அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மலை விழுந்கி மகாதேவன்

மஞ்சள் பெட்டி மங்களகரமானது என்று சொன்ன மகானுபாவர்களே மஞ்சள் பெட்டி வந்த பிறகு நாங்கள் கண்டது பஞ்சம்தானே! மஞ்சப் பெட்டி பஞ்சப் பெட்டியாகிவிட்டதே, ஏன்?

வயிறார உணவு கிடைக்கும், வெள்ளைக் காரச் சுரண்டல் ஒழிந்தால் என்று பேசினீர்களே, வெள்ளையன் ஒழிந்தானே, ஏன் எங்களுக்குச் சோறு கிடைக்கவில்லை.

உணவுப் பொருளின் விலை ஏன் விஷயம் போல ஏறி வருகிறது.

ஆடைக்கு நாங்கள் இப்படி அலைகி றோமே, ஐயா! ஆளவந்தாரே! தர்மமா? நாட்டிலே ஒற்றுமையை நிலை நாட்டுவோம் என்று பேசினீர்களே? நல்லவர்களே, உங்கள் காங்கிரஸ் கமிட்டிகளிலேயே இப்போது, `அடிதடி' அளவுக்கு இருக்கிறதே ஏன்?

சிலம்பு போட்டு, போட்டு, ஆவேசமாட வைக்கும் பூஜாரிகள் போல வீராவேசமாகப் பேசிப் பேசி, எங்களை ஆட்டிப் படைத்தீர்களே, ஐயன்மீர் ஆட்டம் நின்றதும், அலுப்பும் சலிப்பும் தான் கண்டோமே தவிர, ஆனைபலன் ஒன்றும் காணோமே!
* * *

இவ்விதமாகவெல்லாம், கேள்வித் தாள்கள் வந்து குவிகின்றன தலைவரிடம்- அவர் முகம், மலருமா! களைக்கிறார்- கண்களைக் கூட்டத் திலே செலுத்திப் பார்க்கிறார்- கேள்வித் தாள் களை, அடுக்கி வைக்கிறார் ஒரு புறமாக.

பதில் சொல்லுமய்யா, பதில் சொல்லும்! கேள்விகளுக்குப் பதில் வேண்டும்! பிரசங்கம் போதும், எங்கள் சஞ்சலத்துக்குப் பரிகாரம் வேண்டும்' என்று கூச்சலிடுகின்றனர், பொதுக் கூட்டத்திலே சிலர்.

வந்தேமாதரம்- என்கிறார் தலைவர்- `யார் இல்லை என்கிறார்- வந்தேமாதரம், வந்தேமாதரம் என்று ஆயிரமாயிரம் முறை சொல்லியாயிற்று. இப்போது எங்கள் குறைகளைப் போக்க மார்க்கம் என்ன கூறும்' என்கிறார்கள் மக்கள் தலைவர். பிரதம பிரசங்கியாரைப் பார்க்கிறார். ``பிரதம பிரசங்கியார், ஜாடையைத் தெரிந்துகொண்டு, பேச ஆரம்பிக்கிறார். ``மகாஜனுலாரா!''( மகா ஜனங்களே!) என்று அர்ச்சிக்கத் தொடங்குகிறார். ``மன, ரங்கா காருஓய்! (நமது ரங்கா அவர்கள்) என்று சிலர் கூறுகிறார்கள். பிரசங்கியாரைக் கண்டதும்,

``எவரண்டே ஏமி ஓய்! ரங்காகாருகானா உன்னி, கங்கா காருகானா உன்னி மனக்கே மண்டி'' பலர் கூறுகிறார்கள். (யாராயிருந்தால் என்னய்யா ரங்காவாக இருந்தால் என்ன, கங்காவாக இருந்தால் நமக்கென்ன?) பேசுகிறார். பிரசங்கியார்- மக்களோ, கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்படி வற்புறுத்துகிறார்கள்.

ரங்கா பேசட்டும் ஒரு பகுதியினர் கூவுகிறார்கள்.

ரங்கா, பதில் கூறட்டும்- இன்னொரு பகுதியினர் கூவுகிறார்கள்.

இரு அலைகளுக்கிடையே அவர்! ஏதோ பேசுகிறார்- பிறகு, பதிலுரைப்பது என்று தீர் மானித்துக் கேள்விகளைப் பார்க்கிறார்- கேள்வி கள், சாமான்யமானவைகளாகவா உள்ளன! திகைக்கிறார்! ஒரு கேள்விக்காவது ஏதோ ஒருவகையிலாவது பதில் கூறிப் பார்ப்போம்- மக்களைச் சற்றுச் சமாதானப்படுத்திப் பார்ப் போம்- என்று எண்ணுகிறார்.

உழவன் என்றால் யார்? என்று கேட்டிருக் கிறார். யாரோ ஒருவர், `எவனொருவன், தன் நிலத்தைத் தானாகவோ அல்லது கூலி ஆட்களை வைத்தோ விவசாயம் செய்கிறானோ, அவனே உழவன்'- என்று ரங்கா பதிலளிக்கிறார். இப்படிப் பட்ட பதில் அளிப்பதில் அவருக்குச் சிரமம் கிடையாது- பயிற்சியும் பழக்கமும் உண்டு- முன்னாளில் பேராசிரியராக இருந்தவர். ஆனால் கேள்வி, இந்தப் பொருள் விளக்க அளவோடு இருந்திருக்குமா! இருந்திருந்தால் ரங்கா, மளமளவெனப் பதிலை வீசி இருப்பாரே! மற்ற கேள்விகளைப் பார்க்கிறார், மருளுகிறார்.

உழவென்றால் யார் என்று கேள்வி கேட்டவர், இந்தச் சர்க்கார் உழவர்களுக்குச் செய்துள்ள நன்மைகள் யாவை, நிலத்தை உழு பவர்களின் உழைப்பை உறுஞ்சுபவர்களை ஒழிக்காத காரணம் என்ன, ஏன் நிலத்தை உழுது பயிரிடுபவனுக்கே சொந்தமாக்கக் கூடாது! மஞ்சள் பெட்டியின் மகத்துவத்தைப் பற்றி மக்களிடம் பேசியபோது, இப்படிப்பட்ட மகத்தான காரியங்களைச் செய்யப்போவதாக மார் தட்டிப் பேசினீர்களே- இப்போது நம்ம சர்க்கார், சர்க்கார் காரியாலய அறிக்கைகளின் தூசு தட்டிக் கொண்டு இருக்கிறார்களே, காரியமாற்றாமல், ஏன்? என்றெல்லாம், கேள்விக் கணைகள் விடுத்தால், ரங்கா என்ன செய்வார்! பக்கத்தில் வீற்றிருந்த லட்சண்ணா எனும் எம்.எல்.ஏ.விடம், கேள்விகளைக் கொடுத்து விட்டு அமர்ந்துவிட்டார்.

தலைவர் அனந்தம் தம்மிடம் தரப்பட்ட கேள்விகளைப் பிரசங்கி ரங்காவிடம் தந்தார். ரங்கா, அதனை லட்சண்ணாவிடம் தந்தார். லட்சண்ணா என்ன செய்தார்! பதிலுரைத்தார்? இல்லை! என்ன நேரிட்டது பிறகு? பொதுக் கூட்டத்தில் கொதிப்பு, கொந்தளிப்பு- பதில் சொல்லு- பதில் சொல்லு!- என்று இரைச்சல் கூட்டம் குழப்பத்தில் முடிந்தது.

சம்பவம், நடைபெற்ற இடம் சிகாகோல்- ஆந்திர வட்டாரத்தில் செப்டம்பர் 20-ந் தேதிய, இந்தியன் எக்ஸ்பிரசில், சிகாகோவில் ஆசிரியர் ரங்கா- பொதுக்கூட்டத்தில் குழப்பம் எனும் தலைப்புகளுடன் செய்தி வெளிவந்திருக்கிறது.

காரணத்துடனே தான், நாம்சிகாகோல் கூட்டத்தைக் குறிப்பிட்டோம். தமிழ்நாட்டுக் கூட்டத்தைக் குறிப்பிடாமல், ஏனெனில், இங்கு இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றால், உடனே, ``மாபாவிகள் குனாமானாக்கள்'' குழப்பம் விளைவித்தனர் என்று மகானுபாவர்கள் கூறிவிடு வர். சம்பவம் நடந்தது. ஆந்திர நாட்டில்- கருப்புச் சட்டை இல்லாத ஊரில் பேசியவர் அனாம தேயமல்ல- ஆந்திர காங்கிரஸ் தலைவர் பேராசிரியர் ரங்கா.

அவருக்கு இது அங்கு! ஏன் நம்ம சர்க்காரின் போக்கு, காங்கிரஸ் நண்பர்களிலேயே பலருக்குப் பிடிக்கவில்லை? உருவான முறை யிலே இதை வெளிப்படுத்த வசதியும், வாய்ப்பும் இல்லாததால், இப்படி சிகாகோல்கள் சில நடைபெறுகின்றன.

``நம்ம சர்க்கார்'' ஏற்பட்டுவிட்டது, எனவே, இதனிடம் என்ன குறை இருந்தாலும் கோளாறு இருந்தாலும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.- வெளியே தெரியவிடக்கூடாது- மூடி போட்டுவிட வேண்டும்- என்று எண்ணி, கண்மூடி மௌனியாவதும் தவறு.

என்றோ ஒருநாள் ஏதேனும் ஓரிடத்தில் சிகாகோல் நடத்திச் சீற்றத்தை வெளியே செல்ல விடுவதும் தவறு.

இருவழிகளும், ஜனநாயகத்தை வளர்க்கக் கூடியன அல்ல- முன்னது பாசீசத்தை வளர்க்கும், மற்றது நாட்டுப் போக்கை உண்டாக்கும். இரண்டுக்குமிடையே, நாகரிகமான முறை இருக்கத்தான் செய்கிறது- ``நம்ம சர்க்கார்'' என்ற பாசத்துக்குப் பலியாகாவிட்டால், கண்ணுங் கருத்துமாக, சர்க்காரின் போக்கைக் கவனித்து, தவறுகளைத் தைரியமாக எடுத்துக்கூறி, திருத்தங் களைக் கூறி, திட்டங்களைக் கூடத் தந்து, மக்கள், ஜனநாயகத்தை மலரச் செய்ய முடியும். அதற்குப் பொது அறிவுத் திறம் வேண்டும்- சகிப்புத் தன்மை வேண்டும்- வேறு கட்சிகளிடம் விரோதம் கொள்ளும் விபரீதப் போக்கு மறைய வேண்டும்- பிரச்னைகளை அலசிப் பார்க்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். சுருக்கமாகக் கூறவேண்டுமானால், நம்ம சர்க்கார் என்றால், நம்மவர்கள்- நமது நண்பர்கள்- நமது கட்சியனர் உள்ள சர்க்கார் என்ற பொருள் கொள்ளாது, நமக்காக, நாட்டுக்காக, மக்களுக்காக, நல்லாட்சிக்காக உள்ள சர்க்கார் என்ற பொருள் கொள்ள வேண்டும். சர்க்காரில் உள்ள கட்சியின், குறைபாடுகளையும் திட்டக் குலைவுகளையும், எதிர்க் கட்சி எடுத்துக்காட்டும்போது, நமது காங்கிரஸ் நண்பர்களில் சிலருக்கு, கல்லின் மீது கண்ணும் கருத்தும் செல்லுகிறதே ஒழிய, நாமும் கவனிக்கமாட்டோம். நம்ம கட்சி என்ற கனிவி னால், வேறு யாரையும் பேசவும் விட மறுக்கி றோம். அப்படியானால் விஷயம் தெரிவதுதான் எப்படி. எப்போது!- என்று எண்ண நேரம் இருப்பதே இல்லை. ஆனால் கடைசி வரையில், எதிர்க் கட்சிக் கூட்டங்களில் கலகம் விளை வித்தோம், என்ற திருப்தி மட்டும், போதுமான தாகி விடாது. துவக்கத்திலே, அது விசேஷமான சந்ந்தோஷத்தையும் பெருமையையும் கூடத்தான் தரும்.

``கூட்டம் பலே ஜோராக நடந்து கொண்டே இருந்தது- பார்த்தேன்- ஓட்டல் மாடி மீது ஏறி னேன்- மடியிலே கொஞ்சம் மலைப் பிஞ்சு களோடு- இருட்டு வரட்டும் என்று பார்த்துக் கொண்டே இருந்தேன்- அதற்குள் கூட்டத்திலே, அவன் மயக்குகிறான் ஜனங்களை- மார்வாடித் தொல்லை- வடநாட்டுக் கொள்ளை- இந்தித் தொல்லை- என்றெல்லாம் பேசிப் பேசி - இருட்டு புறப்பட்டது. இதுதான் சரி என்று. வீசினேன் கற்களை. விர் விர் என்று பறந்தது- யாராருக்கோ அடி- இரத்தம் கூட வந்ததாம்- காகூவெனக் கூச்சல்- குழப்பம்- கூட்டம், கலைந்தது''- என்று பேசிக் கொள்வதிலே பெருமையும், பூரிப்பும் எத்தனை காலத்துக்கு இருக்க முடியும். ``அந்தப் பயல்கள் பேசுவதும் சரியாகத்தானேய்யா இருக்கிறது'' என்று எண்ணுவதும், ``அவனுங் களுக்குத்தானேய்யா விஷயத்தை தைரியமாக வெளியே எடுத்துச் செல்ல முடிகிறது'' என்று இலேசாக, மறைவிலே, பாராட்டவும், ``அவனுங் களேதான். கேட்க வேணுமோ- நாமேதான் கேட்போமே, தலையா போய்விடும்- நமக்கு அந்த உரிமையா இல்லை'' என்று உரிமை பேசவும் அதிக காலம் பிடிக்குமென்று நாம் எண்ணவில்லை. அதற்குள், திராவிடர் கழகத்த வரிலே சில பலருக்கு மண்டைகள் உடைபடக் கூடும். கல்லும் கட்டையும் கண்டதா, உண்மையை உரைப்பவனின் உதிரத்தைக் கொட்டச் செய்கி றோமே, இது அநியாயம் என்று. பிறகு, சிகா கோல்கள் ஏற்பட்டுவிடக் கூடும்.

நாம், குரோத புத்தியோடு கூறுவதாகவோ, வீண் விபரீத ஆரூடம் கூறுவதாகவோ, எண்ணிவிடக்கூடாது. இதுபோல மட்டுமல்ல, இதைவிட விபரீதமான முறையிலே, இதற்குள் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் நல்ல வேளையாக, ``மகாஜனங்களின் கருணையின் காரணமாக நேரிடவில்லை, என்று ஒரு மந்திரி யாரோ பேசியதை ஆதாரமாகக் கொண்டே கூறுகிறோம்.

``கடந்த இரண்டு ஆண்டுகளாக காங்கிரஸ் சர்க்கார் சாதித்தது ஒன்றுமில்லையாயினும், அமைச்சர்கள் மீது கல்லெறியாமல், கண்ணிய மாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்.''
இவ்வாறு விவசாய மந்திரி தோழர் மாதவ மேனன், இராஜ மகேந்திரத்தில் கூறியுள்ளார்.இது 29-9-1948 மெயில் பத்திரிகையில் வந்துள்ளது.

மேலும் அவர் கூறுகிறார்-
``பிரிட்டிஷ்hர் வெளியேறினதும் உடனே சுகபோகம் கிடைத்து விடும் என்று மக்கள் நம்பினர். குறிப்பிட்ட ஓர் பகுதியில் மழையில்லை யேல், அதற்கு பிரிட்டிஷார் இங்கு இருப்பதே காரணம் என்றனர். ஓர் குழந்தைக்கு நீர் பிணக்கு ஏற்பட்டு சுரநோய் கொண்டால், அதற்கும் பிரிட்டிஷார் மீது பழி சுமத்தப்பட்டது. 1947 ஆகஸ்டு 15-ம் தேதி பிரிட்டிஷார் வெளியேறி விட்டனர். ஆனால், ஆகஸ்டு 15-ம் நாளிலிருந்து நமது நிலை மிகக் கேவலமாகப் போய்விட்டதை உணருகிறோம்.
எவரும் விளக்க வேண்டிய அவசியமற்ற நிலையில், அனைவரும் புரிந்துகொள்ளக் கூடிய முறையில், தெளிவாக, அமைச்சரே அறிவிக் கிறார். மக்களின் இன்றுள்ள அலங்கோல வாழ்வை!
மந்திரி மாதவமேனன் பேசினார் இது போல- மக்களைப் பாராட்டினார். உண்மையில் மக்கள் பாராட்டுதலுக்குரியவர்கள்- சந்தேக மில்லை- இந்த மந்திரிகள்? பாராட்டப்பட வேண்டியவர்கள்தானா?

காங்கிரஸ் ஆட்சி ஏதும் செய்யவில்லை- வெளிப்படையாக ஒப்புக்க் கொள்கிறார் ஒரு அமைச்சர்.
நாட்டு நலிவு யாவற்றினுக்கும், முன்பு வெள்ளையரைக் குறை கூறியே பேசி வந்தோம், என்பதையும் அவரே கூறுகிறார். அதாவது எப்படிப்பட்ட முறையினாலே, ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது, என்பதைக் கூறுகிறார்.
* * *

மலையை விழுங்குவேன் என்றான் மகாதேவன்! மதி கெட்ட மன்னனுக்கு, மந்திர பலத்தால், அது, மகாதேவனுக்கு சாத்யமாகக் கூடும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மகாதேவனின் நெற்றியிலிருந்த குங்குமப் பொட்டும், கழுத்திலே இருந்த மணி மாலையும், உருட்டுக் கண்களும் உரத்த குரலும், மன்னனின் மந்த மதியை மேலும் மந்தப்படுத்தி விட்டன. மகாதேவனுக்கு ஒரு தனி மாளிகை தந்தான்- மாதம் ஆறாயிற்று- மகாதேவன், மாகாளிப் பூஜையைத்த் துவக்கி பூஜைக்கு முன்பு காட்டெருமை அளவிருந்த மகாதேவன், பூஜை வளர வளர யானை அளவானான்- மக்கள் யோசிக்கலாயினர்- `மலையை எப்போது விழுங்கப் போகிறான் மகாதேவன். நாளை ஓட்டிக்கொண்டே போகி றானே, இப்படி நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க, மலையை விழுங்கினாலும் மகாதேவன் வயிற் றிலே இடம் இராது போலிருக்கிறதே. ராஜாங்கப் பணத்தைக் கொண்டு குவியும் பண்டங்களைப் போட்டு நிரப்பிவிடுகிறானே என்று கேலியே பேசலாயினர். மன்னனின் நம்பிக்கைக்கும், மக்களின் நையாண்டிக்கும் ஒரு சில நாட்கள் போராட்டம் - மக்களே வென்றனர்.

``கூப்பிடு மகாதேவனை'' என்று மன்னன் கூவினான்- வந்தவனைக் கண்டு கோபமாகவே பேசலானான். ``கடைசி வரையிலே ஏமாற்றியே விடவா எண்ணுகிறாய் எத்தா! நான் ஏமாளி அல்ல! இனியும் உனக்கு, மாளிகை வாசமும், மருமகனுக்கு செய்வது போன்ற உபசாரமும் நடைபெறும் என்று எண்ணாதே. நாளைக் காலையில் நீ மலையை விழுங்கியாக வேண்டும் என்றான். மக்கள் `சபாஷ்' என்றனர்- மகாதேவன்? என்ன செய்தான்? பயந்தானா? இல்லை! பதைத்தானா? கிடையாது! நான் ஏமாற்றும் வித்தைக்காரன், எல்லாம் ஜாண் வயிற்றுக்காகத் தான். மன்னிததுவிடு மன்னவனே! என்று கெஞ்சினானா? இல்லை! இல்லை! ``மன்னா! நாளைக்கா மலையை விழுங்கச் சொல்கிறீர்?''- என்று கேட்டான் கெம்பீரமாக நின்றபடி மன்னன் மருண்டான். ``ஆமாம் நாளைக்கு!'' என்றான் மன்னவன்.

``வேண்டாம்! இன்றே விழுங்குகிறேன் மலையை! இப்போதே!'' என்று கர்ஜனை செய்ய்தான் மகாதேவன். கொலு மண்டபம் நிசப்த மாகிவிட்டது. கொக்கரிக்கலானான் மகாதேவன். ``மலையை விழுங்கப் போகிறேன் இன்று இப்போது. இங்கேயே! ஏன், மன்னரே! சும்மா இருக்கிறீர்? உத்தரவு கொடும்!'' என்று. ``சரி, சரி- உத்தரவு தந்துவிட்டேன்''- என்று மன்னன் குளறினான். ``பேஷ்! சபாஷ்! இப்போது காட்டு கிறேன் என் சமர்த்தை. மலைவிழுங்கி மகா தேவனைச் சாமான்யமாக எண்ணி விட்டீர் களல்லவா இதே பாருங்கள்'' என்று கூவியபடி, வாயைத் திறந்தான் திறந்தபடி மன்னனைப் பார்த்தான். பார்த்துவிட்டு, மறுபடி மன்னனை ``ஏன் மன்னனே சும்மா இருக்கிறீர்? போய், மலையைக் கொண்டுவரச் சொல்லுங்கள். மலையைத் தூக்கிக் கொண்டு வந்து, என் வாயில் போடும்படி உத்தரவு பிறப்பியுங்கள்'' என்றான், மன்னன், திடுக்கிட்டுப் போனான்!

``நான் மலையை விழுங்குவதாகத்தான் ஒப்புக் கொண்டேன். மலையை எடுத்துவந்து என்னிடம் தந்ததும் நான் விழுங்கி விடுவேன்'' என்றான் மகாதேவன். மன்னன், ஏதும் பேச இயலாமல், ``மலையை விழுங்க வேண்டாம். நீ இந்த மண்டலத்தைவிட்டுப் போனால் போதும்'' என்று கூறிப் புலம்பலானான்- என்று வேடிக்கைக் கதை ஒன்று உண்டு. அதுபோலாகி விட்டது. `நம்ம சர்க்காரின் போக்கு. மந்திரிகள், மலை விழுங்கி மகாதேவன் போலவே பேசுகிறார்கள். மந்திரி மாதவமேனனின் பேச்சு இதற்கோர் சரியான எடுத்துக்காட்டு.

நம்ம சர்க்கார்- இதுதானா? நண்பர்கள் நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். மலையை விழுங்குவதாகச் சொல்லி மாளிகை வாசம் பெற்ற மகாதேவன் போல, மக்களின் சகல கஷ்டங்களையும் போக்குவதாகச் சொல்லிப் பீடம் பெற்ற அமைச்சர்கள் இப்போது, மலையைக் கொண்டுவந்து வாயில் போடு, விழுங்குகிறேன் என்று பேசிய மகாதேவன் போலவே, பொதுமக்களின் கஷ்டத்தைப் போக்கி நன்மையை வளர்க்கக் கூடிய அளவு, எங்களுக்கு வசதி, பணம் தாருங்கள். பிறகு செய்கிறோம், என்று மந்திரிகள் பேசுகிறார்கள்.

மாதவமேனன், இந்தப் போக்கையும் மிஞ்சி விட்டார் ஒரு படி- நாங்களும் ஏதும் செய்யத்தான் இல்லை- எங்களைக் கண்டதும் கல்லாலடிக்க லாமா என்று அளவுக்கு உங்களுக்குக் கோபம் கூட வரும்- ஆனால் நீங்கள் மிக மிக நல்லவர் கள், அப்படி எல்லாம் செய்ததில்லை- செய்யமாட்டீர்கள்- செய்ய வேண்டாம்- என்று அழகாக அபின் ஊட்டிப் பார்க்கிறார்.

`நம்ம சர்க்கார்' ஏதும் செய்யவில்லை என்பதை `நம்ம மந்திரியும்' ஒப்புக் கொள்கிறார்- பிறகு நம்ம சர்க்கார் என்ற பாசம் இருக்கக் காரணம் என்ன? இருந்து பலன் என்ன? இதைத் தான் காங்கிரஸ் நண்பர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

நம்ம சர்க்கார், நாடாளும் உரிமையைப் பெற, எதை எதையோ சாதித்துவிட முடியும் என்று சண்டமாருதமாகப் பேசும், நாடாள வந்தால் சொன்னதைச் சாதிக்காது, சாதிக்கவில்லை என்பதையும் சொல்லும் நாமோ, அப்போதும் `நம்ம சர்க்கார்' என்றுதான் பாத்யதை கொண்டாட வேண்டும். இல்லை என்றால் எதிர்க்கட்சிக்காரன் ஏளனமாக எண்ணுவான்- என்ற போக்கு, ஜனநாயகமல்ல- நல்லாட்சிக்கு வழி கோலுவ தல்ல.

நாங்கள் ஏதும் இதுவரை செய்யவில்லை. எனினும் எங்கள் மீது ஆத்திரம் கொள்ளாத உங்கள் பெருங்குணத்தைப் பாராட்டுகிறேன் என்று தந்திரமாகப் பேசித் தப்பித்துக் கொள்கிறார் மந்திரி மாதவமேனன்- ஏன் செய்ய முடிய வில்லை, முயற்சித்து முடியாமற் போய்விட்டதா அல்லது முயற்சி எடுத்துக்கொள்ளவே யில்லையா, முட்டுக்கட்டை போடப்பட்டதா, என்னதான் சூட்சமம் என்று விளக்கினாரா- இல்லை! மந்திரி மாதவமேனன் இந்த அளவோடு விட்டார். அமைச்சர் டாக்டர் குருபாதம் இதைவிட ஒரு படி முன்னேறுகிறார்.

``சர்க்காரில் பதவி பெற்றால் ஏதாவது கிராம சேவையைச் செய்ய முடியும் என்று நம்பித்தான் பதவியை ஏற்றுக் கொண்டேன். இப்போது தெரிகிறது பதவியில் இருந்து கொண்டு ஏதும் செய்ய முடியாது என்பதை வெளியே இருந்தா லாவது ஏதாவது செய்யலாம். பதவியில் இல்லா விட்டாலும் உண்மையான தொண்டு செய்ப வனுக்கு வெளியேயும் மதிப்பு இருக்கத்தான் செய்யும். இதை நான் மனம் வெறுத்துக் கூறுகிறேன்.''

காரைக்குடியில் அமைச்சருக்கு அன்புரை கூறி வரவேற்றபோது அவர் கூறியது இது.

அமைச்சராக இருப்பதைவிட, பதவியின்றி இருப்பத பலனுள்ள காரியம் என்று. மனம் வெறுத்துக் கூறுகிறார் ஏன்? கிராம சீர்திருத்தத் துக்கான காரியத்தை ஏன் பதவியிலிருந்தபடி செய்ய முடியவில்லை? வழி தெரியவில்லையா? தெரியும் வழியில் ஏதேனும் தடை போடப் பட்டதா? திட்டம் இல்லையா? திட்டத்துக்கு ஆதரவு இல்லையா? ஆதரவு இருந்தும் பண வசதி கிடைக்கவில்லையா? என்ன காரணத்தால், அமைச்சர் பதவி மூலம் ஏதும் செய்ய முடியவில்லை என்று டாக்டர் குருபாதம் கூறினார். கூறியான பிறகு, ஏதும் செய்ய வழிவகையற்ற நிலையில், ஏன் இன்னமும் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்! மக்களின் சிந்தனையைக் கிளறக்கூடிய கேள்விகள் இவை.

அமைச்சர்களே இப்படிக் கூறுகிறார்கள். ஒன்றும் செய்யவில்லை. ஒன்றும் செய்ய முடியவில்லை- எதிர்பார்த்த பலன் ஏற்பட வில்லை என்றெல்லாம். எனினும், இன்னமும் அவர்கள் அமைச்சர்களாகவே உள்ளனர்! நியாயமா? இந்த இலட்சணத்துடன் உள்ள அமைச்சர்களாக நடத்தப்பட்டு வரும் சர்க்காரை. `நம்ம சர்க்கார் என்று, பாத்யதை கொண்டாட, நேர்மையில் நாட்டமும், மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் முன்வருவது அறிவுடைமையாகுமா? ஏன், `நம்ம சர்க்கார்' இப்படி ஏதும் செய்யாத, எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. நம்ம சர்க்காரில் உள்ள அமைச்சர்களின் திறமைக் குறைவு இதற்குக் காரணமா? இங்கு இதற்குள் இரு அமைச்சர் குழு அமைத்துப் பார்த்தாகி விட்டது. திறமையற்றவர்களா, முன்பு இருந்தவர்களும் இப்போதுள்ளவர்களும்? ``நம்ம சர்க்கார்'' ஏற்பட்டால் என்னென்ன நடைபெறும் என்று காங்கிரஸ் நண்பர்கள் இன்பக் கனவு கண்டு வந்தார்களோ, அவைகள் ஈடேற்றப்படவில்லை. அமைச்சர்களாக உள்ளவர்களுக்கு, அவை பற்றி அக்கறையில்லையா? அக்கறை இருந்தும், ஆற்றல் இல்லையா? ஆற்றல் இருக்கிறது. ஆனால் வசதி இல்லை என்று கூறப் போகிறார்களா?

நாம் கூறுகிறோம், `நம்ம சர்க்காரிடம்' திட்டம் இல்லை, தெளிவான தீர்மானமான திட்டம் இல்லை- அவர்களிடம் உள்ள அரை குறைத் திட்டத்துக்கும், பணம் இல்லை! பணம் புதிதாகப் பெறுவதற்கு வழிவகை தெரியவில்லை. தெரிந்தா லும், `நம்ம சர்க்காருக்கு' தன் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான வழிவகை வகுத்துக் கொள்வதற்கான அதிகாரம் இல்லை. ஏன்? நம்ம சர்க்கார், ஒன்று அல்ல, இரண்டு!

(திராவிட நாடு - 10.10.1948)