அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இலட்சிய வீரர்களுக்கு இரண்டு வாரம்!

‘சுயராஜ்ய’ சர்க்கார் பரிசு
கருப்புக்கொடி நாள் எதிரொலி
காராக்கிரகத்தில் கழகக் காளைகள்

குன்றத்தூர் கொடுமையின் போது, மக்களைச் சுட்டதுமின்றி கையில் சிக்கிய கழகத் தோழர்களையெல்லாம் அடித்து, கைது செய்து இழுத்துச் சென்றிருக்கின்றனர். அப்படி கைது செய்யப்பட்ட தோழர்களில் பலரை மறுநாள் விலங்கிட்டு வீதி வழியே கொண்டு சென்றனராம். ஒரு நாட்டின் விடுதலைப் பட்டாளத்து வீரர்கள் கையிலே விலங்கு! சாதாரண கிரிமினல் கைதிகளைவிட மோசமாக நடத்தியிருக்கிறார்கள். தாங்கமுடியாத கொடுமை! சகிக்க இயலாத காட்சி! பொறுக்கமுடியாத சம்பவம்!

சென்னைக்கு ஆச்சாரியார் வந்தபோது கருப்புக்கொடி காட்டச் சென்ற பல்லாயிரக் கணக்கான கழக வீரர்களில் கையில் கிடைத்தோரையெல்லாம் காங்கிரஸ் சர்க்கார் பிடித்துக்கொண்டு போய் சிறையில் போட்டது.

அப்படிப் பிடித்து இழுத்துச் செல்லப்பட்டோரில், வழியே சென்ற பொதுமக்களில் சிலரும் இருந்தனர். அவர்களில் பலர் அப்போதே விடுவிக்கப்பட்டு, சிலர் மட்டும் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

காங்கிரஸ் சர்க்காரால் கைது செய்யப்பட்டு கொண்டுபோய் 24.10.50 முதல் காவலில் வைக்கப்பட்டிருந்த 34 தோழர்களின் வழக்கு விசாரணை 6.11.50 அன்றும் 7.11.50 அன்றும் நடைபெற்றது.

முதல்நாள் விசாரணை
25.10.50 அன்று, குறிப்பிட்டபடி சென்னை மூன்றாவது மாகாண மாஜிஸ்டிரேட், கீழ்க்கண்ட தோழர்களின் வழக்கை 6.11.50 அன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

இன்றைய விசாரணையில் தோழர்கள் ஜி.எஸ்.சம்பந்தம், பா.தங்கலிங்கம், கே.ஜயராம், டி.மகாதேவன், எம்.சிவலிங்கம், பி.வடிவேலு,கே.ராஜு, ஆர்.வாசுதேவன், பி.சுந்தரம், எஸ்.பி.அழகரசு, கே.வி.கே.சாமி, சாந்தமூர்த்தி ஆகிய பன்னிரண்டு தோழர்களின் வழக்கு முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கூட்டமாக கூடி நின்று ஆர்ப்பாட்டம் செய்ததாக மேற்படி தோழர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதை மறுத்து தாங்கள் கருப்புக்கொடி காட்டச் சென்றது உண்மைதானென்றும், ஆனால் பொதுஜன இடையூறு ஏற்படும் வகையில் நடந்துகொள்ளவில்லை யென்றும் நமது தோழர்கள் சார்பில் எஸ்.பி.அழகரசு கூறினார். தங்களையெல்லாம் தனித்தனியாகப் போலீசார் பிடித்தார்களே யொழிய, பன்னிரண்டு பேரையும் ஒரே இடத்தில் பிடிக்கவில்லை யென்றும் அப்படியிருக்கையில் தாங்கள் கூட்டமாகக் கூடி நின்று போக்குவரத்துக்கு இடைஞ்சலூட்டியதாகக் கூறுவது எப்படி உண்மையாயிருக்க முடியும் என்றும் அவர் கேட்டார்.

மாஜி: நீங்கள் 12 பேரும் ஒரே இடத்தில் இல்லையா?

ப: இல்லை! தனித்தனியாக நாங்கள் போயிருந்தோம். ஒவ்வொருவரையும் பிடித்து லாரிகளில் ஏற்றினார்கள். எங்களைக் கைது செய்தது. இதோ நிற்கும் சப்இன்ஸ்பெக்டர் அல்ல. அசிஸ்டென்ட் கமிஷனரும் இன்னும் வேறு சிலருமே எங்களைக் கைது செய்தார்கள்.

மாஜிஸ்டிரேட், சர்க்கார் சார்பில் வந்திருந்த சப்இன்ஸ்பெக்டர் பக்கம் திரும்பி, “மொத்தமாக ஒரே இடத்திலா இவர்களைக் கைது செய்தீர்கள்?” என்று கேட்டார்.

அவரும் ‘ஆமாம்’ என்று கூறவே, மேலும் தொடர்ந்து மாஜிஸ்டிரேட் நமது தோழர்களைக் கேட்டதாவது.

மாஜி: நீங்கள், போக்குவரத்துக்கு தடங்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. இனிமேல் அப்படி செய்யாமலிருக்கிறீர்களா?

பதில்: இல்லை! நாங்கள் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளவில்லை. கருப்புக்கொடி காண்பிக்கவே போனோம். அதைக் காட்டக் கூடவில்லை! பகல் 3 மணிக்கே எங்களை, ஒவ்வொருவராக, நாங்கள் போய்க்கொண்டிருந்த போது பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள்.

மா:- கருப்புக்கொடி பிடிக்க் அன்று எவ்வளவு பேர் வந்திருந்தார்கள்!


ப: ஏராளமாக வந்திருந்தார்கள்!

மா: அப்படியானால் அது போக்குவரத்துக்கு இடைஞ்சல் விளைவித்ததாகத்தானே அர்த்தம்?

ப: அதெப்படி? நாங்கள் அப்படிச் செய்யவில்லையே!

மா: நீங்கள் சொல்வதற்கு ஆதாரமாக சாட்சிகள் உண்டா?

ப: சாட்சிகள் இல்லை. நாங்கள் வாதாடவும் விரும்பவில்லை. ஆனால் நாங்கள் கருப்புக்கொடி காட்டப் போனோம் போக்குவரத்துக்கு இடையூறு வருமாறு நாங்கள் நடந்து கொள்ளவில்லை.

மா: சரி. இது முதல் தடவையாக இருப்பதால் உங்களை மன்னித்துவிட்டு விடுகிறேன். இனிமேல் இப்படியெல்லாம் செய்யாமலிருக்கிறீர்களா?

ப: கருப்புக்கொடி காட்ட வேண்டும் என்பது எங்கள் கழகத்து முடிவு. அதையொட்டியே நாங்கள் கருப்புக்கொடி காட்டச் சென்றோம். பிறருக்கு இடைஞ்சலில்லாமல், அமைதியாக எங்களது அதிருப்தியைக் காட்டிக் கொள்ளவே கருப்புக்கொடி பிடிப்பதென எங்கள் கழகம் முடிவு செய்திருக்கிறது. வடநாட்டு மந்திரி, யார் வந்தாலும் நாங்கள் கருப்புக்கொடி பிடிப்போம்! அமைதியான முறையில் நாங்கள் கருப்புக்கொடி பிடிப்போம்!!

மாஜி: இந்தியாவில் எல்லோரும் ஒன்றுதானே! இதென்ன, வடநாடு-தென்னாடு? இப்படியெல்லாம் யார் உங்களுக்குச் சொல்லித்தருகிறார்கள்?

பதில்: திராவிட முன்னேற்றக் கழகம்! எங்கள் சொந்தக் கழகம்!!

மேற்படி பதிலைக்கேட்டதும், மாஜிஸ்டிரேட் தலா ஒவ்வொருவருக்கும் இரண்டுவாரம் சிறைவாசத்தண்டனை அளித்திருப்பதாகத் தீர்ப்புக் கூறினார்.

‘மிகவும் அதிர்ச்சி, வணக்கம்’ என்று பணிவோடு சிறைத்தண்டனையை ஏற்று கழக வீரர்களான எட்டுபேரும் சென்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட பன்னிரண்டு தோழர்களில் நால்வர், தாங்கள் ரோட்டில் சென்று கொண்டிருந்தாகவும் தாங்கள் கருப்புக்கொடி காட்டப்போகவில்லையென்றும் இருந்தும் தங்களைப் போலீசார் பிடித்துச் சென்றதாகவும் கோர்ட்டில் தெரிவித்துக்கொள்ளவே, அவர்களை மாஜிஸ்ரேட் விடுதலை செய்தார்.

அடுத்த ‘படை!’
அடுத்து, தோழர்கள் காஞ்சி கே.டி.எஸ். மணி, வி.பரமசிவம், கே.வடமலை, கே.பி.கணபதி, எம்.ராதாகிருஷ்ணன், அப்துல்லா, ஆர்.டி.சாமி, பி.லோகநாதன், ஜி.கன்னியப்பன், பி.கே.கபாலி ஆகிய பத்துத் தோழர்களின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்குத் துவக்கத்திலேயே ஒருவர், தான் ராயப்பேட்டை வழியே வழக்கம் போல சென்று கொண்டிருந்ததாகவும், அது போது தன்னை போலீசார் பிடித்துச் சென்று விட்டதாகவும், தான் கருப்புக்கொடி பிடிக்கச் செல்லவில்லை என்றும் கூறிக்கொண்டார்.

மேற்படி தோழர்கள் பத்துபேரும் ராயப்பேட்டை ஐரோடும் லஸ் ரோடும் சந்திக்குமிடத்தில் நின்றுகொண்டு ஆபாசமான வார்த்தைகள் மூலம் ஒழுங்கீனமான நடந்துகொண்டதோடு, கற்களை வீசியதாகவும் கருப்புக்கொடிகளை வீசி கூட்டங் கூட்டமுயன்று கொண்டிருந்ததாகவும் சர்க்கார் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சாட்சியமளித்தார்.

மாஜி: எப்பொழுது இவர்கள் மேற்கண்டவாறெல்லாம் செய்தார்கள்.

எஸ்.ஐ: ராசகோபாலாச்சாரியார் இங்க வந்தபோது.

மாஜி: எங்கே?

எஸ்.ஐ: இந்திய அதிகாரிகள் சங்கத்துக்கு அவர் வந்தபோது.

என்று கூறிவிட்டு, தாம்தான் அவர்களைக் கைது செய்ததாகவும், அவர்கள் வைத்திருந்த கருப்புக் கொடிகளைத் தாம் கைப்பற்றியதாகவும் சொல்லியதோடு, ‘இதோ இருக்கின்றன’ என்று சுமார் 20 கருப்புக்கொடிகளைக் காட்டினார்.

கருப்புக் காகிதத்தில், ஒவ்வொரு குச்சியில் வைத்து ஒட்டப்பட்டவையாகப் போலீசார் சமர்ப்பித்த கருப்புக் கொடிகள் இருந்தன.

அதைக்கண்டதும் தொண்டர்கள் எல்லோரும் ‘குபீர்’ என்று சிரித்தனர்! (காரணம் தொண்டர்களுக்குக் கருப்புத் துணிகள் கைகுட்டை அளவுக்கு) வழங்கப்பட்டிருந்ததே தவிர, காட்டப்பட்டது போல அல்ல.

மேலும் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் கூறுகையில்:-
இவர்களை நகரப்போலீஸ் சட்டம் 75-வது பிரிவின் கீழ் கைது செய்தேன். இவர்கள் யாவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள்” என்றார்.

பின், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கழகவீரர்கள் சார்பில் காஞ்சிபுரம் ஜுபிடர் ஜஸ்பாக்டரி உரிமையாளரான கே.டி.எஸ். மணி சப்இன்ஸ்பெக்டரைக் குறுக்கு விசாரணை செய்தார்.

மணி:- 24ந் தேதி நாங்கள் கருப்புக்கொடி காட்டும் போது கைது செய்தீர்களா? அல்லது கலாட்டா செய்து கொண்டிருந்த போதா?

சப் இன்ஸ்பெக்டர்:- கலாட்டா செய்தபோது.

கே எங்கள் எல்லோரையும் ஒரே சமயத்திலா?

ப:- ஆம்.

பிறகு, மாஜிஸ்டிரேட்டை நோக்கி தோழர் மணி சொன்னதாவது. “எங்கள் பத்து பேரையும் ஒரே இடத்தில் கைது செய்ததாக, சொல்லப்படுகிறது. நாங்கள் பத்துப்பேரும் ஒரே இடத்தில் இருந்தவர்களல்ல. நான் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவன். நானும் வி.பரமசிவமும், அழகரகவும் ஆக மூன்று பேருமே ஒரு இடத்திலிருந்தோம். மூன்று பேரையும் சேர்த்தே, அதிகாரிகள் கைது செய்தனர். ஆனால் அழகரசு எங்களோடு சேர்க்கப்படவில்லை. இதிலேயே தெரியும் கண்ணில் கண்டோரை யெல்லாம் கைது செய்ததோடு, பிறகே எங்கள் மீது இத்தகைய குற்றச்சாட்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பது!”

மாஜி:- நீங்கள் வழியை மறைத்துக்கொண்டு துர்ப்பாஷைகள் மூலம் பேசியதாகக் கூறப்படுகிறது. துர்ப்பாஷைகளால் பேசுவது என்றால் திட்டினீர்கள் என்பதல்ல. பேசத் தகாத முறையில்...

மணி:-அப்படீன்னா?

மாஜி:-ஆபாசமாக நடந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டப் படுகிறது.

இதைக் கேட்டதும் குற்றஞ் சாட்டப்பட்ட கழகத் தோழர்களில் ஒருவரான கே.பி.கஜபதி பின் கண்டவாறு மாஜிஸ்டிரேட்டிடம் தெரிவித்துக் கொண்டார்.

“எங்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் பிடித்ததாக கூறுகிறார்கள் அது தவறு. நான் டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்து விட்டு வந்தேன். அப்போது ஒரு போலீஸ் வான் வந்து நின்றது. அதில் அசிஸ்டெண்ட் கமிஷனர் இருந்தார். அவர் தான் என்னை கைது செய்தார். இந்த இன்ஸ்பெக்டர் அல்ல. இவர்கள் எல்லோரையும் போலீஸ் ஸ்டேஷனில் தான் கண்டேன். என்னைக் கைது செய்தது; தான் என்று இவர் கூறுகிறார்!”

மாஜி:-கைது செய்தது யாராயிருந்தாலென்ன? ஒரு போலீஸ் அதிகாரிதானே கைது செய்தார்.

பிறகு, மீண்டும் தோழர் கே.டி.எஸ்.மணி போலீஸ் அதிகாரியைச் சில கேள்விகள் கேட்டார்.

மணி:-ஆமாம், என்னைத் தாங்கள் தானே கைது செய்தீர்கள்?

சப்-இன்ஸ்:- ஆமாம்!

மணி:- என் கூட யாரார் இருந்தார்கள்?

பதில்:- இந்த ஒன்பது பேரும்தான்.

மணி:- சரி என்னைக் கைது செய்தீர்களே அன்று நான் எந்த கலர் சட்டை போட்டுக் கொண்டிருந்தேன்?

பதில்:- இப்போது போட்டிருக்கும் சட்டை தான்.

மணி:- (மாஜிஸ்டிரேட்டைப் பார்த்து) நான் அன்று வெள்ளை நிற சட்டை போட்டிருந்தேன். என்னைக் கைது செய்து என்னைப்பற்றிய விபரங்களைப் போலீசார் எழுதிக் கொண்டபோது அதுபற்றி குறிக்கப்பட்டிருக்கிறது. இப்போது நான் போட்டுக்கொண்டிருப்பது பழுப்பு நிறம். (சட்டை, சலவை செய்யப்பட்டு மடிப்பு கலையாமல் இருந்தது) இருந்தும், இன்று போட்டிருக்கும் அதே சட்டையைத்தான் அன்றும் நான் போட்டிருந்தேனாம். இதிலேயே தெரியவில்லையா!

மாஜி:- இதெல்லாம் ஏன்? சாட்சிகள் இருக்கிறார்களா?

பதில்:- நான் வழக்காட விரும்பவில்லை. ஆனாலும் எங்கள் மீது சுமத்தப்படும் குற்றத்தைப் பற்றி விளக்கவே இவைகளைக் கேட்கிறேன். தயவு செய்து தாங்கள் எனது கேள்விகளுக்கு அனுமதிக்க வேண்டுகிறேன். பிறகு தாங்கள் தரும் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்ளத் தயார்!

(சப்இன்ஸ்பெக்டரை நோக்கி) நீங்கள் எங்களைக் கைது செய்தபோது நாங்கள் கைகளில் என்ன வைத்திருந்தோம்?

பதில்:- கருப்புக்கொடிகளை வைத்துக்கொண்டு வீசிக் கொண்டிருந்தீர்கள்.

கே:- நாங்கள் கற்களை வீசியதாகச் சொன்னீர்களே, அதைப் பார்த்தீர்களா?

ப:- பார்த்தேன்.

கே:- ரோடில், கல் ஏது?

ப:- ஓரத்தில் இருக்கலாம்.

கே:- எங்களைக் கல்லோடு கைது செய்தீர்களா? கருப்புக்கொடியோடு கைது செய்தீர்களா?
(பதில் இல்லை)

சரி நாங்கள் கல் வீசியதாகக் கூறினீர்களே யார் மீதாவது அடிபட்டதா? அடிபட்டவர்கள், ஏதாவது உங்களிடம் புகார் செய்தார்களா?

ப:- ஒருவரும் புகார் செய்யவில்லை. இதை ஏன் புகார் செய்ய வேண்டும் என்று பேசாது சென்றிருக்கலாம்.

பிறகு தோழர் பி.கே.கபாலி மாஜிஸ்டிரேட்டிடம் தெரிவித்ததாவது:-
“நாங்கள் கருப்புக் கொடி வீசியபோது கைது செய்ததாகக் கூறப்பட்டது. அப்படியிருந்தால் கொடிகள் கசங்கியிருக்கு மல்லவா? ஆனால் இங்கே காட்டப்பட்ட சொடிகள், இன்று காலையில் கவனத்தோடு தயாரிக்கப்பட்டது போல, எல்லாம் ஒரே மாதிரியாயிருக்கிறது. அதோடு அன்று நாங்கள் கருப்புக்கொடி காட்டத் துணிகளைத்தான் கொண்டு போயிருந்தோம் கருப்புக் காகிதங்களை அல்ல!

மா:- சாட்சிகள் உண்டா?

ப:- இல்லை நாங்கள் வழக்காட விரும்பவில்லை.

மா:- அப்படியானால் என் செய்வது? நீங்கள் இனிமேல் இப்படியெல்லாம் நடக்காமலிருப்பதாக உறுதி மொழி தந்தால் விட்டுவிடுகிறேன்.

மணி:- எப்படியெல்லாம் நடக்காமலிருந்தால்.

மாஜி:- கருப்புக்கொடி பிடிப்பது...

மணி:-எங்கள் மீது வழக்கு போடப்பட்டது நாங்கள் கருப்புக்கொடி பிடித்ததற்கா அல்லது கல் வீசினோம் என்பதற்கா அல்லது கலாட்டா செய்தோம் என்பதற்கா?

மாஜி:- வீட்டில் புருஷன் பெண்டாட்டி சச்சரவு போட்டுக் கொண்டாலும் அது கலவரம் என்று தான் சொல்லப்படும். அது போல விரும்பத்தகாத வார்த்தைகள் பேசப்பட்டாலும் அப்படித்தான் சொல்வார்கள்!

இந்த நிலையில் சர்க்காரின் வக்கீல் தலையிட்டு, ‘கருப்புக்கொடி பிடிக்க வந்ததற்காக அல்ல வழக்கு’ என்று குறிப்பிட்டார்.

மணி:- கருப்புக்கொடி பிடிக்காமலிருக்கிறீர்களா விட்டு விடுகிறேன் என்று சொன்னார்களே- அதற்காகத்தான் கேட்டேன்!

மாஜி:- ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவே உங்கள் மீது குற்றஞ் சாட்டப்பட்டிருக்கிறது.

மணி:- நாங்கள் மூவரும் எங்களூரிலிருந்து கருப்புக்கொடி காட்டவே வந்தோம். ஆனால் கல்லெடுத்து கலாட்டா செய்ததாகக் கூறப்படுகிறது அது, அவர்கள் மனச்சாட்சிக்கு ‘சரி’ என்று பட்டால் ஏற்றுக்கொள்ளத்தயார்.

கல்லெடுத்து கலாட்டா செய்வதில் நம்பிக்கையற்றவர்கள் நாங்கள், அதிருப்தியை வடநாட்டு மந்திரிக்குத் தெரிவித்துக் கொள்வதற்காக சட்ட வரம்புக்கு உட்பட்டு, அமைதியோடு, ஒழுங்காகக் கருப்புக்கொடி காட்டுவதுதான் எங்களது இலட்சியம்.

மாஜி:- சரி. சாட்சிகள் உண்டா?

மணி:- கிடையாது.

பிறகு ஒவ்வொருவரையும் யாராவது “உறுதி மொழி” (ஹிஸீபீமீக்ஷீNணீளீவீஸீரீ) தந்துவிட்டு போகத் தயாரா என்று மாஜிஸ்டிரேட் கேட்க, எவரும் அதற்கிசையவில்லை. ‘வடநாட்டு மந்திரிகள் வரும்போது நாங்கள் கருப்புக்கொடி காட்டவே செய்வோம்” என்று நமது கழக வீரர்கள் பதில் தந்து வெளியே செல்ல மறுத்துவிட்டனர்.

பிறகு ஒவ்வொருவருக்கும் இரண்டு வாரச் சிறைவாசத் தண்டனை அளிப்பதாக மாஜிஸ்டிரேட் தீர்ப்பு அளித்தார்.

மகிழ்ச்சியோடு தங்களது வணக்கத்தைச் செலுத்திய பின் எல்லோரும், அழைத்துச் செல்லப்பட்டனர்.

கோர்ட்டில் வழக்கு விசாரணையைக் கவனிக்க ஏராளமான கழகத் தோழர்கள் வந்திருந்தார்கள். கோர்ட்டு மண்டபம் முழுமையாயும் கூட்டம் நிரம்பி வழிந்தது. விசாரணையின் போது முக்கிய போலீஸ் அதிகாரிகளும், வழக்கறிஞர்களும் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். நமது தோழர்கள் சர்க்கார் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது குறுக்கு விசாரணை செய்தது நகைச்சுவை கலந்ததாக இருந்தது. நமது தோழர்களின் கேள்விகளுக்கு நேரடியான பதில் கிடைக்காதபோது கோர்ட்டில் சிரிப்பொலி கிளம்பி குலுக்கிற்று.

வழக்கு விசாரணையைப் பார்வையிடுவதற்காகச் சென்னை மாவட்ட தி.மு.க. கிளைக் கழக முன்னணி வீரர்களெல்லாம் வந்திருந்தனர்.

தோழர்கள் ஈ.வி.கே.சம்பத், பூ. கணேசன் வி.கி செங்கற்பட்டு சின்னையா, சென்னை கே.கோவிந்தசாமி, டாக்டர் கணேசன், கண்ணபிரான், காஞ்சி, கலியாணசுந்தரம், சி.வி.ராசன், காஞ்சி சி.வி. ராசகோபால், இராம அரங்கண்ணல், கே.ஏ.மதியழகன் ஙி.கி முதலானோரும் இன்னும் பல முன்னணி வீரர்களும் வந்திருந்தனர்.

இரண்டாம் நாள் விசாரணை
கைது செய்யப்பட்டு 24.10.50 இரவிலிருந்து காவலில் வைக்கப்பட்டிருந்த கழகத் தோழர்களில் முதள் நாள் விசாரித்து தீர்ப்பளித்தவர்கள் போக மீதமிருந்த பத்து தோழர்களின் வழக்கும் 7.11.50 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக புரசவாக்கம் தோழர் டி.கோவிந்தன், அ.தர்மலிங்கம் ஆகியோர் மீது சர்க்கார் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேற்படி குற்றச்சாட்டை தோழர்கள் மறுத்ததோடு தாங்கள் கருப்புக்கொடி காட்டவே சென்றிருந்ததாகக் கூறினர்.

இனி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதில்லையென்றால் தாம் விடுதலை செய்து விடுவதாகவும் அதற்கு விரும்புகிறீர்களா என்றும் மாஜிஸ்டிரேட் கேட்டபோது, ‘நாங்கள் கருப்புக்கொடி காட்டவே சென்றதாகவும் எந்த உறுதி மொழியும் தரத் தயாரில்லையென்றும்” தோழர்கள் வீரத்தோடு பதில் தந்தனர்.

பிறகு இருவருக்கும் முறையே இரண்டு வாரம் சிறைத்தண்டனை அளிப்பதாக மாஜிஸ்திரேட் தீர்ப்புக் கூறினார்.

முகமலர்ச்சியோடு தோழர்கள் அத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டனர்.

அடுத்து தோழர்கள் ராஜகோபால், சம்பந்தம், ப.சானகிராமன் ஆகியோர் மீது கெட்டவார்த்தைகளைப் பேசியதாகவும் அதன் மூலம் போக்குவரத்துக்குத் தடங்கல் செய்ததாகவும் சர்க்கார் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது.

தோழர்கள் மேற்படி குற்றச்சாட்டை மறுத்தனர். கருப்புக்கொடி பிடிக்கவே தாங்கள் சென்றதாகவும் கூறினர்.

அதே போல தோழர்கள் ஆர். பக்தவத்சலு, ஏ.ராஜூ, விசுவநாதன் ஆகியோர் மீது ஆபாசமான வார்த்தைகளைப் பேசியதாகவும் கல்லெறிந்ததாகவும் குற்றம் சுமந்தப்பட்டபோது தோழர்கள் அத்தகைய குற்றங்களை மறுத்து, தாங்கள் கருப்புக்கொடி காட்டவே சென்றதாகக் கூறினர்.
பின்னர் தோழர்கள் ஏ.ஜி.சம்பந்தம், குப்பராஜூ, பாலகதிரவன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீதும்.

நகர போலீஸ் சட்டம் 75 செக்ஷன்படி கல்லாலடித்து, போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்ததாகவும் கலாட்டா செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டதை மறுத்து நால்வரின் சார்பில் எஸ்.பாலசுப்ரமணியம் கூறுகையில்.

“வடநாட்டுப் பிரதிநிதியாக வந்துள்ள மந்திரியாருக்கு இந்நாட்டின் சீர்கேட்டை உணர்த்தவும் எங்கள் அதிருப்தியைக் காட்டவும் கருப்புக்கொடி காட்ட வந்தோமே யொழிய மேற்காணும் குற்றச்சாட்டுக்கான நடத்தையில் ஈடுபட அல்ல.

கருப்புக்கொடியின் மூலம் எங்கள் அதிருப்தியைக் காட்டுவது சரி என்பதற்காதாரம் பண்டித ஜவஹர்லால் நேரு, இந்தோனேஷியா செல்லும்போது அவருக்கு அங்குக் கருப்புக் கொடி காட்டப்பட்டது. வெலிங்டன் ஒரு சமயம் இந்தியா வருகையில், அவருக்குக் கருப்புக்கொடி காட்ட வேண்டி காந்தியாரின் அறிவுரையே வந்துள்ளது-இப்படித்தான் நாகரீக நாடுகள் எங்கும் நடைபெறுகின்றன. அதே முறையில் தான் நாங்களும் பிடிக்க வந்தோம்” என்றார்.

சப்-இன்ஸ்:- கருப்புக்கொடி பிடிக்க நீங்கள் வரவில்லை. கல்லாலடித்து கலாட்டா செய்தீர்கள்.

ஷி. பால சுப்ர: நீங்கள் சொல்வது உண்மையல்ல. அத்தகைய கீழ்ச் செயல் செய்வது எங்கள் நோக்கம் அல்ல. கழகக் கொள்கையுமல்ல. நாங்கள் வரும்போதே, எங்களை நீங்களே முழுதாகப் பரிசீலனை செய்து, சிறு கருப்புக் கைக்குட்டை யிருந்தாலும் அதையும் வாங்கிக் கொண்டீர்கள். தங்கள் பரிசீலனையின் போது எங்களிடம் ஒரு கல்லேனும் இருந்ததா? கல் இல்லாது, கல்லாலடித்தோம் என்பதை எப்படி ஒப்புவது? கல்லாலடித்ததற்கோ, கல்லடியால் எவரேனும் காயப்பட்டதற்கோ ஆதாரம் ஏதேனும் உண்டா? 24 ந் தேதி காலை நிகழ்ச்சிகளில் கல்லாலடித்தால் எந்தப் பத்திரிகையிலேனும் செய்தி உண்டா? (மேஜிஸ்ட்ரேட்டைப் பார்த்து) நீங்கள் எந்தப் பத்திரிகையிலேனும் அம்மாதிரியில் செய்தியைக் கண்டீர்களா?

மாஜிஸ்: காயம்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது உண்டா?

சப்-இன்ஸ்:- ‘இல்லை’

சுப்ர:- கருப்புக்கொடி பிடிப்பதைத் தடுப்பதற்குச் சட்டம் இல்லையென்றால், கலாட்டா செய்ததாக வேண்டுமென்றே 75 செக்ஷனில் குற்றஞ் சாட்டப்படுவது சரியல்ல; அதை நாங்கள் மறுக்கிறோம். கருப்புக்கொடி பிடித்ததற்காக என்று எந்த அளவு வேண்டுமானாலும் தண்டியுங்கள்; அதை நாங்கள் ஏற்கிறோம்.

மேலும், கல்லாலடித்ததற்கும், கலாட்டா செய்ததற்கும், ஆதாரமான சாட்சி ஏதேனும் சப்-இன்ஸ்பெக்டர் கூறுவாரா?

மாஜிஸ்:- (சப்-இன்-பார்த்து) சாட்சி ஏதேனும் உண்டா?

‘சரி, நீங்கள் இப்படியெல்லாம் நடக்கக் கூடாது நீங்கள் போகலாம்’ என்று சொன்னார்.

சப்-இன்:- கான்ஸ்டேபிள்கள் சாட்சி.

சுப்ர:- எங்களைப் பிடித்தவர்கள் ரிசர்வ் போலீசார்-இவர் அப்போதிருந்த சூழ்நிலையில் என்ன காரணத்தாலோ, கலாட்டா செய்ததாக 75 செக்ஷனில் வேண்டுமென்றே ‘சார்ஜ்’ செய்துவிட்டார் உண்மைதானே? (சப் இன்ஸ்பெக்டர் மௌனம்)

பாலசுப்ர:-மேலும் கைதியான அன்றிரவே ‘கருப்புக்கொடி காட்டவில்லை’ என்று சொல்லுங்கள். விடுகிறேன் என்று சப்இன்ஸ்பெக்டர் சொன்னார். அப்போதும் ‘அப்படிப் பொய் சொல்லத் தேவையில்லை’ என்று சொன்னோம். எங்கள் கொள்கைதான் பெரிது. கருப்புக்கொடி பிடிக்கத்தானே வந்தோம்; அதை நாங்கள் ஏன் மறைக்கவேண்டும்?

மாஜிதிரேட்:- இந்த விளக்கத்தின் பின்னர் சிறிது நேரத்தில் “உங்களை விடுதலை செய்கிறேன்” என்று உத்திரவிட்டார்.

எனவே பத்துத் தோழர்களில் எட்டுத் தோழர்கள் தண்டிக்கப்படவில்லை.

(திராவிடநாடு 12.11.50)