அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மகிழ்ச்சி - நன்றி!
(2)
வெற்றி பெற்றுத் தந்தீர்கள் - மிக்க மகிழ்ச்சி - உள்ம் கனிந்த நன்றி!

அறப்போர் அழகுற நடந்தேறியது - ஆண்மையாளர்களின் அணிவகுப்பு கண்டு அகமகிழாதார் இல்லை, பகைவனும் பாராட்டும் விதமான ஆர்வத்துடன் களம் சென்ற வீரர்கள் காரியத்தை முடித்துவிட்டுக் களப்பூட்டும் வெற்றிச் செய்தியை அனுப்பி வைத்தனர் - நன்றி நன்றி!

வாரீர் வீரர்காள்! என்று நான் அழைத்ததும், பாசறைகளிலே கூடினர், போர்ப் பரணி பாடினர், அணிவகுப்புகள் கிளம்பின. சிற்றூர்களிலே சிந்து, பேரூர்களிலே முழக்கம், எங்கும் முரசொலி செய்தனர், தங்கக் குணமும் ஏஅகு உள்ளமும் படைத்த தம்பிமார்கள்!

இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்! வெற்றி கிடைத்தது! வீரம் பூத்தது! திருநாடு பெருமை கொள்கிறது, தன் அருமருந்தன்ன புதல்வரின் ஆற்றல்கண்டு! தேய்ந்த திராவிடம் இனி மாயமாட்டோம், ஓயாது, உழைத்திட ஒப்பற்ற தீரத்துடன், திராவிடர் திரண்டெழுந்து விட்டனர். இனத் தளைகள் அறுபடும், தன்னரசு தழைத்திடும், தாழ்வு ஆகலும், புதுவாழ்வு பிறக்கும் என்ற உறுதிகொண்டுவிட்டது, விடுதலைப் படையின் வீர முரசம் கேட்டு.

வீழச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் - விசை ஓடிந்த தேகத்தில் வன்மை வேண்டும் - என்று கேட்டார் கவிஞர்! ஆகஸ்ட் முதல்நாள் தமிழகம், எழுச்சிக் கோலத்தைக் காட்டிவிட்டது - எதிரிகள் திகைக்கவும் நண்பர்கள் களிக்கவுமான காட்சி.

கதிரவன் கண்சிமிட்டு முன்பு காளைகள் கிளம்பினர் - கழகத்தை வாழ்த்தினர் - முதியவர் பாராட்டினர் - முரசு ஒலித்தது, முதற்படை கிளம்பிற்று - எடுத்த காரியத்தைச் சிறப்புற முடித்துக் காட்டினர்.

ஆகஸ்ட் அறப்போர் பற்றிய அறிவிப்பைத் திமுக தோழர்கள் பெற்றதே ஜ÷லை 29ல்! இரண்டே நாட்கள் இருந்தன! நான் சிறிதளவு அஞ்சினேன் - தோழர்கள் கூடிக் கலந்து பேச, வழிவகை தீட்ட, நேரம் இராதே, களம் புகும் நெஞ்சறுதி நிரம்ப உள்ளது, எனினும், கச்சையை வரிந்து கட்டி, களம்புகும் நேரம் குறித்து அணிவகுப்பைக் கூட்ட, நேரம் போதாதே, என்றெண்ணினேன் - ஏங்கவும் செய்தேன். ஆனால், ஆகஸ்டு அறப்போரிலே நான் கண்ட அணிவகுப்புக் காட்சி, என்னை நோக்கிக் கேள்வி கேட்பது போலிருந்தது - தூங்கிக் கொண்டிருக்கிறோம் என்றா கருதினீர், அண்ணா! முரசு எப்போது ஒலிக்கும் என்று காத்துக் கிடப்பவர்களல்லவா, நாங்கள்! திராவிடத்தின் பகைவர்களைத் தாக்கிடும் நாள் குறித்தும் தாமதமின்றிக் களம் செல்ல, வாளை உறையிலிடாது வைத்தவண்ணமன்றோ இருக்கிறோம்! திராவிடரின் விடுதலைப் படை, எந்த நேரத்திலும் அணிவகுப்பிலேதான் உள்து என்பதை அறியாது அஞ்சினீரா! இதோ காணீர் படைகளை, கேளீர் வெற்றி முரசொலியை வெற்றி இதோ! இனி வேறு வேலை தாரும், விலாப்புறம் தாக்குவதா, நடுப்புறம் பாய்வதா, திராவிடத்தில் பகைவர்களை, எப்பக்கம் சென்று தாக்கிட வேண்டும்? எங்கே தாக்கீது? ஏன் தயக்கம்! ஆபத்தா? - எமக்கது விளையாட்டு! சாவா? தாயகம் தலைநிமிர அததான் மாமருந்து! ஒன்றுக்கும் அஞ்சாதீர்! ஓ! என் அண்ணாவே! ஓர் குரல் கொடுத்தால் போதும், படை பல திரளும்! சந்தேகம் வேண்டாம்! இதோ வெற்றி! என்று முழக்கமிட்டு, என்னைக் களிப்புக் கடலிலே தள்ளிவிட்டனர், அறப்போர் வீரர்கள்!

தார் சட்டியும் குச்சு மட்டையுந்தான், போர்க்கருவிகள் தமிழன் கண்டபோர்க்கருவிகள் இவையா! இல்லை, இல்லை - எதிரியின் உருவம், அவ்வளவு கேவலமான கருவிக்கு மட்டுமே உரித்தானவிதமாக இருந்தது - மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட மரப்பலகை, அதிலே இந்தி எழுத்துக்கள் இதை, வேல் கொண்டாதாக்குவது - வில்லம்பா தேவை - டார்ப்பிடோ வேண்டுமோ! - பீரங்கி தேவையோ! - இல்லையல்லவா - எனவேதான் தார் பூசினால் போதும் என்று கிளம்பினர். தார் சட்டியும் குச்சுமட்டையும் தூக்கிக் கொண்டு! இந்தி எழுத்துக்கள் அழிந்தொழிந்தன - தமிழன் தலைநிமிர்ந்து நடக்கலானான் - அறப்போர் வீரர்கள், தாயகத்தின் மானத்தைக் காக்கத் தயங்கோம் என்ற உறுதியை உலகுக்கு உரைத்தனர் - எங்கும் தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! என்ற முழக்கம் - திராவிட நாடு திராவிடருக்கே என்ற பேரொலி! எங்கும் விழா! எப்பக்கமும் களிப்பு! எவர் முகம் மலர்ந்தது - ஒளி இழந்த கண்ணினாய் போ! போ! போ! என்று விரட்டினர். ஒளி படைத்த கண்ணினாய் வா! வா! என்று அழைத்தனர் - திராவிடத்தின் திருவிளக்கி வெற்றி ளியைத் தந்தது - தாயகம் பூரித்தது.

ரயில்வே ஸ்டேஷன்களிலே பிணம் விழக்கூடும் என்று எதிர்பார்த்தோம் - ஆமாம் - சிறைக்குள்ளேயே பிணம் விழச் செய்யும் விபரீத புத்தியினர் ஆட்சியல்லவா இது - மத்ய சர்க்காரும் மாகாண சர்க்காரும் கூட்டாகப் பாதுகாத்துப் பரிபாலித்து வரும் ரயில்வே ஸ்டேஷனில், பகிரங்கமாகச் சென்று பலர் முன்னிலையில் இந்தி ஒழிக என்று முழக்கிமிட்டு, இந்தி எழுத்தைத் தார் கொண்டு அழிப்பது என்றால் என்ன பொருள். சர்க்காரின் போக்கைக் கண்டிக்கிறோம் முகத்திலே கரி பூசுகிறோம் என்றுதானே பொருள் - இதைச் செய்யும்போது, எதிர்ப்பார் எவருளர் என்று ஆறுமாந்து கிடக்கும் ஆதிக்க வெறியினர், துப்பாக்கியைத் தானே தூக்கிக் காட்டுவர், அவர்கள் இயல்பே அதுதானே! எனவேதான் ஆகஸ்ட் முதல் நாள் கருநிறத்தாரில் நமது தோழர்களின் குருதியும் கலந்து, பிறகே இந்தி எழுத்தின் மீது இருவண்ணச் சேறு பூசப்படும் என்று எண்ணினோம் = இதை அறிவித்தோம் - அப்படியா என்ற அடிமூச்சு அல்ல நமக்குக் கிடைத்த பதில். அதனால்என்ன என்ற ஆண்மையுரையே பதிலாகக் கிடைத்தது, அணிவகுப்புகள் கிளம்பின, அறப்போர் நடந்தது, ! வெற்றி கிடைத்தது, வீரரைத் தொடக்கூடத் துணிவு இல்லை, துரைத்தனத்துக்கு என்ற உண்மை துலங்கிற்று! (கடலூரில் தவிர)

துப்பாக்கி இல்லை! தடியடி இல்லை! சிறை இல்லை! சீற்றம் கொண்ட முகத்தைக் காணோம்! சட்டம் விழித்துக் கொள்ள மறுத்தது, நமது திட்டம் நிறைவேறிற்று, இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டன, வடநாட்டு ஏகாதிபத்தியத்தின் முகத்திலே கரி பூசப்பட்டது - ஏன் என்று கேட்கவும், நாதியற்ற நிலையிலே கிடந்தன, ரயில்வே ஸ்டேஷன்கள்! தாயகத்தின் விடுதலைப் படை வீரப் பணியாற்றும் போது, நாங்கள் ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்பவர்கள் போல் காட்சி தந்தனர், போலீஸ் படையினர்! கட்டுப்பாடாக, தமிழகமெங்கும் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களிலே கரி பூசினர் - வாய் பிளந்த வண்ணம் இருந்தது சர்க்கார் - அடக்குமுறையை அவிழ்த்துவிட அஞ்சிய நிலையில்! இந்த அச்சம், உங்கள் கண்கள் ஊமிழ்ந்த வீரத்தால் விளைந்தது! இல்லையெனில், இந்தச் சர்க்காருக்கா, கொடுமை செய்யத் தெரியாது! செத்த ஹிட்லர்கூடப் பாடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க வேண்டுமே இவர்களிடம்! கொடுமை பல செய்து பழக்கப்பட்டவர்கள்தான் ஆளவந்தார்களாக உள்ளனர் - எனினும் அவர்களே அன்று திகைத்துப்போய்! நின்றனர்! அவ்வளவு ஆற்றலுடன், தோழர்கள் களத்திலே நின்றனர்! அவ்வளவு வீர உணர்ச்சி காணப்பட்டது! இது, ஒரு இன விடுதலைக்கு நல்லதோர் அறிகுறி.

எத்தகைய கஷ்டம் ஏற்கவும் சிசத்மாக உள்ளவர்கள், இடவர் மட்டுமல்ல, தாய்மார்கள் இதோ இருக்கிறோம் என்று கூறுவதுபோல, இந்த அறப்போரிலே, பல தாய்மார்கள் கலந்து கொண்டனர் - பெருமைக்குரிய செய்தியாக இதனைக் கருதுகிறேன். பேய்க்குணம் கொண்ட சர்க்கார் இருப்பது தெரிந்தும், தாய்க்குலத்தின் வீரம், தாயக விடுதலைக்குப் பயன்பட்டாக வேண்டும் என்ற எண்ணத்தால் ஊந்தப்பட்டுத் தாய்மார்க் பலர் களம் சென்றனர் - அவர்களின் காணிக்கை, அருமை மிக்கது. வளர்க அவர்தம் ஆர்வம்! என்று வாழ்த்தாதார் இல்லை!

இந்த அறப்போர், திராவிடச் சமுதாயத்திலே திரண்டுள்ள ஆர்வத்தை, ஆற்றலை எடுத்துக் காட்டிற்று. இன விடுதலைக்கு, எவ்வளவு அவசரமாக அழைப்பு விடுத்தாலும் அணிவகுப்புகள் கிளம்பும் நிலை, திருஇடத்திலே இருப்பது, தெளிவாகிவிட்டது.

எழுச்சிக் குரலை, வீர முழக்கத்தைக் கேட்டதும், ஏதேச்சாதிகாரியும் அச்சப்படுகிறான், அடக்குமுறையை அவிழ்த்துவிடப்பட அஞ்சுகிறான், விளைவு எப்படி எப்படி உருவெடுக்குமோ என்ற அச்சம் தாக்குகிறது இளவந்தார்களை, என்பதும் ஆகஸ்ட் அறப்போர் மூலம் விளக்கமாகி இருக்கிறது.

இவைகளை எல்லாம்விட, பெருமைக்குரிய மற்றோர் விஷயம் விளக்கமாகியிருக்கிறது - அதுகண்டு நான் அளவிலா மகிழ்வு கொள்கிறேன் கண்ணியம் ஒழுங்கு, பூத்து மணம் கமழ்கிகறது, திராவிடத்தில்!

ஆகஸ்ட் அறப்போரிலே கலந்து கொண்டவர்களிலே மிகப் பெரும்பான்மையினர், கடிக்க வரும் ஆரவத்தைக் காலால் மிதித்துக் கொல்லும் பருவத்தினர் - வாலிபர்கள் - முறை, விளைவு, இவை பற்றி ஆழ்ந்து யோசனை செய்யும் நிலையில் உள்ளவர்களல்ல - எனினும், அன்று அவர்கள் அனைவரும், காட்டிய கண்ணியம், கடைப்பிடித்த ஒழுக்கம், என்னை இன்பபுரிக்கு அழைத்துச் செல்கிறது!

படைவரிசகைள் பவனி வருகின்றன! போலீசார் பார்த்தவண்ணம் உள்ளனர்! தடி இல்லை! தர்பார் குறிகள் இல்லை! எனினும், தோழர்கள் கண்ணியத்தைத் தினைத்துணையும் இழந்தாரில்லை! காட்டுக் கூச்சல், முரட்டுத்தனம், காலிச் சேட்டைகள், துணி தலைகாட்டவில்லை! ஆத்திரம் கொண்ட நிலையிலே அணிவகுப்பு சிதறுவதுண்டு - அறம் மறைவது உண்டு - அழிவுக் காரியத்திலே திடீர் வேட்கை பிறப்பதுண்டு - இதனைத்தான், பற்பல இயக்கங்களிலே கண்டிருக்கிறோம். ஆனால், நமது தோழர்கள் எந்தக் காரியத்தை மேற்கொண்டனரோ, அதனையன்றி, வேறெதனையும் கருத்திலே கொள்ளாது, ஒரு வீரப்படைக்கு விடுதலைப் படைக்குத் தேவையான கண்ணியத்தையும் ஒழுக்கத்தையும் காட்டினர்! அவர்களின் அந்த அருங்குணத்தை நான் பெரிதும் பாராட்டுகிறேன். அருவருக்கத் தக்க முறையில் நடத்தப்படும் போர், காட்டுமிராண்டிகளின் செயல்! நாம் கண்ணியத்தைக் கடைப்பிடித்து, பிறப்புரிமைக்காக, தாயக விடுதலைக்காகப் போரிடும் அறப்போர் படையினர்! நம்மிடம் கண்ணியமும் ஒழுக்கமும் நிரம்ப வேண்டும்! ஆகஸ்டு அறப்போரில் கலந்து கொண்ட அனைவரும், இந்த இரண்குணத்தைக் கொண்டிருந்தனர்- இது புதிய புதிய மேலும் விரிவான போர்த் திட்டங்களை வகுக்கும் உள்ள உரத்தை எனக்கு அளிக்கிறது. இந்தத் தனிச் சிறப்புக்கு என் நன்றியறிதலைத் தனியாகச் செலுத்திச் கொள்கிறேன்.

ஆகஸ்ட் அறப்போரிலே மற்றோர் முக்கியமான விஷயம், நம்மை எல்லாம் களிப்புறச் செய்த அளவுக்கு மாற்றார்களை மருளச் செய்திருக்கிறது - திராவிட கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இந்த அறப்போரில் ஒருமித்துக் கலந்து கொண்டதைத்தான் குறிப்பிடுகிறேன். பல ஊர்களில் இரு கழகத்தவரும் கூடிப் பணிபுரிந்தனர் - எதிரியின் நெஞ்சம் வெடித்திடும் நிலை ஏற்பட்டது. திராவிடம் வீறுகொண்டு எழுந்துவிட்டது என்ப மட்டுமல்ல, வேறுபாடுகளும் மாறுபாடுகளும் இருப்பினும், பொது எதிரியைத் தாக்கும் நேரத்தில், ஒன்றுபட்டு நிற்கிறார்கள். திராவிடர்கள், என்பதைத் திராவிடத்தின் எதிரிகள் உணர்ந்து கொண்டனர்! இது அவர்கள் உள்ளத்திலே புதியதோர் அச்சத்தையும், திராவிடர் உள்ளத்திலே புதிய பூரிப்பையும் தரவல்லது! புதுமுறுக்கு ஏறுகிறது விடுதலைப் படையினருக்கு! இந்தத் தோழமை அனைவரும் போற்றி வளர்க்க வேண்டிய பண்பு! ஆகஸ்ட் அறப்போர் இதனையும் நமக்குத் தெளிவாகத் தெரிவித்து விட்டது.

தாயகத்தின் விடுதலைக்கான போர்புரியத் தயாராக எப்போதும் காத்துக் கொண்டிருக்கும் படை பெரும்படை வரிசையிலே பிளவு ஏற்படுத்துலாகாது என்ற பேருண்மையை உணர்ந்த நிலையில் உள்ள படைத்தலைவர்கள்.

அடக்குமுறையை அவிழ்த்துவிட்டால், விளைவு விபரீதமாகிவிடுமோ என்ற அச்சம் குடிகொண்ட உள்ளத்துடன் இளவந்தார்கள்!

இது இன்றயைத் திராவிடம்! ஆகஸ்ட் அறப்போர் தந்த ஓவியம்! திராவிடததின் புதிய காவியம்! ஆம்! இதனை அறிவோம், அகமகிழ்வோம்! திராவிடத்தின் விடுதலைக்கான வழிவகைகளைப் புதிய நம்பிக்கையுடன், புதிய உற்சாகத்துடன் தீட்டுவோம் - நமது ஆற்றலை மாற்றார்க்குக் காட்டுவோம் - திராவிடத்தைத் தனிநாடு இக்குவோம்! இந்த உறுதியைச் சராசரி அறிவும், நாட்டுப்பற்றும் கொண்டவரும் பெறத்தக்க விதமாக அறப்போர் நடத்தி வெற்றிகண்ட வீரத்தோழர்களே, உமக்கெல்லாம் என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இம்முறை போல் இனியும் ஆட்சியாளர் கைகட்டி வாய்பொத்தி நிற்பர் என்று எவரும் கருதார் - மீண்டும் மீண்டும், நாட விடுதலை ஆடையுமட்டும், இதனினும் கடுமையான பல அறப்போர்களை நாம் நடத்த வேண்டும் - அப்போது, சிறைக்கதவு திறந்து திராவிடச் சங்கங்களை விழுங்கும் - தடி தாக்கும் - துப்பாக்கி பேசும்! அவைகளைக் கண்டும் கலங்கிடோம் என உறுதி பெற ஆகஸ்டு அறப்போர் ஒரு வாய்ப்பளித்து விட்டது. நாம் ஓர் முடிவு செய்து கொண்டோம், ஆண்டு பலவற்றுக்கு மன்பே, திராவிடநாடு திராவிடருக்கே என்பதே ஆம்முடிவு. அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்று முழக்கமிட்டோம், பெரியார் தலைமையில் அவர் ஆதோ களத்திலே! ஆகஸ்ட் அறப்போரில் அவர் ஆண்மையுடன் நின்றார். அவர் காட்டிய பாதையையும் தந்த பாடத்தையும் மறவோம். அடைந்தே தீருவோம் திராவிட நாட்டை திராவிட நாடு திராவிடர்க்கே!

(திராவிடநாடு - 3.8.52)