அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இலட்சிய வீரரின் ‘எரிமலை’ வெடித்தது!

நாரணமங்கலத்தில் 144 மீறினர்
தியாகத்தீயில் திருச்சி மாவட்டம்

பேச்சுரிமைப் போரின் இரண்டாவது கட்டம், திருச்சி மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தில் 27.11.50 அன்று துவக்கப்பட்டது. கழகத்தோழர்கள் ஏழு பேர்-பேச்சுரிமை காத்து அறக்கோட்டம் புகுந்தனர்.

காங்கிரஸ் சர்க்கார் மக்களுரிமையைப் பறிக்கும் வகையில் 144 போடுவதை எதிர்த்து பேச்சுரிமைக்காக அறப்போர் தொடு“த்து விட்டோம் என சிவகெங்கை மாநாட்டில் பொதுச்செயலாளர் பிரகடனம் செய்தார்.

அதன் விளைவாக நமது அறப்போர் ‘குன்றத்தூரில்’ துவங்கியது. அங்கு நமது வீரர்களை வாட்டி வதைத்தது. சர்க்கார் மக்களை சின்னா பின்னப்படுத்திற்று. எட்டு முறை சுட்டது. மூவரை வீழ்த்திற்று பலரை படுகாயப்படுத்திற்று. 48 மணி நேரம் ஊரில் யாரும் நடமாடக்கூடாதென, ‘தர்பார்’ செய்தது. நமது தோழர்கள் 27 பேர் மீது வழக்கும் தொடர்ந்திருக்கிறது.
எனினும், “எதையுந்தாங்கும் இதயம் கொண்ட” நமது அறப்போரின் இரண்டாவது அங்கம் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றிருக்கிறது. அங்கும் மக்களை ‘அகிம்சா சர்க்கார்’ தடிகொண்டு தாக்கியிருக்கிறது.

நாரணமங்கலம்-நமது பழம் பெருமையை நிலைநாட்டுகிறது. ‘போருக்குச் செல்லும் மகனை, மார்பிலே வேல் தாங்கி வா” என வீரத்தாய் அனுப்புவாராம்! அந்தக் காட்சியை அங்கே கண்டோம்!

ந‘யாயத்துக்குப் போராடும் தமிழ் மரபு என்பதை நாரணமங்கலத்து நமது தோழர் ஆதிமூலம் காட்டிவிட்டார். அங்கு 144 போடுமாறு அதிகாரிகளைத் தூண்டியது அவரது தந்தையாம்! எனினும் தனயன் தயங்கவில்லை!! தந்தை வெளியில் தனயன் சிறையில்!!

நாரணமங்கலம் கிராமத்தில் திராவிட முன்னேற்றக் கழக பொதுக்கூட்டம் நடைபெறுவதாக சுமார் 15 நாட்களுக்கு முன்பே விளம்பரத்தாள்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. திடீரென அவ்வூர் பிரபல காங்கிரஸ்காரர்கள் முயற்சியாலும் தூண்டுதலின் பேராலும் இராமசாமி மூப்பனார் என்பவரால் 144க்கு மனுபோட்டு, பெரம்பலூர் தாலுகா சப்-மாஜிஸ்டிரேட் அவர்களால் 27.11.50 காலை 8 மணிக்கு அவ்வூர் தி.மு.க. செயலாளர் உட்பட 10 தோழர்களுக்கு 15 நாளைக்கு 144 தடை உத்திரவு கொடுக்கப்பட்டது. தி.மு.க. வின் செயற்குழு தீர்மானப்படி தடையை மீறுவதென முடிவு செய்து திருச்சி மாவட்டக் கழக உறுப்பினர் தோழர் வானமாமலை, ஜி.பராங்குசம் மற்றும் பலரும் நாரணமங்கலம் சென்றார்கள். அங்கு பகல் 3 மணியிலிருந்தே 144 தடையை மீறப்போகும் செய்தி அறிந்து, வெளியூர்களிலிருந்து முக்கியமான, இருகூர், வரகுபாடி, விஜய கோபால்புரம், காரை, பெரம்பலூர், சிறுவாச்சூர், மருதடி, செட்டிகுளம் நாட்டார்மங்கலம், திருவளக்குரிச்சி, பில்லாரி, கூத்தூர், மூங்கில்பாடி, லப்பைக்குடிக்காடு மற்றும் பல ஊர்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பெரம்பலூர் தாலுக்காவிலே கண்டிராத அளவுக்கு கூடியிருந்தார்கள்.

போலீஸ் பந்தோபஸ்து பலத்த அளவிலே இருந்தது. மாஜிஸ்டிரேட் அவர்களும் ஸ்தலத்துக்கு வந்திருந்தார். 4 மணியிலிருந்தே ஊருக்குள் வந்து கொண்டிருந்த இயக்கத் தோழர்களையும், பொதுமக்களையும் ஊருக்குள் நுழையாமல் தடை செய்து கொண்டே இருந்தார்கள். அப்படி இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் அமைதியாகவும், கட்டுப்பாடாகவும், நடக்கப் போகும் நிகழ்ச்சியைக்காண தெரு ஓரங்களிலிருந்து கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். சரியாக 6 மணிக்கு கூட்டம் நடக்கும் இடமாகிய ரேடியோ மைதானத்திற்கு நாரணமங்கலம் தி.மு.க.செயலாளர் தோழர் ஜெண்பகராஜன், திருச்சி மாவட்டக் கழக உறுப்பினர் தோழர் து.வானமாமலை, நாரணமங்கலம் தி.மு.க. பொருளாளர் தோழர் வி.எம்.விஜயகோபாலன், தி.மு.க. விளம்பர உறுப்பினர். ஆர்.ஆதிமூலம் (144 வாங்கிய இராமசாமி மூப்பனார் மகன்) ஆகிய நால்வரும் மேடைக்குச் சென்றனர். சென்றதும் தோழர் ஜெண்பகராஜன் தலைவரைத் தேர்ந்தெடுக்கப்பேசியதும் பெரம்பலூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வந்து நீங்கள் தடையுத்தரவை மீறப்போகிறீர்களா என்று கேட்டு 144 தடை உத்திரவைப்படித்துக் காட்டினார். தோழர்கள் அனைவரும் “அது எங்களுக்குத் தெரியும். பேச்சுரிமையை நிலைநாட்ட நாங்கள் தடையை மீறத் தான் போகிறோம்” என்றார்கள். உடனே நால்வரையும் கைது செய்திருப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்றார். உடனே மூங்கில்பட்டி தோழர்கள் எம்.வடிவேலு, ஜெண்பகராசபுரம் மருதமுத்து மேடைக்கு வந்து பேச ஆரம்பித்தார்கள். அவர்களையும் உடனே கைது செய்துவிட்டு இன்னும் யாராவது இருக்கிறீர்களா என்று தெருவின் இருமங்கிலும் இருக்கிறீர்களா என்று கேட்டனர். மக்கள், ‘இருக்கிறோம்’ என்று ஆரவாரித்தனர்.

கூட்டத்தின் மத்தியிலிருந்த லெப்பைக் குடிக்காடு தோழர் அமராவதி (முஸ்லீம் தோழர்) நான் வருகிறேன் என்று சொல்லி வந்தார். உடனே அவரையும் கைது செய்தார்கள். உடனே மக்கள், “திராவிட நாடு திராவிடருக்கே” அடக்குமுறை ஒழிக, பேச்சுரிமையைத் தடை செய்யாதே என்று விண்ணதிர முழக்கம் செய்தனர். இதைக் கண்ட போலீசார் தடியடிப்பிரயோகம் செய்து கூட்டத்தைக் கலைத்தார்கள். உள்ளூர் கழக முக்கியஸ்தர்களும், வெளியூர் கழக தோழர்களும் ஜி.பராங்குசம் அவர்களும் கூட்டத்தை அமைதியாக கலைந்து போகுமாறு வேண்டிக் கொள்ளவே சிறிது சிறிதாக மக்கள் கலைந்து சென்றார்கள். இருந்தாலும் கூட்டம் கலைந்து செல்ல சுமார் 8-மணி ஆயிற்று. கைது செய்யப்பட்ட தோழர்கள் ஏழுபேரையும் பாடலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இரவு 7.30 மணிக்கு காரில் அழைத்துச் சென்றார்கள். போலீசார் ஸ்தலத்தில் இரவு 8 மணி வரைக்கும் இருந்து சென்றார்கள். நாரணமங்கலத் தோழர்களும், மற்றும் பல கிராமத் தோழர்களும் ஒருநாள் விட்டு ஒருநாள் தடையை மீறிப்போக அனுமதி தரவேண்டுமென்று வேண்டிக் கொண்டார்கள். பொதுச் செயலாளரைக் கலந்து பின் ஏற்பாடு செய்யலாமென்று தோழர் பராங்குசம் சொல்லி எல்லோரையும் அனுப்பிவிட்டு, இரவு வந்து பாடலூர் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் தோழர்களைப் பார்த்து பேசிவிட்டு சுமார் 10 மணிக்கு திருச்சி வந்து சேர்ந்தார்கள். இந்த தடையுத்தரவைப் பற்றியும், அதற்குக் காரணமாயிருந்தவர்களைப் பற்றியும், அரசாங்கத்தின் அடக்கு முறையைப் பற்றியும் கேவலமாகவும் அதிருப்தியாகவும் பேசிக்கொள்கிறார்கள். இந்த சம்பவம் பெரம்பலூர் வட்டத்திலேயே பெரிய பரபரப்பைக் கொடுத்திருக்கிறது.

மேற்கொண்டு நடக்கவேண்டியவைகளைக் கவனிக்க 28.11.50 காலை திருச்சியிலிருந்து தோழர்கள் சாம்பசிவம், அம்பில் தர்மலிங்கம் ஆகியோர் பெரம்பலூர் சென்றார்கள்.

போலீஸ் அதிகாரிகளில் ஒரு பார்ப்பன சப் இன்ஸ்பெக்டர் மாத்திரம் ஆபாசமாகத் திட்டி கூட்டத்தைக் கலைக்கும்போது, அருவருக்குத் தக்க முறையில் நடந்து கொண்டார்.

மறுநாள்
28.11.50 காலையில் திருச்சிக்கு செய்தி எட்டியதும் தோழர் என் சாம்பு, மத்திய செயற்குழு உறுப்பினர் தோழர் அம்பில் தர்மலிங்கம் ஆகியோர், பெரம்பலூருக்குச் புறப்பட்டுச் சென்றார்கள். செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பாடலூர் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த கழக வீரர்கள் எழுவரையும் பெரம்பலூருக்குக் கொண்டு செல்வதற்காக பஸ்ஸுக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

பேச்சுரிமையும் போர் வீரர்கள் அனைவரும் முகமலர்ச்சி யோடும் அகமகிழ்ச்சியோடும், ‘சிறைச்சாலை என்ன செய்யும்’ என்று எக்காளம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர்.

பிறகு, பெரம்பலூரில் அனைவரும் சப் மாஜிஸ்டிரேட் முன் ஆஜர் செய்யப்பட்டார்கள். கோர்ட்டில் உள்ளூர் வெளியூர் கழக முன்னணி வீரர்கள் பெருவாரியாகக் கூடியிருந்தனர்.

பேச்சுரிமைப் போர் வீரர்களைக் கண்டதும் வெளியில் கூடியிருந்த மக்கள் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று முழக்கமிட்டனர்.

பிறகு ஏழு பேரும் மத்தியான உணவுக்கு அனுப்பப்பட்டு ரிமாண்டுக்கு பெரம்பலூர் சப்-ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர். சப்-ஜெயில் வாயிலில் தோழர் விஜயகோபாலன் தகப்பனார் திரு.மூர்த்திவேல் உடையாரும் மகனைத் தட்டிக்கொடுத்து ‘அண்ணா அவர்கள் வேண்டிய நாட்டின் விடுதலைக்கு வீட்டுக்கொரு பிள்ளை தேவை என்றதற்கு முதற்காணிக்கையாக அனுப்புகிறோம்’ என்ற முறையில் அனுப்பினார்கள். அது போலவே சிறைப்பட்ட தோழர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் மற்றும் நண்பர்களும் இயக்க முக்கியஸ்தர்கள் தோழர் வரகுபடி சி.முத்துவீரன், நாராயண மங்கலம் தோழர்கள் நா.பெ.இராமசாமி, ந.ராசு, விஜயகோபாலபுரம் தோழர்கள் வி.அ.சிவன், வி.மு.அப்பாவு, வி.மு.கிருட்டிணசாமி, பெ.பொன்னு சாமி, மு.ரெங்கசாமி, மு.கோவிந்தசாமி, சு.சாமிநாதன், அ.முத்துசாமி, நாரணமங்கலம் தோழர்கள், நா.மு.பச்சமுத்து நா.ச.வெங்கடாசலம் மற்றும் உள்ளூர், வெளியூர், முக்கியஸ்தர்களும் உடனிருந்து அனுப்பிவைத்தார்கள். தோழர்கள் ஏழுபேரும் இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும் என்ற முறையில் வீர எழுச்சியோடு சிறை புகுந்தனர்.

பின் கூடியிருந்த இயக்கத் தோழர்களையும் மற்ற கிராமப் பெரியார்களையும் கலந்து கிராம நிலைமையையும், சுற்று வட்டார மக்கள் நிலைமையையும் பற்றி கலந்ததில் பெருவாரியான மக்களிடத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருப்பதையும், இன்னும் பலதோழர்கள் தடையை மீறுவதற்குத் தயாராக இருப்பதையும் தெரிந்து விரைவில் அதற்கு ஆவன செய்வதாகக் கூறி எல்லோரும் அமைதியாகவும், கட்டுப்பாடாகவும் அண்ணா அவர்களிடமிருந“து அனுமதி வரும் வரையில் இருக்கவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள். எப்படியும் எந்த விலை கொடுத்தாவது அந்தக் கிராமத்திலும், பெரம்பலூர் வட்டத்திலும் பேச்சுரிமையைக் காக்க மிகவும் ஆர்வத்தோடு தோழர்கள் இருப்பது பாராட்டத்தக்கது. பெரம்பலூர் பகுதியிலிருந்த திருச்சி தோழர் நாகசுந்தரம் அவர்களும் கோர்ட்டுக்கு வந்திருந்து தோழர்களை உற்சாகப் படுத்தியபின் அங்கிருந்து வெளியூருக்குச் சென்றார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு தோழர்கள் எ-பி. தர்மலிங்கமும், என், சாம்பசிவமும், திருச்சி வந்து சேர்ந்தார்கள். நிலைமை அமைதியாகவும் கட்டுப்பாடாகவும் ஒழுங்காகவும் இருக்கிறது. மிகவும் பாராட்டத்தக்கது.

(திராவிடநாடு 3.12.50)