அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மானமும் மனையும்!

அருமையான பிரசங்கம் சார்! அன்று மகாகனம் சாஸ்திரியார், சரியான சவுக்கடி கொடுத்தார், ஜெனரல் ஸ்மட்சுக்கு!

எவ்வளவு அக்ரமம் பாருங்கள், ஆப்பிரிக்காவிலே இந்தியருக்குச் சொத்து வாங்க உரிமை இல்லையாம், டர்பன் நகரிலே அவர்கள் ஒதுக்கிடத்திலேதான் வசிக்க வேண்டுமாம். வெள்ளையர் இருக்குமிடத்துக்குப் போகக்கூடாதாம். இதனை, அன்று சென்னை கோகலே மண்டபக் கூட்டத்திலே மகாகனம் சீனுவாச சாஸ்திரியார் பலமாகக் கண்டித்தார்.

இந்தியரின் சுயமரியாதையைப் பறிக்கும் ஆப்ரிக்க சர்க்காரின் சட்டத்தை இந்திய சர்க்கார் கண்டிக்கிறது.

காங்கிரஸ், முஸ்லீம் லீக், ஜஸ்டிஸ் கட்சி, இந்துமகா சபை, ஆகிய எல்லாக் கட்சிகளும் கண்டித்துள்ளன, இந்திய சர்க்காரும் கண்டிக்கிறார்கள்.

நாடெங்கும் மேலே குறிப்பிட்ட விதமான பேச்சுத்தான்! எந்த ஏடும் இதைத்தான் எழுதிடக் கண்டேன். நான் நம் நாட்டவருக்கு ஆப்பிரிக்க நாட்டிலே நேரிட்ட அவமரியாதை வேண்டும், என்று கூறவில்லை. ஆப்ரிக்க சர்க்காரின் போக்கைக் கண்டிக்காமலிருக்கப் போவதுமில்லை. ஆனால், இன்று இதற்கு மாரடித்தழும், மகாகனங்கள், இங்கு, மனுவின் திட்டம் இன்றும் நடைமுறையிலே இருக்கிறதே அதனை கண்டிக்கக் காணோமே என்று எண்ணியே ஏங்குகிறேன். தமிழகத்திலே தாழ்த்தப்பட்டு, கொடுமைப் படுத்தப்பட்டுக், கவனிப்பாரற்றுத், தாசராக இருப்பதைவிட, கடல் கடந்து ஆப்பிரிக்கா சென்றாலாவது, இங்குள்ள கண்ணியர்களின் ஆதரவு மொழியைப் பெறலாம் போலும் என்ற எண்ணம் உண்டாகாமலிருக்குமா, கூறுங்கள். எனக்கு மட்டும் அனுமதி கிடைத்தால் நிச்சயமாக நான் டர்பன் நகரம்போய் அங்கு பெருமையுடன் வாழ்வேன்!

என்னப்பா பரதா! அங்கே ஆப்பிரிக்காவிலேதான் இந்தியருக்கு, அவமானம் நேரிட்டிருக்கிறதாமே! ஜெனரல் ஸ்மட்ஸ் இந்தியரை அவமதிக்கும் அநீதியான ஒரு சட்டம் நிறைவேற்றி யிருக்கிறாராமே, அங்கே போனால் பெருமையாக வாழலாம் என்று கூறுகிறாயே, இது என்ன பித்தம், என்று கேட்பீர்கள்.

பித்தமன்று, தோழர்களே, சற்றே கேளும் சேதியை. இன்று, ஆப்பிரிக்காவிலே நடக்கும் அக்ரமத்தைப் பெரிய பெரிய தலைவர்கள் கண்டிக்கிறார்கள்; சர்க்காரும் கண்டிக்கிறது, பத்திரிகை
களெல்லாம் கண்டிக்கின்றன. இவ்வளவு “ஆதரவு” தமக்கத் தாய் நாட்டிலே இருப்பது கேட்டால், ஆப்பிரிக்காவிலே இருக்கும் இந்தியர், பூரித்துப் பெருமை கொள்ளமாட்டார்களா! நான் மட்டும் இப்போது டர்பன் நகரிலே இருந்தால், ஜெனரல் ஸ்மட்சை இலட்சியமும் செய்யமாட்டேன். என் தாய் நாடு எனக்காகப் பரிந்து பேசுகிறது பார், என்று பெருமிதத்துடன் பேசுவேன், ஆனால் தோழர்
களே, அவ்விதம் கூறிக்கொள்ள இங்கு முடியவில்லையே! இங்கு, ஒரு ஜாதி தவிர மற்ற எவரும், பன்னெடுங்காலமாகப் பட்டு வரும் அவமரியாதையைக் கண்டிக்க இத்தனை பெரிய தலைவர்கள் தலைநீட்டினதில்லையே. சொந்த நாட்டிலே அடிமையாக இருந்து, அழுத கண் துடைக்கவோ, ஆறுதல் கூறவோ ஆதரவு தரவோ, எவரும் முன் வராதது கண்டு, துயரால் தாக்குண்டு, நொந்து கிடப்பதைவிடத், தூரதேசம் சென்று, அங்கு அன்னிய சர்க்காரால் அவமதிக்கப்பட்டு, அதைக்கேட்டுச் சீறிடும் தாய்நாட்டாரின் தயவு கிடைக்கப் பெறுவதை நான் மகிழ்ச்சியோடு வரவேற்பேன். நான் சொல்வது சரியன்று என்று கருதினால், மேலே படியுங்கள் விஷயத்தை, பிறகு யோசியுங்கள்.

ஓய்! கேட்டயளோ, ஒரு சங்கதி. இந்தப் பஞ்சமா இருக்காளேன்னோ, அவா, இப்போ தலைகீழான்னா நிக்கிறா! வீதியிலே நடக்க வேணுமாம், திருக்குளத்திலே இறங்கணுமாம், கோயிலிலேயும் நுழைய வேண்டுமாம். விபரீதமான்னா இருக்கு, கலிகாலமன்னோ!

அது சரி, குப்பு தீட்சதரே! காலம் போற போக்குப்படி போகணுமேல்லோ. பஞ்சமான்று ஏளனமாகப் பேசிண்டிராதேயும், அவாதானே. பரம்பரையா நாட்டை ஆண்டவா? இப்போதுங்கூட, அவா இல்லாவிட்டா, நாட்டிலே என்ன காரியம் நடக்கும், யோசியுங்கோ. அவாளுடைய அதிருப்தியைக் கிளப்பிவிட்டா, மகா மோசமாகிவிடும், தீட்சிதரே.

ரொம்ப நன்னாயிருக்கு உம்ம வாதம், உசத்தி ஜாதி, மட்ட ஜாதின்னு ஒண்ணுமே கிடையாதோ. சர்வம் ஜெகன்னாதம் என்கிறீர். ரொம்ப இலட்சணம்.

ஆதிதிராவிடர்களுக்கு உரிமை தராமற்போனா இனி நாட்டிலே நாம் நிம்மதியாக வாழ முடியாது. உழவுத் தொழில், ஊர் காக்குந் தொழில் முதல், அவாள்தானே செய்துண்டு இருக்கா. அவாளுடைய உழைப்பை வாங்கிக்கொண்டு, ஊர்க்கோடியிலே ஒதுக்கிடத்திலே, சேரியிலே அவாளைத் தள்ளிவைப்பது மகாதர்மமோ?

சாஸ்திரிக்குப் புத்தி ஏன் இப்படிக் கெட்டுப்போச்சு. ஜாதி ஆச்சாரத்தை இப்படியா காற்றிலே பறக்கவிடுவது. ஏதோ, பஞ்சமா வேலை செய்கிறாள். அதுக்கு அவாளுக்கு வயிறாரச் சோறு போடவேண்டியது தர்மம், முறை. அதற்காக அவாளை நம்மோடு சரிசமமாகச் சேர்த்துக் கொள்வதா? ஜெகத்துக்கு இது ஏற்குமோ?

சனாதனச் சலசலப்பு இதுபோன்றதாகவே இருக்கும். நந்தன் காலமுதற்கொண்டு டாக்டர் அம்பேத்கார் காலம் வரையிலே இந்தக் கொடுமையை இங்கு ஒழிக்க, மகாகனங்கள் முயன்றனரா! இல்லை! அநீதியைக் கண்டால் அவர்கள் மனம் கொதிக்கவில்லையா? அக்ரமத்தை அவர்கள் கண்டிப்பதில்லையா? உரிமை உணர்ச்சியை அவர்கள் உன்னதமானதென்று உரைப்பதில்லையா? ஏட்டிலே, இவைபற்றி ஏழுகலம் எழுதுவர்; பேசுவர். ஆனால் நாட்டிலே நடக்கும் அநீதிக்கு அவர்கள் சிறுவிரலையும் அசைப்பதில்லை. ஏன்? இங்கு நடைபெறும் ஜாதி அகங்காரச் செயல், மதமமதை, குலச்செருக்கு, ஒரு சிறு கூட்டத்தை மேனி வாடாது, குனியாது நிமிராது, நகத்தில் அழுக்குப்ஞ்டாது, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தாது, வாழ ஓர் தந்திரத்திட்டம் வகுத்துக் கொடுத்திருக்கிறது. அதனைக்கெட வொட்டாமல் ஞ்பர்த்துக் கொள்ளவே தமது கல்வி கேள்விகளைப் பயன் படுத்துகிறார்களே தவிர, நாட்டுப் பழங்குடி மக்கள் நலிவதைக் கண்டு.

“நாயினும் கீழாய்
செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்
ஓயுதல் இன்றி,
அவர் நலம் எண்ணி
உழைத்திட நான் தவறேன்”

என்று அந்த வீரக்கவி பாரதிதாசன் போல், கூறுவார், எவருளர்! இன்றும், தீண்டாத ஜாதி என்றோர் கூட்டத்தைத் தாங்குகிறது இந்தப் புண்ய பூமி! எத்தனையோ முறை இருடபவாகன ரூடராகச் சிவபெருமான் வந்து வந்து போனாராம், பத்துமுறை அவதரித் தாராம் பரந்தாமன். பக்தகோடிகளோ எண்ணிக்கை யிலடங்காது, ஆழ்வாராதிகளும் நாயன்மார்களும் வந்து வந்து போயினர், பிரபந்தங்களுக்கும், திருவாசகங்களுக்கும், அருட்பாக்களுக்கும், கிரந்தங்களுக்கும், பாஷியங்களுக்கும், தத்துவார்த்தங்களுக்கும், விசாரணைகளுக்கும், சித்துகளுக்கும் ஜீவன்முக்தர்களுக்கும் கவிவாணர்களுக்கும் கலாரசிகர்களுக்கும் பஞ்சமில்லை; ஆனால் இந்தப் பாதகமோ இன்றுவரை நீங்கினதாகத் தெரியவில்லை. ஏட்டைக் காக்கக் கோட்டைகள் எழுப்பிடும் வீரர்களுக்குக் குறைவில்லை. நாட்டை நாசமாக்கும் ஜாதிக்கொடுமை எனும் நச்சரவை ஒழிக்கவோ, நாடி முறுக்குள்ளோர் இன்னமும் முன்வரக்காணோம். நாட்டுத் தலைவர்களின் நயனங்களோ, நேரிசை வெண்பாவிலும், அறுசீரடியிலும் இலயிக்கும்போது, நீரோ மன்னன், ரோம், தீயிலே மூழ்கியபோது வீணையிலே இலயித்திருந்தானாமே, அந்தச் சம்பவத்தையே நினைவிற்குக் கொண்டு வருகிறது.

“தீண்டாதோர்” என்று சூடிடப்பட்டுள்ள தோழர்கள் நிலைமை மட்டுந்தானா, கேவலமாக இருக்கிறது. முதலியார், நாயுடு, பிள்ளை, கவுண்டர், செட்டியார், நாயகர் என்ற பல்வேறு பட்டங்கள் சூட்டிக் கொண்டுள்ள “பெருங்குடி மக்கள்” இருக்கிறார்களே, அவர்கள் நிலை என்ன? இன்றும் பார்ப்பனருக்கு வேறு நீதி, இவர்களுக்கு வேறு. ஒன்றாக இருந்து சாப்பிட, ஒரே இடத்திலே நின்று தொழ முடியாது. பார்ப்பனரின்றி, சுபாசுப காரியங்களை நடத்த முடியாது. மோட்ச லோகக் கதவின் திறவுகோல் இன்றும் பார்ப்பனரிடமே இருப்பதாக இவர்களின் நினைப்பு. இன்றும் இவர்கள் யாவரும், கவர்னர், திவான், மந்திரி, மாநிதிக்கடையோர், மகா மகா பண்டிதர், மகா மகா ரசிகர், என்று, என்னென்ன விருதுகள் கொண்டு இருப்பினும், சூத்திரரே!! இந்த நிலைமை கண்டு, கொதித்து எழுந்து, படை திரட்டிப் போர்புரிந்து, பழமையை வீழ்த்திப் புத்துலகச் சிற்பத்தைச் சமைக்கவேண்டிய வீரர்கள், பழைய ஏட்டுக்குப் புதுப்பொருள் காண்பதிலும், சாய்வு நாற்காலியிலிருந்து கொண்டு சந்தமமைப்பதிலும், காலத்தைத் தள்ளுகின்றனர். தன் குஞ்சுகளைக் கொல்ல வரும் பருந்து முன், கோழி சீறிப் போரிடுகிறது, இங்கோ அரிமா போன்றோர் ஆமைகளாயினர், அந்தோ!

பதவிப்பாசம் சிலரைப் பாசறை புகவொட்டாது தடுக்கிறது. பணமெனும் பொறியிலே சிக்கினர் சிலர், பண்பாடு எனும் சருக்கு நிலத்திலே நர்த்தனம் செய்கின்றனர் வேறு சிலர்! ஆக, பார்ப்பனப் பிரமுகரோ, பாதகத்தைப் போக்க முன் வரமாட்டார்கள், குல நலத்தை உத்தேசித்து. தமிழ்த்தலைவர்களோ, குலை நடுக்கத்தால், இப்பணியாற்ற முன்வர மறுக்கின்றனர், தமிழர் விடுதலை பெற வழிதான் என்ன? இறைவன் திருவடி நிழலடைவதன்றி வேறொன்றும் வேண்டோம், என்று பாடிட வேண்டியதுதானா?

ஒரு நாய்மீது மற்றோர் நாய் பாய்கிறது, இரண்டும் குலைப்பது, அந்த எச்சில் இலைக்காக! அந்த இரண்டு நாய்களையும் அடித்துத் துரத்திவிட்டு, அந்த எச்சில் இலையிலே குழைந்து கிடக்கும் சோற்றைத்தின்று உயிரைக் காப்பாற்றுகிறானே, அவன் தமிழன், ஆரியனல்லன். எச்சில் இலை, வீட்டுச் சாக்கடை ஓரம்! நாயுடன் சண்டை, இது தமிழரின் நிலைமை!

தர்மச் சாப்பாடு திருவையாற்றுக் கல்லூரியிலே! அதனைச் சமபந்தியாக இருந்து சாப்பிட மறுத்தனர், பார்ப்பன மாணவர். அந்தப் பார்ப்பனர் சிறாரின் செயல் சரியே என்று ஜெகத்குருப் பார்ப்பனரும் மகாகனம் பார்ப்பனரும் ஆதரித்தனர். நாயுடன் எச்சில் இலைச் சோற்றுக்குப் போரிடும் தமிழ்த் தோழனுக்காகப் பரிந்து பேச, தமிழர் தலைவர்களுக்கு நேரம் ஏது? எவ்வளவு நிகண்டு படித்து முடிக்க வேண்டும்! தனிப்பாடல்களைத் திரட்ட வேண்டாமா? கலைக்குச் சேவை செய்ய வேண்டாமா? காவியங்களைப் பாதுகாக்க வேண்டாமா? கவிதா ரசத்தைப் பருகிக் களிக்க வேண்டாமா? அவர்களுக்கு, இந்தக் “கண்றாவிக் காட்சியை”க்காண நேரமேது? கலையிலே இலயிக்கும், அவர்களின் கண்முன் கானாறும், குன்றும், கோலமயிலும், கோகிலமும், மாதர்முகமும், பண்பாடும் வண்டினமும், தோன்றிடக் காரணமுன்டே தவிர, எச்சில் இலைக்கருகே இருந்து சோற்றுக்கு அலையும் தோழன், குப்பை கூட்டிவிட்டு கொடும் பசியால் குமுறும் தோழன், மலைபிளப்போன், கல்லுடைப்போன், கட்டை வெட்டுவோன், கை வண்டி இழுப்போன் ஆகிய பாட்டாளி மக்களின் உருவம் தெரியுமா?

இங்ஙனம் தம்மவரால் அலட்சியப்படுத்தப்பட்டு, எதிரிகளால் எள்ளி நகையாடப்பட்டு வாடிடும், தமிழ்த் தோழர்களுக்கு, விடுதலைக்கு வழி விழிப்பு, எழுச்சி உரிமைப்போர் என்பதன்றி வேறென்ன உளது?

இங்கு இருந்துகொண்டு இவ்விழிவுகளைச் சகித்துக்கொண்டு, கொடுமைகளைக் கண்டிக்க எவரும் முன் வராதது கண்டு, மனம் ஒடிந்து நடைப்பிணமாகக் கிடப்பதைவிடக் கப்பலேறி ஆப்ரிக்கா சென்று அங்கு அன்னிய சர்க்காரினால் அவமதிக்கப்படுவது அவ்வளவு பெரிய கொடுமை என்று எனக்குத் தோன்றவில்லை.

உன்னிடம் உதைபட்டுச் சாவதைவிட, நான் எங்காவது, ஏரி குளம் குட்டையிலே வீழ்ந்து இறப்பதே மேல் என்று கூறிடும் பரிதாபத்துக்குரியவர்களை நீங்கள் கண்டதில்லையா? அதுபோலவே, இங்குள்ள பலரும் கருதுவர், ஒரு நிமிடம், இங்கு தங்களுக்கு உயர்ந்த ஜாதி என்போர் செய்யும் அக்ரமத்தைப்பற்றி யோசித்தால் இன்றும், கோயில் பிரவேசம், குளத்தில் உரிமை பல கோடி மக்களுக்கு இங்கு இல்லை, இங்கு ஆள்வது ஜெனரல் ஸ்மட்சுமன்று! இன்றும், முழங்காலுக்கு மேல் வேட்டி கட்டி நடக்காத ஆதித்திராவிடரை, அடித்துத் துன்புறுத்தும் பண்ணைகள் உள்ளன! மேளமடித்துச் சென்ற குற்றத்திற்காக, சேரி கொளுத்தும் ‘சீலர்கள்’ இன்றும் வாழுகிறார்கள்! செருப்பணிந்தது குற்றமென்று, மிலாருகொண்டு “தீண்டாதானை” அடித்த மிராசுதாரர்கள் இப்போதும் உள்ளனர். இங்கு, பிரதி தினம் நடைபெறும் இத்தகைய கொடுமைக்காகக் கோகலே மண்டபத்திலே கூட்டங்கள் நடப்பதில்லை, மகாகனங்கள் வீராவேசச் சொற்பொழிவு களாற்றுவதில்லை, தேசியப் பத்திரிகைகள் தீப்பொறி கிளப்பும் தலையங்கங்கள் தீட்டுவதில்லை. இங்கு பழைய முறையைத் திடீரென்று மாற்றக்கூடாது, பொதுஜன அபிப்பிராயத்தை வளர்க்கா முன்பு அவசரப்பட்டு ஏதும் செய்ய முடியாது, சட்டம் செய்து பயன் இல்லை, இதற்கு ஏற்றபடி சமுதாய மனப்பான்மை மாறவேண்டும், படிப்படியாகத்தான் சீர்திருத்தம் செய்ய முடியும் - என்று, பலப்பல பேசுவர். வகுப்புத் துவேஷம் கூடாது என்று வாதிடுவர்! நமக்குள் இருக்கும் தகறாறு நாளாவட்டத்தில் தீர்ந்து போகும் என்று நயவஞ்சகம் பேசுவர், ஆனால் நடைமுறையை மாற்றவோ முன்வாரார், நாமத்தை வேண்டுமானால், ஆதி திராவிடர் என்று இருப்பதை அரிஜன் என்று மாற்றுவர், ஆனால் நிலையை மாற்ற, நீதியை நிலைநாட்டத் துணிவதில்லை.

“இந்தியாவுக்கு மட்டும் சுயராச்யம் தருவோம்” என்று ஒரு பிரகடனம் வெளியிட்டுவிட்டால், வீட்டுக்கோர் வீமன் கிளம்பி, வெள்ளைக்காரரின் எதிரிகளை நொடியிலே நொறுக்கிவிட மாட்டார்களா, என்று வீரமும் விவேகமும் ததும்புவதாகக் கருதிக்கொண்டு பேசுகின்றனரே. தேசியத்தியாகங்கள், அவர்களைக் கேட்கிறேன், “நாட்டு நண்பர்களே! நவயுகவீரர்களே! பாரதச் சூரர்களே, சுயராச்யத் தீரர்களே! ஒருநாள், உமது தலைவர்கள் கூடி நாளை முதல் இந்நாட்டிலே, தீண்டாமை இருக்கக்கூடாது, ஜாதிக்கொடுமை ஒழிய வேண்டும், ஒரு ஜாதி உயர்வு மற்றது தாழ்வு என்ற ஏற்பாடு ரத்தாகிவிட்டது” என்றோர் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டுச் சேரியுங்கூடாது அக்கிரகாரமும் கூடாது, பள்ளுப்பறை எனும் பழிமொழியுங்கூடாது பார்ப்பனன் எனும் பாதக மொழியுங்கூடாது இங்கு ஒரே குலம், என்று கூறினால், ஆறு கோடி ஆதித்திராவிடர் அகங் களித்து, “அப்படியா, இடிந்ததா இறுமாப்பெனும் கோட்டை, தகர்ந்ததா தர்ப்பா சூரரின் ஆதிக்கம், ஒழிந்ததா பேதம், என்று முழக்கமிடுவர், அந்த முழக்கம், அமெரியின் செவியில் வீழ்ந்தால் எப்படி இருக்கும். “தந்தோம் சுயராச்யம்” என்ற தந்தி இலண்டலினிலிருந்து பறக்காதா!
வேங்கையைப் பாயாதே என்று சாந்தோபதேசம் செய்து, நயவஞ்சகத்தை இனிவிட்டுவிடு என்று நரிக்கு நீதிநெறி உரைத்துப் பலன்காண முடியுமா? காலையிலே தலைகுனிந்து நின்று ‘ஆமாம்’ கூறும் பேர்வழி, மாலையிலே கடையிலிருந்து திரும்பும்போது, வெறியால் வீரனாவது போல, பார்ப்பனியம், பதுங்கும் நேரத்திலே, பயந்ததுபோல் பாசாங்கு பேசும், ஆனால் சனாதனச் சோமரசம் பருகியதும், மீண்டும் தலைகால் தெரியாது ஆடும், இத்த இயல்பை மாற்ற முடியாதெனவேதான், சொந்த நாட்டிலே சுயமரியாதைக் காகப் போரிடுக என்று நான் கூறுகிறேன். ஆப்பிரிக்காவில் நேரிட்ட அவமரியாதைக்காக அங்கம் பதைத்தழும் “தலைவர்களை”க் கேளுங்கள், “ஐயா! இங்கே நடக்கும் இந்த இழிவுகள் கொடுமைகள் ஒழிக்க முன்வர மாட்டீர்களா என்று, மகாகனங்களைக் கேளுங்கள், இங்குள்ள சனாதனியும், அவன் பாதந்தாங்கிகளும் செய்யும் அநீதியைவிட ஜெனரல் ஸ்மட்ஸ் செய்வது கொடுமையா? டர்பன் நகர் கொடுமை சகிக்காது, அங்குள்ள ஓர் ஆதித்திராவிடத் தோழர், தாய் நாடு திரும்பி விடுகிறார் என்றால், அவர், இங்கே வந்ததும், சேரிக்குப்போக வேண்டுமென்று கூறுவீரே யல்லாது, அக்ரகாரத்திலே இடமளிப்பீரா? என்று சாஸ்திரிகளைக் கேளுங்கள். வெள்ளையருக்கு ஒரு நீதி கருப்பருக்கு வேறு நீதி என்ற முறையிலே காரியம் நடத்தும் ஸ்மட்ஸ் ஆட்சியைக் கண்டித்து விட்டுத் தாய் நாடு திரும்புவோருக்கு, இங்கு நீங்கள் தரப்போகும் நிலை என்ன என்பதைத் தயவு செய்து கூறுங்கள். “அங்கேண்டி மகளே ஆலாய்ப் பறக்கிறாய், இங்கு வந்தால் காற்றாய்ச் சுழலலாமே” என்ற முதுமொழிப்படி இருக்குமே தவிர, இன்று உங்கள் ஆதரவுக்குப் பாத்திரமாக உள்ளவர்களின் நிலை, இங்கு வேறுரீதியானதாக இருக்குமா, கூறுங்கள் - என்று சாஸ்திரிமார்கைளக் கேளுங்கள். ஜெனரல் ஸ்மட்சை கண்டிக்கும் அந்தக் கண்ணியர்கள், இங்கு ஆட்சி செய்யும் சனாதனத்தைச் சாடிடத்தயாரா என்று கேளுங்கள், “ஆம்” என்று உரைத்து, உரைக்கேற்பச் செயல்புரியின் நான் இங்கிருக்க விழைவேன், இல்லையேல். இங்கிருப்பதைவிட, டர்பன் நகரவாசமே மேல் என்று கருதுவேன்.

அங்கு வெள்ளையன் வாழும் இடத்திலே நான் வாழ இடம் வாங்க முடியாதே தவிர, வெள்ளையனைக் கண்டதும், “சாமி” என்று கூப்பிட வேண்டி இராது; கடவுளிடம் என் குறையைக் கூறிட அந்த வெள்ளையனுக்குப் பணம் தந்து, தாசனாகக் கொள்ள வேண்டி இராது; நான் பார்த்தால் அவன் தன் உணவு கெடும் என்றோ நான் தொட்டால் அவன் உடல் தீட்டாகுமென்றோ கருதி என்னை எட்ட நில், கிட்ட வராதே தொடதே என்று கடிந்துரைக்க மாட்டான். ஆப்பிரிக்காவிலே சொத்து வாங்க உரிமை இல்லை, இங்கோ “இகபரம்” எனும் இரண்டுக்கும் வேதியனின் தயவின்றி, எக்காரியமும் நடைபெறாதே! கலாரசிர்கள் கண்களிலே ஒத்திக்
கொள்ளும் கம்பன், விதியும் அவர் ஏவ நிற்கும் என்று பார்ப்பனருக்கேயன்றோ “விதி”யை நடத்துவிக்கும் அதிகாரத்தை அளித்திருக்கிறார். இத்தகைய குருபீடமாக இராது, ஆப்ரிக்க வெள்ளை வேதியரின் ஆட்சி, ஆப்ரிக்காவிலே, மனை இல்லை வாங்க, இங்கோ மானம் பறி போகிறது, பார்ப்பனீயத்தால் இரண்டிலே எது அதிக கொடிது? யோசியுங்கள். ஆப்பிரிக்கா நாட்டிலே, மனை பெறும் உரிமையைப்பெற நாடே சீறி எழுந்திடக் காண்கிறோம், இங்கு பல கோடி மக்கள், மானத்தை இழக்கும் விதமாக வாழ்க்கை முறை வைதீக ஏற்பாட்டின்படி அமைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு இருக்கிறதே இதற்காக நாட்டிலே, சுயமரியாதைக்காரர் தவிர வேறு எக்கூட்டமும் ஏன் என்று கேட்கவும் துணிவின்றி இருக்கிறது. மனைபெற நடத்தும் கிளர்ச்சிப், போர் பெரிதா, மானம்பெற நடத்தப்படும்போர் பெரிதா? நீங்கள் வேண்டுவது, மண்ணா, மானமா! பதில்கூற வேண்டாம் - செயலிலே நாட்டுங்கள்.

மானமென்ற நல்
வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்த என்மறவேந்தர்
பூனைகள் அல்லர்
அவர்வழி வந்தோர்
புலிநிகர் தமிழ்மாந்தர்.
- என்று தமிழரைச் சித்தரிக்கிறார் பாரதிதாசன் உண்மைதானே?

2.5.1943