அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


லெப்டினன்டு ஜெனரல்
சர்.சி.பி. இராமசாமி ஐயருக்கு,
190 திருவாங்கூர் துர்ப்பாக்கியர்கள் அளிக்கும்
பிரிவுபசாரப் பத்திரம்!
திருவிதாங்கூர் திவான் சாகேப்!
பிரம்மகுல ரட்சகரே!
பெருங்கண்ணரே!
ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையே!
அக்கிரகாரமாக்கிய தீரரே!
‘அமெரிக்கன் மாடல்’ கர்த்தாவே!
அன்னையின் புகழையும் தனயனின்
தீரத்தையும் தெரிவிக்கும் ஒலிபரப்பியே!
மயிலை வாசியின் விசுவாசியே!
பொது உடைமைக்காரரைப் பொசுக்கிடக்கிளம்பிய புலியே!

ஆலயமும் அரண்மனையும், ஆசிரியருக்குப் பதுங்குமிடம் என்று, திராவிடர் கழகத்தார் கூறுவார்கள். அவை அர்த்தமற்ற வார்த்தைகள் என்று நாங்கள் எண்ணிக்கொண்டிருந்தோம் - தாங்கள் திருவிதாங்கூருக்குத் திவான் ஜீயாக வருகிறவரையில், வந்தபிறகே கண்டோம், அந்தக்கட்சியினர் கூறிய மொழி உண்மை என்பதை.

பிரம்மகுல ரட்சகா! இந்த நாட்டிலே, காந்தியாரிடம் செல்வாக்குப் பெற்றவர்கள் சிலர் உண்டு, சிலருக்குச் சர்க்காரிடம் இருக்கும்; இருஇடத்திலும் ஏககாலத்திலே செல்வாக்குப் பெறுபவர்கள் கிடையாது. ஆரிய! உமக்குத்தான் அது முடிந்தது. உம்மை, விலிங்டன் வைசிராயின் ஸ்வீகாரம் என்பார்கள்! அதுபோலத்தான் இருந்தது செல்வாக்கு. அதேபோது காங்கிரசிலும் உமக்குச் செல்வாக்குத்தான். எங்களுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. எப்படி நமது திவான் ஜீயால், டில்லி வார்தா ஆகிய இருபீடங்களிலும் மாலை மரியாதை பெற முடிகிறது என்று ஆச்சரியப்பட்டோம். திராவிடர் கழகத்தார் விளக்கினார் அந்த இரகசியத்தை, சர்வம்பிரம்மமயம்ஜகத்! - டில்லியிலும் அது தான் - வார்தாவிலும் அதேதான் என்றார்கள். உண்மையாகத்தான் இருக்கிறது நீர் ஓர் ஆரியர் என்ற காரணத்தாலேதான் உமக்கு இரு இடங்களிலும் செல்வாக்கு கிடைத்தது.

“காந்தியாரே! திருவாங்கூர் வராதீர்! வந்தால் கைதுசெய்வேன்!” என்று முன்பு ‘கபர்தார்’ கூறினீர். நாங்களெல்லாம் அப்படிப்பட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே நடுநடுங்குகிறது நமது மகாத்மாவிடம், இந்தப் பஞ்சாங்கக்காரப் பிராமணரின் மிரட்டலுக்கா, காந்திமகான் பயப்படுவார் என்று எண்ணினோம். இதோ வருவார், நாளை வருவார், வந்ததும், இந்த சர்.சி.பி, மயிலைநோக்கி ஓட வேண்டும் பார் என்றெல்லாம் மனப்பால் குடித்தோம். ஆனால், உம்முடைய அறிக்கை வந்தபிறகு, காந்தியார் திருவாங்கூர் வரவில்லை. ஏகாதிபத்தியத்தாக்குதலுக்கு அஞ்சாத காந்தியார், பிராமண கோபத்துக்கு அவ்வளவு பயந்தார்.

அவர் மட்டுமல்லவே! அவருடைய ‘வாரிசு’ - சர்வதேசிய நோக்குடைய, சண்டமாருதப் பிரசங்கப் பண்டித ஜவஹர், திருவாங்கூர் காங்கிரஸ் - திருவாங்கூர் கம்யூனிஸ்டு கட்சி - தொழிலாளர் ஸ்தானபங்கள் ஆகியவை உமது தாக்குதலால் இம்சைக்காளானபோது வாய் திறக்கவில்லையே - திருவாங்கூர் பக்கமே வரவில்லையே!

நேற்று காஷ்மீர் ராஜாவை மிரட்டினார் - திருவாங்கூரில் நீர் பகிரங்கமாக லெப்டினன்டு ஜெனரல் பட்டத்தைச் சூட்டிக்கொண்டு, இராணுவ ஆட்சியே நடத்திக் காட்டினீர் - பண்டிதர் ஒரு வார்த்தை பேசவில்லையே!! பேசமுடியவில்லையே!

மயிலை வாசிகளைத் திருவாங்கூருக்குக் கும்பல் கும்பலாக, ஜட்ஜுகளாகவும், சங்கீதவித்வான்களாகவும், அதிகாரிகளாகவும், வியாபாரிகளாகவும் குடிவரச்செய்து, சமஸ்தானத்தை, சதுர்வேதி மங்கலமாக்கினீர். யாரால் தடுக்க முடிந்தது? கொச்சிக்குக் கோவை சண்முகம் திவானாவதா, இந்தக் கொடுமையைக் கண்டும் நாட்டுமக்கள் சும்மா இருக்கின்றனரே என்று எழுதிய ‘இந்து’ உம்முடைய பிரவேசத்துக்குப் பாராட்டியதோடு இல்லையே, பழனிமுருகனைப் பூஜித்துக்கொண்டிருந்த பக்தரை, பிரதம நீதிபதியாக்கி, சமஸ்தானத்துக்குக் கொண்டுவந்தீர் - அவர் ஆரியர் உமது இனம் - மயிலை - இந்து பாராட்டித்தான் எழுதிற்று.

அடக்குமுறை - பத்திரிகை ஜாமீன் - எடுத்ததற்கெல்லாம் 144-ஊர்வலம் நடத்தாதே - பொதுக்கூட்டம் போடாதே - வேலை நிறுத்தம் செய்யாதே - முழக்கம் செய்யாதே - என்று, திவானாக வந்தநாள் தொட்டு அமல் நடத்தித்தான் வந்தீர். இவ்வளவும், “அக்கிரமம் - அநீதி, கொடுங்கோன்மை -” என்று கண்டிக்கப்பட்டு, இவற்றுக்குக் காரணமாக இருப்பவரின் பெயர் நாறிப்போயிருக்கும் வேறு இடத்திலோ - அல்லது திருவாங்
கூரிலேயே ஆரியரல்லதார் யாரேனும் திவானாக இருந்திருந்தாலும், கண்டனம் பிறந்திருக்கும் - பொதுமக்களின் கோபப்
பார்வையிலே அந்த அமல் பொசுங்கிப் போயிருக்கும். உமக்கு அப்படி ஏதும் இல்லை - ஜாம் ஜாமென இங்கு அடக்குமுறையை வீசுவீர் - அல்லோலகல்லோல மாகும் சமஸ்தானம் - அடுத்த வாரத்திலேயே, சென்னைப் பத்திரிகைகள் சகலமும், சச்சிவோத்தமர், சர்.சி.பி. இராமசாமிஐயரின் படத்தை சர். சிவசாமிஐயர் திறந்து வைத்தார்; சர் அல்லாடி கிருட்டிணசாமி ஐயர் தலைமை வகித்தார்; அரியக்குடி ராமானுஜமய்யங்கார் பாடினார்; அலமேலு ஜெயராமய்யரும் பிரசன்னமாகி இருந்தார்கள் என்று அல்லவா எழுதும்! உமது அமலினால் இங்கே எம் மக்கள் பட்ட தடியடியால் ஏற்பட்ட தழும்பின் கனத்தை நாங்கள் கண்டு கலங்கிக் கொண்டிருப்போம், அந்தச் சமயத்திலே, உமது அகன்ற, நீண்ட, ஆழத்தையும் கூர்மையை ும் விளக்குகின்ற பெருங்கண்ணின் பேரொளியைப் பற்றியல்லவா, சென்னைப் பத்திரிகைகள் புகழ்ந்து புகழ்ந்து எழுதிக்கெண்டிருக்கும்.

திருவிதாங்கூர் சட்ட மறுப்பின்போது, தலைவர்கள் தொண்டர்கள் மட்டுமா, கல்லூரி மாணவர்கள், மாணவிகளையும், தண்டித்தீர் - அந்தக் கொடுமையை, “மக்களின் மடமை” என்றல்லவா அந்தப் பத்திரிகைகள் எழுதின.

பட்டாளத்தார் பவனி வந்து உமக்கு “ஜே” போட்டனர் - மக்கள் சபித்தனர் . அப்போதும், உமது புகழைப் பரப்பவே, பத்திரிகைகள் பாடுபட்டன.

சமஸ்தானத்துக்குள்ளே உள்ள பத்திரிகைகள் அடக்கு முறையால் வாய் மூடிக் கிடந்தன. சென்னைப் பத்திரிகைகளோ, இனப் பாசத்தால், உமது கடுமையான நடவடிக்கைகளைக் கடுகு எழுத்திலும், உமது புன்சிரிப்பு - உமக்கு அன்னையின் ஆதரவும் தனயனின் தயவும் கிடைத்ததன் காரணம் - உமது பெருங் கண்ணிலேயிருந்து சொட்டும் கலை ரசம் இவற்றைப் பற்றியல்லவா புகழ்ந்து எழுதிக் கொண்டிருந்தன.

சமஸ்தானக் காங்கிரசின் கிளர்ச்சியை அடக்க, எவ்வளவு கொடுமையான முறைகளைச் கையாண்டீர். துப்பாக்கிப் பிரயோகம் செய்யச்செய்தீர். நெய்யாற்றங் கரையருகே, குண்டடி பட்ட மக்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டவர் யார்? ஆலப்புழை, கோட்டயம், முதலிய பகுதிகளிலே ‘வேட்டு’ மூலம், உமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டீர். யார், இந்தக் கொடுமையைக் கண்டித்தனர்.

அகில இந்தியக் காங்கிரசும் உம்மை அசைக்கவில்லை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உம்மை வாரி அணைத்துக் கொண்டது.

மக்களின் மனத்திலே திகில் எழச் செய்தீர் - மயிலை வாசிகளின் மனத்திலே மகிழ்ச்சி பெறும் படியாக, உத்தியோகங்
களை வாரி வழங்கினீர்.
பட்டம் தாணுப் பிள்ளை,
பெரேரா,
க. நாணு,
பூதலிங்கம் பிள்ளை,
இ.கேசவன்,
சங்குப் பிள்ளை,
பத்மனாப பிள்ளை.
வெட்கமா? துக்கமா? அச்சமா?

“மஹாநதிக்”கரையை அடுத்துள்ள இடத்திலே, ஒரிசா மாகாண சர்க்கார், நிலக்கரியிலிருந்து பெட்ரோல் தயாரிக்கும் தொழிற்சாலையும், யந்திரக்கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலையும், உழவுக்கான விஞ்ஞானக்கருவி தயாரிக்கும் தொழிற்சாலையும், தொடக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தத் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான உதவிகளையும், யோசனைகளையும், ஒரிசா சர்க்கார், பிரிட்டிஷ், அமெரிக்கா, ஜெர்மன், தொழிற்சாலை நிபுணர்களிடமிருந்து பெறுகிறார்கள், என்று ஒரு செய்தி பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

ஆனால், அதே நேரத்தில், சென்னை மாகாணத்தின் இயற்கைச் சக்திகளை விஞ்ஞான முறைப்படி பயன்படுத்தி, பொதுச் செல்வத்தை வளர்க்கும் திட்டம் ஏதும் தொடக்கப்படவில்லை.

சேலம் மாவட்டத்திலே இரும்புச் சுரங்கம் இருக்கிறது; தென்ஆற்காடு மாவட்டத்திலே, பழுப்புநிற நிலக்கரிச் சுரங்கம் இருக்கிறது; என்ற அறிக்கைகள், வெளியாகி, ஆண்டுகள் இரண்டுக்கு மேலாகின்றன.

அந்தச் சுரங்கங்கள் வளமுள்ளவை, கிடைக்கக்கூடிய பொருளும் தரமானவை, என்று கூறப்படுகின்றது.

இந்த இயற்கைச் சக்தியைப் பயன்படுத்திப் புதிய, பெரிய தொழிற்சாலைகளைத் தொடக்கினால், மாகாணத்தின் செல்வம் வளரும் என்று நம்பிக்கையூட்டப்படுகிறது.

இதற்கான திட்டமே தயாராக இருப்பதாக, ஆசையூட்டப்படுகிறது.

இதுபற்றி, டில்லி சர்க்காருக்குத் தகவல் தரப்பட்டிருக்கிறது; யோசனை கோரப்பட்டிருக்கிறது; அனுமதி எதிர் பார்க்கப்படுகிறது என்றெல்லாம் அமைச்சர்கள் அடிக்கடி பேசி ஆவலைக்கிளறியபடி உள்ளனர்.

இனி, மேலும் மேலும் வரி போடுவதன்மூலம், சர்க்கார் வளர்ந்து, கொண்டுவரும் செலவைச் சமாளித்துப் பொதுமக்களுக்கு நலன்தரும் பணிபுரிய முடியாது; புதுச் செல்வம் வளர வழி கண்டாகவேண்டும்; வாழ்க்கைத்தரம் உயர்ந்தாக வேண்டும்; அதற்குத் தொழில்வளம் பெருக வேண்டும்; என்று அறிவுரை வழங்கப்படுகிறது தாராளமாக.

திராவிடநாடு, வடநாடு என்று பேசுவது, ‘விஷங்கலந்தது என்று, நியாயம் பேசும் பெரிய மனிதர்கள் கூடத் தென்னாட்டிலே போதுமான அளவு தொழில் வளர்ச்சி இல்லை என்பதை உணர்ந்து, பேசவும் செய்கிறார்கள்.

இயந்திரத் தொழில் துறை நிபுணர்களான, சர். விஸ்வேஸ்வரய்யா போன்றவர்கள், இந்தியாவிலே, பெரிய தொழிற்சாலைகள் ஒரே பதிகுதியிலே, குவிந்திருப்பது, சரியல்ல என்பதையும், பொருளாதார நிலை, செம்மைப்பட வேண்டுமானால், தொழிற்சாலைகள், நாடு முழுவதும் பரவி இருக்க வேண்டும் என்பதையும், எனவே, தென்னாட்டிலே ஒரு புதிய தொழில் திட்டம் தயாரிக்கப்படவேண்டும் என்பதையும் வற்புறுத்தி வருகிறார்கள்.

எனினும், இதுவரையிலே, இயற்கைச்சக்தி தூங்கியபடிதான் இருக்கிறது - புதிய பெரிய தொழிற்சாலைகள் தொடக்கப்படவில்லை.

இரும்பு, நிலக்கரிச் சுரங்கங்களைப் பயன்படுத்தி, இரும்புத் தொழிற்சாலையை, இந்த மாகாணத்தில் தொடக்கவேண்டுமென்று, சென்னை சர்க்கார் கோரியதற்கு, டில்லியிலிருந்து இன்னமும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. ஏன்?

திராவிடநாடு - என்று சொல்வது தீது என்று கருதும் திவ்யபுருஷர்களைக் கேட்கிறோம், இந்த நிலை, சென்னை மாகாணத்துக்கு இருப்பது சரியா? முறையா? வாழ்வை வளமாக்குமா?

என்ன பரிகாரம் கண்டுபிடிக்க உத்தேசித்திருக்கிறார்கள்! ஏன், கண்மூடி மௌனியாகி உள்ளனர்?

ஒரிசா போன்ற சிறுமாகாணங்கள் கூடப் பெரிய தொழிற்சாலைத் திட்டங்களைத் தொடக்கத் திறனும் துணிவும் கொண்டு, டில்லி சர்க்காரின் அனுமதியையும் உதவியையும் பெற முடிந்தபோது, சென்னைக்கு ஏன் சீரழிவு இருக்கிறது! மாற்றாந்தாயிடம் வளரும் மகவாக இருப்பானேன்? இந்தநிலை மாற, என்னவழி? திராவிடர் கழகத்தாரின் திட்டத்தைத்தான், தீது என்று ஏறுகிறார்கள் - சரி - விளங்கும்போது விளங்கட்டும் - இப்போது, இவர்கள், இந்த நிலைமையைப் போக்க, என்ன வழி கண்டுபிடிக்கப் போகிறார்கள்? வாய் திறவாத காரணம் என்ன? வெட்கமா? துக்கமா? அச்சமா?

சென்னை மாகாணம், வெறும் விவசாயத்தையும், சிறு குடிசைத் தொழில்களையும் மட்டும் கொண்ட பட்டிக்காடு ஆகிவிடட்டும் - வடநாடு சீமையாகட்டும், என்று கூறிவிடுகிறார்களா?

சென்னையிலே, புதிய தொழில் வளத்துக்கான வசதியே கிடையாது என்று எண்ணுகிறார்களா?

சென்னை மாகாணத்திலே, புதிய தொழிற்சாலைகள் தொடக்குவது, வடநாட்டுத் தொழில் துரைமார்களுக்குக் கோபமூட்டும், அவர்களின் போட்டியைச் சமாளிக்க முடியாது என்று பயப்படுகிறார்களா?

அல்லது அந்தப் பிரச்னையை வலியுறுத்தினால், விளக்கினால், பிறகு திராவிடர்கழகப் பிரசாரத்துக்கும், தங்கள் பேச்சுக்கும் அதிக வித்தியாசமில்லை என்று டில்லி கூறிவிடுமோ என்று திகில்கொள்கிறார்களா?

தென்னாட்டுத்தொழிலபிவிருத்தி, வடநாட்டுத் தொழில் அவிபிருத்தி என்று பாகுபாடுபடுத்திப் பேசுகிறீரே, ஐயா! இதேதான் நாங்கள் இவ்வளவு காலமாகப் பேசிவரும் திராவிடநாடு பிரச்னை, என்ற எங்கோ, நாங்கள் கூறுகிறோமோ, என்று வெட்கப்படுகிறார்களா!

அல்லது, டில்லியின் பிடி, மிகப் பலமாக இருக்கும் இப்போது, இந்தப்பிரச்னையைப் பேசுவது, ஆபத்து என்று எண்ணி, காலம் வரட்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்களா?

பணிந்துவிட்டார்களா? பதுக்கிக் கொண்டுள்ளனரா? பயமா? வெட்கமா? இங்கு இரும்பையும் நிலக்கரியையும் தூங்கவைத்துவிட்டு, தரித்திரத்தைத் தொட்டுக் கொண்டிருக்கக் காரணம் என்ன?

8-12-1946