அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


லீ.ரா.

லீ.ரா. எனும் அன்பழைப்புக்குரியார் நமது ஆருயிர் நண்பர், சீர்திருத்தச் செம்மல் தமிழ் மரபின் எடுத்துகாட்டாக உள்ளமும் உடலமும் பெற்று, குளிர்ந்த மொழி பேசி, முன்னேற்றத் துறையிலே பல்லாண்டு உழைத்து வந்த மறத்தமிழர், குடி அரசு, பிரசண்ட விகடன், விநோதன், விநோதினி எனும் பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து செந்தமிழில் தமிழர்க்குத் தமிழளித்து வந்த தோழர் லீ. ராமசாமி அவர்கள் திடீரெனக் கோவையிலே இறந்தாரெனும் மனமுடையும் செய்தி கேட்டோம், சித்தஞ் சோர்ந்தோம், சிந்தனை குழம்பிற்று. சென்ற திங்கள் சென்னையிலே சந்தித்தோமே, சிரித்துப் பேசினாரே, கோவையிலே பாட்டாளி மக்களின் பேரிகையாகத் “தோழன்” எனும் வார இதழ் நடத்த ஏற்பாடு செய்துள்ளேன் என்றுரைத்தாரே, அவரா மறைந்தார் என்று அலறினோம், தமிழகத்திற்குற்ற நஷ்டத்தை எண்ணி மனம் நொந்தோம். என் செய்வோம்.

தமிழ் நாட்டுச் சீர் திருத்த உலகம் அவரது பணியால் வளமுற்றது, சுயமரியாதைக்காரர் அவரை ஓர் தளபதியென்று கருதி மகிழ்ந்தனர். அவருடைய அருங்கலைப் பயிற்சியும், சீர்திருத்த நோக்கமும், விடுதலை ஆர்வமும், வாழ்க்கைப் படகு கஷ்ட மெனும் புயலிலே சிக்கிக் கொண்டு கவிழ்வது போன்ற நிலை ஏற்பட்ட போதெல்லாங் கூட, முகத்திலே புன்னகை மாறாத இயல்பை அவருக்குத் தந்தது.

மறைந்த மறத் தமிழரின் குடும்பத்துக்கு நமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். மலை குலையினும் மனங் குலையாதிருப்பது தமிழர் மாண்பு. அது ஒன்றே நமக்கு ஆறுதல். வேறு எது!

(திராவிடநாடு - 20.12.1942)