ் இயக்கத்துக்குத் துணை தேடுகிற முறையில், காங்கிரஸ் நேரடியாகக் கவனிக்காத சில பிரச்சினைகளைக் கவனிக்க, தங்களை ஒரு பிரத்யேகக் குழுவாக்கிக் கொண்டனர். பெயர் காங்கிரஸ் சோஷியலிஸ்டு கட்சி என்பதாகும். நாட்டு விடுதலை நாடடம கொண்டவர்கள் என்பதைக் குறிக்கக் காங்கிரஸ் என்ற பதமும், விடுதலை பெற்ற நாடு சமதர்மக்கோட்பாட்டைக் கொள்ளவேண்டுமென்பதற்காக, சோஷியலிஸ்டு என்ற பெயரும், கொள்ளப்பட்டு, ஒன்றைச் செய்வதற்காக மற்றொன்றை மறந்துவிடக்கூடாது என்பதற்காக, இரண்டு வார்த்தைகளையும் இணைத்து, காங்கிரஸ் சோஷியலிஸ்டு என்று பெயரிட்டுக் கொண்டனர். பணிபுரிந்து வந்தனர். பணி என்றால், போலியாக அல்ல. உண்மையாகவே, வேலை செய்தனர். எவ்வகையில், எனில், சமதர்மவேட்கை கொண்டவர்கள் அந்தக் கொள்கை காங்கிரசில் இல்லையே, அது ஏழை, பணக்காரர் இருவரும் சேர்ந்த ஸ்தாபனமாயிற்றே என்று எண்ணி சமதர்மம் காண்பதற்காக, பொது உடைமைக் கட்சியிலே போய்ச் சேருவோமா என்று யோசித்துக் கொண்டிருந்த மக்களை எல்லாம், காங்கிரசை விட்டுப் பிரிந்த போகாதபடி, தடுத்து வைக்கும் பணியைத் திறம்படச் செய்து வந்தது; கா.சோ.கட்சி காங்கிரசாருக்கும், வேலையின் அளவும் கடினமும், சிக்கலும் சங்கடமும் கொஞ்சம் குறைந்தது. இப்படி இருந்துவந்த நிலைமைக்கு ஒரு நெருக்கடி உண்டாயிற்று. கா.சோ.கட்சியினர், தங்கள் கருத்தைக் கொஞ்சம் தெளிவாகக் கூறவும், திட்டம் தீட்டவும், தமது அமைப்பைக் கொஞ்சம் ஒழுங்குபடுத்தவும், ஆரம்பித்தனர். நாட்டிலே அவ்வப்பொழுது ஏற்படும் பிரச்சினைகள் சம்பந்தமாகத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாயினர். காங்கிரஸ் துவக்கிய போராட்டங்களிலே கலந்து கொள்வது தங்கள் கடமை என்று மட்டும் கருதாமல், போராட்டங்களைத் துவக்கும் உரிமையும், அதிலே கலந்து கொள்ளும்படிக் காங்கிரசை அழைக்கும் உரிமையும் தங்களுக்கு உண்டு என்று, கா.சோ.க்கள் கருதினர். இந்தப் போக்கு, காங்கிரசை நடத்திச் செல்லும் பெருந்தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. பலர் முறைத்தனர் - சிலர் ஜாடைமாடையாகப் பேசினர் - சர்தார் படேல், வெளிப்படையாகவே பேசினார்.
*****

நிலைமை இதனால் நெருக்கடியாயிற்று. காங்கிரசின் பெரிய தலைவர்கள், ஜெயபிரகாஷ் நாராயண் முதலியவர்கள் சேர்ந்து கொண்டு, சோஷியலிஸ்டுகள் என்று நாட்டிலே வேலை செய்யட்டுமே, முடிந்தால் செல்வாக்கும் பெறட்டும், எதற்காக அவர்கள், காங்கிரஸ் என்ற லேபிலை உபயோகிப்பது? அந்தச் செல்வாக்குள்ள லேபிலை உபயோகித்துக் கொண்டு, இவர்கள் தங்களுக்குச் செல்வாக்குத் தேடிக் கொண்டார்கள் என்று கேலியாகப் பேசினர். பிறகு காரமாகவே கண்டித்தனர். காங்கிரஸ் சோஷியலிஸ்டுகளுக்கு மனக்கஷ்டம் ஏற்படத்தானே செய்யும். “எவ்வளவு பாடுபட்டோம் பக்தியுடன் - எவ்வளவு பக்குவமாகவும் நடந்து கொண்டோம் - பல சில்லறை அபிப்பிராய பேதங்களைப் பொருட்படுத்தாமல், அடிப்படையில் உள்ள அபிப்பிராய ஒற்றுமையை வலியுறுத்தி வந்தோம் - கூடிவாழ்வதற்காக சகல முயற்சியும் செய்தோம் - நம்மாலான அளவு காங்கிரசுக்கு நாட்டிலே செல்வாக்கு தேடியும் கொடுத்தோம் - தீவிரவாதிகள் ஆகவேண்டுமென்பதற்காகக் காங்கிரசைவிட்டு நீங்கி, வேறு கட்சிகளுக்குப் பலர் போக எண்ணியபோது, காங்கிரசின் சார்பிலே நாம் நின்று தீவிரம் பேசி, சமதர்மத்தை ஆதரித்துப் பேசி, காங்கிரசிலே சமதர்மக் கோட்பாடு இல்லை என்று சொல்ல முடியுமா, சமதர்மத்துக்காகவே காங்கிரசிலே ஒரு தனிப்பிரிவுகூட இருக்கிறதே, அதுதானே கா.சோ.கட்சி என்று வாதாடி, அவர்களை மீண்டும் காங்கிரசில் இருக்கச் செய்தோம் - இவ்வளவு செய்த பிறகு, காங்கிரஸ் என்ற லேபிலை நாம் உபயோகித்துக் கொள்கிறோம். அதனால் செல்வாக்கு ஆடைகிறோம் என்று பெருந்தலைவர்கள் பேசுகின்றனரே. எத்தணைச் சிறுமதி அவர்கட்கு, லேபிலால் நமக்குச் செல்வாக்காம்! நம்மால், லேபிலுக்குச செல்வாக்கு என்று ஏன் கூறமுடியாது, ஒரு குறிப்பிட்ட குழு செய்கிற காரியத்தினால்தான் ஒரு லேபிலுக்குச் செல்வாக்கு ஏற்படுகிறது! செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்த நம்மை, லேபிலின் செல்வாக்கை உபயோகித்தக கொள்கிறோம் என்று குறை கூறுகிறார்கள் - சரி - தங்கள் போக்கின் தவறû அவர்கள் பிறகு உணரட்டும் - நாம் நமது போக்கை இப்போது தெளிவுபடுத்தி விடுவோம் - லேபில் வேண்டாம் - ஆம்! - சரக்கு நாணயமானது, நாட்டுக்குத் தேவையானது, நல்லமுறையில் தயாரிக்கப்பட்டது - ஆகவே இதற்கு மதிப்புத்தானாக வந்தேதீரும் - இதற்கு ஒரு லேபில் தேவை இல்லை! என்று கா.சோ. கட்சி தெரிவித்துவிட்டது - தீர்மானம் நிறைவேற்றி விட்டது. இப்போது சோஷியலிஸ்ட் கட்சி என்பது பெயர், காங்கிரஸ் என்ற லேபில் போய் விட்டது, இந்த லேபிலை இழப்பதற்கு முன்பு, அவர்களுக்கு மனப்போராட்டம்., லேபிலுக்குச் சொந்தக்ôகரர்களாக உள்ளவர்களுக்கும், மனதிலே இப்போது பலவிதமான எண்ணங்கள். இவற்றை எல்லாம்விட, இந்தச் சம்பவம், பொது மக்களிடையே பணியாற்றுபவர்களுக்குப் பல புதிய பிரச்சினைகளை உண்டாக்கி விட்டன. மேடையிலே, பேசப்படாத பிரச்சினைகள் இவை, ஆனால் மேடை ஏறும் ஒவ்வொருவருக்கும் மனதிலே அவ்வப்பொழுது ஏற்படும் பிரச்சினை. மேடை ஏறுபவர்கள் மட்டுமல்ல, மேடை அமைப்பவர்கள், மேடையைக் காப்பவர்கள், ஏன்போருக்கெல்லாம் கூட உண்டாகிவிடுகிறது. இந்த மனப்போராட்டம், பொது ஊழியம் செய்பவர்களுக்கு, அவர்கள் எந்தச் சக்தியை எதிர்த்து வேலை செய்கிறார்களோ, அந்தச் சக்தியின் எதிர்த்தாக்குதலால் உண்டாகும் சங்கடம் - போதாதென்று இது வேறு தொல்லை. மனப்போராட்டம். இதையும் அவர்கள் தாங்கிக் கொண்டாக வேண்டும்.
சரக்கு இல்லாமல் லேபில் இருந்து பயனில்லை - ஆனால், லேபில் இல்லாமல் சரக்கு இருக்கலாம்! இதிலிருந்து விளங்கும் லேபில் முக்கியமல்ல என்பது. காட்டுப்பாதையிலே செல்கிறோம், காற்றில் மிதந்துவரும் கீதத்தைக் கேட்கிறோம் - கீதத்தை யார் பாடுகிறார்கள், குமரியா, குமரனா, குயிலா, வேறு புள்ளினமா, தெரிவதுமில்லை. ஆனால் இசை நம்மை இன்புறச் செய்கிறது. மதறாஸ் ரேடியோ - இப்போது மரகான மணி பாகவதர் சாரங்கா இராக இலாபனம் செய்யப் போகிறார் என்று அறிவிப்பதுபோல, இங்கு யாரும் அறிவிப்பதும் இல்லை, ஆனால், காற்றிலே மிதந்துவரும் கீதம் நம்மை இன்புறச் செய்கிறது. அருமையான மணம், என்கிறோம் சிலசமயம்! மணத்தைப் பரப்பும் பொருள்கூடக் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோலவே, பொது மக்கக்குச் செய்யும் பணி இருக்கிறதே, அது எந்த உருவில் செய்யப்பட்டாலும் செய்பவர் பொதுமக்கள் அறியும்படியாக விளம்பர ஒளிபெற்றாலும் அல்லது இருட்டடிப்புக்கு ஆளானாலும், செய்யப்படும் காரியம் மக்களுக்குத் தேவைப்பட்டால், நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும். இது பொதுவிதி. பல சமயங்களிலே, பொது மக்களுக்குப் பணிபுரிபவர்கள் இந்தப் பொது விதியை மறந்து விடுகிறார்கள். மனக்குழப்பம் ஏற்படுவதற்குக் காரணம் இதுதான். அதுமட்டுமல்ல, மாச்சரியம் உண்டாவதற்குக் காரணமும் அதுதான். மேடையில் ஏறி, நாட்டு மக்களுக்காகப் பல பிரச்சினைகளைப் பேசுபவர்கள் - தங்கள் மனதிலே குடையும் பல பிரச்சினைகளை மறந்தே போவார்கள் என்று எண்ண முடியுமா? அவர்கள் என்ன மரப்பொம்மைகளா? விசை கொடுத்ததும் பேசிவிட்டு, விசை நின்றதும் சிந்தனையுமற்றுப் போக! எவ்வளவோ எண்ணங்கள் தோன்றத்தான் செய்யும், பொது ஊழியர் மனதிலேயும் சரி, அவரை ஒரு அங்கமாகக் கொண்ட கட்சியினர் மனதிலேயும் சரி, இதை அறிய, மேடைப்பேச்சு முடிந்தபிறகு, நடைபெறும், இருவர் மூவர், கூடிப்பேசுவது, வீடு திரும்பும்போது பேசப்படுவது, இவைகளைக் கேட்கவேண்டும், சுவாரஸ்யம், மேடைப்பேச்சிலே இருப்பதைவிட, இநதப் பேச்சுகளிலேதான் மிகமிக அதிகமாக இருக்கும்.

ஒரு ‘வெற்றிகரமான’ கூட்டம்; வெற்றிகரம் - என்பதன் பொருள் என்ன இங்கு? விழுந்த கல் குறைவு மாலை அதிகம் அவ்வளவுதான். வேறொன்றில்லை. அத்தகையை கூட்டத்துக்குப் பிறகு மக்கள், சிறுசிறு பிரிவுகளாகக் கிளம்பினர் வீடுநோக்கி. கூட்டத்தை ஏற்பாடு செய்தக் கட்சித் தோழர்கள், ஒரு சிறு பிரிவு - நாலைந்துபோர் வருகிறார்கள் களிப்புடன். ஒருவர் வெளியூரார் - சொன்னார், “இன்று நம்ம நண்பர் பேசினது, ரொம்பப் பிரமாதம்” என்று. அது உண்மையே. விஷயத்தை விளக்கமாகப் பேச்சாளர் சொன்னார் - பலருக்குப் பல பிரச்சினைகளிலே இருந்து வந்த சந்தேகம் தீரும் விதத்தில் வெளியூர் நண்பர் பாராட்டியதிலே தவறு இல்லை. அதை யாரும் மறுக்கவுமில்லை. கூட்டத்தை முன்னின்று நடத்திய நண்பர்களில் ஒருவர், பளிச்செனப் பேசினார் “ஐம்பா, நல்லா இருக்காது பேச்சு! மகமது இப்ராகீம் கம்பெனி லவுட்ஸ் பீக்கரல்லவா இன்று. வேறே கம்பெனி, மைக்கா இருந்தால், கரகரவென்று இருக்கும் இது புது செட், சத்தம், இநதக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரையில் கேட்டதல்லவா” என்றார், அவர்மீது தவறுமில்லை. அவர் சொன்னதிலும் குற்றமில்லை. ஆனால், இந்தப் பேச்சிலே தொக்கியுள்ள பிரச்சினை - வெளிப்படையாகப் பேசப்படாத பிரச்சினையைக் கூர்ந்து நோக்கவேண்டும். இந்த நண்பரின், மனதின் அடிவாரத்திலே உலவிக் கொண்டிருக்கும் எண்ணம், இந்தப் பேச்சிலே புதைந்திருக்கிறது. என்ன அது? எவ்வளவு ஆழகாகப் பேசக் கூடியவராகக்கூட இருக்கட்டும் - விஷய ஞான விசேஷம்கூட இருக்கட்டும், கூட்டம் வெற்றிகரமாக நடக்கவேண்டுமானால், ஒலி பெருக்கி முதல் தரமானதாக இருக்கவேண்டும் என்பது. இது தவறான கருத்துமல்ல. ஆனால், பேச்சாளரிடம் போய் சகலசிறப்பும் - இன்றைய கூட்டத்தின் வெற்றியின் முழுப் பொறுப்பும், அந்தக் கம்பெனியாரின் ஒலிபெருக்கியால்தான்! என்று சொன்னால் எப்படியிருக்கும். அப்படி யாரும் சொல்லமாட்டார்கள்! ஆனால், ஒலிபெருக்கியின் திறமையின் பலனை மறக்கமாட்டார்கள் - தனியாக - தண்டு துண்டாகக் கூட்டத்தின் பல சிறப்புகளைப்பற்றிப்பேசும்போது இதனைப் பேசிக் கொள்ளாமலுமிருக்கமாட்டார்கள். ஒலிபெருக்கி, கூட்டத்தைச் சிறப்புறச் செய்யும் சாதனந்தான் அது கம்பெனி பீரோவில் இருந்தால் ஒலியுமில்லை, சிறப்புமில்லை, வெறும் “இடமடைத்தானாக”வே இருக்கும். ஒரு கூட்டத்திற்கு நல்ல ஒலிபெருக்கியை அமைத்ததை, கூட்டம் வெற்றியானதற்குள்ள முக்கிய காரணம் என்று பேசும் எண்ணம் அந்த நண்பருக்கு ஏற்படுகிறபோது, கூட்டத்திற்கான மற்றக் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்த மற்றவர்கள் ஒவ்வொருவர் மனதிலும், ஒவ்வோர் எண்ணம் உண்டாகித்தானே தீரும். சகஜம். ஆனால் இவை ஒவ்வொன்றும், கூட்டத்தின் சிறப்புக்குத் துணை செய்தன என்ற போதிலும், இவை ஒவ்வொன்றிலும் தரம் இருக்கிறது - பொதுவாகவே இரண்டாகப் பிரித்துவிடலாம், இன்றியமையாதன - சில - இருந்தால் நல்லது என்ற பிரிவில் சில. இடையூறு விளைவிப்பன - இருந்து பயனற்றன - என்றபடியும் பல உண்டு. ஒலிபெருக்கியின் சிறப்பினால் கூட்டம் முதல்தரமாக அமைந்தது என்று கூறாத பேச்சாளர் கூட, அந்தச் சாதனம் கெட்டுவிட்டிடிருந்தாலோ, குறையுடையதாக இருந்தாலோ, சலித்துக் கொள்ளத் தவறமாட்டார்.
மேடை கலைந்ததும் பேச்சு, ஒலிபெருக்கி பற்றி மட்டும் அல்ல - மளமளவென்று வேறு வேறு பிரச்சினைகளில் சென்று தீரும்.

ஆர்வம் கொந்தளிக்கும் நண்பரொருவர் இன்னொருவரிடம் சொல்வார், “இன்று இதிகாசத்தினால் வரும் இழிவுகளைப் பற்றிப் பேசினாரே எவ்வளவு அருமையாக இருந்தது பார்த்தாயா?” என்று உடனே, பதில் கிடைக்கும், “அதுவா? நான் அவர் மோட்டாரில் போய் உட்கார்ந்த உடனே, அருகே சென்று கவனப்படுத்தினேன், நம்ம ஊரிலே பாரதம் படிக்கிறார்கள், நீங்கள் இன்று பிரசங்கத்திலே அவர்களுக்கு நல்ல சூடு கொடுக்கவேண்டும் என்று சொன்னேன், அதனாலேதான், அவர் இதிகாசங்களைப் பற்றிப் பேசினார்” என்பார்.

வேறொருவர் சொல்வார், ஒரு விஷயம் தெரிந்து கொள்ளப்பா பிரசங்கம் ஜோராக இருக்க வேணுமானா, பேசுகிறபோது ஒரு தடவை சூடாக டீ தரவேண்டும், அப்போதுதான் வெண்கலத்தைத் தட்டுகிகறது போலிருக்கும் சத்தம். எனக்கு அது தெரியும். அதனாலேதான், கூட்டம் ஆரம்பித்த அரைமணி நேரத்திற்கெல்லாம், சூடான டீ கொண்டு வந்து கொடுத்தேன்” என்பார். இதுவும் தவறல்ல. அன்பின் குறிகுறியுங்கூட.

இப்படி ஒரு கூட்டத்தின் வெற்றியைப் பற்றியே இவ்வளவு ‘முனைகள்’ உண்டு. இவ்வளவு முனைகளிலிருந்து பார்த்தும் முழுச் சித்திரம் தெரியாமல், “என்னான்னு சொல்லறது, அந்தப் புள்ளெ வாயிலே இருந்து அந்த வார்த்தைகள்தான், எவ்வளவு அழகழாக ஆடுக்கடுக்காக வருது” என்று கூறி, வைதீகக் கட்சியாக இருந்தால், சரஸ்வதி கடாட்சம் என்று கூறித் திருப்திப்படுபவர்களும் உண்டு. ஒரு கூட்டத்திற்கே பலபேர், தத்தமது மனதிலே பட்டதைக் காரணமாகக் காட்டுகிறார்கள், வெற்றியை விளக்க. அவர்கள் கூறும் காரணங்கள் ஒவ்வொன்றும், தனித்தனியாக வெற்றி தரும் வழி அல்லவென்ற போதிலும், கூட்த்தின் சிறப்புக்கு இவைகளின் ‘கூட்டு’ தான் காரணம் என்று ஏற்படுகிறபோது, ஒரு கட்சியைப்பற்றிய பிரச்சினைக்கு இதைவிட அதிகமான காரணங்கள் காட்டப்படுவது, முறைதானே. பேச்சாளிக்கும் ஒலிபெருக்கிக்கும் இருக்கும் தொடர்பின் முக்கியவத்துவத்தை விடக் கட்சியிலே உள்ளவருக்கும் கட்சிக்கும் உள்ள தொடர்பு முக்கியமானதுதானே, இந்தத் தொடர்புபற்றிய பிரச்சினை, எப்போது வெளிக்கிளம்பும் என்றால் தொடர்பு சரியாக இருக்கும்வரை கிளம்பாது, ஏ;க்காரணத்தாலோ தொடர்பு கெட்டுவிட்டால்தான் வெளிப்படும். ஒலிபெருக்கி சரியாக இருக்கும்வரை, அதனைப்பற்றி அதிகம் பாராட்டாத பேச்சாளி, அது கெட்டுவிட்டிருந்தால், மிக அதிகமாக அதனைப்பற்றிப் பேசுவது போலத்தான் இதுவும். இவ்வளவும், ஒன்றுக்கொன்று ஏடை போட்டுப் பார்த்து, நிறையைக் கண்டு கொள்ளாததால் வருகிற சங்கடம்.

உண்மையிலேயே, காங்கிரஸ் என்ற லேபிலை வைத்துக் கொண்டு ஜெயப்பிரகாஷ் கூட்டத்தார் செல்வாக்குப் பெற்று வருகிறார்கள் என்று பட்டேல் கூட்டத்தார் சொன்னபோது ஜெயப்பிரகாஷ் கூட்டத்தாருக்கு மனம் புண்படாமலிருக்கமா! மனிதர்கள்தானே! லேபிலை வைத்துக் கொண்டு செல்வாக்குப் பெற்றதாக ஜெயப்பிரகாசைக் குறைகூறும் பட்டேல் யார்? அவரும் அதே லேபிலை வைத்துக் கொண்டு செல்வாக்கு பெற்றவர் - பெறுபவர் - தானும் தன் சகாக்களும் மட்டுமே இனியும் பெறவேண்டுமட் என்று எண்ணுபவர். இதை அவர் மறந்தே விடுகிறார், லேபிலை உபயோகித்துக் கொண்டு ஜெயப்பிரகாஷ் கூட்டம் செல்வாக்குத் தேடிக் கொள்கிறது, என்ற சுடுமொழி புகல்கிறபோது, வேடிக்கை அதுமட்டுமல்ல, லேபிலால் செல்வாக்குப் பெறுகிறார் என்று சொல்லும் படேலைத் தனியாகக் கேட்டால் சொல்வார் - லேபிலுக்குச் செல்வாக்கு ஏற்பட்டதே தன்னுடைய செல்வாக்கினாலேதான் என்று “உண்மைதான்! அதே போலவே நானும் ஏன் நண்பர்களும் வேலை செய்ததாலுந்தானே அந்த லேபிலுக்கும் செல்வாக்கு வளர்ந்தது” என்று ஜெயபபிரகாசம் கூறுவாரால்லவா? இரண்டும் உண்மை தானே! காந்தீயத்தின் தளபதி படேல்! காந்தியத்தார் செய்த வேலையின் பயனாகத்தான் காங்கிரஸ் என்ற லேபிலுக்குச் செல்வாக்கு ஏற்பட்டது. அந்தச் சமயத்திலே, ஜெயப்பிரகாஷ் ஜில்லா கலெக்டராக இல்லை! அவரும் அதே வேலை செய்தார். அந்த வேலையுடன் திருப்தி ஆடையாமல் வேறு கட்சிக்ளுக்குச் செல்ல இருந்தவர்களையும் சோஷியலிஸ்டுகள் என்ற பெயரையும் சூட்டிக் கொண்டு, காங்கிரஸ் லேபிலிலேயே இருக்கலாம் என்று கூறி, காங்கிரசுக்கு ஆள்பலம் குறையாதபடியும் பார்த்துக் கொண்டார். என்றாலும், படேல் கூட்டத்தார், லேபிலை உபயோகிக்காதே என்று கூறிவிட்டனர். மனவேதனை இருக்கத்தானே செய்யும், ஜெயப்பிரகாஷ் கூட்டத்தினருக்கு.

“எவ்வளவோ சிரமப்பட்டு, நாம் இந்த லேபிலுக்குச் சொல்வாக்குத் தேடினோம் - இந்த ஜெயப்பிரகாஷ் கூட்டம், நோகாமல் இந்த லேபிலை உபயோகித்துக் கொண்டு தங்களுக்குச் செல்வாக்கு தேடிக் கொள்கிறதே”. இந்த அக்ரமம் ஆகுமா? என்று படேல், பேச, “மனித சுபாவம் எப்படி இருக்கிறது பார் நண்பா! காங்கிரசை விட்டு, வாலிபர்களும் தீவிரவாதிகளும் போய்விடாதபடி தடுத்து, சமதர்மப் பிரசாரத்தின் மூலம், பல புதிய சக்திகளைத் திரட்டி, லேபிலுக்குப் புதிய செல்வாக்குத் தேடித் தந்தேன. என்னைக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்கிக்கொண்டு, இப்போது, படேல் கூட்டம், காங்கிரஸ் என்ற லேபிலை உபயோகிக்கக் கூடாது என்று கூறுகிறது, எவ்வளவு கல்மனம்” என்று ஜெயப்பிரகாஷ் சோகிக்க, இந்நிலைகண்டு, படேலுக்குப்பக்கம் நிற்பவர்கள், “கண்டிப்பாகச் சொல்லிவிடுங்கள்” - சோஷியலிஸ்டுகள், காங்கிரஸ் என்றலேபிலை உபயோகிக்கக் கூடாது என்பதை” என்று தூண்ட, அதேபோது ஜெயபிரகாஷ் பக்கம் உள்ளவர்கள், நாமோ சோஷியலிஸ்டுகள் என்னமோ காங்கிரசிலே, ஒரே அடியாகப் பண மூட்டைகளே சேர்ந்துவிடுமே நாம் இல்லாவிட்டால் என்பதற்காக, அதிலே இருந்து வந்தோம், வேலையும் செய்தோம், செல்வாக்கும் தேடிக் கொடுத்தோம், இப்போது, லேபிலேலே என்னமோ தமக்கு இயுள் உரிமை இருப்பதாகப் படேல் பேசுகிறார், தாராளமாக வைத்துக் கொள்ளட்டுமே. விட்டுத் தொலையும் அந்த லேபிலை” என்றுகூறி கோபமூட்ட இரண்டு கிழமைகளுக்கு முன்பு தலாக் நடந்து விட்டது. வெறும் சோஷியலிஸ்டு கட்சியாகிவிட்டது, முன்போ கா.சோ. கட்சியாக இருந்தது.
*****

பிரிந்த பிறகும், பேச்சு நடந்தபடிதானே இருக்கும். படேல் கூட்டம் “தொலைந்தார்கள். லேபிலை வைத்துக் கொண்டு ஆட்டம் இடிவந்தார்கள். இனி இவர்களை யார் சீந்துவார்கள். மேடை எது? பத்திரிகைகளிலே இடம் எது? கொஞ்ச நாளிலே இருட்டடிப்பில் தள்ளி, இதுகளை இருக்குமிடம் தெரியாமல் தொலைந்து விடலாம்!” என்று பேசும்.
ஜெயப்பிரகாஷ் கூட்டம், “அப்பா! சள்ளை ஒழிந்தது. வீணுக்கு வேலை செய்கிறோமே என்று விசாரம் இனி நம்மை வாட்டாது. என்னமோ, நமது மனதுக்குச் சரி என்று பட்டதை நமது சக்திக்கேற்ற வண்ணம் செய்து கொண்டு போவோம், நமது வேலைத் திட்டம் சரியானதாக இருந்தால் வெற்றி கிடைக்காமற் போகாது. நமது மனதுக்கும் பிடித்தமான வேலைத் திட்டத்தைக் காங்கிரசே தீட்டினால், வந்தனத்தோடு ஏற்றுக் கொள்வோம். ஆனால், நம் உயிர் வாழ்வதும் உலவுவதும், நமது கொள்கைகளுக்குச் செல்வாக்கு ஏற்படுவதும் காங்கிரஸ் என்ற லேபில் இருப்பதால்தான் என்று பழி சொன்னார்களே, அதனையும் தாங்கிக் கொள்கிற தொந்தரவு நீங்கிற்று. மனதிலே இருந்த பாரம் ஒழிந்தது” என்றுதான் பேசுவர்.

நிதானத்தோடு உள்ளவர்கள் இந்த நிலையில் பேசுவர், வேறு சில வகையினரும் உண்டல்லவா, கட்சிகளில்! அவர்கள் உடனே உரத்த குரலிலே பேசுவர். படேல் சார்பில் உள்ளவர்கள் பேசுவர், இதுபோல.

“பீடைகள் ஒழிந்தன” எனக்குத் தெரியுமப்பா முன்பே. இதுகளெல்லாம் எவ்வளவு காலத்துக்கு நிற்கும்”. “இந்த மாதிரியான ஆசாமிகளுக்குச் செல்வாக்குத் தேடிக் கொடுத்ததே தவறு அப்பா. நான் படேலிடம் அப்போதே சொன்úன்ன, கேட்கவில்லை. இவர்களுக்கெல்லாம் மேடை கொடுத்து, செல்வாக்கு கொடுத்துவிட்டார். இதுகள் இப்போது கொக்கரிக்கின்றன”.

இருபிளவுப் பட்டாளத்தாரும் நேரடியாகவே சந்தித்துவிட்டால், பேச்சு, வேடிக்கை கட்டத்தைத் தாண்டி விபரீதக் கூட்டத்துக்குப் போய்விடும். படேல் கூட்டத்தினர் அலட்சியத்தோடு ஆரம்பிப்பார், பேச்சுப் போரை; “எங்கோ கிடந்ததுகளை, இங்கே சேர்த்து வைத்து, வீரனென்றும் தீரனென்றும் புகழ்ந்து மாலை மரியாதை தந்தால் அதுகளுக்கு மண்டைக் கர்வம் பிறந்துவிட்டது” என்று பேசுவார்.

சோஷியலிஸ்டு கட்சியினர் சும்மா இருக்க முடியுமா?

“தம்பீ! கொஞ்சம் நிதானி. எங்கோ கிடந்தவர்களைக் கொண்டு வந்து என்னென்னமோ செய்து தூக்கிவிட்டு விட்டதாகக் கூறினாயே - எங்களை - எங்கள் யோக்கியதை கிடக்கட்டுமய்யா - ஆனால், ஏனய்யா மகா பெரியவர்களாகிய நீங்கள், எங்களைப்போன்ற எங்கோ கிடந்ததுகளைத் தேடினீர்கள்? உங்களை நாடி வேறே யாரும் வராததாலா? அது எதனைக் காட்டுகிறது? உங்களுடைய இடத்தின் மகிமையைத்தானே! போகட்டும், எங்கோ கிடந்த எங்களை வீரனென்றும், தீரனென்றும் புகழ்ந்ததாகக் கூறினீர்களே, அது ஏன்? அந்த நாக்கின் தன்மையை என்னென்பது. எங்கோ கிடப்பவர்களைக் கொண்டு வேலை வாங்கும் உங்களுக்கு, மட்டும் சொந்தத்திலே ஏதேதோ குணம் சொகுசாக இருப்பதாகப் பேசினால் ஊர் சிரிக்கும். மூடய்யா வாயை” என்று பதிலுரைப்பார். கலகம் விலையும்.

இவ்வளவுக்கும் காரணம், நான் முதலிலே குறிப்பிட்டபடி, ஏடைபோட்டுப் பார்க்காததால் வந்த கோளாறுதான்.
*****

கட்சி என்றால் அது ஒருகட்டுக்கோப்பு, அதன் நிர்மாண கர்த்தாக்களே தலைவர்கள் இவர்களில், கட்டுக் கோப்புக்கு அமைப்பு முறை வகுத்துக் கொடுப்பவர், தலைவர்கள் வரிசையிலே இடம் பெறுபவர். இவரையும்விட முக்கியமானவர், இத்தகைய கட்டுக்கோப்புத் தேவை என்பதை மக்கள் உணரும்படியும், ஆர்வத்துடன் அதற்காகப் பணிபுரியும்படியும் செய்தவர்கள், அமைப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் இதிநாட்களிலே பணிபுரிந்தவர்கள். கட்டுக்கோப்பின் தேவையை உணர்ந்த தலைவரே, அதனை அமைத்தார் என்று கூறமுடியாது. அமைத்த தலைவரே பிறகு அதனைக் காப்பாற்றக் கூடும் என்றும் கூறமுடியாது. காப்பாற்றுபவரும், விரிவுபடுத்தக்கூடியவர் என்று கூறிவிட முடியாது. அவ்வப்பொழுது கட்டுக்கோப்பைச் சரிபார்க்க அதனைக் கவர்ச்சிகரமானதாக்க, அதேபோது அதன் தாங்கும் சக்தியை வளர்படுத்த, இவ்வண்ணம் ஏற்படும் பல வேலைகளைச் செய்ய, முற்படுபவர்கள் அனைவருமே ஒருகட்சியின் தலைவர் வரிசையில் உள்ளவர்கள். “இதைச் செய்தவர் இதனைச் செய்ய முடியாதா? பிளான்போட்டுக் கட்டியவருக்குப் பூச்சு வேலை செய்யத்தானா தெரியாது? இவ்வளவு பிரம்மாண்டமான கட்டுக்கோப்பை ஊ;ணடாக்கினவரால், இதற்கு மேலால் என்ன செய்யவேண்டும் என்ற அற்ப விஷயமா தெரியாது” என்று கூற முடியாது. கூறி, கட்டுக்கோப்பை நிலைத்திருக்கச் செய்ய முடியாது.
*****
அலைகடலின் மீது அழகுறச் செல்லும் மரக்கலம் இருக்கிறதே, அதை அமைத்தவன், விஞ்ஞான வித்தகன், பேரறிஞன் - அவனைப் புகழ அவனி மறவாது - ஆனால் அவன் அல்ல மரக்கலத்தைச் செலுத்துபவன் - அவன் வேறு ஆசாமி. கலம் அமைத்தவனால் கடலிலே அதனைச் செலுத்திச் செல்வதுதானா முடியாத காரியம்! என்று எண்ணுவது, பேதமை மட்டுமல்ல, பேராபத்தாகவும் முடியும்! கலம் அமைத்தவருக்கு, உள்ம் கனிந்த நன்றி கூறுவோம், ஆனால் செலுத்துவதற்கு வேறோர் இளைத் தேடுவோம், என்று ஏற்பாடு இருந்ததால்தான், கடற்பிரயாணம் சாத்யமாயிற்று.

கருமேகம் கவிந்து கொண்டிருக்கிறது! கடல் கொந்தளிக்கிறது! புயலும் கிளம்பிவிட்டது! ஆனால் அஞ்சாநெஞ்சனான, கலம் செலுத்துவோன், திக்குகாட்டும் கருவியருகே நின்று, பணியாட்களின் உள்ளத்திலே உரம் எட்டி, கலத்தைச் செலுத்தினான், எந்த சமயத்திலே எங்கு சென்று, சுக்குநூறாகுமோ என்று அஞ்சின மக்கள், கலம் துறைமுகம் வந்தடைந்து கண்டு, கப்பலோட்டியின் காலடியில் வீழ்ந்தனர்.

அவ்வளவுதான் செய்யலாமே தவிர, எப்படிப்பட்ட ஆபத்தான சமயத்தில், எவ்வளவு திறம்படக் கலத்தைச் செலுத்தினவர் இவர், இவருக்கு மோட்டார் ஓட்டுவதா ஒரு பிரமாதம் என்று கருதி, ஆவரிடம் மோட்டார் கொடுத்து அதிலே ஏறிச்செல்வோம் என்று அறிவுள்ளவர்கள், துணியமாட்டார்கள். ஒரு காரியத்தைச் சாதித்ததாலேயே மற்ற ஏக்காரியமும் சாதித்துவிட முடியும் என்று கூறுவது தவறு - ஆபத்தான மனப்போக்கு.

அது மட்டுமல்ல! ஒரு அரும்பெரும் காரியமாற்றுபவரை அவருடைய பிரத்யேக அறிவினால் மட்டுமே சாதிக்கக் கூடிய காரியமாற்றுவதினின்றும் இழுத்து சாமான்யமான காரியத்தைச் செய்யும்படி சொல்வது, பெறுநஷ்டம், கலத்தைச் செலுத்துபவர், ஒரு சமயம், மோட்டாரும் ஓட்டக்கூடும், ஆனால் கலம் செலுத்துவதற்குப் பயன்படும் அவருடைய அறிவை வெறும் மோடடார் ஓடடப் பயன்படுத்துவது, வீண் கஷ்டமல்லவா! ஆகவேதான், யார்யாரைக் கொண்டு, எந்தெந்த சமயத்தில், என்னென்ன விதமான காரியங்களைச் செய்து கொள்வது என்பது, பெரியதோர் காரியம் என்று மேனாட்டினர் கருதுகின்றனர் அவர்கள் அடைந்துள்ள பலவெற்றிகளுக்குக் காரணம் இதுதான். அதனோலேதான், அங்கு, அரசியலில் ஆகட்டும், வேறுபலதறைகளிலாகட்டும், அருமையான கட்டுக்கோப்புக் காண முடிகிறது. இங்கு அந்தச் சுபாவமே கண்டல் அரிது. அந்தச் சுபாவத்துக்கு நேர்மாறான முறையிலே காரியங்கள் நடைபெறக் காணலாம்.
*****

ஆகவே, நிறைபார்ப்பதோடு மட்டும் நின்று விட்டாலும் போதாது - அவ்வப்போது தோன்றுகிற பிரச்சினைகளுக்குத் தக்கவர்களைத் தேடித் தக்கமுறைகளையும் வகுக்கவேண்டும் நிறையும் முறையும் தேவை. இதனைக் கண்டறிந்து, கடமையைச் செய்ய வேண்டியவர்கள் தான், கட்சியின் முதுகெலும்பு போன்றவர்கள், கூட்டத்திற்கு நல்ல ஒலிபெருக்கி அமைப்பது எவ்வளவு முக்கியமென்றுபடுகிறதோ, கூட்ட அமைப்பாளர்களுக்கு, அதுபோல, கட்சியின் கட்டுக்கோப்புக் கலையாதபடியும், அதற்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளைக் கவனித்துக் காரியமாற்றுவதற்கும், தக்கவரை அமைக்கும் பொறுப்பு, கட்சியிலே பெருவாரியாக உள்ளவர்களின் கடமை, கட்டுக்கோப்பைக் காக்கும் பொறுப்புணர்ச்சி அதிகமாகவும், பூஜா உணர்ச்சி குறைவாகவும் இருந்தாலொழிய இந்த மனப்பான்மை கட்சியில் உள்ள பெரும்பாலாருக்கு உண்டாகாது. இந்நிலை உண்டாகாவிட்டால் கட்டுக் கோப்புகள், எப்போது சரியும் என்பது தெரியாதபடி, அடி இடிப்போகும். சிலகட்டுக் கோப்பு கடைசிவரை இருக்கும் - ஆனால் தஞ்சாவூர் அரண்மனையைப்போல! இதனை உணருவதற்கு, இன்னொரு முக்கியமான விஷயம் தெரிய வேண்டும் - தெளிவாக - கட்சி ஒரு கட்டுக்கோப்புதான் - ஆனால், ஏதன்மீது கட்டுக்கோப்பு? ஒருவரின் கைத்திறமையாக இருக்கலாம் - அதற்கு வழிவகுத்தது இன்னொருவரின் சிந்தனைத் திறமையாக இருக்கலாம். ஆனால் கட்டுக்கோப்பு நிற்பது திறமையின் மீதல்ல சில அடிப்படைக் கொள்கைகளி மீது! இதனைத் தெளிவாக்கிக் கொண்டால், கட்சி முக்கியமா, கொள்கை முக்கியமா என்பது ஏற்பட்டு விடும் இதுவரையில் தெளிவாகாதது இது. தனிப்பட்ட ஒரு ஆள் எவ்வளவுதான் அறிஞராக இருந்தாலும், வீரராக இருந்தாலும் கட்சி பெரிதே தவிர, தனிப்பட்ட ஆள் பெரிதல்ல; கட்சிதான் எனமக்கு முக்கியம். அதற்கே எமது மரியாதை, அதனால்தான், கட்சியிலே பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக இருந்தவர்களுக்கு நாங்கள் மரியாதை காட்டினோம், அவர்கள் கட்சியைப் புறக்ணித்தால், நாங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுவோம் - என்று பேசக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது கட்சிப்பற்றுத் தெளிவாக இருக்கிறது. இது நல்லது. ஆனால், போதாது. எப்படி, தனிப்பட்ட இளைவிடக் கட்சி பெரிது என்பது உண்மையோ, அதேபோல, அதைவிட அதிகமான முக்கியத்துவம்ட வாய்ந்த வேறோர் உண்மையும் உண்டு; அது என்னவெனில் கட்சிûவிடக் கொள்கையே முக்கியம் கட்சி, கொள்கையை மறந்தோ, அல்லது நடைமுறைக்கு அதனைக் கொண்டுவராமலோ, கொ:டு வருவதற்கான விதமாக இராமல் குன்றியோ கிடக்ககுமானால், அந்தக் குறையை நீக்க முயற்சி எடுக்க வழி வகையும் இல்லையானால், அப்போது, கட்சியைவிடக் கொள்கைதான் மேல்! கட்சியைவிட்டு விட்டாகிலும் கொள்கையைக் கைப்பிடிக்க வேண்டும். கொள்கை முக்கியúயொழியக் கட்சியல்ல” என்று கூறும் நெஞ்சு உரம் ஏற்பட்டாக வேண்டும். அது வளர்ச்சிக்கு வழி. பிற முறைகள், வழிபாட்டு முறை! பலனளிக்காது.

கட்சியின் முதுகெலும்பு போன்றுள்ள பெரும் பான்மையினரின் போக்கைப் பொறுத்தே, கட்டுக்கோப்பும் கொள்கையும் இருக்கிறது. கட்டுக் கோப்பு ஆழகாகவும், உள்ளே உள்ள கொள்கை கலகலத்தும் போய் விட்டால், போவதைக் கண்டும்ட, கட்டுக்கோப்பு ஆழகாக இருப்பதைக் கண்டு களித்தால், பலனில்லை. இன்றைய காங்கிரசில் நிலை அழகிய கட்டுக்கோப்புடன் விளங்குகிறது - கொள்கையோ கலகலத்துப்போய்விட்டது.
*****

இந்தக் கலகலப்புக்குக் காரணம் பூஜா மனோபாவமும், கட்சியே பெரிது என்ற போக்குந்தான். தனிப்பட்டவர்களை விடக் கட்சி பெரிது. கட்சியைவிடக் கொள்கை பெரிது. அந்தக் கொள்கையை வலியுறுத்துபவர், கட்சியில் வெளியே நிற்பவரானாலும், விளம்பர வெளிச்சத்திலே இல்லாமற் போனாலும், கட்சிக்குள்ளே எப்படியாவது இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்களைவிட நிச்சயமாக மேல். ஆதி முக்கியமானது இதிலே கொள்கை.

இந்தக் கொள்கைக்கும் கட்சிக் கட்டுக்கோப்புக்கும் நெருங்கிய உறவு இருக்கும் வரைதான், இடம் வளமாகவும், பயிர் செழிப்பாகவும் இரக்க முடியும். இதனைச் செய்ய வேண்டியவர்கள் கட்சியிலே உள்ள பெரும்பான்மையினர். அவர்களுக்கு நிறைபோடும் திறமையும், முறைகாணும் மனப்பான்மையும் இருக்கவேண்டும். அதை வளரச் செய்ய வேண்டுமானால், பொது மக்களிடை பணிபுரிபவருக்கு, பொதுப் பிரச்சினைகளிலே இருக்கும் தெளிவுபோலவே, பொது வாழ்வு என்பதும் எத்தகையது, என்பதிலே தெளிவு இருக்கவேண்டுமட். அது இன்று இருப்பதாகக் கூறிவிட முடியாது.
*****

பொது வாழ்வு, பொன் காய்க்கும் இடமுமல்ல, புன்னகைப் பூந்தோட்டமுமல்ல - அதுபோலவே அது பாலைவனமுமல்ல!

ஏற்றப்படாத விளக்கு உள்ள இடம்! அதற்கு எண்ணெயும் திரியும் தேடியாக வேண்டும். பக்குவமாக ஏற்றி, அது படர்ந்து போகாதபடி பார்த்துக்கொண்டால் தான், ஒளி கிடைக்கும். ஒளி முன் நிற்கும்போது களிப்புதான் - ஆனால் அந்த ஒளியினால் மயங்காது இருக்கும் மனப்பான்மை இருந்தால் மட்டுமே, பொது வாழ்விலேயும் தூய்மை இருக்க முடியும், அதிலுள்ளவர்களுக்கும் மனமுறிவு ஏற்படாமலிருக்கும், பொது வாழ்விலே, “அவன் மகாவீரன்” என்று புகழுரை கேட்கும் - அதே சமயம், “கிடக்கிறான் மடையன்” என்று வேறோர் கும்பல் கூறிக்கொண்டிருப்பதை மறந்துவிட்டால மனமயக்கம் அதிகமாகும். அதிகமானால், புகழுரையைக் கேட்டாலொழியத் திருப்தி ஏற்படாது, அந்தப் புகழுரையைக் கேட்பதற்காக, என்ன வேண்டுமானாலும் செய்து, இடம்பிடிக்க வேண்டும் - பிடித்த இடத்தை இழக்காமல் இருக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். பிறகோ, பொதுவாழ்விலே உள்ள வெளிச்சம் இருக்கிறதே அதனுடைய ஆதிக்க கர்த்தாக்களின் தயவுக்காகவே வாழ வேண்டிய நிலை ஏற்படும் ஆபின்தின்று பழகவிட்டபிறகு அது கிடைக்காவிட்டால், ஆபின் தருபவன் செய்யச் சொல்லும் காரியம் அத்தனைûயுயம் செய்வர் என்கிறார்களே! பொது வாழ்விலே உள்ள, இந்த வெளிச்சம் மயக்க மூட்டும் ஒளி - இதனால் மகிழவே கூடாது என்பதல்ல - அது முடியாத காரியம் - இதனால் மயக்கமடைந்துவிடக் கூடாது. அந்த மயக்கம் வராமலிருக்கத்தான், புகழுரை கேட்கும்போது தூற்றுபவர் உள்ளனர் என்பதை மறாவமலிருக்க வேண்டும். அது மட்டும் போதாது புகழ்பவர்களில் பலர், இதற்கு முன்பு நம்மைப் புகழ்ந்ததில்லை என்பதையும, இதற்கு முன்பு அவர்களே வேறு பலரைப் புகழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் மறக்கக் கூடாது. அதுவும் போதாது. புகழ்பவர்களே, பிறகு ஆகழ்வர் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான், மனமயக்கம் ஏற்படாது.
*****

“இவர் படிப்புக்கும், திறமைக்கும், இவர் மட்டும் வேறோர் கட்சியிலே இருந்தால் எத்தனை நூறு பத்திரிகைகளிலே இவருடைய படம் வெளியாகி இருக்கும் - எவ்வளவு புகழ் கிடைத்திருக்கும் - எத்தனை பெரிய பதவிகள் கிடைத்திருக்கும் - பணத்திலே, சுகத்திலே புரளலாம்; இவைகளை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு நமக்காக, நமது மக்களுக்காக, இவ்வளவு பாடுபடுகிறார்” என்று புகழ்கிறார்களே, நண்பர்கள், அவர்கள் பிறகு ஏதேனும் மாறுமாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து பிரிந்து, ஆனால் கொள்கையைக் கைகழுவி விடாமல் இருந்தாலும், அதே புகழ் வழங்கினவர்கள்.
“கிடக்கிறான் தள்ளய்யா.
போகிறான் போ.
ஒழிந்தான் பயல்.
இவனால் என்ன ஆகும்?
தள்ளு குப்பையிலே?”
என்று பேசுவார்கள்.

இதனைப் புகழுரைக் கேட்கும்போதே நினைத்துக் கொள்வதுதான், மயக்கத்துக்கு மாற்று மருந்து.
அது மட்டுங்கூடப் போதாது. அந்த இருவித ஊரைகளும், அர்த்தமற்றன என்பதையும் உணரவேண்டுமட. அதுவும் போதாது! அந்த ஊரைகள், முறையே வழங்குபவரின் சந்தோஷம், சங்கடம், இவற்றைத் தெரிவித்துக் கொள்வதேயன்றி, நமக்காக அல்ல என்பதையும் அறியவேண்டும். புகழுரையால் மயங்காதிருக்கக் கற்றுக் கொண்டால், பொல்லாங்கும் நம்மை மாய்க்காது. புகழுரை பொழியப்படும் அதே நேரத்தில், வேறோர் பக்கம் பொல்லாங்கு பேசுவோரும் இருக்கத்தானே செய்கிறார்கள். அந்தப் பொல்லாங்குக்குத் தப்பிப் பிழைத்துத்தானே, நண்பர்கள் வழங்கும் நல்லுரையைப் பெற்றோம்! வேடிக்கை இதுகூட அல்ல! ஒரு சாரார் அதிகமாகப் புகழ்கிறார்கள் என்ற காரணத்துக்காகவே, வேறோர் சாரார், அதிகமாகத் தூற்றுவர். ஆக இந்தப் புகழுரையே, வேறோர் இடத்திலிருந்து தூற்றலை வாங்கித் தரும் வழியாகவும் அமைந்தும் விடுகிறது. எதுகை மோனை நயத்துடன் புகழுரை கூறுபவர்களின் சத்தம் அதிகமாகவாக, அதே நயத்துடன் எதிர்ப்புரைச் சத்தமும்கூடவே ஓங்கி வளர்ந்து வரும்! ஒன்றுக்கொன்று ஊழியன்!! பெரிய உற்சாக ஊர்வலங்கள் நடைபெறும்போது மூலைக் கடைகளிலே நின்று உரையாடுபவரைக் கேட்டால், இது புரிந்துவிடும்.

“ஆடுக்க மொழி வீரன் - அஞ்சா நெஞ்சன்... வாழ்க!”

இப்படி வாழ்த்தொலி இருக்கும் - சத்தம் வளரும் - இடத்திற்குத் தக்கவண்ணம்.

மூலைக்கடையில், ஒருவர் முறைத்தபடி நிற்பர். வேறு ஒருவர் விஷயமறியாதவர், அவரைக் கேட்பார், “என்னங்க சத்தம்? ஏன்? யாரு இவரு?” என்று.

“ஆவனெவனோ ஒரு மடப்பய. அவனைப் பிரமாதப்படுத்துதுங்க” என்பார். அந்த நேரத்தில் ஊர்வலத்தில் உரத்த குரலில் வாழ்த்தொலி கூறினவர் சோடா சாப்பிடக் கடைக்குப் போனார் என்று வைத்துக் கொள்ளுங்கள் - பிறகு - என்ன நடக்கும் - மாஜிஸ்ட்ரேட் கோர்ட்தான்! இந்தப் புகழ் - இன்னொரு பக்கமிருந்து ஆகழைப் பெற்றுத் தரும் சாதனம் - அதுவும் நிரந்தரமல்ல - ஆனால் அதிலே உள்ள மயக்க சக்தியோ ஆபாரம்!

அறிஞனாகப் புகழப்படுகிற நேரத்தில், அறிவிலி என்று தூற்றப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறோம் தன்னலமற்றுப் பணிபுரிகிறான் என்று புகழப்படும்ட நேரத்தில், வேறோர்சாரார், சுயநலக்காரன் என்று ஐசியபடியேதான் உள்ளனர்.
*****

அந்தப் புகழுரையால் இலாபம் கிடைக்குமானால், பிறகு அது இல்லாமற் போகும்போது நஷ்டம் நிச்சயம். அந்த நஷ்டத்தை அடையச் சம்மதம் வராதல்லவா? ஆகவே, சிலருக்கு ஒளி கிடைத்தே தீரவேண்டும். ஆகவே, புகழால் மயக்கமடையாதது மட்டுமல்ல. அதனால் இலாபமும் பெறாமல் இருந்துவிட்டால், பொது வாழ்வு, நமக்கு மனமுறிவு தரவே முடியாது.

இந்த முனமுறிவுக்குப் பயந்து, மனதை மரக்கடித்துக் கொண்டவர்கள் அநேகர். மிகச் சிலரே, இதிலிருந்து தப்புவர், அவர்கள், பொது வாழ்வின் தன்மையை நன்கு தெளிவுபடுத்திக் கொண்டவர்கள் “நான் கொடுப்பவன் - வாங்கினவரன் அல்ல!” என்று நெஞ்சாரக் கூறும் போக்கினன். பொது வாழ்விலே, புகழுரை கேட்டபோது, நாம் சில விஷயம் பேசினோம் - சிலர் விஷயம் பேசுவதற்குப் பதிலாக ஆசைமொழி பேசினர் என்ற அளவிலே புகழுரைகளைக் கேட்டவன். சித்தத்தைப் பறிகொடுக்காதவன். வெளிச்சத்துக்காகப் பொது வாழ்வு தேடுவதானால்தான், நிச்சயமாக பெரிய கட்டுக்கோப்புள்ள கட்சியினரிடம் தஞ்சம் புகுந்தாக வேண்டும் - அதுவே மயக்கமூட்டும், ஆபத்துமாகும். அந்தச் சந்தர்ப்பமும் கிடைக்கப் பெறாமல் கட்டுக்கோப்புச் சிறியதாகவும் ஒளி குறைவாகுவும் உள்ள கட்சியிலே இருக்க நேரிட்டால், வெளிச்சமடிக்கும் இடத்துக்கு அருகே இருக்கவே முயல நேரிடும், முழு நேரமும், சக்தியும் அதற்கே பலியாகும். அது மட்டுமல்ல, அந்த வெளிச்சத்தருகே வேறு உருவம் நடமாடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டிய வேலையும் வந்து சேரும் - இந்த வேலையில் உடுபடு உடுபட, வெள்சிசம் தரும்சாதனமே படர்ந்துபோய், சகலமும் இருள்சூழ்ந்து விடும்.
*****

பொது வாழ்வு, ஒரு கட்டுக்கோப்புக்குள்ளே மட்டுந்தான் இருக்க முடியும் என்பதல்ல உண்மை. பொது வாழ்வில் இருக்கக்கூடியவர்கள், இருக்கத் திறமும் வசதியும் பெற்றவர்கள், அந்த மனப்போக்குள்ளவர்கள் அனைவரையும், கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்து சேர்ப்பது கட்டுக் கோப்புக்கும், கட்சிக்கும், கடமை - அதாவது கட்சியின் பெரும்பான்மையினரின் கடமை. பொது வாழ்விலுள்ளவர்கள் இதனை அறிந்தால், இடந்தேடும் போக்குக் குறையும். இடம் போய்விடுமோ என்ற அச்சம் ஒழியும்.

உழைப்பவனைத் தேடிப் பிடித்தால்தான் உன்னதமான கட்டுக்கோப்பு உண்டு - கிடைப்பவனைக் கொண்டு நடத்தும் போக்கு, பலனளிக்காது.

அதுபோலவே, பொது வாழ்வுக்கு ஏதேனும் ஒரு கட்டுக்கோப்பு இருந்தாக வேண்டும், எனவே, இடத்தைப் பிடித்தாக வேண்டும் இடையூறு இரப்பினும் என்ற மனப்போக்கு, பொதுவாழ்வினருக்கு மாறவேண்டும். அப்போதுதான், கட்டுக்கோப்புக்குள் சென்றுவிட்டு, ஒளியால் மயங்கி, பலியாகும் கொடுமை நிற்கும் - உண்மையான காரியம் நடைபெற முடியம்.

பொதுவாழ்வை எங்ஙனம் தெளிவுப்படுத்திக் கொண்டவர்கள், இடம் இல்லை என்றோ, ஒளி இராதே என்றோ, கவலை கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படாது.

தோட்ட வேலைக்காரன், கிடைத்த தோட்டத்திலே, ஏட்டியே பயிரிட வேண்டுமென்று உரிமையாளர் சொன்னால் என்ன செய்வது இதைவிட்டால் வேலை எது என்று கருதுகிறது போலல்ல பொது வாழ்வு! இதனைப் பொது வாழ்விலுள்ளவர்கள் எண்ணாததாலேயே, அந்தத் துறை மிகக் கோரமான அடிமை ஸ்தாபனமாகி விட்டது.
*****

ஓராண்டுக்கு முன்பு, பெரியார், சென்னையில் பேசிக் கொண்டிருக்கையில், நண்பரொருவர் ஒரு கேள்வித்தாள் கொடுத்தார். தோழர் சௌந்தரபாண்டியன், சுயமரியாதைச் சங்கத்தை ரிஜிஸ்தர் செய்த சமயம் அது. கேள்வி அதைப் பற்றியதே. ரிஜிஸ்டர் சுயமரியாதைச் சங்கத்தில் சேருவதா ரிஜிஸ்டராகாததில் சேருவதா என்பது கேள்வி. மின்வெட்டெனப் பதில் கொடுத்தார் பெரியார் “இஷ்டப்பட்டதில்”! என்று. மேலும், ஓர் நல்ல விளக்கம் கொடுத்தார். “எதிலே சேர்ந்தாலும் உண்மையான சுயமரியாதைப் பற்றுக் கொண்டவர்கள் காரிய மாற்றமுடியும் சுயமரியாதைக்காகப் பாடுபடமுடியும். இன்னமும் சொல்கிறேன். ஒருவர் சுயமரியாதைக்காரராக இருக்க வேண்டுமானால், காரியமாற்ற வேண்டுமானால் ஒரு கட்சியில் இருந்தேதான் தீரவேண்டும என்பதில்லை. கட்சி எதிலேயும் இல்லாமலும் சுயமரியாதைக்காரனாக வேலை செய்ய முடியும்”.
இது வெறும் பதில் அல்ல. பொது வாழ்வு என்ற பிரச்சினûயின் திறவுகோல்! கொள்கையை மனதார நம்பி, அதை மக்களிடம் பரப்பவேண்டும் என்று விரும்பி, கொள்கைக்கேற்றபடி வேலை நடத்த விரும்பினால் ஒரு கட்சியின் கட்டுக்கோப்புக்குள் இருந்தே ஆகவேண்டும் என்பதில்லை. லேபில் வேண்டாம் - சரக்கு இருக்கும்வரை! - என்பது தோழர் ஜெயப்பிரகாசருக்கும் அவர் நண்பர்கட்கும் புரிந்துவிட்டது. எனவேதான் அவர்கள் லேபிலை விட்டுவிட்டார்கள்.
*****

இது உண்மையான ‘தலா’க் அல்லவா, என்பது வேறு பிரச்சினை, போலியாகக் கூட இருக்கக்கூடும். நாம் இங்கு இதனை ஆலசினதற்குக் காரணம், பொது வாழ்வின் தன்மையை விளங்கிக் கொள்ளாத எவருக்கும் இத்தகைய மனப்போர் வந்து தீரும் - பாதிப்போருக்கு மேல் தவறியே விடுவர் - என்பதை விளக்கப் பொதுவாகவே, பொது வாழ்விலே காணப்படும் பல சிச்கல்களை எடுத்து எழுதினோம்.

கட்சிக்குள்ள லேபிலைவிட, கொள்கையே முக்கியம் என்ற தத்துவத்தின்படியேதான், தியாகி தியாகராயர், டாக்டர் நாயர் ஆகியோர் சூட்டிய ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரையும் மாற்றி, புதிய பெயரிட்டோம், சேலத்தில். கட்சியின் லேபில் அல்ல, கொள்கைதான் முக்கியம் ஏன்றோம். அவர்கள் குறித்திருந்த தராசுக் கொடியையும் நீக்கினோம். இச்செயல், கொள்கை பெரிது, கட்சியைவிட என்கிற தத்துவத்தின்படிதான் செய்யப்பட்டது. அப்போதும், இந்த லேபில் சண்டை வரத்தான் செய்தது. ஜஸ்டிஸ் என்ற லேபிலை மாற்றும் உரிமை நமக்கு இல்லை என்று சிலர் வாதாடினர். நாம், லேபில் அல்ல முக்கியம், கொள்கைதான் முக்கியம் ஏன்றோம்.

(திராவிடநாடு - 30.3.47)