அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மஜீத் குடும்பப் பாதுகாப்பு நிதி!

தி.மு.க. பொதுச் செயலாளர் வேண்டுகோள்

அன்புடையீர்,
வணக்கம். தென்னாற்காடு மாவட்டத்தில், தேர்தலில் காங்கிரசுக்கு எதிர்ப்பாகப் பணியாற்றி விர இளைஞர் மஜீத் எனும் தோழர் காங்கிரசுக்காரர் ஒருவரால் கொலை செய்யப்பட்ட செய்தி தாங்கள் அறிந்ததே.

தமிழ்நாடெங்கும் இந்தப் படுகொலையைக் கண்டித்து அறிக்கைகள் விடுத்தும், கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றியும், அனுதாபச் செய்தி அனுப்பியும், எல்லா முற்போக்குக் கழகங்களும், தங்கள் கடமையைச் செய்தன.

தென்னாற்காடு மாவட்டத்தைச் சார்ந்து !உழைப்பாளர் கட்சி) எம்.எல்.ஏக்களும் இது விஷயமாகத்தங்கள் கடமையைச் செய்து வருகிறார்கள்.

நெல்லிக்குப்பத்தில், தோழர் மஜீத் குடும்பப் பாதுகாப்பு நிதி திரட்டும் முயற்சிக்காக ஒரு தனிக் கமிட்டியும் அமைக்கப்பட்டிருக்கிறது.

பல நண்பர்கள் தனிப்பட்ட முறையிலே உதவி செய்துமிருக்கிறார்கள்.

சில பொதுக்கூட்டங்களிலே உண்டியல் மூலம் சிறுதொகையும் வசூலாகி இருப்பதாக அறிகிறேன்.

தோழர் மஜீத்தின் குடும்பத்தினர் பரம ஏழைகள்.

பொதுநலப் பணிக்காத் தன் மகன் பலியிடப்பட்ட செய்தி ஒருபுறமும் வறுமை மற்றோர் புறமும்தாக்க, மஜீதின் தந்தை தத்தளிப்பதாக அறிகிறேன்.

எனவே, ‘மஜீது குடும்பப் பாதுகாப்பு நிதி‘ முயற்சியில் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் ஈடுபட்டு, உருவாக்கி, விரைவில், வெற்றி தேடித் தரக்கோருகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள், ‘மஜீது குடும்பப் பாதுகாப்பு நிதிக்காக அனுப்பு விரும்பும் உதவித் தொகையை, ‘திராவிட நாடு‘ நிலையம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு ‘மஜீது குடும்பப் பாதுகாப்பு நிதி‘ என்று குறிப்பிட்டு அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக் கூட்டங்களில் உண்டியல் வசூலிக்கப்பட்டால், அதனையும் இம்முறையிலே அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

நெல்லிக்குப்பத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நிதிக் கமிட்டி தென்னாற்காடு மாவட்ட எம்.எல்.ஏக்கள் ஆகியோரையும் கலந்து கொண்டு சேரும் நிதியை அந்தக் குடும்பத்துக்குச் சேர்ப்பிக்கும் காரியத்தை மேற்கொள்ள இருக்கிறேன்.

இந்த என் வேண்டுகோளை அன்புடன் ஆதரித்து, விரைவில் என் எண்ணம் வெற்றிபெறச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

அன்பன்
அண்ணாதுரை


திராவிட நாடு – 6-4-52