அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மகிழ்ச்சி மலரட்டும்!
இன்று மே முதல் நாள்! மேதினி எங்கும் கொண்டாடப் பெறும் மே விழா நாள்! ஆலாஸ்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரையிலள்ள பற்பல நாடுகளின் மூலை முடுக்ககளிலெல்லாம், மே நாள் முழக்கம் இன்று ஒலிக்கப்பெறும். பாடுபட்டு உழைத்துப் பலன் காணாது தவித்திடும் பாட்டாளியின் குரல் எங்கணும் ஏக்காளமிட்டு நிற்கும்!

மாஸ்கோ நகரில் இன்று மணங் கமழும். மக்கள் மகிழ்ச்சியிலே திளைத்திருப்பர். ஆட்சித் தலைவரும், படைத்தலைவர்கம் பாராட்டுரை கூறி நிற்பர். குதூகலம், அங்கே கொள்ளை கொண்டு ஆடிப்பாடி அழகு நடனம் புரியும்.

நியூயார்க் கடற்கரையிலே, தேம்ஸ் நதி தீரத்திலே, பாரிஸ் பூங்காவிலே, ùர்லின் கோட்டை வெளியிலே, யாங்ஸ்டிக்யாங் ஆற்றங்கரை யோரத்திலே, இந்தோனேஷ்யா சதுக்கத்திலே, பர்மாக் களத்திலே, திராவிடத்தின் தீம்பொழிற்றடங்களிலே தொழிலாளர்கள் ஒன்றுகூடி இதய ஒலியை ஏக்களித்துக் கொண்டிருப்பர். அவர்கள் இதயத்தினின்றும் வெளிக் கிளம்பும் ஒலி பெரும்பாலும் இன்ப கீதமாக இருக்காது, வேதனையின் குரலாகத்தானிருக்கும். குமுறும் அவர்களது உள்ளம், “காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் அவன், காணத் தகுந்தது வறுமையாம் - அவன், பூணத் தகுந்ததும் பொறுமையாம்” என்ற சொற்களைத்தான் கொட்டிக் கொண்டிருக்கும். உழைப்பவர்க்கே உரிமையெல்லாம் என்ற முழக்கம் காற்றில் மிதந்து செல்லும் பேரொலியாக இருக்கும்.

பல்வேறு பேதங்களின் காரணமாக ஏற்பட்ட வர்க்கப் போராட்டங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. பணப்பட்டாளத்திற்கும், பட்டினிப் பட்டாளத்திற்கும் மூண்ட மோதுதல் இன்னும் நிற்கவில்லை. போராட்டங்கள் பல கட்டங்களைத் தாண்டிக் கொண்டு வந்திருக்கின்றன, இன்னும் தாண்டவேண்டிய கட்டங்கள் ஏராளமாக இருக்கின்றன. பாட்டாளிகள், போராட்ட முயற்சியின் இடையிலே ஓர்நாள் ஒய்வு பெற்று நின்று, சென்ற கால, வருங்காலக் கணக்கைப் பார்க்கும் திருநாளே மே நாள், சென்ற காலங்களில் மகத்தான வெற்றிகளைக்காண முடியாவிட்டாலும், கண்ட சிறு சிறு வெற்றிகளை நினைந்து, மகிழ்ந்து, உள்ளத்தை எக்குவித்துக் கொள்ளவும், வருஙங்காலத்தில் ஆற்றவேண்டிய செயல்கள் குறித்து எண்ணி, செயலாற்றும் நெறியிலே உறுதி கொள்ளவும் மே நாள் பயன்படுகிறது.

அதிகார மண்டபத்தில், பணமூட்டைகளின் மீது அமர்ந்து கொண்டு, உழைக்கும் கூட்டத்தினரைச் சொக்கட்டான் காய்களை நகர்த்துவதுபோல், ஆலக்கழித்துக் கொண்டிருக் கின்றது முதலாளி வர்க்கம்.

அமெரிக்கா அணுகுண்டையும், பணக்குண்டையும் கையிலேந்தி உலகை வளைக்க எண்ணியிருக்கிறது - ஆட்லாண்டிக் நாடுகள் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு களம் புகக் காத்திருக்கின்றன. டச்சு வல்லரசு இந்தோனேஷ்யாவில் தன் வல்லூறுப் பிடியைத் தளர்த்திக் கொள்ள மறுக்கிறது - இந்தோசீனாவை விட்டுப் பிரெஞ்சுப் பேராசை ஆகலுவதாக இல்லை - மலேயாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்யம் ஆறுதிப் பிடிப்பை அடக்குமுறைகளாலல் உறுதியாக்கிக் கொள்ள முயலுகிறது - தென் ஆப்பிரிக்காவில் வெள்ளைநிறம் தன் நிறுத்திமிரைக் கழுவிக் கொள்ளமாட்டேன் என்கிறது. இவ்வாறு முதலாளித்துவ வல்லரசுகளின் வலை பலவகைகளில் வீசப்பட்டிருக்கின்றது. வலையின் சிக்கல்களிலே சிக்கிச் சீரழிக்னிறது. உழைப்போர் உலகம். சிக்கலை அறுத்துக் கொண்டு வெளிக்கிளம்ப அது பாடுபடுகிறது. தொழிலாளிகளின் வீறிட்டெழும் முயற்சியில் ùவ்றறி கூடாமலுமில்லை. சீனாவின் பெரும்பாகம் சிவப்பேறி விட்டது. தென்கிழக்குப் பகுதி நாடுகளில் தொழிலுலகம் விழித்துக் கொண்டு போராட்ட நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. கிழக்கு ஒரோப்பிய நாடுகளில் சிவப்புக்கறை படிந்து விட்டது. இந்திய துணைக் கண்டத்தில் ஏரிமலை உருவாகிக் குமுறிக் கொண்டிருக்கிறது, இன்னும் வெடிக்கவில்லை, வெடிப்பதற்கான சூழ்நிலையை உண்டாக்கும் முறையில் இளவந்தாரின் போக்கு அமைந்திருப்பது தெளிவாகக் தெரிகிறது.

திராவிடத்தைப் பொறுத்தவரையில் உழைப்பாளிக் கூட்டம் ஒன்றுசேர முடியாதபடி சிதறுண்டு கிடக்கிறது. உருவாகக் கூடிய வகையில் அமைந்திருக்கும் ஆலைத் தொழிலாளரின் எண்ணிக்கை இங்கே மிகமிகக் குறைவு. குறைவுக்குக் காரணம், யந்திரத் தொழில் வளர்ச்சியுறாமலிருப்பதேயாகும். விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் உழவர்களும், பல்வேறு சிறு சிறு, தனித்தனி தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களும், எண்ணிக்கையில் ஏராளமானவர்களே என்றாலும், ஆவரெல்லோரும் ஒருருவாகத் திரண்டு நிற்க இயலதாவர்களாக இருக்கிறார்கள். சமுதாயத்திலுள்ள ஏற்றத் தாழ்வு முறைகளும், அறியாமையுமே அந்நிலையில் அவர்களை ஆறுத்தி வைத்திருக்கின்றன. ஆகவேதான் திராவிடத்தைப் பொறுத்தமட்டில் - குறிப்பாகத் தமிழ்நாட்டில், உழைப்பாளிகள் ஒன்று கூடத் தடையாயிருக்கும் உயர்வு தாழ்வு முறைகளை அகற்றும் முயற்சியிலும், அறியாமையைப் போக்கி அறிவைக் கொளுத்தும் முயற்சியிலும் திராவிடர் கழகம் ஈடுபட்டு வருகிறது. “சக்திக்கேற்ற உழைப்பு “தேவைக்கேற்ற வசதி” என்ற முறையை, மனித சமுதாய வாழ்க்கைக்கேற்ற நிரந்தரத் திட்டமாக்க எடுத்துக் கொள்ளும் முயற்சி, எளிதில் முடிவதாக அமையவேண்டும். பொருளாதாரத் துறையில் அந்தக் குறிக்கோளை நோக்கித் தான் திராவிடர் கழகம் பணியாற்றி வருகிறது. அந்தக் குறிக்கோளை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஓர் ஒப்பற்ற நாளாகவே இந்த மே நாள் திராவிடர் கழகத்தினர்க்குப் பயன்படுகிறது.

“புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட, போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” என்ற பெருமுழக்கம் உலகத் தொழிலாளர்களின் உள்ளங்களிலிருந்து இன்று வெளிக் கிளம்பட்டும்! அதனால் ஏற்படும் மகிழ்ச்சி எங்கும் மலரட்டும்! அந்த மலரினின்றும் வீசும் இன்ப மணம் எங்குங்கமழட்டும்!

(திராவிடநாடு - 1.5.49)