அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மடல்
லட்சுமணபுரி,
16-8-45.

மதிப்பிற்குரிய காயிரே அஃலம் அவர்களே!
நான் சொந்தக்காரியமாக இங்கு வந்திருக்கிறேன். 25-8-45 வரை இங்கிருக்க எண்ணுகிறேன், பிறகு பெஷாவர் புறப்பட்டு 27-8-45 அங்கு சேரலாமென்று இருக்கிறேன். என்வாழ்நாளிலே மகத்தானதோர் தீர்மானம் கொண்டுவிட்ட செய்தியை உமக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். பலநாட்கள், தீரயோசித்து, மனமாரச்சிந்தித்ததன் பலனாக நான்கண்ட முடிவு இது.
நான் முஸ்லிம் லீகில் சேருவதென்று தீர்மானித்து விட்டேன். தாங்கள் கொண்டுள்ள போக்கே உண்மையானது என்றும் தங்களை எதிர்க்கும் எந்த முஸ்லிமும் இந்தியாவிலே இஸ்லாத்தைக் காட்டிக் கொடுப்பவராகிறார் என்றும் நம்புகிறேன். தங்கள் கட்டளைகளை எதிர்பார்த்து நிற்கிறேன் - அவைகளின்படி நடந்து கொள்ள.
தங்கள் உண்மையுள்ள,
அப்துல் கயாம்.

லீக்கிலே, ஜனாப்ஜின்னா செய்யும் சர்வாதிகாரத் தனத்தைக் கண்டு முஸ்லிம்களே வெறுப்படைந்து விட்டார்கள்! ஏராளமான முஸ்லிம் பிரமுகர்கள் லீகைவிட்டு வெளிஏறிக்கொண்டிருக் கிறார்கள்! ஜனாப் ஜின்னாவின் பிடிதளர்ந்துவிட்டது! - என்றெல்லாம் காங்கிரஸ் கூறுவதன் மூலம், பிறரை ஏமாற்றுவது கூட நமக்கு அவ்வளவு வேடிக்கையாகத் தோன்றுவதில்லை, அத்தகைய பிரச்சாரத்தை நடத்துவதால் காங்கிரசார் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களே அதைக் காணும் போதுதான் நமக்கு மிக மிஞூக வேடிக்கையாக இருக்கிறது. இந்தப் பூணாரம் பூண்ட புதுமைதனைக் கண்டதில்லை என்ற மொழி நினைவிலே நிற்கிறது.

இவ்விதமாக, இளித்தவாயருக்குத் தயாரிக்கும் பிரச்சாரப் பண்டத்தைத்தாமேயும் உண்டு, நிலைதவறும் தேசீயத் தோழர்களுக்கு, மேலே நாம் வெளியிட்டுள்ள மடல், சிந்தனைக்குக் கொஞ்சம் வேலைதரும் என்று நம்புகிறோம். லீக்கின் பலம் வளருகிறது என்பதும், ஜனாப் ஜின்னாவின் போக்கைச் சுதந்திரப்புத்தி படைத்த முஸ்லிம் தலைவர்களெல்லாம் ஆதரிக்கிறார்கள் என்பதும், இம்மடல் மூலம் விளங்கும்.

“இது என்ன பிரமாதம்! யாரோ ஒரு சாயபு, லீக்கிலே சேர்ந்துவிட்டால், மகத்தானகாரியமா?” என்று காங்கிரசார் கூறமாட்டார்கள், ஏனெனில், அப்துல் கயாம், மடல் தீட்டு முன்புவரைக் காங்கிரசாரால் போற்றிப்புகழப்பட்ட தலைவருள் ஒருவர்! டில்லி சட்டசபை அங்கத்தினர்! அதுமட்டுமல்ல! டில்லி சட்ட சபை காங்கிரஸ் கட்சிக்குத் துணைத் தலைவர்! எனவே ஜனாப் அப்துல் கயாம், சாமான்யர் என்றோ, அவர் லீகி÷ ல சேரத் தீர்மானித்தது, முக்யமானதல்ல வென்றோ காங்கிரசார் கூறமுடியாது; உண்மையுடன் ஒத்துழைக்கக்கூடாது என்று காங்கிரசார் திட்டம் தயாரித்திருந்தாலொழிய!

அப்துல் கயாம் அவர்கள் அனுப்பிய மடலுக்கு, அத்தா இந்த அழகான பதிலும் அனுப்பியுள்ளார்.
“கடிதம் கண்டேன். என்வந்தனம். லீகில் சேரத்தீர்மானித்தது கண்டு களிப்படைகிறேன். தங்கள் கடிதத்திலே மனம் விட்டு எழுதி இருப்பதைப் பாராட்டுகிறேன். நாணயமான எந் முஸ்லிமுக்கும் காங்கிரசிலே இடமில்லை. அதிலும் சிம்லா மாநாட்டுக்குப் பிறகு. மற்றவர்களும் தங்களைப் பின்பற்றி, முஸ்லிம்களின் தேசீய இயக்கமான நேரத்திலே சேர்ந்து, தன்னமற்று, இந்தியாவிலுள்ள முஸ்லிம்களுக்காகவும், இஸ்லாத்
துக்காகவும் பணிபுரிவார்களாக!” என்று ஜனாப்ஜின்னா தந்தி அனுப்பினார்.

ஜனாப் அப்துல் கயாம் விடுத்த மடலும், அதற்கு ஜனாப் ஜின்னா விடுத்த பதிலும், தனிப்பட்ட இரு தலைவர்களின் சொந்த விஷயமல்ல! விழிப்புற்ற இனத்தின் தீர்ப்பு!

தேர்தல் வருகிறது! லண்டன் வட்டாரத்திலே, இந்தத் தேர்தலில் லீக் எவ்வளவு வெற்றிபெறுகிறது என்பதைப் பொறுத்தே, எதிர்கால அரசியல் அமைப்புக்கான திட்டங்கள் தயாரிக்கப்படும். எனவே, முஸ்லிம்கள், இதுசமயம், லீக்கொடியின்கீழ் ஒன்றுபட்டு, தேர்தலில் வெற்றியைப் பெற்றாக வேண்டும், பெற்றால் பாகிஸ்தான், இல்லையோ,.................!

ஜனாப் அப்துல் கயாம் அவர்களின் மடல், இன்னமும் மாறான வழி நடக்கம் முஸ்லிம்களின் கண்திறக்க உதவுமென்று நம்புகிறோம்.

(திராவிடநாடு 26-8-1945)