அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மகத்தான பாடம்
“முதலாளிகள் விஷயத்தில் எனக்கு அனுதாபமுமில்லை, அவர்களுடைய நலன் விஷயத்திலே எனக்கு அக்கரையுமில்லை. இந்த வயதில் சுகமாக உட்கார்ந்து கொண்டு, நிம்மதியாக வசதிகளுடன் வாழ்வதற்குப் போதிய அளவு செல்வத்தை இறைவன் எனக்கு அளித்திருக்கிறான். அதை விட்டுவிட்டு, இங்குமங்குமாக ஓடித் திரிந்து, இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, ஆலைந்து இவ்வளவு கஷ்டங்களையும் பொறுப்புகளையும் தூக்கித் தலைமேல் போட்டுக் கொண்டு நான் துன்பப்படுவானேன். இவ்வளவும் முதலாளி களுக்காகவா? அவர்களின் நன்மையை நாடியா? உண்மையிலேயே அவ்வாறு சிறிதுகூடக் கிடையாது. இவ்வளவு ஆலைச்சலும், கஷ்ட நஷ்டங்களும் உங்களுக்காகவேதான், ஏழை மக்களாகிய உங்களுக்காகவேதான் இவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்காளாகி ஆலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன்.”

மிக உருக்கமான, இவ்வார்த்தைகள், ஜனாப் ஜின்னா கூறியவை. கல்கத்தாவில் 23இம் தேதி, முஸ்லிம் வாலிபர்கள் ஆவரிடம், சில கேள்விகள் கேட்டபோது, பத்துக்கோடி முஸ்லீம்களின் விடுதலைக்குப் பாடுபடும் அவரை, பழித்துப் பேசாத நாளில்லை, இழித்துக் கூறாத வேளையில்லை, அவருடைய வார்த்தைகளைத் திரித்துக்கூறத் தவறுவதில்லை, காங்கிரஸ் தோழர்கள், ஆனால், அவருடைய நோக்கம், உடேறி வருகிறது, லீக் ஒப்புயவர்வற்ற ஸ்தாபனமாகிவிட்டு, தூற்றலைச் சட்டை செய்யாமல், துரிதமாக முன்னேறிவரும் லீக்கின் ஆறுதி இலட்சியமான பாகிஸ்தான், இன்று பாரெங்கும் பேசப்படும் பிரச்சினையாகிவிட்டது.

பாகிஸ்தான் - இல்லையேல் - கபர்ஸ்தான்!
இன்று, லாகூரில் அல்ல, லண்டனில் முழக்கம் கிளம்பிற்று 23-3-46ல் லண்டன் நகரில் டிரபால்கர்ஸ்கொயர் என்ற இடத்திலே பாகிஸ்தான் தினம் கொண்டாடப்பட்டது. பச்சைக்கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தது. இடவரும் மாருமாகச் சுமார் ஐந்நூறு பேருக்குக் கூடினர் லண்டன் முஸ்லீம் லீக் தலைவர் ஜனாப் அப்பாஸ் ஆலி தலைமை வசித்தார். ஜின்னா குல்லாய் தரித்துக் கொண்டு ஏராளமானவர்கள் வந்தனர். இக்பால்கீதம் பாடப்பட்டது. முதலமைச்சர் ஆட்லியின் சொற்பொழிவைக் கண்டித்துப் பேசினார் ஜனாப் அப்பாஸ் ஆலி.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுபட்டு, இந்து ஏகாதிபத்தியத்திடம் சிக்கிக் கொள்ளவா? என்று அவர் கேட்டார். ஆஸ்லாமியர் தனி இனம். ஆகவே எங்களுக்குத் தனி நாடு தேவை. அதை நாங்கள் பெறுவதெனத் தீர்மானித்து விட்டோம், என்று தோழியர் ஆகமத் கூறினார். லண்டன் வட்டாரத்திலே பாகிஸ்தான் தினக் கொண்டாட்டம் எழுச்சியை உண்டாக்கிற்று. முஸ்லிம் இனம் மிக உறுதியுடன் இருப்பதை இக்கூட்டம் நன்கு விளக்கிக் காட்டிவிட்டது.

மார்ச் 23இந் தேதி பாகிஸ்தான் தினம் பத்துக்கோடி முஸ்லீம்களின் சுதந்திர வேட்கை, சுயநிர்ணய ஆர்வம், இன்று உச்ச நிலையை அடைந்திருக்கிறது. ஜனாப் ஜின்னாவின் புகழ், உலக ராஜதந்திரிகளின் கவனத்தை இழுத்துவிட்டது. காங்கிரசின் பலமான பிரச்சார யந்திரம், முஸ்லீம் லீகை அசைக்கவில்லை என்பதை, பாகிஸ்தான் தினக்கொண்டாட்டச் சொற்பொழிவுகள் நன்கு விளக்கிவிட்டன.

காங்கிரஸ், இப்போது கொள்வதெல்லாம், லீக், பாகிஸ்தான் மாகாணங்கள் என்று குறிப்பிடும் இடங்களிலே மந்திரி சபைகளை அமைக்கக்கூடிய அளவு மெஜாரிட்டி பலம் பெறவில்லை, ஆகையால் பாகிஸ்தான் கோட்டை தகர்ந்து விட்டது என்று முடிவுகட்ட வேண்டும் என்பதாகும். இது, அடிப்படையிலே ஒரு தவறை வைத்துக்கொண்டு, வாதிடும் வக்கரபுத்தியின் விளைவு, முஸ்லீம்களே பெரும்பான்மையாக உள்ள மாகாணங்களிலே, முஸ்லீம்களுக்கென்று குறிக்கப்பட்டுள்ள சட்டசபை ஸ்தானங்கள் 1935 இம் வருஷச் சட்டப்படி, மிகக்குறைவு அந்தச் சட்டத்தின் விளைவாகவே, இன்று அந்த மாகாணங்களில், கூட்டு மந்திரிசபைகளே அமைத்துத் தீரவேண்டிய நிலைமை இருக்கிறது.

ஜனாப் ஜின்னா, இந்தச் சட்டத்தின்படி, முஸ்லீம்களின் உரிமை சரிவரப் பாதுகாக்கப் படவில்லை. முஸ்லீம்கள் பெருவாரியாக உள்ள மாகாணங்களில் கூட முஸ்லீம் அரசு ஏற்பட முடியாதபடி, தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன, என்பதைப் பலகாலமாக வற்புறுத்தி வந்ததோடு, இந்தத் தேர்தலின் நோக்கம், மந்திரிசபை அமைப்பதற்கு அல்ல, பாகிஸ்தானுக்கு உள்ள செல்வாக்கை நிரூபிக்கத்தான், என்று பட்டவர்த்தமாகக் கூறி வந்திருக்கிறார். முஸ்லீம் லீக் சார்பில் நிறுத்தப்பட்டவர்கள் எல்லைப்புறத்தில் தவிர மற்ற இடங்களில் எல்லாம் ஆமோகமான வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

இந்தப் புள்ளிவிவரக் கணக்கைப் பொதுமக்கள் உணர முடியாதபடி, காங்கிரஸ் பிரசாரம் செய்யலாம், ஆனால் பிரிட்டிஷ் மந்திரிகளின் கண்களிலேயும் மண்ணைத் தூவ இந்தப் பிரசாரப் பொடி பயன்படுமா என்பதே இன்றுள்ள பிரச்சினை.

லீக், எத்தனை ஸ்தானங்களில் போட்டியிட்டது, போட்டியிட்ட இடங்களிலெல்லாம், எவ்வளவு ஆபரிமிதமான வெற்றி அடைந்திருக்கிறது என்ற புள்ளி விவரத்தை ஜானப் ஜின்னா எடுத்துக் காட்டும்போது மந்திரிசபை அமைக்க முடியவில்லையே என்று வாதாடினால், யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

எப்படிப் புனா ஒப்பந்தத்தின் பலனாக, ஜாதி இந்துக்களின் தயவு இருந்தால் மட்டுமே, ஆதித்திராவிடர்கள் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற நிலை இருக்கிறதே, அதேபோல, முஸ்லீம்கள் பெருவாரியாக உள்ள இடங்களிலும் 1935-ம் வருடத் திட்டம் கூட்டு மந்திரிசபைகள் ஏற்படக் கூடிய விதமாகவே, சட்டசபை ஸ்தானங்களைச் சிருஷ்டித்துவிட்டது. இதனை ஜின்னா ஏற்றுக் கொள்ளவில்லை. இன்றையத் தேர்தலில் பெருவாரியான முஸ்லீம்கள் பாகிஸ்தானை ஆதரிக்கிறார்கள் என்பது தெளிவாக்கப்பட்டுவிட்டது.

காங்கிரசின் வெற்றிக்கும், லீகின் வெற்றிக்கும், ஒரு மகத்தான வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசத்தின் சூக்ஷமத்தை உணர மறுத்தால், இந்தியாவின் எதிர்காலம் இடர் நிறைந்ததாகவே இருக்க நேரிடும்.

காங்கிரஸ், 60 வருட காலமாக வளர்ந்துள்ள, கட்டுப்பாடான, பலம் நிரம்பிய ஸ்தாபனம், பிரச்சார பலம் அதிகம். ஏராளமான பத்திரிகைகள் சென்னை மாகாணம் ஒன்றில் மட்டும், இந்து, ஏக்ஸ்பிரஸ், பிரீபிரஸ், எனும் போன்ற தமிழ்த் தினசரிகள், ஏராளமான வார, மாத இதழ்கள், காங்கிரசை ஆதரிக்க உள்ளன. மற்ற இடங்களிலேயும் இதுபோலத்தான் முஸ்லீம் லீக்கை ஆதரிக்கும் ஒரு தினப்பத்திரிகை கூட இங்கு இல்லை. ஒவ்வொருநாளும் முஸ்லீம், லீக்கு எதிரிடையாக உள்ள பத்திரிகைகளையே படிக்க வேண்டியிருக்கிறது. எந்தப் பத்திரிகையைப் பிரித்தாலும், காங்கிரஸ் செய்தி, நேரு முழக்கம், படேல் பரணி, அருணா இலாபனம், இசாத் அகவல் இவைதான். இவைமட்டுமல்ல, ஜின்னாவின் தேசத்துரோகும், பாகிஸ்தான் பகற்கனவு, முஸ்லீம் லீகின் முட்டுக்கட்டை போன்ற செய்திகள். முஸ்லீம் லீகை ஆதரிக்கும் செய்தித்தாளைப் பெற்றில்லை என்பது மட்டுமல்ல, லீகுக்கு விரோதமான பத்திரிகைகளையே படிக்கும் நிலைமை இந்த நிலைமையில் லீக், இவ்வளவு ஆபாரமான வெற்றி அடைந்திருக்கிறது எப்படி? இந்த சூக்ஷமத்தைத் தெரிந்து கொள்ளாமல், காங்கிரஸ், தான் பெற்றுள்ள வெற்றிகளை எண்ணிக் களித்துப் பலன் என்ன? காங்கிரசின் கட்டுப்பாடும், பிரச்சார பலமும், வெற்றி பெறுவதற்கான முழு வசதியைத் தந்திருக்கிறது. எனவே காங்கிரசின் வெற்றி, எதிர்பார்த்தது, லீகுக்கு அத்தகைய வசதி இல்லை, இல்லாமலே, லீக் பெற்ற வெற்றி படேலுக்குப் பதைப்பையும், காந்தியாருக்குக் கவலையையும் நெருப்பைக் கக்கும் நேருவுக்கு நெற்றிச் சுருக்கத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது எப்படி?

இந்த மாகாணாத்திலே காங்கிரஸ் பிரமாதமான வெற்றி பெற்றது. காரணம் தெரிந்ததே. காங்கிரசைச் சில தனிப்பட்டவர்கள் எதிர்த்தார்களேயொழிய, எந்தச் கட்சியும் எதிர்க்கவில்லை. திராவிடர் கழகம் எதிர்த்தால்கூட, இதே கதிதான் என்று, கூறிக் களிப்பும் பெருமையும் அடைய விரும்பினால், காங்கிரசார் அதையும் அடையட்டும். திராவிடர் கழகத்தாலும் வெற்றிபெற முடியாது என்றே வைத்துக்கொண்டு பேசுவோம். இந்த நிலை காங்கிரசுக்கு இருக்கக்காரணம், அதன் இடைவிடாத பிரச்சாரம், எண்ணற்ற பத்திரிகைகள், மற்றக் கட்சியாரிடம் பத்திரிகை இல்லை. ஆகவே பிரச்சார பீரங்கிக்காரர்கள் ஜெயித்தார்கள். ஆனால், அந்தப் பீரங்கியின் குண்டுகள் ஏன், லீகிடம் மட்டும் பலிக்கவில்லை? லீகிடம் தினசரியே இல்லை! எப்படி வெற்றி லீக்குக்குக் கிடைத்தது, வெற்றிக் கொண்டாட்டம் முடிந்த பிறகாவது காங்கிரசார் இதனை யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

வடசென்னையில் காங்கிரசை டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்த்தார். சுயேச்சையாக நின்றார். காங்கிரசுக்கு 5000த்துச் சொச்சம். அவருக்கு 3200த்துச் சொச்சம் ஓட்டுகள், மகாத்மாவின் கட்சிக்கும் ஒரு தனி மனிதருக்கும் இடையே நடந்த போட்டியில், மகாத்மா சீடர் 1800 ஓட்டுகளே அதிகம் பெற்றார். இதுவும் வெற்றிதான், சென்னையிலே வாசம் செய்யும் ஜனாப் ஹமீத்கான், கர்நூலில், தேர்தலுக்கு நின்றார். லீக் ஆபேட்சகராக, அவருக்குக் கிடைத்த ஓட்டு 12,520.

அவரை எதிர்த்த காங்கிரஸ் முஸ்லீமுக்குக் கிடைத்த ஓட்டு 1155.

சுயேச்சை முஸ்லீமுக்குக் கிடைத்த ஓட்டு 261.

இதுவும் வெற்றிதான்! ஆனால் இந்த இரு வெற்றிகளிடையே உள்ள வித்தியாசத்தின் சூக்ஷமம் இருக்கிறதே, அதனைக் காங்கிரசார் உணர வேண்டும்.

பொதுமக்களிடையே இடைவிடாத தொடர்பு வைத்துக் கொண்டு பத்திரிகை பலத்தில் சிறந்து விளங்கும் காங்கிரஸ் ஜெயித்து விடுவது சகஜம், ஆச்சரியத்துக்குரியது அல்ல, அதனுடன் போட்டியிடும் இதர கட்சிகளிடம், காங்கிரசுக்குள்ள பிரச்சார வசதிகளில் நூற்றில் ஒரு பாகமும் கிடையாது. ஆகவே இதர கட்சிகள் தோற்கின்றன. இதுவும் சகஜம் ஆச்சரியமில்லை. ஆனால் ஆச்சரியத்துக்குரியதும், அரசியலில் புதைந்துள்ள அரிய சூக்ஷமமானதும் பிரச்சார பலம் பொருந்திய காங்கிரஸ் பிரச்சார பலம் இல்லாத லீகிடம், தோற்கிறதே அதுதான் பாருங்கள், மேலும் சில ஆச்சரியகரமான புள்ளி விவரங்களை.

ராமநாதபுரம் தொகுதியில் லீக் ஆபேட்சகர், கான்சாகிப் சையத் மகமத் சாகிப் 19.208
எதிர்த்த மகமத் ஆபுபக்கர் 807

கிருஷ்ணா கோதாவரி தொகுதி லீக் ஆபேட்சகர் ஜனாப் மாஹ÷ப் ஆலிபெக் 18.207

ஜனாப் மிர்சா ஹாசான் கான் காங்கிர் 865

வடாற்காடு தொகுதி லீக் ஆபேட்சகர் ஜனாப் மகமத் அன்வார் 19.250

எதிர்த்த ஜனா அப்துல்கிரமான் பெய்க் 201

தஞ்சாவூர்த் தொகுதிலீக் ஆபேட்சகர் ஜனாப் மகமத் இபுராகிம் 23.829

எதிர்த்த ஜனாப் ஹகீம் அப்துல் அஜீம் 422

இவ்விதம் இருக்கிறது. லீகன் வெற்றி.

காரணம் என்ன? முஸ்லீம் இன எழுச்சி! இவ்வளவு கண்கூடாக உண்மை தெரிந்தும், இனியும் லீகை ஒழித்துவிட்டோ, ஒதுக்கித் தள்ளிவிட்டோ, நாட்டை, ஏகபோகமாக இளலாம் என்று காங்கிரஸ் கருதுவது. நடக்கக்கூடிய காரியமா!

பாகிஸ்தானுக்காக, எத்தகைய தியாகமும் செய்வதற்கு, முஸ்லீம்கள் தயாராகிவிட்டனர். இரத்தம் சிந்தவும் தயார், எமது இலட்சியத்துக்காக, என்று புது டில்லியில் பாகிஸ்தான் விழாவிலே பேசிய நவாப் சாடா லியாகத் ஆலிகான் சொன்னது. அலங்கார வார்த்தை அல்ல, உண்மைநிலை, முஸ்லீம் லீகை இழித்தும் பழித்தும் பேசி, லீக் நவாபுகளின் கோட்டை என்று ஐளனம்செய்து, பயன் இல்லை.

இவ்வாண்டு பாகிஸ்தான் விழாவன்று பத்துக்கோடி முஸ்லீம்களின் எழுச்சிக்கும் ஆர்வத்துக்கும் மேலும் ஒரு விருந்து கிடைத்திருக்கிறது. உலகிலே புதியதோர் சுதந்திர ஆஸ்லாமிய அரசு ஏற்பட்ட செய்தியைப் பாகிஸ்தான் கோருபவர் கேட்டு மகிழ்வெய்துகின்றனர். பிறைக்கொடி இன்று கம்பீரமாகப் புதிதாக விடுதலையும் தன்னாட்சியும் பெற்ற ஆஸ்லாமிய ராஜ்யமொன்றிலே பறந்து கொண்டிருக்கிறது.

பாலஸ்தீனுக்குப் பக்கத்திலே ஜோர்டான் ஆற்றோரத்தைத் தாண்டியுள்ள சுமார் 34.750 சதுரமைல் அளவும், 30 இலட்சம் மக்களும் கொண்ட டிரான்ஸ் - ஜோர்டான் என்ற பிரதேசம், இதுவரை பிரிட்டிஷ் (மேற்பார்வை) ஆட்சியின் கீழ் இருந்தது. இன்று டிரான்ஸ்-ஜோர்டான், தனி அரசு ஆகிவிட்டது விடுதலை பெற்று, பிறைக்கொடியைப் பறக்கவிட்டு, தன்னாட்சியுடன் விளங்குகிறது. இதற்கான அதிகார பத்திரமும் பிரகடனமாகி விட்டது. 30 இலட்சம் பேர் கொண்ட டிரான்ஸ் - ஜோர்டான், தனி அரசு அமைத்தது என்ற நற்செய்தியைக் கேள்விப்படும்போது, பத்துக்கோடி முஸ்லீம்கள் சார்பிலே கேட்கப்படும் பாகிஸ்தானைப்பெற, ஏன் ஆஸ்லாமியர்கள் இரத்தம் சிந்தத் தயங்கப்போகிறார்கள்! காங்கிரஸ் அன்பர்கள் இதனை நன்கு யோசித்துப் பார்க்கவேண்டும்.

இன எழுச்சி ஏற்படுகிற வரையில்தான், பத்திரகை, பிரசார பலத்தைக்கொண்ட ஒரு கூட்டத்தை அடக்கமுடியும். இன எழுச்சி ஏற்பட்டு விட்டால் அந்தப் பிரச்சார பீரங்கி வேட்டுப் பலன்தராது. ஜனாப் ஜின்னா, ஆஸ்லாமிய இன எழுச்சியை உண்டாக்கிவிட்டார், இனி அதனை மாய்க்கமுடியாது.

இனஎழுச்சியின் பலத்தை உணர்ந்துதான், இங்கு நாமும், சில்லறை அரசியல் காரியங்களிலே உடுபட்டு நமது சக்தியைச் சிதறடித்துக் கொள்ளாமல், திராவிட மக்களிடையே இனஎழுச்சி ஏற்படும், உயிர்ப் பிரச்னையைக் கவனித்து வருகிறோம். லீகின் சக்தியின் சூக்ஷமத்தைத் தெரிந்துகொண்டேனும், சில்லறை அரசியலிலும், மின்மினித் திட்டங்களிலும் மனத்தைப் பறிகொடுத்து, சக்தியைச் சிதறடித்துக் கொள்ளும் தோழர்கள், திராவிடர் கழகத்தில் சேர்ந்து, இன எழுச்சிக்காகப் பாடுபடும் நோக்கத்துடன், பெரியார் பெரும்படையில் சேர முன்வர வேண்டுகிறோம். மார்ச் 23-இந் தேதி இந்த மகத்தான பாடத்தைத் தருமாக.

(திராவிட நாடு 31.3.46)