அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


லண்டனில் லெனின்

“வள்ளி! என்ன கோபம், ஏன் இந்த வாட்டம்? நான் தேனும் தினைமாவுங் கேட்டேனே, தந்தாயா? தெவிட்டாத ரசமே, குறையாதமதியே, குன்றாத ஒளியே, ஏன் என்னை இப்படி வாட்டி வதைக்கிறாய்?

போதும், போதும் உமது பவிஷுக்கு, சரசம் வேறு ஒரு கேடா? கன்னல் மொழிமாதே, எட்டிக்காய் மொழியால் பதில் உரைக்காதே! என் பவிஷுக்கு என்னடி!

ஒருமுகமா, ஆறு இருக்கின்றன! இருந்தும் பயன் என்ன? ஆறுமுகங்களுக்கும் ஏதேதோ வேலைகளை அமைத்துக் கொண்டீரேயன்றி, நமது சொத்துக்களைக் களவாடும் கயவரைக் கண்டுபிடித்துத் தண்டிக்க, ஒருமுகத்துக்கேனும் வேலை தரலாகாதா? உமது சூரத்தனத்தை விளக்கும் சுந்தர க்ஷேத்திரமான திருப்போரூரிலே, உமது தங்கவேல், களவு போயிற்று.

ஆஹா! என்ன அக்ரமம். இப்படியுமா நடப்பது?

ஏன் நடக்காது! நீர் என்னைத் தினைப்புனத்திலே களவாடினீர். உமது பக்தர்கள், உமது பொருளைக் களவாடுகிறார்கள்! ஆண்டவனுக்கேற்ற அடியார்கள்!!

கேலிசெய்ய இதுவா சமயம், வள்ளீ! நான் கேலிசெய்வதுதானா உமக்குத் தெரிகிறது. சுயமரியாதைக்காரர்கள் பூராவும், முருகனின் மூர்த்தி கரத்தைப் பாருமய்யா, கோயிலிலே புகுந்து கள்ளன் கொள்ளை கொள்கிறான், கோழிக்கொடியோன் கண்டுபிடிக்கவில்லை, தடுக்கவில்லை, என்று கூறி இதுதான், இந்தத் தெய்வங்களின் இலட்சணம், என்று கேலி செய்கிறார்கள். அதைக்கேட்டு, சோகமடைவதைவிட, சொரணை பிறந்தால் மேல் என்பேன்.

சு.மா,க்களா! அவர்கள்தான் ‘நானே’ கிடையாது என்பவர்களாச்சே!

உம்மை மட்டுமா? உமது அப்பாவைக்கூட அவர்கள் அவ்விதந்தான் சொல்கிறார்கள்.

அவர்கள் கிடக்கட்டும் அன்னமே! இப்படி நமது பொருள் களவு போய்க்கொண்டேயிருந்தால் நமது கதி என்னாவது? எந்தப்பாவி, எந்தப் பாதகன், இத்தகைய தீயசெயல் புரிந்திருப்பான்?

சர்வமும் தெரிந்தவராமே நீர். தந்தைக்கே உபதேசித்தீராமே, இந்தச் சாதாரணச் சங்கதி தெரியவில்லையா!

தெரிந்தால் சும்மா இருப்பானா! நேராகப் போலீஸ் ஸ்டேஷனுக்குப்போய், கம்ப்ளெயின்ட் கொடுத்து கள்ளனைக் கையும் பிடியுமாகப் பிடித்துக் கூண்டிலடைக்க மாட்டேனா!

இங்ஙனமாக, திரிபுர மெரித்தவரின் திருக்குமாரர், ஆறுமுக வடிவேலருக்கும், அவர் தினைப்புனத்திலே தேடிப்பிடித்த தத்தை மொழியாள் வள்ளிக்கும், கைலாயத்திலே ஒரு பக்கத்தில், உரையாடல் நடந்தது, ஊடல் வளர்ந்தது. பிறகு வழக்கப்படி “கூடலில்” குமரப்பெருமானும் குறக்குலவள்ளியும் ஒன்றுபடவே, சண்டை சரசமாயிற்று, பக்த கோடிகளின் உள்ளம் குளிர்ந்தது. சதிபதிகளின் சண்டை தீர்ந்ததேயொழிய களவாடப்பட்ட தங்கவேல், கிடைக்கவில்லை.

உடனே, பெரிய எழுத்தில் பத்திரிகையில் பிரசுரிக்கவும், என்று வீரன் குறிப்பெழுதி, மேலே உள்ள கட்டுரையைத்தந்தான் என்னிடம். வயிறு குலுங்க நகைத்தேன். வீரா! குறும்பு கொடி கட்டிப் பறக்கிறதோ என்று கேட்டேன். கைலாயமாவது, அங்கே முருகன் வள்ளி சண்டையாவது, அதை நீ கண்டதாவது என்னப்பா அளக்கிறாய், என்று கேட்டேன். வீரன், விறுவிறுப்புடன், ‘ஆமாப்பா! நான் சொன்னால் தானப்பா இத்தனை சந்தேகம் உனக்கு. நீறு பூசி, உருத்திராக்கம் அணிந்து எவனாவது இதுவன்று, இதைவிட நம்ப முடியாததைச் சதகமாகப் பாடினால், நம்புவாய், நமச்சிவாயா என்பாய், நான் சொன்னால்மட்டும் சிரிப்பாய்’ இதை நம்ப இஷ்டமில்லை உனக்கு. மேருவைச் செண்டாலடித்ததை நம்புவாய், கடலைக் குடித்த கதையை நம்புவாய். கல்லானைக்குக் கரும்பு தந்த கதையைக் கேட்பாய், காரைக்காலம்மை பேயுருக்கொண்ட கதையை நம்புவாய், வெள்ளை யானைமீது சுந்தரர்கைலாயம் சென்றதைக் கேட்பாய். நான் கைலாயத்திற்கச் சென்று வந்ததைக் கூறினால் மட்டும் நம்பமாட்டாய்! இது முறையா” என்று வீரன் கேட்டான்.

“அவர்கள் பக்தர்கள். அவர்கள் அதனையுஞ் செய்வர். அதற்குமேலும் செய்வர்... என்று நான் விளக்கங் கூறலானேன்.

நானும் பக்தன் தான். எந்த அரன் அருளால், தாய் பிடித்துக்கொள்ளத் தந்தையே வெட்டிக் கறியாக்கிச் சமைத்து, சோற்றுடன் இடப்பட்ட, சீராளன், உயிர் பிழைத்தெழுந்தானோ, எந்தச் சிவசக்தி முதலையுண்ட பாலனை வரவழைத்ததோ, எலும்பைப் பெண்ணுருவாக்கிற்றோ, எந்த முக்கண்ணனின் அருள், நாற்பது வேலி நிலத்தை ஒரே இரவிலே மணி சாயும் மாநில மாக்கிற்றோ, அதே “அருள்” அடியேனைக் கைலாயம் சென்று, கந்தனுக்கும் வள்ளிக்கும் நடந்த சண்டையைக் கண்டு, உன்னிடம் விண்டிட வைத்தது. நம்பு, சுகம் உண்டு. நம்பாவிடிலோ, நரகம் நிச்சயம் - என்று வீரன் கூறினான்.

வெகு நேரத்திற்குப் பிறகே வீரன், விளையாடுகிறான் என்பதை ஒப்புக்கொண்டான். நெடு நேரம், கைலாயமே சென்றுவந்தவன் போலவே பேசினான்.

தொடர்ந்தாற்போலப் பல திருட்டு நடந்துவருகிறதல்லவா! கடந்த வாரத்திலே திருப்போரூர் கோயிலிலே களவு என்று பத்திரிகைகளில் நானும் கண்டேன். அவைகளைக் குறித்துத்தான் வீரன் இவ்வளவு கேலி செய்தான்.

அண்டசராசரங்களையும் ஆக்கி ஆதரித்து அழிக்கும் வல்லமை கொண்ட கடவுளின் கோயில்களில், இத்தகைய களவுகள் நடக்கக் காணும் எவரும், வீரன் என்னிடம் கேட்டதுபோல் இந்தச் சில்லறைச் சேட்டைகளைக் கூடத் தடுக்க முடியாத தெய்வங்கள், இருந்து என்ன பயன்! இவைகளுக்குத் தேரும் திருவிழாவும், ஏன் செய்யவேண்டும்? சர்வ வல்லமை படைத்தவரின் பொருள் களவு போனால், சாதாரண போலீஸ் கண்டுபிடிக்கிறதேயொழிய “கடவுள் சக்தி” பயன்படக் காணோமே என்று யோசிப்பர் என்பது திண்ணம். அந்த யோசனையை மக்களிடை கிளப்பி, பகுத்தறிவு சுரக்கச்செய்ய, இந்தக் களவுகள் பயன்பட்டால் நான் களிப்படைவேன்! ஆனால், இத்தகைய களவுகள், மக்களின் பகுத்தறிவுக் கண்களைத் திறப்பதற்குப் பதிலாக, பக்தர்களின் பணப்பெட்டியைத் திறந்துவிடுகிறது. திருடுபோன வேலுக்குப் பதிலாக, வேறு வேல் செய்யப்படுகிறது!

கடந்த வாரத்திலே களவுபோன கோயில்களின் குருக்களும் தர்மகர்த்தாக்களும், இதற்குள் “தர்மப் பிரபுக்களை”த் தேடிப்பிடித்து “புண்ணிய கைங்கரியம் புரியுங்கள்” என்றுரைத்து, பணம் திரட்ட முனைந்துமிருப்பர்!

நாட்டுக்கு வந்துள்ள பேராபத்தைப் போக்க, நமக்குப் போதிய விமானங்களில்லை, என்கிறோம், சீரங்கம் அரங்கநாதருக்குச் சென்ற வாரத்திலே, தங்க விமானம் தயாரிக்கப்பட்டு விட்டதாம், செலவு ஐம்பதாயிரத்துக்குமேலாம்! நமது போர் வீரர்களுக்குத் தக்க ஆயுதம் தேவை என்று துடிக்கிறோம், அமெரிக்காவை இரவல் கேட்கிறோம், அரங்கநாதருக்கு அபயஸ்தம், வைரத்தால் இழைத்தார்களாம். அதற்கும் பெருந்தொகை செலவாம்! நமது இராணுவத்திற்குக் கவசங்கள் தேவை காசு இல்லை வாங்க. ஆனால் அரங்கநாதருக்கோ முத்து அங்கி தயாரித்து விட்டார்கள் மொத்தத்தில் ஒரு இலட்சத்துக்குமேல் செலவு. ஆனால் அவர், முத்தங்கி அணிந்து, அபயஸ்தத்
துடன், விமானமேறி, ஜப்பானியரை எதிர்ப்பேன், ஒழிப்பேன் என்று கூறிக்கொண்டு போர்முனைக்கா போவார்! அன்றோர் நாள் படுத்த ஆபத்பாந்தவர், எத்தனையோ ஆபத்துகளை நாடு கண்டு கலங்கினாலும், படுத்தவர் பதைத்தெழுந்திருக்கப் போவதென்னமோ கிடையாது! பயனற்ற செலவு செய்யும் பக்தகோடிகள், பகுத்தறிவைத் துணைகொள்வதுங் கிடையாது. இங்ஙனம் பழைமைப்புழு நெளிகிறது, பாழான இந்நாட்டிலே, பக்தர்கள் கொண்டாட, பாவாணர்பாட பாவையர் ஆட, பால்பழமேந்திப் பார்ப்பனர் பூரித்திட பட்டாடை உடுத்தி, பலமாலை அணிந்து, பணிபல பூண்டு, பல்லக்கு ஏறி பார் வேட்டையாடும் பரந்தாமன் திருக்கோயில்களிலே, கன்னக்கோல் கொண்டு கள்ளர்கள் தமது கைத்திறன் காட்டி, கம்பீநீட்டிய கதை இன்று நேற்று நடப்பதல்ல! பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. தாலிகள் களவாடப்பட்டுள்ளன, தங்கக்கிரீடங்கள் பறிபோயின, வாகனங்கள் வெட்டி எடுக்கப்பட்டன, வளையும் தோடும், பொன்தட்டும் வெள்ளி வட்டிலும், விதவிதமான ஆபரணங்களும், பலப்பல களவு போனதாக அவ்வப்போது, செய்திகள் வருகின்றன! விக்கிரகங்களே களவாடவும் படுகின்றன.

கிருஷ்ணதேவராயரின் கொலு மண்டபத்திலே ஒருநாள், கிளி ஒன்று திடீரெனப் பறந்துவந்தது. அரச அவையினர் அதிசயித்தனர். வந்த கிளி, வாய் திறந்தது, அரங்கா! என்று கூவுமோ, இராகமாலிகை பாடுமோ, என்று கொலுவிலிருந்தோர் யோசித்தனர். மன்னன், கிளியின் மொழியாது என்று கேட்க ஆவலுற்றவனானன். கிளி, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, ஒரு பாடலைப் பாடிற்று!

“முன்னாளறுபத்து மூவரிருந்தா ரவரில்
இந்நாளிலிரண்டு பேரேகினார் - கன்னான்
நறுக்குகின்றான் விற்றுவிட்ட நாகரச நம்பி
இருக்கின்றான் கிட்டினராயா!”

அறுபத்து மூன்று நாயன்மார்கள் உண்டு. அவர்களிலே இன்று இருவர் காணோம், காணாமற்போன இரண்டு விக்கிரங்களையும் கன்னான் நறுக்குகிறான். அந்த விக்கிரகங்களைக் கன்னானுக்கு விற்ற நாகரச சம்பி என்பான் இருக்கிறான், மன்னா! என்ற பொருள்பட, கிளிபாடிடவே, ஆச்சரிய முற்ற அரசன், “சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பார்கள், எனவே இந்தப் பாடலை கிளிக்குச் சொல்லிக் கொடுத்து அதன்வழியாக, செய்தியைத் தெரிவித்தனர் என்று யூகித்தறிந்து, ஒற்றரை ஏவினான். அவர்கள் திருவாரூர்க் கோயிலிலே, இருந்த அறுபத்து மூவரிலே, இரு விக்கிரகங்களை, கோயில் அர்ச்சகன் நாகரச நம்பி என்பான், களவாடிச் சென்று, கன்னானிடம் விற்றுவிட்டான் என்பதைக் கண்டறிந்து காவலனிடம் கூறினான். கடுங்கோபங் கொண்ட கிருஷ்ண தேவராயர் தக்க தண்டனையை அந்தத் திருட்டு அர்ச்சகனுக்குத் தந்தான் என்றோர் பழங்கதை உண்டு! கொடுக்கும் சொத்து பரிபாலிக்க முடியாது போனால், மேலும் அந்த ஆசாமியிடம், சொத்துத்தர யாருக்கும் மனமிராது, மதியிருந்தால்! வழுக்கும் என்று தெரிந்தபிறகு அவ்வழியிலேயே போகிறவன், வகையறியாத வக்கிரந்தானே! அதுபோல் திருக்கோயில்களில், களவு நடந்தும், கண்திறந்து பார்த்துக் கையும் பிடியுமாக பிடித்துத்தந்தோ கண்களை அவித்தோ, கை கால்களை மடங்கிடச்செய்தோ, கல்லாய்ச் சமைத்தோ, அத்தகைய கள்ளர்களைக் கடவுளர் அவ்வப்போதே தண்டித்து விட்டிருந்தால், சொத்து சேதமாகாது, வீரன் கேட்டது போன்ற கேள்விகளும் பிறக்காது.

பலமான கோயிலைக்கட்ட, மண்மேடுகளை மண்டபமாக்க, பாழுங்கிணறுகளைப் புதுப்பிக்க, பந்து விளையாட்டு, பஞ்சணைப் பிரவேசம், முதலிய உற்சவாதிகள் நடத்த, சித்திரான்னமும் சர்க்கரைப் பொங்கலும், சீனிக்குழம்பும் படைத்திட, வேத அத்யயனம் செய்யும் முப்புரி நூலோருக்குக் கைப்பொருள் தர, கண்ணாடிப் பல்லக்கும் கருடவாகனமும், கருநாக வாகனமும் கரிபரி வாகனங்களும் வகை வகையாகச் செய்து தர, சீமான்கள் சிரித்த முகத்துடன் முன்வருகின்றனர். தீ பிடித்தது, குடிசை சாம்பலாயிற்று, என்று கூலிமக்கள் கூவுவர், காடுமேடு சென்று, கையைத் தலையணையாகக்கொண்டு, கதி இலையே என்று அழு.

31.5.1942