அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மாணவர் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா

8.11.50 காலை 9 மணியளவில், சென்னை செயின்ட்மேரி மண்டபத்தில் கூடிய திராவிட மாணவ முன்னேற்றக் கழக முதல் மாநாட்டினை தோழர் சி.என். அண்ணாதுரை திறந்துவைத்தார்.
அப்பொழுது அவர் ‘ஆளவந்தாருக்கு எதற்கெடுத்தாலும் பயம் வந்து விடுகிறது-நான்குபேர் சேர்ந்திருந்தால் பயம். நாடகமாடினால் பயம், புத்தகம் படித்தால் பயம். பாடல் பாடினால் பயம், கூட்டங்களானால் பயம், அஞ்சி அஞ்சி சாகிறார்கள் இந்த ஆளவந்தார்கள். ஏனோ அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை. கூறலாம்போல் தோன்றுகிறது. அவர்கள் பயந்து 144 தடையுத்தரவுகளை கணக்கில்லாமல் வீசுகிறார்கள். துஷ்பிரயோகம் துளியும் தயக்கமின்றி நடத்துகின்றனர்’ என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-

முன்னணிப் படை
“நான் பலாத்காரத்தில் நம்பிக்கையில்லாதவன். அதுவும் மாணவர்களை பலாத்கார முறைகளில் ஈடுபடுத்த அன்றும் சம்மதித்ததில்லை. இன்றும் சம்மதிக்கவில்லை., என்றுமே சம்மதிக்கமாட்டேன். திராவிடக் கழகத்திலே, முன் வரிசையிலே இருந்த படையே திராவிட முன்னேற்றக் கழகமாக இன்று விளங்குகிறது. இன்று நாட்டிலே ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியின் விளைவாக, எங்கு திரும்பினும் திராவிட மாணவ அணிவகுப்பைக் காண்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணிப் படையே திராவிட மாணவர் இயக்கம்!

இப்பொழுது நம் கருத்து பரவாத கல்லூரியைக் காணமுடியவில்லை உயர்நிலைப் பள்ளி இருப்பதாகத் தெரியவில்லை. திராவிட இயக்கம் இல்லாத கல்வி நிலையங்கள் நம் நாட்டில் இல்லை. நம் கருத்துக்களை எண்ணங்களை எடுத்துச் சொல்லாத தமிழாசிரியர்கள்-ஆசிரியர்கள் இல்லை. அவர்களை மிரட்டிடும் சர்க்காரும் இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். மரத்தடியிலிருந்து மாடிப்படிவரை நம் கருத்து பரவியுள்ளது.

திராவிடர் இயக்கம், எங்கும், எந்த உருவிலும் பரிணமிக்கிறது! இதனை ஆளும் சர்க்கார் மறந்துவிடவோ, மறைத்துவிவோ மறுத்து விடவோ முடியாது!

அவர்கள் பணி
ஆனால் மாணவர்களை அனாவசியமான கிளர்ச்சிகளில், அவசியமற்ற பலாத்கார வேலைகளில் ஈடுபடச் சொல்லவில்லை. அதே நேரத்தில் அவர்களை மரக்கட்டைகளாகவும் இருக்கச் சொல்லவில்லை!

அவர்கள் நாட்டு மக்கள் மதியை இருளாக்கும் மூட நம்பிக்கைகளை முறியடிக்க, பகுத்தறிவைக் கொல்லும் பொல்லாத எண்ணங்களைப் போக்க, அஞ்ஞானத்தை விரட்ட, நல்லறிவுப் பிரசாரத்திலே ஈடுபடவேண்டும்.

எதிர்ப்புகள் ஏராளம்
இ“ந்த அறப்பணியிலே ஈடுபடும்போது எதிர்ப்புகள் ஏராளம் வரும். சாதிக்கொடுமையை சாடினால் வகுப்புவாதியென்று வசைமொழி பேசுவர். மத ஊழல்களை எடுத்துரைத்தால் நாத்தீகன் என்று நிந்திப்பர். ஏழை, பணக்காரர் என்ற பேதம் ஏன் என்று கேட்டால் மாஸ்கோ கூலியென்று தூற்றுவர். அமெரிக்கா முதலாளித்துவத்தைத் தாக்கினால், சோவியத் சர்க்காரோடு சேர்ந்து சோரம் போகிறார்கள் என்று திட்டுவர்.

அந்தி சாயும் நேரம் உதிர்ந்த மலரிதழ்கள் பட்டாலும் மருளுவான். அவனுக்கு இதழுக்கும் புழுவுக்கும் வித்தியாசம் தெரியாது. பாம்பை பழுதையென்பான். பழுதையைப் பாம்பு என்பான். ஆம் அவனுக்குக் கண்களிலே மஞ்சள் பரவியிருந்ததால்! நம் அறநெறிப் பிரசாரத்தை தெளிந்த சிந்தனையோடு கவனித்தால், நம்மை தூற்றமாட்டார்கள் போற்றாவிட்டாலும்!

நூறு ஆயிரமாகட்டும்!
சர்க்காரின் சட்டங்கள் கொட்டும்பொழுது அடக்குமுறைகள் தாக்கும் பொழுது அந்த துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் தைரியம் வேண்டும். அவர்கள் அளிக்கும் தண்டனைகளை ஏற்கும் மனத்திடம் வேண்டும். நம் இயக்கத்திலே அத்தகைய மன உரம் கொண்ட மாவீரர்கள் ஏராளம் இருக்கின்றனர். நான் தினந்தினம் பார்க்கின்றேன். அத்தகைய நெஞ்சுரம் வளரட்டும்! அத்தகைய செயல் வீரர்களின் தொகை நூறு ஆயிரமாக வளரட்டும்! இந்தப் பாசறை ஏற்பட்டுவிட்டால் நம்நாடு நம்முடைய தாக்கப்படும் அத்தகு அறப்பணிக்கு அழைக்கிறேன். அன்போடு, ஆர்வத்தோடு உரிமை இருக்கிற காரணத்தால்! அறிவுப் பிரசாரத்திலே ஈடுபட வேண்டுமானால், அறிவுக் கூர்மையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின் திறமையைப் பெருக்கிக் கொள்ள மாணவ மாநாடுகள் உதவி செய்யவேண்டும்.

வெளியே குழப்பம், உள்ளே குமுறல்!
மாணவர்களுக்கு நாட்டின்நிலை நன்றாகத் தெரியவேண்டும். உலகின்போக்கு புரியவேண்டும். உலகத்து நாடுகளிடையே இன்று ஏற்பட்டுள்ள மோதுதல், தாக்குதல், குழப்பம்-இவைகளை அறிந்திருக்க வேண்டும். வடகொரியா எதிர்த்துத் தென் கொரியா போராடுகின்றனர். இன்று திபேத் நாட்டுக்குள்ளே சீனத் துருப்புகள் புகுந்துவிட்டன. காஷ்மீரத்திலே இன்னமும் தகராறு. நேபாளத்திலே நல்ல நிலை இல்லை பாகிஸ்தானோடு சுமுகமான போக்கு இல்லை. இப்படி இந்தியாவின் வடக்கு எல்லா நாடுகளின் சங்கிலித் தொடர்பைப் பாருங்கள். வெளியே குழப்பநிலை. நாட்டின் உள்ளே இந்த நேரத்தில் ஆட்சியாளர். ஜனநாயக உணர்ச்சியை வளர்க்கவேண்டும். அதிருப்தியைக் குறைக்கவேண்டும். ஆசியாவின் நெருக்கடியைத் தீர்க்கவேண்டுமானால், இந்தியக் குடிகளின் நல்லெண்ணத்தை வளர்க்கவேண்டும். வெளியிலே குழப்பம், உள்ளேயும் குமுறல் கூடாது. ஆரியர், திராவிடர் என்ற நாம் பேசினால் உள்நாட்டுக் குழப்பம் செய்கிறோம் என்கிறார்கள். இந்திய ஒற்றுமையைக் குலைக்கிறோம் என்று குற்றஞ் சாட்டுகிறார்கள். இப்படி மாகாண சர்க்காரும் கூறுகிறது. மத்திய சர்க்காரும் புலம்புகிறது.

இந்திய எல்லைக் குழப்பங்கள் தீரவேண்டுமானால் திராவிட மாணவர்கள் ஒத்துழைப்பு வேண்டும். ஆனால், அவர்கள் ஜனநாயக உணர்ச்சி நசுக்கப்படும்பொழுது ‘சும்மா’ இருக்காட்டார்கள். உலகத்திற்கே எடுத்துக்காட்டுவார்கள்.

திராவிடமாணவர்கள் என்றால் தனியானவர்களல்ல. ஜெர்மன் நாட்டு மாணவர்களை ஜெர்மன் மாணவர்கள் என்பதுபோல, பிரான்ஸ் நாட்டு மாணவர்களை, பிரஞ்சு மாணவர்கள் என்று அழைப்பது போல இங்கிலாந்து தேசத்து மாணவர்களை, ஆங்கில மாணவர்கள் என்று கூறுவது போல திராவிட நாட்டிலே வாழும் மாணவர்களை திராவிட மாணவர்கள் என்கிறோம். அதுபோலவே ஆரிய மாணவர்கள் என்றாலே, இவர்களுக்கு எதிரிகள் என்று அர்த்தமல்ல! நாட்டின்பேரால், இனத்தின் பேரால் பெயரிட்டு அழைக்கிறோம். ஆகவே, சர்க்காரின் எல்லைத் தகராறுகள் தீர்த்துவைக்க இவர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றுணர வேண்டும். அதற்காவன செய்யவேண்டும்.

இலட்சிய கீதம்
துவேஷப் பிரசாரம் செய்ய நாம் கூறவில்லை. நாம் பிறந்த நாட்டை நமதாக்கப் போராடுகிறோம். திராவிட நாட்டுப் பிரச்சினையை நாடாள வந்திருப்பவர்கள் சென்ற ஆண்டு அலட்சியப்படுத்தினார்கள். இன்றோ ‘பேசத் தெரிந்த’ மந்திரிகள் எல்லாம் இதுபற்றியே பேசுகிறார்கள். ‘கை தூக்கவே தெரிந்த’ சட்டசபையினர் கூட வாய் திறந்துவிட்டனர்! ஆம், நம் இலட்சிய கீதம் கவர்ந்துவிட்டது, ‘கனம்களின் கருத்தை மகிழ்ச்சி!

ஓமாந்தூரார் சந்தேகம்
ஓமாந்தூரார் நல்லவர், உத்தமர், உள்ளத்தூய்மை கொண்டவர் அவருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை போக்குவதிலே பெருமை யடைகிறேன். அவர் கூறுகிறார் திராவிட நாடு அடையமுடியாதது. அப்படிப் பிரிவினைப் போரில் வெற்றி கண்டாலும் பெருமை இல்லை பெருமையிருப்பதானாலும் பிரியும் நிலை இன்று திராவிட நாட்டிற்கு இல்லை. அத்தகைய நிலை பிறந்தாலும் பிரிவினை முயற்சிக்கு இவ்வளவு பிரயாசை எடுத்துச் செய்வதால் இலாபம் இல்லை என்று! அவருக்குச் சந்தேகம் வளர்ந்து கொண்டே போகிறது.

அவரே கேட்கிறார். கப்பற்படையில்லையே இங்கு. என்ன செய்வீர்கள் என்று அண்டைநாடுகளாக உள்ளவை எழுப்பவேண்டிய கேள்வி. அமெரிக்கா சொல்லவேண்டிய கேள்வி. ஆனாலும் ஓமாந்தூரார் கேட்கிறார்!

கப்பற்படை
வாக்கு சாதுர்யத்தால் ஏற்பட்டுவிடக் கூடியதல்லதான் கப்பற்படை அதற்கு மரம். கரி, இரும்பு போன்ற எத்தனையோ பொருள்கள் தேவைதான் நாம் அறிவோம் இதனை!

அவரும் அறிந்திருப்பார், தமிழ்நாட்டுப் பண்புகளை! உலகமே அதிசயிக்கத் தக்கநிலக்கரிச் சுரங்கங்கள், இரும்புச் சுரங்கங்கள் இங்கு உண்டு கடலும், கடலைச்சார்ந்த இடமும் நெய்தல் என்று பெயர் பெறும். அங்கு வாழ்வோர் பரதவர் என்று அழைக்கப்படுவர், அவர்கள் கப்பற்படைகளை நடத்திடும் மாலுமிகளாக இருந்தனர் என்றெல்லாம் பழைய இலக்கியங்கள் கூறுகின்றன. நம் நாட்டு மன்னர்கள் அயல் நாடுகளின் மீது படையெடுத்துச் சென்றுள்ளனரே. கப்பற்படையின் துணையோடு!

அன்று தமிழக நாவாய்களில் வேண்டுமானால் பீரங்கிகள் கிடையாது. துப்பாக்கிகள் வைத்து சுடும் முறை கிடையாது. அவை அன்று இல்லாத காரணத்தால்! ஆனால் அலைகடலையும் அடக்கிவிடும் அரும் வீரர்கள், அடல் ஏறுகள் உண்டு. கப்பற்படை நடத்திடும் திறமை உண்டு.
திராவிட நாட்டுப் பிரிவினையை டெல்லியிலே ஏற்றுக்கொண்டு ஐக்கியநாட்டு சபையிலே ஆமோதிக்கப்பட்டு, தனிநாடு அமைக்கப்பட்டு விட்டால் ஓராண்டில் உலகமே வியக்கும் கப்பற்படையை கட்டிக் காட்ட முடியும்!

சர்ச்சில் கேட்கவில்லை
இந்திய சுதந்திர போராட்டம் நடந்த பொழுது இந்தியாவிற்கு சுதந்தரம் பெறும் தகுதியில்லை. ஏனெனில் இந்தியாவிற்கு கப்பற்படையில்லையென்று சர்ச்சில்துரை கேட்கவில்லை என்றாலும் கேட்கிறார் ஓமாந்தூரார். வெள்ளைக்காரன் சுயாட்சியை மட்டுமல்ல. கப்பற்படையும் சேர்த்தே கொடுத்தானே!

சிறு நாடாம்!
கனம் பக்தவத்சலம் கூறுகிறார். திராவிடநாடு சிறிய நாடாம்! இவர் ஏதோ ஆசியாவுக்கே அமைச்சர் என்று நினைத்துக் கொண்டாரோ, என்னவோ, அறியோம். அவர் கூறுகிற சிறுநாட்டின் ஒரு இலாகாவுக்குத்தான் இவர் மந்திரி! நாம் கூறும் திராவிடநாடு, இன்றைய சென்னை மாகாணம் நம் திராவிட நாடு, ஜெர்மனியை விடப் பெரியது! இத்தாலியை விடப்பெரியது! ஸ்பெயினைப் போல பல மடங்கு! டென்மார்க்கை விட எத்தனையோ மடங்கு ஸ்வீடனைப் போல பல ஸ்வீடன்கள் கொண்டது! நேபாளத்தைவிட நிச்சயமாகப் பெரியது! திபேத்தை விடப் பெரியது என்று திடமாகச் சொல்வேன்.

பெரிய நாடுதான் சீனா-ஷியாங்கே-ஷேக்குகளின் இருப்பிடமே தெரியவில்லையே இன்று-ஏன்? ஐரோப்பாவையே ஒன்றாக்கி தங்கள் எதேச்சாதிகாரத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று வலைவீசிய முசோலினி, தன்நிலை மறந்து போராடிய இட்லர் தோற்றுத்தானே போயினர் இறுதியில்!

அட்லாசைப் புரட்டிப் பார்க்கட்டும், சென்னையோடு, மற்ற நாடுகளை ஒப்பிடட்டும், பிறகு சொல்லட்டும், சிறிய நாடு என்பது சிந்திக்க வேண்டிய பிரச்சினையா என்று!

தமிழகத்தில் மட்டுந்தான்!
சில காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி கேட்கிறார்கள். திராவிட நாட்டுப் பிரிவினையை ஆந்திரர் ஆதரிக்கிறார்களா, மலையாளத்தார் மதிக்கிறார்களா, கன்னடத்தார் கேட்கிறார்களா, இல்லையே! பின் தமிழகத்தில் மட்டும் பேசிப் பயனில்லை என்று கூறுகிறார்கள்! அவர்களை நான் கேட்கிறேன், தமிழ்நாட்டிலே பேசிவருகின்ற இந“தப் பிரச்சினையை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? அதனை முதலில் சொல்லுங்கள். ஆந்திரரும், பிறரும் ஒப்பாததால்தானா நீங்கள் எதிர்ப்பது அதனைத் தெளிவுபடுத்துங்கள் என்று!

இந்தக் கேள்வியைக் கேட்பவர்கள் இரண்டு ரகத்தவர். நமக்கு உதவியாக இருந்து, அங்கெல்லாம் பிரசாரம் செய்துவர வசதிகள் கிடைக்கச் செய்யும் விருப்பமுடையவர் மற்றொரு சாரார் தங்களுக்கும் அந்த வசதி தரும் நிலை இல்லையே என்று ஆயாசப்படுபவர். ஆனால் இப்பொழுது பேசுபவரோ இந்த இரண்டு ரகத்திலும் சேராத, திராவிட நாட்டுப் பிரிவினையையே ஒத்துக் கொள்ளாத காங்கிரஸ்காரர்கள்!

ஆந்திரத்திலே, கேரளத்திலே, கன்னடத்திலே போய்ப் பிரசாரம் செய்ய நேரமுமில்லை, வசதியுமில்லை, அங்கெல்லாம் போகாததற்குக் காரணம், அவர்கள் இதனை ஒப்புக்கொள்ள மாட்டார்களே என்ற அச்சம் அல்ல! அவகாசம் இல்லை! அவ்வளவுதான்.

ஆந்திரம், கேரளம், கன்னடம், தமிழகம், தனித்தனி சுதந்திர நாடுகளாக இருக்கும். அதற்குத் தனித்தனியான சட்ட சபைகள் உண்டு. ‘டெல்லி’ இருக்காது இங்கு! இவை நான்கும் சேர்ந்து திராவிட கூட்டாட்சியாக இருக்க வேண்டும் என்பது நம் ஆசை இதுதான் நாம் கேட்கும் திராவிட நாட்டின் படப்பிடிப்பு!

சிலருக்கு இது புரியாமலும், வேறு சிலர் புரிந்ததும் புரியாதது போல பாசாங்கு செய்திட வேண்டிய நிர்ப்பந்தமும் நிலையும் இருக்கின்றன.

ஆந்திரர் ஒப்புக்கொண்டார்களா, மலையாளத்தார் மதிக்கின்றனரா இதனை என்றெல்லாம் நம்மைக் கேட்கிறவர்களைப் பார்த்து நானும் கேட்கிறேன். விடை கூறட்டும் ஆந்திரர்கள் எப்பொழுதாவது திராவிடநாடு வேண்டாமென்று கூறியதுண்டா? பிரகாசம் பேசியிருக்கிறாரா? கோட்டிரெட்டி கூறியதுண்டா? கேளப்பன் கேட்டதுண்டா? கோபால் ரெட்டி சொல்லியிருக்கலாம் ஏனெனில் அவர் நாடாளும் மந்திரி?

மலையாளத்தார் ஏற்கவில்லையென்றே வைத்துக் கொள்வோம் அதனால் திராவிடநாடு பிரச்சினை இறந்துவிட்டது என்றா அர்த்தம்? இல்லையே! மலையாளத்தாருக்கு நம் பிரிவினை முயற்சி புரியாததால் விரும்பாமலிருக்கலாம். அவர்களுக்குப் புரியவைக்கக் காலதாமதாகுமே தவிர, பிரச்சினை எப்படி செத்துவிடும்?

பாகிஸ்தானைப் பார்!
பாகிஸ்தான் வேண்டுமென்று ஜின்னா கூறியபோது யாரும் எளிதில் ஒத்துக்கொள்ளவில்லை. பஞ்சால முதலமைச்சர், யூனியனிஸ்ட் கட்சித் தலைவர் சர்.சிக்கந்தர் ஹயத்கான் எதிர்த்தார். சட்டசபையிலே கூட பாகிஸ்தான் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லைப்பற மாகாணத்தில் கான்சாகேப் சட்டசபையிலே கூடாது என்று முழங்கினார். வெளியிலே கான் அப்துல் கபார்கான் எதிர்த்து பிரசாரம் செய்தார். சிந்துவிலே, பிரதமர் அல்லாபக்ஷ் எதிர்த்தார். வங்காளத்திலே பஸ்லுல் ஹக் முதலில் பாகிஸ்தானுக்கு விரோதியாகவே இருந்தார்.

பாகிஸ்தான் பகுதியைச் சேராத பம்பாயிலே இருந்த ஜின்னா, ஐக்கிய மாகாணத்திலே லியாகத் அலிகான் பாகிஸ்தானின் பகுதிகளான சிந்து, பஞ்சாப், எல்லைப்புறம், வங்களாம், ஆகிய பகுதிகளே எதிர்த்தும், ஹயத்கான், பஸ்லுக் ஹக், கான் சகோதரர்கள் போன்ற பாகிஸ்தான் எல்லைக்குள்ளே வாழ்ந்த தலைவர்கள் மறுத்தும் பாகிஸ்தான் கிடைத்தது திராவிடத்திலே வாழ்கிற நம்மால், திராவிட நாட்டை ஏன் பெற முடியாது?

காப்பியடிக்கிறோமாம்!

பாகிஸ்தானைப் பார்த்து நாம் ‘காப்பி’யடிக்கிறோம். ‘கனம்கள்’ கூறுகிறார்கள்! அவர்கள் விளக்கத்திற்காக அல்ல. இங்கே கூறுவது முன்னரே பல முறை எடுத்துக் கூறியதை மீண்டும் ஒருமுறை கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

1939-ல் திருவாரூரில் கூடிய ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் தான் தமிழ்நாடு தமிழருக்கே என்று தீர்மானம் போட்டோம். நாம் எல்லோரும் திராவிடர் என்றே சர்க்கார் ஜனத்தொகை கார்டுகளில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தீர்மானித்தோம். அதாவது லாகூர் தீர்மானம் உருவாவதற்கும் முன்னாலேயே நாம் நாட்டுப் பிரிவினை கோரியிருக்கிறோம்.

பம்பாய்க்குச் சென்றிருந்த நம் நண்பர் பி.பாலசுப்பிரமணியம், ஜின்னாவைக் கண்டு பேசியபொழுது தமிழ்நாட்டுப் பிரிவினையைப் பற்றிக் கூறினார். அப்பொழுது அவர் நாங்களும் அத்தகைய தீர்மானம் ஒன்று போடலாம் என்றிருக்கிறோம் என்று குறிப்பிட்டார். அந்த சமயத்தில் அவர் ‘விடுதலை’ நிலையத்திற்கு இதுபற்றிக் கடிதம் எழுதியிருக்கிறார். ஆகவே, ‘காப்பி’ யடிக்கிறோம் என்று அர்த்தமற்ற முறையில் உளறவேண்டாம்.

நம்பிக்கையிருந்தால்...!
திராவிட நாடு வேண்டுமென்று சிலர் பேசுகிறார்கள். அதுவும் அது சின்னஞ்சிறு நாடு. தனித்து வாழமுடியாத நாடு என்கிறார்கள் சிலர். சின்னஞ் சிறு நாடில்லை திராவிடநாடு, மற்ற உலக நாடுகளைப் பார்க்கும் பொழுது! சிறு நாடென்றே வைத்துக் கொள்வோம். இருந்தால் என்ன? ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதற்காகவே ஐக்கிய நாட்டு சபை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நாணயமான நம்பிக்கையிருக்குமானால் சிறு நாடு, பெரிய நாடு என்றே பேச்சே கூடாது.

வீதி வழியே ஒரு பலசாலி வரும் பொழுது, அவன் நம் எதிரியோ அக்கிரமக்காரனோ என்ற சந்தேகம் ஏற்படும்பொழுது பயம் உண்டாகும். சிறுநாடுகளுக்கு, பெரிய நாடுகளைக் கண்டு பயம் ஏற்படலாம் எப்பொழுது? பெரிய நாடுகளுக்கு நாடு பிடிக்கும் எண்ணம் இருக்கும்வரை! உள்ளொன்று வைத்து புறமொன்று பேசிடுவோரே இப்படி சிறியநாடு பெரியநாடு என்று பேசுவர்.
நான் கேட்கிறேன்-இப்பொழுது ரஷ்யா, இந்தியாவின் மீது படையெடுத்தால், இந்தியா, சமாளிக்க முடியுமா, அமெரிக்காவின் துணையில்லாமல்? பெரிய நாடுதானே, இந்தியா! முடியுமா, படையெடுப்பைத்தாங்க?

இமயத்தில் புலிக்கொடி
சீனாவின் முதல்வர் மாசேதுங் துணிவோடு சொல்கிறாரே, இமயத்தில் எங்கள் செங்கொடி பறக்கும் என்று! திபேத் பற்றிய இவர்கள் அறிக்கையை அலட்சியப்படுத்தியது மட்டுமல்ல, இந்தியப் படைகள் வெளியேற வேண்டும் என்று திடமாக கூறிவிட்டாரே!

திராவிட நாடு மட்டும் தனியாக இருந்திருந்தால், நாங்கள் கூறியிருப்போமே, இமயத்தின் மீது எங்கள் புலிக்கொடி பறந்திருக்கிறது என்று! மாசேதுங் கூறியபொழுது வாயடைத்துத்தான் இருந்தீர்கள்! நேருவின் கையில் இமய முதல் குமரி வரை உள்ள இந்தப்பெரிய உபகண்டத்தையே கொடுத்திருக்கிறோம். யுத்த மந்திரியின் பெயரே பலதேவ் சிங்-இருந்தும் வாய் மூடியிருக்கிறார்கள்.

முதலாளித்துவ வேட்கை
முதலாளித்துவம் கேட்க வேண்டும், பெரியநாடு தேவையென்று! ஏகாதிபத்திய வாதிகள் பெரிய நாடு வேண்டும் என்பற்குப் பின்னணி பாடவேண்டும் பெரிய நாடாக இருந்தால் முதலாளிக்கு ஒரு லைசன்ஸால் பெரிய வியாபரம் செய்ய முடியும் பெரிய மார்க்கட் கிடைக்கும். முதலாளி பெரிய பங்களாவைத் தேடுகிறான். குடியிருக்க! பெரிய மார்க்கட்டை நாடுகிறான். வியாபாரம் செய்ய! இந்தியா மூன்றாகப் பிரிந்தால் மூன்று லைசன்ஸ்கள் தேவை. ஆகவே திராவிட நாடு பிரிகிறதென்றால் முதலாளித்துவம் முணு முணுக்கலாம். ஏகாதிபத்தியம் நாடு பிடிக்கும் ஆசையிருப்பதால் துடி துடிக்கலாம்! மற்றவர்கள் பதைப்பதேன்?

திராவிடநாடு பிரிந்து தனித்திருக்கும்பொழுது அந்நிய நாடு படையெடுத்தால் உலக நீதிமான்கள், தூங்குவார்களா? அவர்களிடம் நம்பிக்கையில்லையா? கொரியாவிலேயே நடப்பதை நாம் அறியமாட்டோமா? பாகிஸ்தான் பார்த்திருக்குமா? இந்துஸ்தான் எனக்கென்னவென்று இருந்து விட முடியுமா? ஐக்கிய நாட்டு சபைதான் ஏன்?

பின், ஏன் ஐந்துகண்ணன் பிடித்துக்கொள்வான், மூன்றுகண்ணன் கடித்துவிடுவான் என்று குழந்தைகளுக்குக் கூறுவதுபோல கூறிப் பயம் காட்ட வேண்டும்?

வீரமில்லையே, அன்றும் இன்றும்!
வடநாட்டினருக்கு என்றுமே வீரமிருந்ததாகச் சரித்திரம் கூறவில்லை. இந்து தேச சரித்திரத்தைப் படித்துப் பாருங்கள்.

அலக்சாந்தர் வந்தான். அடி பணிந்தனர். கோரி வந்தான். கும்பிட்டனர். கஜினி வந்தான். காலடியில் வீழ்ந்தனர். தைமூர் வந்தான். பணிந்தனர். இப்படி வந்தவருக்கெல்லாம் மண்டியிட்டதாகத் தானே சம்பவங்கள் உள்ளன வடநாட்டிற்கு அன்றும் வீரமில்லை, இன்றும் வீரமில்லை.

இப்பொழுது காஷ்மீரில் பார்க்கிறோமே! காஷ்மீரம், இந்தியப்பிரதமர் நேருவின் தாயகம், இந்துப்பண்டிதர்கள் ஏராளம் வாழுமிடம். நேரு, தன் குடும்பத்துடன் மாதமொரு முறை சென்றுவரும் இடம் அது மட்டுமா? அவரிடம் படையிருக்கிறது. ஆயுதங்கள் உண்டு. நாளைக்கு இத்தனை கோடி செலவாகிறது என்று பட்டியல் காட்டுகிறார்கள். இருந்தும் சொல்கிறார்கள். பாகிஸ்தான் படையினரிடம், காஷ்மீரின் ஒரு பகுதி இருக்கிறதென்று! பாகிஸ்தான் படைகள் மளமளவென்று முன்னேறுகின்றன. முறியடிக்கின்றன என்று துளியும் வெட்கமில்லாமல் இந்நாட்டு பத்திரிகைகள் எழுதுகின்றனவே!

வீரமில்லா வடநாட்டோடு ஒட்டிக்கொண்டிருப்பதால் திராவிடத்திற்கு என்றுமே ஆபத்துதானே! அதனால் இன்பம் ஏதும் இல்லையே!

புல்லைத் தின்னென்றான்!
இந்த காங்கிரஸார் ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளாகி விட்டன. இன்னமும் உணவு, உடை, கல்வி எதிலுமே வசதியான நிலை ஏற்படுத்தித் தரமுடியவில்லை.

ஆண்டு ஏற ஏற கொடுக்கும் அரிசியின் அளவுதான் குறைந்து வருகிறது. பதினாறு பன்னிரண்டாகி, பத்தாகி, எட்டாகி, ஏழாகி இன்று ஆறாகிவிட்டது!

அரிசிக்குப்பதில் கோதுமை, காய்கறிகள், அதுவும் இல்லையென்றால், பருத்திக்கொட்டை, புளியங்கொட்டை சாப்பிடுங்கள் என்று சொல்கிறார்கள் மந்திரிகள்.

இப்படித்தான் அன்றொருநாள், பிரஞ்சு நாட்டிலே ஒரு புல்லன் அவன் ஒரு கவர்னர், ரொட்டிக்கிடைக்கவில்லையே என்று கேட்ட மக்களிடம் புல்லைத் தின்னுங்கள் என்று கூறினான். அகம்பாவத்தோடு! கொடுங்கோலர்கள் தாங்கள் வீழ்ச்சியடைவதற்கு முன்னால் அபார தைரியத்துடனிருப்பாராம். அப்படித்தான் அவன் அகங்காரத்தோடு பேசினான்.

ஆனால் புரட்சியின்போது அவனைக் கொல்லத் துடித்த கூட்டத்திற்கிடையிலே நின்ற ஒருவன், ‘கொல்லாதீர்கள் இவனை, நில்லுங்கள்’ என்றான். ‘பொல்லாதவனாயிற்றே இவன். நல்லவர்கள் இவனை நடமாட அனுமதிக்கமாட்டார்களே-இவனையா கொல்ல வேண்டாம் என்கிறாய்’ என்று கேட்டனர், கூடியிருந்த கூட்டத்தினர் ‘இதோ வருகிறேன்’ என்று ஓடினான். ஓடினான்! திரும்பி வந்தான் ஒரு புல் கட்டோடு-அவன் வாயிலே புல்லை வைத்து, ‘மெல்லடா’ என்று மிரட்டினான். ‘இனிக் கொல்லுங்கள்! என்று கூவினான். கவர்னரை வெட்டினர் மக்கள் அவர்களின் வேகம் தணிந்தது.

இப்பொழுது புளியங்கொட்டையைத் தின்னச் சொல்லும் மந்திரிகளுக்கு எதிர்காலத்தில் இந்த நிலை வரவேண்டும் என்று கூறவில்லை. நான் கூறுவது சரித்திர புத்தகத்திலே ஒரு ஏடு! அந்த கதி இவர்களுக்கு வரக்கூடாது என்பது நமது ஆசை.

நாம் இப்படிக் கூறுவதால், நம்மை ஒழித்துவிடப் பார்க்கிறார்கள். சிறையிலே போடுகிறார்கள். தடியடி தருகிறார்கள். ஆனால் ஒன்று சொல்வேன். இந்த சர்க்காருக்கு-நாங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பேசினாலும், பேசாவிட்டாலும் எங்கள் இயக்கம் இருக்கும் அழிந்துவிடாது என்பதை மட்டும் நினைவில் வையுங்கள்! இன்று சர்க்காரின் நிலை மாறியிருக்கிறது அவர்களின் அலட்சியம் மாறி, அடக்கிவிடலாமா என்ற முயற்சியிலே ஈடுபட்டுள்ளனர். இதிலேயும் அவர்கள் அடையப்போவது மாணவர்களே!

மாணவர்களே!
மாணவமணிகளே திராவிடத்தின் நிலம், நீர், எல்லை-அளவு வளங்களை நன்றாகக் கணித்துக்கொள்ளுங்கள். நாட்டோரிடம் நல்லமுறையில் பிரச்சாரம் செய்யுங்கள். ஆறுகள், சுரங்கங்கள், கனிப்பொருள்கள், வேறுபல வளங்களை புள்ளிவிவரங்களோடு சேகரியுங்கள். எங்களுக்கு அவைகளைச் செய்ய ஓய்வில்லை! அதற்காக எங்கள் பக்கதுணையாக இருந்து பணியாற்றுங்கள். பூகோலப் படங்களைத் தேடுங்கள்-இந்தியாவிற்குள் எத்தனை பிரான்ஸ், எத்தனை ஜெர்மனி, எத்தனை ஸ்பெயின் நாடுகள் உள்ளன என்று காட்டுங்கள்.

பாகிஸ்தான், இந்துஸ்தான் ஆகிய நாடுகள் பிரிவதற்கு முன்னாலே பாகிஸ்தான் பகுதியிலே உள்ள மாணவர்கள் அங்கு விளையும் பருத்தி, சணல், கோதுமை, விளைவுகளைப்பற்றி புள்ளிவிவரங்களோடு தெரிந்து மக்களுக்குச் சொல்லி வந்தனர். அதுபோல நீங்களும் திராவிடம் பிரியுமுன் பெரும் பணியாற்றுங்கள்.

கல்வி பயிலும் காளைகளே, நாட்டுமக்கள் மனத்தைப் பக்குவப் படுத்துங்கள், அறியாமையை ஓட்டுங்கள். மூட எண்ணங்களை விரட்டுங்கள் அதற்கு ஏற்றமுறையில் உங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நாட்டுப் பிரிவினைப் போராட்டத்திற்கு மக்களைத் தயார் செய்யுங்கள். நமக்குத் தனியான சரித்திரம். தெளிவான ஆட்சி பரம்பரை இல்லை. எனினும் புகழோடு வாழ்ந்த இனத்தின் வழி வந்தோர் நாம். நீங்கள் நாட்டின் நல்ல தொண்டர்களாக விளங்குவீர்கள் என்ற நம்பிக்கை தரும் மகிழ்ச்சியோடு, பூரிப்போடு, மாநாட்டைத் திறந்து வைக்கிறேன்” என்று கூறிமுடித்தார்.

(திராவிடநாடு 3.12.50)