அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மணி மறைந்தார்

தோழர் நாகைமணி இறந்துவிட்டார்! “மிகவும் இளைத்துப் போனார், என்ற போதிலும், குணமடைந்து வருகிறார்,” என்று சென்றவாரம் தெரிவித்தனர். 29-5-1942, சென்னையிலிருந்து, நமது சிந்தையைக் கலங்கவைக்கும் தந்தி வந்தது, நமது தோழர் இறந்தார் என்று. தோழர் மணி சின்னாட்கள் நோய்வாயுற்றிருந்தார், சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வந்தார். எவ்வளவோ முயன்றாலும், அவரது மறைவைத்தடுக்க முடியவில்லை.

தோழர் மணியின் கட்சித்தொண்டுகளைக் கண்டோ கேட்டோ இராத தமிழர் யார்! அந்தச் சிவந்த மேனியன், சிரித்த முகத்துடன் உபசார மொழி பேசி உற்சாக மூட்டக் கேட்காத தமிழர் எவர்? தமிழரின் எதிரிகள் விரண்டோடும்படி, தூக்கித் துரத்திய அந்தக் கைகள், தமிழர் தலைவருடன் தமிழகத்திலே நடமாடிய அந்தக்கால்கள், தமிழருக்காக உழைத்து உழைத்து உருமாறிய அந்த உடலம், இன்று, மண்ணில் சேர்ந்து விட்டது. அவரது உணர்ச்சியும், அந்த உணர்ச்சியை எதிர்ப்போரைக் கண்டதும் அவரடையும் உக்கிரமும், தமிழரில் யார் முன்னேற்ற மடைந்தாலும், கண்டு பூரிக்கும் இயல்பும், நாமறிவோம், அறிந்ததாலேயே இன்று கசங்கிய கண்களுடன், கை நடுக்குற, நெஞ்சுர பதைக்க நிலைதடுமாறி, இந்தச் சோகச் செய்தியை எழுதுகிறோம். பெரியாரின் சுற்றுப் பிரயாணங்களிலே பலமுறை அவர் கலந்துக்கொண்டு, பல மாநாடு, பொதுக்கூட்டங்களில் பங்குகொண்டு தமிழரின் மணியாகத் திகழ்ந்தார். அத்தகைய மணியை இழந்தோம், என்செய்வோம். தமிழரின் வீரத்துக்கும், வாலிப உணர்ச்சிக்கும், இலாபநோக்கமற்ற கட்சிப்பற்றுக்கும், நடமாடும் உதாரணமாக இருந்த நமது நண்பரை இழந்தோமே, நாம், உய்யும்வகை குறைந்தோமே, என்றெண்ணிக் கலங்குகிறோம். அவருடைய உடலம் சுடலை செல்லுகிறது. தோழர்களிடை உரசி, எதிரிகள்மீது மோதி, தமிழரின் இயல்பை எடுத்துரைத்த உடலம் சுடலை செல்லுகிறது! தமிழரின் அன்பும், மரியாதையும், அவருக்குப் பரிசாகத் தந்தது இயக்கம். பதவியல்ல, பணமல்ல, பட்டுப்பணியல்ல! அவருடைய வியர்வையும், இரத்தமும் கட்சிக்கு அவரளித்தார், இன்று அவரது சவத்தைத் தமிழர் தமது கண்ணிராற் கழுவுகின்றனர். மலர்முகம் படைத்த மணியே நீயோ மறைந்தாய், எம்மைப்பிரிந்தாய்;! மணி மறையினும் மணியின் புகழ் ஒளி தமிழகத்திலே நின்றுலவி, நமக்கு வழிகாட்டுமாக. அவரது குடும்பம் நெஞ்சங்குமுறி நிற்கும், நாம் என்ன கூறுவோம் அவர்களை ஆற்ற, தேற்ற அவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபத் தைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களின் துக்கத்தைத் தமிழகம் பங்கு கொள்கிறது. இறந்தது அவர்களின் மணியல்ல, தமிழரின் மணி! எங்ஙனம் தாங்குவோம் துக்கத்தை! என் செய்வோம்!

31.5.1942