அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மாணவர் தீர்ப்பு!
இந்தி மொழியைக் கட்டாயப்படுத்துவது தீது - நோக்கம், விளைவு எதை நோக்கினாலும், இது, தீயதே யாகும் என்பதை எடுத்துக்காட்டி, இந்தத் திட்டம் தவறானது என்பதைத் தெரிந்திருந்தும், இவனை எதிர்க்காதிருப்பது, அறவோர், ஆண்மையாளர் செயலாகா என்பதால், நாம், கட்டாய இந்தியை எதிர்த்து அறப்போர் நடத்தி வருகிறோம்.

ஆட்சியாளர்கள் தமக்குள்ள இருவித ஆற்றலையும் - அடக்குமுறை, பிரசார முறை - எனும் இருமுறைகளின் மூலமும், நமது முயற்சியை முறியடிக்க முயன்ற வண்ணம் உள்ளனர்.

ஆளவந்தார்களுக்கு ஆணவம் இருப்பதும், எத்தகைய எதிர்ப்பு கிளம்பினும் எதிர்த் தொழித்தாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதும், நோயாகிவிட்டது - அதிலும்,அவர்களுக்கு இன்று கிடைத்துள்ள, அதிகார பலம், பெரியதோர் பிடிவாத குணத்தைத் தந்திருக்கிறது. கட்டுமஸ்தான தன் உடலைத் தானே கண்டுமகிழ்ந்து, கனைத்துக்கொள்ளும் பயில்வான் போன்ற நிலை பெற்றுவிட்டனர். கூப்பிட்ட குரலுக்கு குண்டாந்தடிகளையும் துப்பாக்கிகளையும் தூக்கிக்கொண்டு ஓடிவர, அணியணியாகப் போலீசும், அதற்குச் செலவிடப் பணமும், திரித்து எழுதவும், உள்ளதை மறைக்கவும் ஏடுகளும், இருக்கும் போது, ஆளும் கட்சியினருக்கு. ஆணவ நிலை பிறப்பதும், நம்மிடம், யார்தான் என்ன செய்யமுடியும் என்று கொக்கரிக்கும் குணமும், எப்படியும் எதிர்ப்பை முறியடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையும் பிறப்பது சகஜம்.

ஆனால், அறப்போர் நடாத்தும் நாமோ, அததகைய வசதிகளற்றவர்கள். எந்த மக்களின் பொருட்டுப் பாடுபடுகிறோமோ, அவர்களிலேயே பலரால் எதிர்க்கப்படுபவர்கள் - எனினும் நாம் தளராது அறப்போரை நடத்தி வருகிறோம் - நமது உறுதி குலையவில்லை, நம்பிக்கை தளரவில்லை. எக்கம் குன்றவில்லை. ஏன்? என்ன காரணம் இதற்கு? நாம் நடத்தும் அறப்போர், தூய்மையானது, நியாயமானது, நேர்மையாளர்கள் பலரும், நமது போக்கு சரி என்பதை உணர்ந்து உரைத்திருக்கிறார்கள். கல்வித் துறையில் நிபுணர்களும், மொழிவல்லுநரும், நாம் நடத்தும் மொழிப் போராட்டத்தின் அடிப்படையை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள், என்ற, இவைகளெல்லாம், நமக்கு உள்ள உறுதியைத் தந்து வருகின்றன.

இந்தப் பேருதுவியினால்தான், நாம், மிகப் பிடிவாதமாகத் தமது பலத்தால் நம்மை நசுக்கக் திட்டமிடும் ஆளும் கட்சியினரின் தாக்குதலைத் தாங்கும் சக்தியைப் பெற்றிருக்கிறோம்.

நிபுணர்கள், கட்டாய இந்தித் திட்டத்தைக் கண்டித்த தமது கத்துரையை வழங்கும்போதெல்லாம், நாம் புது உற்சாகம் பெறுகிறோம் - நாம் மேற்கொண்டுள்ள செயல், நியாயமானது, தேவையானது என்ற நம்பிக்கை பலப்படுகிறது, அறப்போர் நடக்கிறது.

மும்மொழிச் சுமையினைச் சிறுவர் தாங்கார், என்று கல்வித் துறையினர் கூறும்போது களத்திலே, அடிபட்டு வரும், போர் வீரனின் புண்ணுக்கு மருந்திட்டால், அவன் பெறும் இன்பம் போன்றதோர், இன்பம், நமது மனத்திலே தோன்றுகிறது, அறப்போர் நடக்கிறது.

இந்தி விஷயத்திலே, இவ்வளவு வெறிகாட்டுவதும், அதைத் திணித்தே தீரவேண்டுமென்று திட்டமிடுவதும், தேவையற்றது, என்று பண்டிதநேருவே கூறும்போது, நமக்கு உற்சாகம் பிறக்காமலிருக்க முடியுமா! அறப்போர், அவர் கருத்தை அறிந்த பிறகு, தளருமா? ஆளவந்தார்களுக்கு அவர்களின் நிலை காரணமாகப் பலம் இருக்கிறது என்பதைத் தவிர, நியாயமோ, நிபுணர்கள் நேர்மையாளர்கள் ஆகியோரின் கருத்துரையின் மூலம் கிடைக்கும் பலமோ, இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது.

அறப்போர் தொடர்ந்து நடத்த நடத்த, நாம், நமது உறுதியைக் காக்கும் உற்சாகத்தைப் பெற்ற வண்ணம் இருக்கிறோம். நாளாகவாக நாடாள்வோருக்கு, அவர்களிடம் உள்ள அடக்குமுறைப் பலம் தவிர வேறு நியாயம் தரும் பலம் இல்லை என்பது விளங்கி வருகிறது. நமக்கு மட்டுமல்ல - ஆள்பவர்களுக்கே அந்த விளக்கம் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது.

இந்தியைத் திணிப்பது இன்னினன் காரணங்களுக்காக - அதன் பயனாக இன்னின்ன கேடுகள், தமிழர்க்கு ஏற்படும், ஆகவேதான் நாங்கள் அந்தத் திட்டத்தை எதிர்க்கிறோம். எதிர்க்கும் நாங்கள் இவ்விதமான இன்னல்களுக்கெல்லாம் ஆளாகிறோம், என்று, நாம் எடுத்துக் கூறுவது மக்களின் மனத்தை நம் பக்கம் திருப்பி விடுகிறது. நமது அறப்போருக்கு ஆதரவு பெருகுகிறது, அணிவகுப்புப் பலப்படுகிறது என்பதறிந்த ஆட்சியாளர்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டு, உண்மை ஊருக்குள் பராவதிருக்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டு, தடை பல விதித்து, நமது பிரசாரத்தைத் தடுக்க வேண்டிய நிலையில் அவர்களைக் கொண்டுவந்துவிட்டது.

ஏழ்மையால் ஏற்பட்ட இயலாமை ஒருபுறமிருக்க, அந்த ஏழையைக் கம்பத்திலேயும் கட்டிவைத்துவிட்டு, பிறகு, மிலார் கொண்டு அவனை அடிக்கும், காட்டு ராஜாக்களைப்பற்றிக் கேள்விபட்டிருக்கிறோம் - அந்தக் காட்டுராஜாக் களை, வீரர் என்றோ பலவான் என்றோ யாரும் கருதுவதில்லை - அடிபடும் ஏழையை வறுமை முதலில் கொட்டிற்று, வஞ்சனையால் வாட்டப்பட்டான், கம்பத்திலே கட்டப்பட்டுமிருக்கிறான், இந்நிலையில் தான் அவனை அடிக்க முடிந்தது, காட்டு ராஜாவால் என்பதை அறிவர் - அறிந்தவர் அவன் போக்கைக் கேவலமானதாகக் கருதுவரேயன்றி, பாராட்டிப் பேசார்.

திராவிடர் கழகம் அரசியலில் இடம்பெற்று, வசதியை அனுபவிக்கும் கட்சி அல்ல, அதனை எதிர்க்கும் கட்சி ஆட்சிபீடத்தில் அதிகாரக் கோலத்துடன் உள்ள கட்சி, இதுமட்டும் போதாதென்று, திராவிடர் கழகத்தின் சொல்லையும் செயலையும் இருட்டடிக்கவும் பிரித்துக் காட்டவும் ஏடுகளை ஏவியுள்ளனர். இவ்வளவும் போதாதென்று, கழகத்தின் பிரசாரத்தையும் தடுத்து வருகின்றனர். இவ்வளவும் செய்து கொண்டு, இந்தி எதிர்ப்பை நாங்கள் சட்டை செய்யவில்லை என்று வீம்பும் பேசுகிறார்கள்! இதனைப் பாராட்ட, மிகமிக மட்டரகங்களால் மட்டுமே முடியும்!
அறப்போர் நடத்தும் நாம், இந்த நிலையைக் காண்கிறோம் - நமது போராட்டத்தின் உண்மையான தூய்மை அப்போது நன்கு நமக்குப் புலப்படுகிறது, புதியதோர் சக்தியும் பிறக்கிறது, அறப்போர் நடக்கிறது.

நமக்கு இந்த உரம் தருவதற்கு உதவும், பல சம்பவங்களிலே, மிக முக்கியமானது, குறிப்பிடத்தக்கது, மாணவர் உலகு, இந்திப் பிரச்னையிலே, கொண்டுள்ள போக்கும் - தந்துள்ள தீர்ப்பும்.

கட்சிமாச்சரியம் - பதவி பிடிச்சண்டை - அரசியல் வீம்பு - இவைகள் மாணவர்களுக்குத் தேவையற்றவை - அவர்களிடம் அவை ஆண்டவும் செய்யாது. அத்தகைய பண்பும் பருவமும் கொண்ட மாணவர்கள், தமிழகத்திலே, பல்வேறு இடங்களிலே பள்ளிக்கூடங்களிலும், அறிவுக் கழகங்களிலும், இந்திப் பிரச்னை பற்றிப் பேசியிருக்கிறார்கள் - விவாதித்துமிருக்கிறார்கள் - தீர்ப்பளித்துமிருக்கிறார்கள்.

நல்லாட்சியை விரும்பும் யாரும் பொதுவான பிரச்னைகளில், அறிவுத் துறையிலே உள்ள மாணவர்கள் கொண்டுள்ள கருத்தை அறியவும், அந்தக் கருத்துக்கு மதிப்பளிக்கவும், விரும்புவர், முன்வருவர்.

அதிலும், யாரய்யா எதிர்க்கிறார்கள் இந்தியை! ஒரு சிறு கூட்டம், சு.ம.க்கள்!! என்று கேலி பேசும் ஆட்சியாளர்கள், மாணவர்களின் மனப்போக்கு, இந்தப் பிரச்னை சம்பந்தமாக எப்படி இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டாமா! கவனித்தனரா! இல்லை கவனிப்பரா? சந்தேகம்!

அவர்களுக்கு, இவைகளைக் கவனிக்க நேரம் எது - என்று கூறுவார் சிலருண்டு, அந்தக் குறையைத் தீர்த்துவைக்க, அறப்போர் நடத்தும் நமது போக்குகககு அரண்போல் மாணவர்களின் கருத்து அமைந்திருப்பதைக் களிப்புடனும், பெருமையுடனும் எடுத்துக் காட்டுகிறோம்.

பல ஊர்களிலே, மாணவர்கள் நடத்திய கூட்டங்களிலும், கட்டாய இந்தி கூடாது - சென்னை சர்க்காரின் திட்டம் இகாது - என்றே தீர்ப்புக் கிடைத்திருக்கிறது - வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு.

மாணவர்கள் நடத்திய கூட்டம், அரசியல் கூட்டங்களல்ல - கட்சிப் பிரசாரக் கூட்டங்களல்ல பிறர் தூண்டுதல் செய்ய - வற்புறுத்த! மாணவர்கள், அளித்திருக்கிறார்கள் தீர்ப்பு! இந்தி கூடாது என்று தீர்ப்பு! மதிவழி நடக்க விரும்பும் ஆளவந்தார்கள், என், மாணவர் தந்துள்ள தீர்ப்பை மதித்து நடக்க முன்வரக் கூடாது, என்று கேட்கிறோம்.

அந்தக் கூட்டங்களில், பெரியாரோ அவர்தம் சீடர்களோ கலந்து கொள்ளவில்லை - எனினும், கிடைத்துள்ள தீர்ப்பு, இந்திக்கு, எதிராகத் தான்! எப்படி முடிந்தது? ஏன் சிந்திக்கக்கூடாது ஆட்சியாளர்கள்?
23-7-48

தாராபுரம் மெத்தாடிஸ்ட்மிஷன் போதனாமுறை பள்ளியில் நடைபெற்ற சொற்போர்க் கூட்டத்தில், இந்தி வேண்டாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
27-9-48

திருமங்கலம் பி.கே.என். உயர்நிலைப் பள்ளியில் திருவள்ளுவர் தமிழ்ப் பேரவையில், தமிழ்ப்புலவர் கூத்தப்பர் தலைமையில் நடந்த சொற்போர்க் கூட்டத்தில், 12 மாணவர்கள் இந்தி வேண்டும் என்றும் 249 மாணவர்கள் இந்தி வேண்டாமென்றும் தீர்ப்பளித்தனர்.
8-8-48

சென்னை கிருத்தவக் கல்லூரி உயர்நிலைப்பள்ளி, திருவள்ளுவர் தமிழ் மாணவர் கழகத்தில், இந்தி வேண்டும் என மூன்று மாணவர்கள், மற்றப் பெருந்திரளான மாணவர்கள் யாவரும் இந்தி வேண்டாம் என்றும், தீர்ப்பளித்தனர்.
16-8-48

திருச்சி, தூய சூசையப்பர் கல்லூரித் தமிழ்ப் பேரவையின் கூட்டம், லாலி மண்டபத்தில் நடைபெற்றது - இந்தியை எதிர்த்து 547 மாணவரும், 49 பேர் ஆதரித்தும் ஓட் அளித்தனர். பேராசிரியர்கள் ரம்போலா மஸ்ரனாஸ், இருதயராஜ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
23-8-48

சிவகங்கை அரசர் கல்லூரித் தமிழ்ப் பேரவையில் தோழர் சுப்பிரமணியதேசிகர் தலைமையில் நடைபெற்ற சொற்போரின் போது இந்தி வேண்டாம் என்று தீர்ப்புக் கிடைத்தது.
24-9-48

சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் 7இம் வகுப்பு மாணவர்கள் நடத்திய சொற்பொழிவுக் கூட்டத்தில், இந்தி வேண்டுமா என்பதைப் பற்றி ஓட் எடுத்ததில் 39 பேர் வேண்டாம் என்றும் ஒருவர் வேண்டும் என்றும் தீர்ப்புக் கிடைத்தது.
26-9-48

திருச்சி தேசியக் கல்லூரியில் நடைபெற்ற சொற்போர்க் கூட்டத்தில் இந்தி வேண்டும் என்று 78 பேரும், இந்தி வேண்டாமென்று 140 பேரும், ஓட் அளித்தனர். இக்கூட்டத்துக்குப் பேராசியர் வரதாச்சாரி என்பவர் தலைமை வகித்தார் என்றும், செய்தி இருக்கிறது.
9-10-48

மதுரை, அமெரிக்கன் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்ற மாணவர் கூட்டத்தில், சொற்போர் நடைபெற்றது - தீர்ப்பு இந்திக்கு எதிர்ப்பாகத்தான் கிடைத்தது.
21-10-48

பாளையங்கோட்டை, புனிதயோவான் கல்லூரி மாணவரகள் சொற்போர்க் கூட்டத்தில், இந்தி வேண்டாம் என 38 ஓட்டுகளும், வேண்டும் என 23ம் கிடைத்தன, இந்திககு எதிர்ப்பான தீர்ப்புக் கிடைத்தது.
28-10-48

திருநெல்வேலி, தாயுமானவர் இந்துக் கல்லூரி தமிழ்ச்சங்கக் கூட்டத்தில், இந்தியை ஆதரித்து 18 மாணவர்களும், எதிர்த்து 218 மாணவர்களும் ஓட் அளித்தனர் - இந்தி கூடாது என்ற இந்தத் தீர்ப்பு கிடைத்த கூட்டத்தை, புலவர் வ. பொன்னுசாமி என்பவர் உடனிருந்து கவனித்திருக்கிறார்.
11-11-48

பாளையங்கோட்டை, சேவியர்ஸ் பள்ளியில், மேற்கு மண்டபத்தில், இந்த தமிழ் நாட்டுக்குத் தேவையா, எனும் பொருள் குறித்து நடந்த சொற்போரில், 117 மாணவரக்ள், இந்தி வேண்டாம் என்றும் 13 மாணவர்கள், வேண்டும் என்றும் தீர்ப்புக் கிடைத்தது. கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர், கிருஷ்ணசாமி ஐயங்கார் என்பவர்
21-11-48

சென்னை சட்டக் கல்லூரி, தமிழ்ச் சங்க சார்பில் தமிழ் நாட்டிற்கு இந்தி தேவையா! என்று சொற்போர் நடந்தது, இந்தியை ஆதரித்து இருவரும், எதிர்த்து நாற்பது பேரும் வாக்களித்தனர்.
4-12-48

திருப்பதி வெங்கடேஸ்வரா கல்லூரியில், இந்திப் பிரச்னை பற்றி மாணவரின் சொற்போர் நடந்தது, இந்தி வேண்டாமென்று தீர்ப்புக் கிடைத்தது. புலவர் பழனியப்பா கூட்டத்தில் நடுநிலையாளாக இருந்து கவனித்து வந்தார்.

பட்டி முழுவதையும் வெளியிட இடமில்லை - சில குறிப்புகளை மட்டுமே வெளியிட்டிருக்கிறோம்.

இந்த வேண்டாம் என்பதற்கு, மாணவர்கள் காட்டிய காரணங்கள், பேசிய பேச்சுகள், ஆகியவற்றினை வெளியிடவில்லை.

கட்டாய இந்தித் திட்டத்தை வற்புறுத்தும் அமைச்சர்களை மாணவர்கள், எவ்வளவு வன்மையாகக் கண்டித்துப் பேசினர் என்பதையும் வெளியிடவில்லை - ஆயாசப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு, அந்தக் காரம் மேலும் தொல்லையாக இருக்கும் என்ற காரணத்தால்.

மாணவர் உலகு தந்திருக்கும் தீர்ப்பு மட்டுமே தந்திருக்கிறோம்.

அமைச்சர்கள் இதற்கு என்ன சொல்லுகிறார்கள்? திருப்பதியிலும் தீர்ப்பு, இந்திக்கு எதிராக - திருநெல்வேலியிலும் அதே தீர்ப்பு! அமைச்சர்கள், இந்தத் தீர்ப்புகளை எல்லாம் துச்சமானவை என்று தள்ளவிடவோ, இவைகளை அரசியல் சூழ்ச்சிகள் என்று அலட்சியப்படுத்தி விடவோ, துணிகிறார்களா என்று கேட்கிறோம்.

மாணவர்கள், அளித்த தீர்ப்புக்காக, நாம் அவரக்ளை மனமாரப் பாராட்டுகிறோம் - அறப்போரில் பணியாற்றுபவர்களும் அவர்களே - களத்திலே நிற்பவர்கள் அல்ல என்ற போதிலும், போர்க் கருவிகளைத் தருபவரும் எங்ஙனம், போரில் பங்கு கொண்டவராகின்றனரோ, அதுபோன்றே, மாணவர்கள், தந்துள்ள தீர்ப்பு, ஏற்கெனவே, அறப்போரில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உள்ள உறுதியையும் உற்சாகத்தையும் பலப்படுத்துகிறது. அறப்போர் நடக்கிறது - அறிவுதேடும் துறையிலே உள்ள அருந்தமிழ் மாணவர்கள், இந்த இகாது என்று அளித்திருக்கும் தீர்ப்பு, அறப்போர் நடத்துபவருக்கு, தமிழ் இளைஞர்கள் தரும் புதியதோர் சக்தியாக அமைகிறது, அறப்போர நடந்து கொண்டிருக்கிறது!

(திராவிடநாடு 14.1.49)