அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மத ஏகாதிபத்யத்தின் மீது தாக்குதல்
காங்கிரஸ்காரர் விடும் கணைகள்
மதத்தின் பேரால் நடைபெறும் ஊழல்களை மக்களுக்கு எடுத்துக் கூறினோம் - மதவிரோதிகள் என்று கண்டிக்கப்பட்டோம்.

கடவுள் பேரால் நடக்கும் கபட நாடகங்களை விளக்கினோம் - நாத்திகர் என்று நிந்திக்கப்பட்டோம்.

கோயில்களில் நடைபெறும் கொடுமைகளைக் கூறினோம் - வாயில் வந்தபடி எல்லாம் திட்டப்பட்டோம்.

மடாலயங்களில் மதோன்மத்த வாழ்வு நடத்தும் பண்டார சந்நிதிகளின் லீலா விநோதங்களை விளக்கினோம் - விதண்டா வாதம் செய்வதாக வீண்பழி சுமத்தப்பட்டோம்.
புரோகிதர்களின் புரட்டைப் பொதுமக்களுக்குப் புரிய வைத்தோம் பார்ப்பன விரோதி என்று பலரும் பகைக்கக் கண்டோம்.

கோயில்களிலும் மடங்களிலும் முடங்கிக்கிடக்கும் பெருந்தொகைப் பொருளை எடுத்துக் கல்விக்குச் செலவிடச் சொன்னோம் - கயவர் என்று கண்டிக்கப்பட்டோம்.

அரைவயிறு கஞ்சிக்குக் கூட வழியற்ற நாட்டில் ஆண்டவனுக்கு ஆறுகாலப் பூஜை ஏன் என்று கேட்டோம் - ஆவதூறாக நிந்திக்கப்பட்டோம்.

கள்ளத் தனமாகக் கொள்ளை இலாபம் பெறுவோர் வெள்ளித் தேரும், தங்கப்பல்லக்கும் செய்து தயாபரனுக்குத் தருகிறார்களே, முறையா என்று கேட்டோம் - வீண் வம்புக்கு வருபவர்கள் என்று வெறுக்கப்பட்டோம்.

காலியும், கமண்டலமும், வெண்ணிறும், துளசியும், வேதாந்தப் பேச்சும் வெளிவேஷம் என்று விளக்கினோம் - ஏள்ளி நகையாடி ஏசப்பட்டோம்.

பகலிலே சாமியாகவும் இரவிலே காமியாகவும் மறுவேடம் கொள்ளும் மாடதிபதிகளை மக்களுக்குக் காட்டினோம் - வம்பர் என்று கண்டிக்கப்பட்டோம்.

இûவுயம் இவைபோன்ற இன்னும் பல கொடுமைகளும் மதத்தின் பேராலும் கடவுளின் பேராலும், மக்களின் பொதுப்பணத்தைக் கொண்டே நடைபெறுகின்றன - இவற்றை எல்லாம் தடுத்து, நாட்டுக்கு நல்ல பேரும் மக்களுக்கு நல்வாழ்வும் ஏற்படக்கூடிய முறையில் அறநிலையங்களும் ஆவற்றிலுள்ள அளவு கடந்தபொருளும் பயன்பட வேண்டும் - பயன்படுத்தப்பட வேண்டும் என்று நாம் சொன்னபோதெல்லாம், யாரார் நம்மை நாத்திகர் என்றும், நயவஞ்சகர் என்றும் நாடறியத் திட்டினார்களோ, அவர்களே - நமது அருமை நண்பர்களே - காங்கிரஸ்காரர்களே இன்று நாம் சென்றதற்கு ஒருபடி மேலேயே சென்று, நாம் கண்டித்தவைகளையும், நம்முடைய கண்டனத்துக்கு அகப்படாதவைகளையும் கண்டுபிடித்து நாட்டுக்கு அறிவிக்கிறார்கள் - மதத ஏகாதிபத்யத்தின்மீது தாக்குதல் நடத்துகிறார்கள் - கணைபூட்டி மத ஆணையைத் தகர்க்கிறார்கள் - மக்கள் நல்வாழ்வுக்கு மதம் துணைபுரியவில்லை என்று மரத்தடியில் அல்ல மன்றம் - சட்டமன்றம் ஏறிச் சாடுகிறார்கள் - கழக்கர்களால் கட்டிவைக்கப்பட்ட சமயக் கோட்டைகள் தவிடுபொடியாகுமளவுக்குச் சாடுகிறார்கள். கோயிலை இடிப்பேன்! சாமியை ஒழிப்பேன் என்று சட்டமன்றம் ஏறிப்பேசும் அளவுக்கு, நம்முடைய முகதரிசனமே கூடாதென்று கருதியவர்களாலேயே காரணம் காட்டவும், கண்டிக்கவும் இன நிலை ஏற்பட்டது கண்டு களிப்படைகிறோம்.

கோயில்கள் - மடங்கள் முதலியவற்றில் குறுக்கிட்டுக் குறைகூறக் கூடாதென்றும், குறை கூறிய நம்மைக் குறை மதியினர் என்றும். கூறியவர்களே இன்று ஆவற்றின் மீது குற்றஞ்சாட்டி அவை திருத்தியமைக்கப்படவேண்டும் என்று கூறுகிறார்கள். அவர்களால் சாட்டப்படும் குற்றச்சாட்டுகளில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தருகிறோம். இதோ படித்துப் பாருங்கள்.
“மத, பொருளாதார, அரசியல் நிலைமைகளில் ஏதாயினும் சீர்திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கும் பொழுதெல்லாம் மதத்துக்கு ஆபத்து என்று கூச்சல் ஏழுப்புவது என்கிற துர்பாக்கிய நிலை இந்நாட்டில் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.

சாரதா சட்டம், தேவதாசி ஒழிப்பு மசோதா, இலய நுழைவு மசோதா ஆகியவைகள் கொணரப்பட்ட பொழுதும் மதத்தின் பெயராலேயே எதிர்ப்புக் கிளப்பப்பட்டது. இருந்தாலும் இந்தக் கூச்சல்களையெல்லம் நாம் பொருட்படுத்தாமலே தாண்டி வந்துள்ளோம். உலகம் முன்னேறிக் கொண்டுள்ளது. ஆதோடு நாமும் முன்னேற வேண்டும் எனவே மதம் என்ற பெயரால் நமது முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டை போடுபவர்கள் தங்கள் சொந்த மதத்துக்கே தீங்கு செய்கிறார்கள்.

கடவுள், மதம் என்ற பெயரால் தங்கள் வசம் ஒப்புவிக்கப்பட்ட தர்ம சொத்துக்களை ஆநாவசியமான முறையில் துஷ்பிரயோகம் செய்து வருபவர்களும், கொண்டுவரப்படும் இம்மசோதாவால் தங்கள் சுரண்டலுக்கு முடிவு கட்டப்பட்டு விடுமே என்று கருதுபவர்களும் இனசமுதாயத்திலுள்ள ஒரு பெருங்கூட்டத்தினரை இம்மசோதா பாதிக்கத்தான் செய்யும் அவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை.

நில கிஸ்தியையோ அல்லது போர்டாருக்கு செலுத்த வேண்டிய தொகையையோ செலுத்தாதபடி பலர் இருக்கின்றனர். இதன் நோக்கம் கோயில் நிலம் ஏலத்துக்கு வந்தால் அதைத் தங்கள் வசப்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணமேயாகும்.

விசாகப்பட்டினம் முதல் திருநெல்வேலி வரை ஒரு சில நூறு ரூபாய்களிலிருந்த பல லட்சங்கள் வரை தர்ம சொத்து நிதிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது குறித்து 65 கேஸ்களுக்கு மேலடங்கிய ஒரு பட்டியலே என்னிடம் இருக்கிறது. இம்மசோதாவை எதிர்ப்பவர்களை அந்தப் பட்டியலை ஒருமுறை பார்க்குமாறு நான் அழைக்கிறேன். அது உண்மையை வெட்ட வெளிச்சமாக இக்கும்.

தஞ்சை மாவட்டத்திலுள்ள வேதாரண்ய உஸ்வரர் கோயிலுக்கு 45 கிராமங்களில் 16,000 ஏக்கர் நிலம் இருக்கிறது. அவ்வளவு இருந்தும் அதன் ஆண்டு வருமானம் ரூ. 75,000 என்றே காட்டப்படுகிறது.

தென் கன்னடத்திலுள்ள ஒரு மடம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் புரோ நோட்டுகள் மூலம் கடன் வாங்கியிருக்கிறது. இந்துமத அறநிலை போர்டார் அனுமதியில்லமலிருந்ம் இவ்வளவு கடன் வாங்கப்பட்டுள்ளது. வட ஆற்காடு மாவட்டத்தி லுள்ள ஒரு குறிப்பிட்ட கோயில் ஒன்றின் எல்லாத் தர்ம, சொத்துக்களுக்கும் ஒரு ஜாகீர்தாருடைய ஏஸ்டேட்டுக்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. மேலக் கோதாவரியில் கோயில் நிலங்கள் விற்கப்பட்டிருக்கின்றன. ரூ. 30,000க்கு மேல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது.

தஞ்சையிலுள்ள ஸ்வர்க்கபுரம் மடத்தில் ரூ. 15,000-க்கு மேற்பட்ட பணமும் 23 ஏக்கர் நிலமும் கையாளப்பட்டும் விற்கப்பட்டும் இருக்கிறது.

திருச்செங்கோடு, வேதாரண்யம் ஆகிய இடங்களில் நகைகள் காணாமற்போனது யாவரும் அறிந்ததாகும்.

உடுப்பி பூஜா மடத்தில் அதற்குச் சொந்தமான நகைகள் மடத்து ஏஜெண்டுகளால் அதிகார பூர்வமின்றி ஆடகு வைக்கப்பட்டிருக்கின்றன.

காந்தியாரை விட இந்து மதத்தில் பற்றுள்ளவர் யார் தாம் உள்ர்! அவரே கூட நமது கோயில்கள் பற்றிக் கூறுகையில் கள்வர்குகைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பூஜைகளை நடத்துவதற்கான உரிமையை அறியாமை நிரம்பிய படிப்பு வாசனையறியாத அர்ச்சர்கள் பேரம் செய்ய இனிமேல்பட முடியாது. இம்மசோதாவின் 35வது பிரிவில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. பரம்பரையாக வேலைபார்த்து வந்த அர்ச்சகர்கள் இடம் காலியானால் அதற்குத் தகுதியுள்ள அர்ச்சகர்களை நியமனம் செய்ய இடம் உண்டு.

ஏற்கெனவே அவர்கள் ஈடுபட்டுள்ள உலக (லௌகீக) விவகாரங்களிலிருந்து மடாதிபதிகளை விடுவிக்கவும் இதன் மூலம் முயற்சிக்கப்படுகிறது.
- ஓ.பி. இராமசாமி
(முதலமைச்சர்)

“மத தர்ம ஸ்தாபனங்களின் பரிபாலனத்தில் ஊழல்கள் இருந்தால் அவைகளை அப்படியே விட்டுவிடவேண்டும் என்றும் சர்க்கார் தலையிடக் கூடாது என்றும் வாதாடுகிறார்கள். ஊழல்கள் இருப்பதாகச் சர்க்காருக்கு நிச்சயமாகத் தெரிய வந்திருக்கிறது. அவைகளைச் சீர்திருத்துவது சர்க்காரின் கடமை என்று நாங்கள் சொன்னோம், ஏக்காரணத்தாலும் இதில் சர்க்கார் தலையிடக் கூடாது என்று நினைக்கிறவர்களை எப்படி நாங்கள் திருப்தி செய்யமுடியும்?”
- டாக்டர் இராஜன்
“சிதம்பரத்திற்குத் தெற்கிலுள்ள மாடதிபதிகளைப் பற்றி அதிகம் கூறாமலிருப்பதே நல்லது. மதத்தின் பெயராக எல்லாவித (அநியாய) செயல்களும் நடந்துவருகின்றன.

இந்த மாதிபதிகளில் பலர் அறநிலையைச் சொத்துக்களில் கள்ள மார்க்கெட் பேரம் நடத்துவதாலும், மற்றும் இவர்கள் பற்பல தவறுகள் நடத்திப் பொதுப்பணத்தை வீண் விரயம் செய்து வருவதாலும், இந்து மதத்திற்கே மானக்கேடான செயல்களை இவர்கள் செய்து வருவதாலும் இவர்கள் கண்டிக்கப்படப் போகிறார்கள், ஒழுங்காக நடப்பவர்களும் பயம் இல்லை.
(டி.எஸ்.பட்டாபிராமன் எம்.எல்.ஏ,)

“ஒரு சில தனிப்பட்ட கூட்டத்தின் சுகபோக வாழ்வுக்குப் பாதகம் ஏற்படுகிறது என்பதற்காக இம்மசோதாவை எதிர்க்கிறார்கள். மதத்தின் பேரால் மக்களைப் பகுத்தறிவிற்குப் புறம்பான காரியங்களைச் செய்யத் பேரால் மக்களைப் பகுத்தறிவிற்குப் புறம்பான காரியங்களைச் செய்யசத் தூண்டப்படுகிறதே தவிர மனிதன் மனிதனாகப் பாவிக்கப்படவில்லை. மனிதனிலே பல உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுகிறது. இவையெல்லாம் போக்கடிக்கப்படவேண்டும்.

உலக உத்தமராகிய காந்தியாரையே சுட்டுக் கொன்ற பார்ப்பன கோட்சே இனமா மக்களுக்கு நன்மை செய்யப்போகிறது? ஒருக்காலும் செய்யாது
(வேலுசாமி, எம்.எல்.ஏ)

“கல்வியற்ற மக்கள் பலர் கையெழுத்திடத் தெரியாமல் கஷ்டப்படும் பொழுது அவர்கள் துயரைப்போக்கக்கல்வி அறிவைப் பெருக்க முயலாது தங்கத்தில் கதவுபோட வேண்டுமென்றால் தன்மான முடையவன் சும்மா இருக்கமுடியுமா.

மதத்தின் பேராலும் சாதியின் பேராலும் சுரண்டி வாழ்ந்ததும் சச்சரவுகளைக் கிளப்பி வாழ்ந்ததும் போதும். இனித்தேவை இல்லை.”
பாலகிருட்டினன், எம்.எல்.ஏ,

“இதியில் மனிதன் மிருகத்தனமாக ஒழுக்கந்தவறி இந்தக் காலத்தில் ஓரளவுக்கு நாகரிகமும் ஒழுக்கமும் கற்பிக்கப்பட்டு அதை வளர்க்க வேண்டும் என்பதற்கு உதவி புரியவே மதமும் மடங்களும் உண்டாக்கப்பட்டன. இம்மடங்கள் மூலம் மக்களுக்கு அறிவும் கல்வியும் போதிக்க வேண்டும் என்பதற்காகவே பல லட்ச ரூபாய்களும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன. ஊதாரணமாக நாடார் வகுப்பினராகிய எங்கள் பணமே பத்துலட்ச ரூபாய்கள் கொடுக்கப் பட்டிருக்கிறது.

ஆனால் இன்று மடங்கள் மடமையை வளர்க்க, மங்கையர்களைக் கற்பழிக்க, கொலை பாதகம் புரிய உபயோகப்படுத்தப்படுகிறது. இக்குற்றங்களை மறைப்பதற்காக ஓரிரண்டு கல்லூரி ஏற்படுத்தப்பட்டன. அதுவும் இப்பொழுதிருக்கும் இடம்தெரியாமல் போய்விட்டன.

இது, வக்கலாத்து வாங்கும் வக்கீல் வைத்திநாத ஆய்யருக்கு ஏன் தெரியவில்லை.

நாங்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதும், இச்சட்டம் கொண்டு வருவதும் கட்சிக் கட்டுப்பாட்டிற்கே விரோதம் எனக்கூறும் வைத்திநாத ஆய்யர், ஜமீன் இனாம் ஒழிப்பு மசோதாவின்பேரில் கூக்குரலிட்டு அலறித் துடித்து ஆவதூறு பேசியது கட்சிக் கட்டுப்பாட்டுக்கு விரோதமானதல்லவா?

ஏக்கட்சிக்காரர் எதைச்சொன்னாலும், அதில் உள்ள உருப்படியான கருத்தை நிறைவேற்ற வேண்டியதே அரசியலார் கடமை. வக்கீல்களுக்கு ஒருதலைப்பட்சமே பேசத்தெரியுமே தவிர, இருகட்சியின் நியாயத்தையும் புகுந்து பார்க்கத் தெரியாது.

பத்திரிகைகளும் வைத்தியநாதய்யர் கும்பல்களுக்கே ஆதரவு கொடுக்கிறதே தவிர, மற்ற உண்மைக் கருத்துக்களைக் கூறுபவர்களுக்கு ஆதரவு தருவதில்லை.

ஆகவே இனி நாங்களும் பார்ப்பனர் கொண்டுவரும் சட்டத்தை உடைத்துத் தகர்க்கவே தீர்மானித்துள்ளோம்.

நமது பிரதமர் ரமண மகரிஷியின் வழிநடப்பவரென்றும், கிருத்திகை விரதம் பூண்டு வருபவரென்றும், அவருக்கு மதத்தில் எவ்வளவு பற்று இருக்கிறதென்றும் தெரிந்திருந்தும் அப்படிப்பட்டவர் கொண்டு வந்த மசோதாவை எப்படி ஆட்சேபிப்பது? மடாதிபதிகள் செய்துவரும் லீலைகள் எம்மட்டும் சென்றிருக்கின்றன என்பதும் நமக்குத் தெரியும். மதத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்லிக் கொள்ளும் இந்த மத ஸ்தாபனத்தார் என்ன செய்திருக்கிறார்களென்று பார்த்தால் ஒன்றுமில்லை. பலர் பிற மதத்திற்குச் செல்வதைத்தான் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

மடாதிபதிகளின் அட்டூழியங்களால் நாடே கொந்தளிப்படைந்திருக்கும் இந்நாளில், சனாதனி என்ற பெயரால் சிலர் அதை ஆதரிக்க வருவது சிறிதும் பொருத்தமாகாது. ஒவ்வொரு சட்டத்திற்கும் சிறிது எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். அதற்காக இம்மாதிரியான நல்ல சட்டத்திற்கு எதிர்ப்பாக ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறாரென்று நாம் எப்படிக் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியும்? எனவே இனியும் தாமதியாமல் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.”
(கே.டி. கோசல்ராம், எம்.எல்.ஏ.)

மடாதிபதிகளின் லீலைகளை “சந்திரகாந்தா” என்னும் சினிமாப் படத்தில் பார்த்த மக்கள் கொதிப்படைந்து மடாதிபதிகளை யொழித்துவிட வேண்டுமென்று கூறிக்கொண்டிருக்கின்றனர். இந்த மசோதா ஒரு புரட்சிகரமானது. இது சம்பந்தமான பொதுஜன அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ளவேண்டுமானால் ஒன்று செய்யலாம். நான் இந்த மசோதாவை ஆதரிக்கிறேன். ஸ்ரீ என்.எஸ்.வரதாச்சாரி ஆட்சேபிக்கிறார். இருவரும் சட்ட சபை அங்கத்தினர் பதவியை ராஜிநாமா செய்துவிடுவது. இந்த மசோதாவை இதாரமாகக் கொண்டு இருவரும் போட்டியிடுவது. அதிலும் திருவல்லிக்கேணி தொகுதியிலேயே போட்டியிடலாம். யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று பார்த்துவிடலாம்.

மடாதிபதிகளின் அட்டூழியங்கள் பல. பிரதமர் இராமசாமி காலத்தில் கொண்டு வரப்படும் இந்த மசோதாவை எதிர்த்துப் பேசிய வைத்யநாதய்யர் முன்னாள் ராஜாஜி பிரதமராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்டிருந்தால் என்ன செய்திருப்பார்?”
எம். கன்னியப்பன், எம்.எல்.ஏ,

“பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் உபயோகமில்லாத இந்த மடாதிபதிகளை இப்படியே விட்டுக் கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை.”
- பி. கந்தசாமி, எம்.எல்.ஏ.

“இன்றைய தினத்தில் மடங்கள் என்ன ஸ்திதியில் இருக்கின்றன என்று பார்த்து ஆவற்றைத் திருத்தமுன் வருவதற்கு நமக்கு உரிமையுண்டு. வருமானத்தில் பெருந்தொகையை போக சுகங்களுக்காகச் செலவு செய்துவிட்டு ஒரு சிறு தொகையை ஆங்காங்கு தேவாரப் பள்ளிக்கூடங்களை அமைக்கச் செலவு செய்து மக்களை ஏய்ப்பதைத் தவிர வேறு என்ன நடக்கிறது? மடங்களில் பட்டத்திற்காகவும் பணத்திற்காகவும் எத்தனை கொலைகள் நடந்திருக்கின்றனவென்பது யார் அறியாதது. அப்படியிருக்க இந்த மசோதா கொண்டு வருவது தவறானதென்று எப்படிச் சொல்ல முடியும் தவறான வழியில் போகிறவர்களைத் தண்டித்துத்திருத்த வேண்டிய பொறுப்பு சர்க்காருக்கு இல்லையா? மடாதிபதிகளில் நல்லவர்களும் சிலர் இருப்பதால் எல்லா மடங்களையும் இந்த மசோதாவில் சேர்ப்பது சரியல்லவென்று கூறப்படுகிறது. ஒரு மடத்தில் இன்று இருப்பவர் நல்லவராக இருக்கலாம். நேற்று இருந்தவர் நல்லவராக இருந்திருக்கலாம். நாளை வருபவர் நல்லவராக வரலாம். எல்லாவற்றையும் கவினத்துப் பார்த்தால் இந்தச் சீர்திருத்தம் மிகவும அவசியமென்றுதான் ஏற்படும். இம்மாதிரி மதசம்பந்தமான, கடவுள் சம்பந்தமான விஷயங்களில் தலையிடுபவர்கள் கெட்டுப் போவார்களென்று நண்பர் ஒருவர் சொன்னார். மதத்தின் பேராலும் கடவுள் பேராலும் நடக்கும் அட்டூழியங்களை மூடிவைத்து அவைகளுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள் கெட்டுப்போக மாடடார்களாவென்று அவரைக்கேட்க விரும்புகிறேன்.

விடுதலை, “புரட்சி, கிளர்ச்சி” போன்ற சில பத்திரிகைகள்தான் இந்த மசோதாவை ஆதரிக்கின்றனவென்று சில அங்கத்தினர்கள் பேசினார்கள். அதற்கென்ன செய்யலாம்? மசோதாவை ஆதரிக்க மனமில்லாதவர்களிடத்தில் மற்றப் பத்திரிகைகள் அகப்பட்டுக் கொண்டி ருக்கின்றன. ஏன் “தினசரி” பத்திரிகை இதை ஆதரிக்கவில்லையா? அது ஒரு உயர்தர பத்திரிகையல்லவா?

இன்னுமொரு விஷயம் கூற விரும்புகிறேன். நான் சிறையிலிருக்கும் பொழுது சிறையில் ஒரு முஸ்லிமோ அல்லது ஒரு கிறிஸ்தவரோ இறந்துவிட்டால் அவர்களுடைய மதஸ்தாபனங்களிலிருந்து ஆட்கள் வந்து அந்தப் பிரேத அடக்கத்துக்கு வேண்டிய ஏற்பாடு செய்வார்கள். ஹிந்து ஒருவன் இறந்தால் அவன் ஆனாதைதான், அப்படிப்பட்ட வகையில் இந்த மடங்களும், மடாதிபதிகளும் என்ன நன்மைகளைச் செய்திருக்கிறார்களென்று கேட்கிறேன். இந்த நிலைமையை நேரில் காண்பர்களுக்கு மதம் மாற எண்ணம் ஏற்படுமானால் அவர்களைக் குறைகூற முடியுமா?

மதசம்பந்தமான விஷயங்களில் தலையிட்டால் இனிச் சட்டசபையில் காங்கிரசுக்கு இடங்கிடையாதென்றும், காங்கிரஸ் அழிந்துவிடுமென்றும் கூறப்பட்டது. காங்கிரஸ் நன்கு வேரூன்றிவிட்டது. இனி அதற்கு அழிவென்பதே கிடையாது. இம்மாதிரி எல்லாம் சொல்லிக் கொண்டு இனிக்காலங் கடத்த முடியாது.

சர்க்கார் இலாக்காக்களில் லஞ்ச ஊழல்கள் இருக்கின்றனவென்றும், எனவே இந்த மசோதாவின் மூலம் திறம்பட நிர்வாகம் நடத்த முடியாதென்றும் சில அங்கத்தினர்கள் பேசினார்கள். மதம், தர்மஸ்தாபனங்களில் மட்டும் இப்பொழுது என்ன வாழுகிறது. எடுத்ததற்கெல்லாம் கைக்கூலி கொடு;தது ஆட்கள் கொண்டு வரப்படுகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, சிதம்பரம் இலயத்தில் ஒரு ரூபாய் தீக்ஷதருக்குக் கொடுத்தால் தான் சிதம்பர இரகசியத்தைக் காணமுடியும் அந்த வெட்டவெளியைக் காண்பிக்க ரூபாய் வாங்குவது லஞ்சமில்லையா? யாரோ ஒரு சம்பளக்காரன் 4 ஆணா வாங்கிவிட்டால் அது லஞ்சமாகி விடுகிறது. கோவிலில் தீக்ஷதர் ரூபாய் வாங்குவது தெய்வப் பிரீதியாய்ப் போய் விடுகிறது. இந்த விஷயங்களை எல்லாம் மனசாட்சியுடன் நன்கு கவனிப் போமானால், மததர்மஸ்தாபனங்களைச் சீர்திருத்தவேண்டியது எவ்வளவு அவசியமென்றும், ஆகவே இந்த மசோதா எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததென்றும், ஆகவே இந்த மசோதா எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததென்றும் தெரியவரும். எனவே எல்லா அங்கத்தினர்களும் இதுவரை அதை ஆட்சேபித்தவர்கள் உட்பட இந்த மசோதாவை ஆதரித்துச் சமுகத்திற்கு நன்மை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
(தேவநாகய்யா, எம்.எல்.ஏ.)

“காங்கிரஸ் அங்கத்தினர்கள் பொதுஜன அபிப்பிராயத்துக்கு மாறாக எந்த விஷயத்தையும் செய்ய மாட்டார்களென்ற நம்பிக்கை எல்லாருக்கும் உண்டு அதை ஒரு காரணமாகக்கொண்டு மசோதாவை ஒத்திப்போட நினைப்பது சரியல்ல. மற்ற மதங்களில் இத்தனை ஊழல்கள் இல்லை எனவே இந்துமதத்திற்கு இந்தச் சீர்திருத்தம் மிகவும் அவசியம்.

இந்த மசோதாவை ஆட்சேபித்து கோட்டை முன் ஒருசுவாமி உண்ணாவிரதமிருக்கிறார். தண்ணீர் கூடச்சாப்பிடாமல் 13 நாட்களுக்கு மேல் அவர் உயிருடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன் உண்மை ஆண்டவனுக்குத்தான் தெரியும். அது உண்மையாக இருக்குமானால் அங்கத்தினர் எல்லோருடைய மனதையும் ஒரே நாளில் மாற்றக்கூடிய சக்தி அவருக்கு இருக்கவேண்டும். இனிக் கொள்ளையிட்ட ஒருவரைக் கைது செய்யக்கூடாதென்று ஒருவர் உண்ணாவிரதம் இருப்பார். இப்படி உண்ணாவிரதம் இருப்பவர்களுக்குப் பயந்தால் எவ்வித நன்மையும் செய்யமுடியாது. எனவே இந்த மசோதாவை உடனே நிறைவேற்றவேண்டியது அவசியம்.”
- தோழியர் லட்சுமிபாரதி எம்.எல்.ஏ.

“மாடதிபதிகள் செய்யும் அட்டூழியங்கள் சகிக்க முடியாதவை காவிவேஷ்டியைக் கட்டிக்கொண்டு சுவாமி என்று சொல்லிப் பொது மக்களை ஏமாற்றுகின்றனர்.

இம்மாதிரியான சாமிகளுக்காகப் பரிந்துபேசுவது எவ்வளவு பாதகமான செய்கை என்பதை அங்கத்தினர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். கடவுள் பெயரால் இவர்கள் செய்வதெல்லாம் பெரும் மோசமான செயல்களாகும் எனக்கு மட்டும் அதிகாரமிருந்தால் இலயங்கள் மடங்கள் இல்லாமலே செய்துவிடுவேன்.

கடவுளை நான் ஏன் ஆவமதிக்கிறேன். நானே கடவுள், ஒவ்வொரு வரும் கடவுள்தான், உண்மையே கடவுள், சத்தியமே கடவுள், இந்த உண்மையை மறந்து போலிச் சாமியார்கள் அறியாது...

நாட்டில் மதத்தின் பேராலும் கடவுள் பேராலும் நடக்கும் ஊழல்களை எடுத்துச்சொல்வதற்கு அஞ்சவேண்டிய அவசியமில்லை. அப்படிப்பட்ட ஊழல்களை ஒழிக்கக் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த மசோதா ஒரு நல்ல சமூக சீர்திருத்த ஆயுதமாக விளங்குகிறது.

கோட்டைக்கு எதிரே ஒரு சாமியார் உண்ணாவிரதமிருக்கிறார். இந்த மசோதாவை எதிர்த்து அவர் விரதமிருக்கிறார். அவர் விரதமிருப்பது ஆல்லோகல்லோலப்படுகிறது. அவருக்குச் சற்றுத் தூரத்தில் மற்றுமொருவர் பல ஆயிர ரூபாய் தமக்கு வரவேண்டியது கிடைக்கவில்லை என்று உண்ணாவிரதமிருக்கிறார். அவரை என்னவென்று கேட்பாரைக் காணோம்.”
- காமேஸ்வரராவ், எம்.எல்.ஏ.

இவ்விதமாக, கோயில்களையும், மடங்களையும், ஆவற்றின் பாதுகாப்பாளர்களையும், அங்கு நடக்கும் ஊழல்களையும் சர்க்கார் முன்னிலையில் - சர்க்கார் நடத்துபவர்களே விளக்கிப் பேசவும். அவை ஒழிக்கப்படவேண்டும் சட்டமியற்ற வேண்டும் என்று உறுதிகொள்ளவும், மத ஊழல்களை விளக்கிய நம்மீது கணை பூட்டிய காங்கிரஸ் நண்பர்களே முன் வந்தது கண்டு அவர்களைப் பாராட்டுகிறோம்.

(திராவிடநாடு 20-2-49)