அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மகிழ்ச்சி! மறுகணம்?

தஞ்சமடையும் பஞ்சை நானல்ல! வஞ்சனையே பஞ்சணையாகக் கொண்டுள்ள உள் கொஞ்சுமொழியே பின்னர் நஞ்சாகும் என்பதை நானறிவேன். எனவே, அம்மொழி மதுவால் மயங்கேன். செஞ்சேனையுன் தலைவன் நான். செயலாற்றும் வகையறிவேன். என்றுரைத்து அஞ்சா நெஞ்சுடன் வெஞ்சமர் புரிந்து, வெள்றிகண்ட வீர ஸ்டாலின், விரைவிலே பெர்லினில் சோவியத் கொடியைப் பறக்கவிடுவேன்! என்று முழக்கமிடுகிறார், வீணுரை அல்ல அது! தற்பெருமையுமாகாது உலகின் புகழுரைக்கு முழு உரிமை பெற்ற வீரன். வீணுரை பேசவேண்டிய அவசியம் ஏது? உலகமே கண்டு திகில் கொண்ட நேரத்திலே, நாஜிப் படையை நடுப்பாதையிலே நிறுத்தி வாலை நறுக்கிய பெருமை ஸ்டாலினுடையதே. பிற நாடுகள் நாஜியீன் பிடியிலே சிக்கியபோதும், அடிபணிந்த நேரத்திலும் சோவியத் மக்களுக்கு நாஜிப் படையை எதிர்க்கும் துணிவு எங்கிருந்து பிறந்தது? யார் ஊட்டியது.

புரட்சியிலே பிறந்தது சோவியத் வீரம்! இருளினிடையே ஒளியெனக் கிளம்பிய சோவியத் இடர் கண்டு அஞ்சாத இயல்பைக் கொண்டது. பெரு நெருப்பிலே கிடந்து, கொடுங்கோலால் தாக்கப்பட்டு, உள்ளத்திலே உரம் ஏறிப்போன உணர்ச்சி, சோவியத். எனவேதான், பலரைப் பயங்கொள்ளச் செய்த நாஸிசத்தைக் கண்டு, சோவியத் நடுங்கவில்லை, நகைத்தது. பதுங்கவில்லை, பாய்ந்தது; பணியவில்லை, போரிட்டது; வெற்றிகண்டது! வெள்ளை சஷியாவின் கள்ளச் செயலைக் கண்டு, சோவியத் அந்த நாளிலே பணிந்ததா? இல்லை, ஜாராட்சியின் போது பயந்ததா? இல்லை! உலக வல்லரசுகள் உறுமியபோது உடலும உள்ளமும நடுக்கெடுத்ததா இல்லை! அன்றும் அஞ்சவில்லை, இன்றும் அஞ்சக் காரணமில்லை!

எந்தப் புரட்சியின் பயனாக, சோவியத் மக்களுக்கு வீரமும உறுதியும், இலட்சியத்துக்காக உயிரையும் தரும் தியாக எண்ணமும் அந்தப் புரட்சி நடந்த நவம்பர் 7-ந் தேதி எனும் நாளை, விழாவாகக் கொண்டாடுகின்றனர். உலகெங்கும் அத்தகைய விழாவிலே, வீர ஸ்டாலின் இம்முறை பேசுகையிலே, ஜெர்மனிக்கு அழிவு நெருங்கிவிட்டதை விளக்கிக் கூறிவிட்டார். பெர்லினில் சோவியத் கொடியைப் பறக்கவிடுவேன், விரைவில்! என்று சூளுரைத்துவிட்டால். சோவிய்த மண்ணிலே நாஜிக் காலடி இல்லை என்று கூறினால். நேசநாடுகளின் ஆற்றலால், நாஜிசம் அழிந்தொழியும் என்பதையும், நேச நாடுகளிடையே பேதமூட்டும் பேதைமை பலிக்காது என்பதையும் எடுத்துக் கூறிவிட்டார்.

ஜெர்மனிக்கு உண்மையிலேயே இருக்கும் இரண்டு நோக்கம், உன்று நேசநாடுகளுக்குள் பேதமூட்டிப் பிளவு உண்டாக்குவது மற்றோன்று ஆளில்லா விமானம் போன்ற புதிய இரகிசியப் போர்க் கருவிகளால் பீதி உண்டாக்கப் பார்ப்பது என்பவைகளே பேதமூட்டினால் நாங்கள் ஏமாறமாட்டோம் என்ற ஸ்டாலின் கூறிவிட்டால். ஜெர்மனியின் புதிய இரகசிய ஆயுதங்களைப் பற்றியும், விஷயமறிந்தோர் பீதி அடையமாட்டார்கள். இந்தப் புதிய இரகசிய ஆயுதங்கள், பீதியை உண்டாக்குவதற்குப் பதிலாகத் தைரியத்தையே நேசநாடுகளுக்குத் தருகின்றன என்போம். எப்படி எனில், பழைய ஆயுதங்களைக் கொண்டு நேசநாடுகளைத் தோற்கடிக்க முடியவுல்லை, நேசநாடுகளின் வெற்றி வேகத்தைத் தடுக்க முடியவில்லை. எனவே, வேறு ஏதாவது புதிய ஆதாயத்தைத் தேடித் தீரவேண்டும் என்ற நிலைமைக்கு ஜெர்மனி வந்தாகிவிட்டது. என்ற உண்மையே இதனால் விளக்கப்படுகிறது. எனவே இரகசிய ஆயுதத்தை ஜெர்மன் வீசுவது, ஏற்கெனவே இருக்கும் ஆயுதம் பயனற்றுப் போன கதையைக் கூறுவதாகவே, நேச நாடுகளால் கொள்ளப்படுகிறது.

நிற்க. ஸ்டாலின் ஆற்றிய உரையிலே, இவ்விதமான வீர சக்தி, நேசக் கட்சிக்குப் பிறந்ததன் காரணம் விளக்கப்பட்டிருக்கிறது. அம்மொழி, ஜெர்மனிக்கு மட்டும எச்சரிக்கையல்ல, அகம்பாவக்காரர் யாருக்குமே அஃதோர் எச்சரிக்கை என்போம். இனச்செருக்கு எங்கு இருப்பினும், அந்த இனத்துககு அழிவு என்பதுதான் முடிவு.

ஓரினத்தை மற்றோர் இனம் அடக்க முற்படும்போது, ஆற்றலை மட்டுமே முன்னிறுத்தியல்ல காரியம் நடப்பது. ஆண்டவன் அருள் தமக்கு இருப்பதாகக் கூறியும், மற்ற எந்த இனத்தையும் விடத் தாமே உயர் ஜழதி என்று உரைத்துமே, போர் நடத்தப்படுகிறது. பலாத்காரமாக, இன்று நேற்றல்ல, தேவ-அசுர காலமுதற்கொண்டு, இதற்கு மேனாடுகளிலே உள்ள வரலாறுகளைவிட, இங்குள்ள இதிகாசங்களிலே எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உள. இனச்செருக்கைக் கொண்டுதான் இங்கு ஆரியர் மற்ற இனத்தவரை அழித்திருககின்றனர். அழித்தது மட்டுமல்ல, ஆரீயரை எதிர்க்க முடியாது, எதிர்க்கக்கூடாது, எதிர்த்தால் எதிர்த்தால் எதிர்த்தோர் அழிவர் என்ற எண்ணத்தையே, மற்ற இனத்தவரின் இரத்தத்திலே ஊட்டிவிட்டது. ஓநாயைக் கண்டதும் ஆடகளுக்கு அரை உயிர் போய்விடுகிறது. வேங்கையின் விழி மான் உயிரைக் குடித்துவிடுகிறது. பார்வையிலேயே பகையும், நமது இறைச்சி வருகிறது என்ற இறுமாப்பும், இது என்ன செய்ய முடியும் நம்மிடம் என்ற ஆணவ உணர்ச்சியும், தொக்கிக் கிடக்கும் அதுபோலவே, எந்த இனம், தான் உயர் இனம் என்ற நம்பிக் கூறிப் பிறரை நம்பவைத்துப் பிறரை நம்பும்படியாக நிர்ப்ந்தித்துவிடுகிறதோ, அந்த இனத்தின் சொல்லும செயலும, சிந்தனையும் போக்கும், ஈடில்லா ஆணவமுடையதாகிவிடுகிறது. இந்த இனச் செருக்கினாலேதான் ஜெர்மானியர், இதுவரை வீரர்கள் என்றும், யாராலும் அடக்கப்பட முடியாதவர்களென்றும், விருதுகள் பெற்று, வெற்றி விருந்துண்டு வீங்கினர். மற்றவர் ஏங்கினர். இந்தச் செருககுக்குத்தான் சம்மட்டி அடி வீழ்ந்தது சோவியத் நாட்டிலே. ஸ்டாலின் இது குறித்துப் பேசுகையில் ஓநாய்களிடம் மக்களுக்கு விரோதம் இருப்பதன் காரணம், அவை ஓநாய்களாக உள்ளன என்பதனால் அல்ல, அவைகளால் தமது ஆடுகள் அழிகின்றனவே என்பதனால் என்று அழுகுற எடுத்துக கூறியிருக்கிறார். இனச் செருக்குடன், பிரன்சு மக்களைப் பேடிகள் என்றும், நார்வே நாட்டினரை நாடிலாதான் என்றும், நாஜிகள் கூறிய நாள் போய்விட்டது. அடியோடு அவர்தம் ஆணவம் அழியும் நாள் விரைவிலேயே வருகிறது.

இனச் செருககுடன் கூடியவரின் விழியும் மொழியும் வழியும் எங்ஙனமிருக்கும் என்பதுணர, நாம் நாஜியைக் கண்டாக வேண்டுமென்பதில்லை, ஜெர்மனி சென்ற தீரவேண்டியதுமில்லை. அத்தகைய நடமாடும் காட்சிகளுக்கிடையேதான் நாம், நமது நாட்டிலேயே இருக்கிறோம். சுப காரியத்துக்காகச் சொர்ண புஷ்பதானம் ஏற்றுக்கொண்டு, ஐயர் தமது காலிலே வீழ்ந்து தொழும் தாசரைப் பார்க்கிறாரே ஒரு பார்வை, அதற்கும், பெர்லின் நாஜி பிடிபட்ட பிரன்சு மக்களைப் பார்த்த பார்வைக்கும் அதிக வித்யாசமிருக்க முடியாது. பெர்லின் நாஜிககாவது, அடிபணியும் அந்தப் பிரன்சுக்காரனுக்குத், திடீரென வீர உணர்ச்சி தோன்றினால் என்ன செய்வது என்ற பயம் ஓரளவு பிறக்கக் கூடும். ஐயருக்கு அந்தப் பயம் தோன்றிடக் காரணமில்லை. பரம பாகவதன், தாசன், தாள், பணியும் போது, முடியுடை வேந்தம், மூல புருஷரும், வீரரும், சூரரும், வீழ்ந்து வணங்கிய பூதேவரின் பாதங்களையன்றோ நாம் பூஜிக்கிறோம், என்ற மூடத்தனத்தின் பிடியிலே முழுவதும் சிக்கியன்றோ கிடக்கிறான்! இனச்செருக்கு நிற்கிறது, வலுவற்ற உடலுடன். இன உணர்ச்சியற்ற இரும்பு உடலம், தொழுகிறது!! வஞ்சனை வாழ்த்துகிறது, வெள்ளை உள்ளம் களி கொள்கிறது.

இனச் செருக்கு அழிகிறது, ஐரோப்பிய களத்திலே, இங்கோ அச்செருக்கின் ஆணிவேருக்கு உரம் அளிக்கப்படுகிறது! இனச் செருக்கால் இடர் விளைவித்து இழுக்குத் தேடினர் இந்திய உப கண்டத்தவருக்குத் தென் ஆப்பிரிக்க சர்ககார்; மத்திய சட்டசபையினர், அந்த இனச் செருக்குக்கு அடி இடி தருவது போலச், சென்ற கிழமை, கண்டனத் துர்மானமும், பதில் நடவடிக்கைத் திட்டமும் தீட்டினர்.

படையுடன் சென்று பழிதீர்த்துக் கொள்ளவும் நான் தயார். அந்நிலையிலே நாம் இல்லை என்று கூறினார் டாக்டர் கரே. லீக் காங்கிரஸ், பிற கட்சி என்ற பேதமின்றிச் சட்டசபையிலே ஆபபிரிக்காவிலே, ஆரபரிக்கும் மனுவின் மண்டைக்கு அடிதந்தனர்.

அதே சமயத்திலே, அழகிய கங்கைக் கரையோரத்திலே, ஆரியர் இனச் செருக்கைக் கக்கி, அச் செருக்குக்கு உரம் தரும் பழமைக்குப் புகழ் பாடினர். இந்து சட்டத்திலே சில திருததம் என்ற சொல் கேட்டதும், ஆரியம், வால் மிதிபட்டதும், வளைந்த உடலை நிமிர்த்திக்கொண்டு எழும் மலைப் பாம்புபோலக் கிளம்புகிறது. ஆப்பிரிக்காவிலே இனத் திமிரை அடக்க அறிவாளிகள் முனைகின்றனர். இங்கே அத் திமிருக்குக் காலவேகத்தாலும், கருத்துள்ளோர் சிலர் நடத்தும் கிளர்ச்சியாலும் தேய்வு ஏற்பட்ட உடனே, நோய்தீர மருந்தூட்டுகின்றனர். மேதைகள்!! இனச் செருக்குடன், இந்தியா இந்துக்களுக்கே என்று கூறுகின்றனர். பாக்கிஸ்தானம் பாதகர்ஸ்தானம் என்று பழமொழி பேசுகின்றனர். சுதேச மண்டலங்களிலே இந்து ஆதிக்கம் தேவை என்ற தூது விடுகின்றனர். திவான்கள் திருவாய் மொழிகளும், மகா கனங்களின் வாயுரைகளும், வக்கீல் ஐயர்களின் வேதக் கூச்சலும், சங்கராச்சாரிகளின் தாக்கீதுகளும், மும்முரமாக உள்ளன!

பாகிஸ்தானம், பாதுஷாக்களின் பிடியிலே போய்விடும், என்ற பாமரருக்குப் பயமூட்ட ஒரு பக்கம் பேசுவது; பாகிஸ்தானில் பலம் இராது என்று மற்றோம் புறம்பேசுவது. இனச்செருக்கு இரட்டை நாக்கடன் பேசுகிறது. ஜனாப்ஜினனா, பாகிஸ்தான் பக்கீர் ஸ்தானாகவுமிராது. பாதுஷா ஸ்தானாகவுமிராது. அது இஸ்லாமியக் கோட்பாட்டின்படி அமையும். இந்துஸ்தான் போல் அவ்வளவு செல்வம் உள்ள நாடாக இராது. என்றாலும் தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்ளும் செல்வ பலம் உள்ள நாடாகத்தான் இருககும். ஒரு சிலர் மேலும் மேலும் பணக்காரர்களாகக் கூடிய முறையிலே பாகிஸ்துன் ஆட்சி அமைப்பு முறை இராது, எல்லோரும் இன்புற்றிருக்கும் எழிலமைந்த இஸ்லாமியக் கோட்பாட்டுடன் அது விளங்கும் என்று கூறியிருக்கிறார், லீக் அமைத்துளள, தொழிலபிவிருத்திக் கமிட்டியினரிடம், இருந்தாலுமென்ன, இனச்செருக்காளரின் இழி குணமோ பழியுரையோ குறையவில்லை. பாகிஸ்தானைக் கண்டிப்பதை அவர்கள் நிறுத்தித்ககொள்ளவில்லை.

இனச் செருக்கை அடக்கிய ஸ்டாலின், பெர்லினில், சமத்துவக் கொடியைப் பறக்கவிட்ட பிறகுங்கூட, இங்கு இனச் செருக்கு இருந்துதீரும், ஆம் இங்கு மக்களிடை சோவியத் மனப்பான்மை, மான உணர்ச்சி, உரிமையில் ஆரபம் பிளந்தால்தானே!! இனச் செருக்கு அழிந்துபடவேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்ட நாம், நாஜியின் இனச்செருக்கு நசுக்கப்படுவது கண்டும், ஆப்பிரிக்காவிலே அச்செருக்கு அடிபடுவது கண்டும் மகிழ்கிறோம். ஆனால் அந்த மகிழ்ச்சி மறுகணம், மறைகிறது. இங்க ஆரியம் ஆட்சி செய்யும் கோரத்தை எண்ணி என் செய்வது? என்ன செய்யப்போகிறீர்கள்?

(திராவிட நாடு - 12.11.1944)