அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மனோ ராஜ்யம்

அடித்து விடுவாயோ? அடித்தால் தெரியுமா?

என்னடா தெரிவது? அடித்தால் என்ன செய்வாய்?

என்ன செய்வேன் தெரியுமோ?

என்னதாண்டா செய்வாய்? இதோ அடிக்கிறேன் பார், என்ன செய்வாய்?

அழுவேன்!
* * *

காந்தியாரைப் போய்ப் பார்த்துப் பேசிப் பயன் என்ன? அவர், நீர் சொன்னால் கேட்பாரா? கேட்கா விட்டால் என்ன செய்வீர்?

கேட்காவிட்டால் என்ன செய்வேன் தெரியுமா?

என்ன செய்வீர்?

பேசாமல் திரும்பி வந்து விடுவேன்!
* * *

முதல் உரையாடல், விகடம்! இரண்டாம் உரையாடல் அரசியல் உலகில் ஆச்சாரியாரின் சொற் சகடம்! கோழை கூறுகிறான், அடித்தால் அழுவேன் என்று அதுதான் அவனுக்குத் தெரிந்தது. ஆச்சாரியார், தூது போகிறேன், பலித்தால் சரி, பலிக்கா விட்டால் வீடு திரும்புகிறேன் வெறுங்கையுடன் என்றுரைக்கிறார். இந்தத் “தூது” பலிக்கும் வழி இல்லை என்றறிந்தே வைசிராய், ஆச்சாரியாருக்குக் காந்தியாரைக் காணும் அனுமதி தரவில்லை.

இது, இந்தி எதிர்ப்பாளர் ஈ.வெ.ரா. பங்காளர்கள் கூறுவதல்ல! ஆரியத் தோழர், அரசியல் ஆருடக்காரர், சீர்திருத்த சேவையை ஏட்டின் மூலம் செய்து புகழ் ஈட்டி வருபவர், பம்பாய்வாசி சோஷியல் ரிபார்மர் பத்திரிகை ஆசிரியர், கூறுகிறார்! வைசிராய், அனுமதி மறுத்தது தவறன்று, முறையே. அனுமதி மறுத்ததால் குடி முழுகிப் போகவில்லை, அனுமத்திருந்தால் காரியம் எதுவும் கைகூடப் போவதில்லை. ஆச்சாரியாரின் தூது பலித்திருக்காது, பலிக்கும் ராசியே கிடையாது, என்று மேற்படி பத்திரிகை எழுதிற்று.

எழுதினால் என்ன? ஆச்சாரியார், லயோலா கல்லூரியிலே, “அகில உலகமே, எனக்கு வைசிராய் அனுமதி தர மறுத்ததைக் கண்டிக்கிறது” என்று கூறிடத் தவறவில்லை. டாக்டர் அருண்டேல், காரசாரமாகவே கண்டித்தார், ஆச்சாரியாரின் முயற்சியை, ஆச்சாரியாருக்கென்ன, கேளாக்காது இல்லையா, கண்டனம் பிறக்கும் பக்கம் திருப்ப! இந்து மகாசபைக்காரர், ஆச்சாரியார் முஸ்லீம் லீகுடன் சமரசம் செய்து கொண்டால் அது எம்மைக் கட்டுப்படுத்தாது என்று கூறினர். ஆச்சாரியாருக்கென்ன, அதைப் பொருட்படுத்த வேண்டுமென்று அவசியமுண்டா? காங்கிரசே ராஜி பேசினால் காரியம் பலிக்குமே யொழிய காங்கிரசிலிருந்து விரட்டப்பட்ட ராஜகோபாலாச்சாரியார், எந்த அதிகாரத்தைக் கொண்டு முஸ்லீம் லீகினிடம் ஒரு சமரசம் செய்து கொள்ள முடியும்? என்று ஜனாப் ஜின்னா கேட்டார், ஆச்சாரியாருக்கென்ன புன் சிரிப்பு தெரியாதா! யார் எதைச் சொன்னாலென்ன, இரயில் ஓடுவது இருக்கும் வரை, இராஜிக்காகப் பேட்டிகள் காண்பேன், காகிதங் கிடைக்குமட்டும் சமரச கீதத்தை, நானா விடுவேன்! என்று கருதி விட்டார் போலிருக்கிறது, பாபம், கால்வலிக்கச் சுற்றுகிறார், வாய் சலிக்கப் பேசுகிறார், கை சலிக்க எழுதுகிறார், சோர்வின்றி உழைக்கிறார்!! ஆனால் பொத்தல் தோண்டியிலே நீர் மொண்டு பொழுது விடியுமட்டும் இறைத்தாலும், தோட்டத்திலே நீர் பாய்ச்சி ஆகுமா?

காகமும் கழுகும், நாயும் நரியும் ஓர் நாள் சுற்றித் தின்னப்போகும் சோற்றுத் துருத்தியப்பா இது! ஒன்பது வாசல், இந்த வீட்டுக்கு! இரண்டு கால்! எதற்கு இந்த வீடு பயன் படுகிறது? காமவேள் இதனை நடனசாலையாகக் கொள்கிறான்!

மும்மலக்கேணி! போகபோகம் திணிக்கப்பட்ட பெட்டி! கணக்கற்ற கிருமிகள் மொய்த்துக் கொண்டிருக்கும் கும்பி! பிரமனெனும் குயவன் செய்த மட்கலம்! எமனெனும் தடிகாரன் அடித்து நொறுக்கப் போகும் பாண்டம்! என்று பேசிடும் ஆண்டி, சந்தி வேளையிலே மதுக்கடை போவதும், இரவிலே எவளாவதொரு இன்பவல்லியைத் தேடுவதுமாக இருக்கும் வேடிக்கை போல், பதவி எதற்கப்பா? மாகாண சுயாட்சியிலே என்ன இருக்கிறது? அது வெறும் ஹம்பக் என்று வங்கத்திலே மந்திரியாக இருந்த தங்கக் குணமுடைய முகர்ஜீ மொழிந்ததைக் கேட்கவில்லையா? இந்தப் பதவிகளுக்கா நாம் பிறந்தோம்! பரிபூரண சுயராஜ்யம் பெறுவதல்லவா நமது நோக்கம் என்று பேசிடும் கூட்டம், பகலிரவு பாராது, இலஜ்ஜையையும் விட்டு பதவிக்காகப் பல்லிளிக்கும் காட்சியை இங்கு காண்கிறோம். முசோலினி முகாரி பாடுகிறார். ஏன், இப்படிப் பதைக்க வேண்டும்? இது வரையிலே இந்தத் தேசீயத் திலகங்கள் பதவியிலே அமராததால், என்ன குறை கண்டோம்! போர் முயற்சி கெட்டு விட்டதா! போர் நிலைமை தளர்ந்ததா! இல்லையே! இவர்கள் இங்கு தண்டவாளப் பெயர்ப்பு வீரராக இருக்கும் நாட்களிலே, அமளியிலே அச்சு முறிகிறது, நேசநாடுகளின் கூட்டு முயற்சியினால் இந்தியப் பாதுகாப்பு இதுவரை சரித்திரங் கண்டிராத அளவு பலமாகி விட்டது. அந்தமான் தாக்குண்டது. ரங்கூன் மீதும் குண்டு வீச்சு. டூனிசியாவிலே வெற்றி வாடை காண்கிறோம். காண்டன் மீது சீனர் பாய்ந்தனர் என்று கேட்கிறோம். கடலிலே காணப்படும் ஜப்பானியக் கப்பல்கள் மூழ்கடிக்கப் படுகின்றன.

ரோமனை விரட்டியடித்ததும் உமக்குத் தந்தி அனுப்புகிறேன் என்று சர்ச்சில், ஆகஸ்ட் மாதம், ஸ்டாலினிடம் கூறினாராம். ஸ்டாலின்கிராடிலிருந்து ஜெர்மானியரை விரட்டினதும் உமக்கு நான் தந்தி அனுப்புகிறேன் என்று ஸ்டாலின் சர்ச்சிலிடம் சொன்னாராம். இரண்டு தந்திகளும், முறையே சென்றன, என்று சர்ச்சில் கூறிக்களிக்கிறார். இங்கு காங்கிரஸ் கூட்டம், இன்னமும் கோபுரந்தாங்குவது நாமே என்று பொம்மைகள் எண்ணிக் கொள்வது போல, ஏன் மனப்பால் குடிக்க வேண்டும் என்று கேட்கிறோம். எதற்காக ஆச்சாரியார், தேசீய சர்க்காருக்காக இன்னமும் திருவாயமொழி பாடித்திரிய வேண்டும்? அது இல்லாததால் நேரிட்ட குறை என்ன? அது கிடைத்து விட்டால், இவர்கள் செய்யப் போகும் அற்புதம் என்ன? முத்தான வாய் திறந்து சொல்வாரா அதனை என்று கேட்கிறோம்.

ஆச்சாரியார், வைசிராய் அனுதி மறுத்தார், சமரச முயற்சி கெட்டே விட்டது என்று சாற்றுகிறார். அதே நேரத்தில் ஜனாப் ஜின்னா, ஆச்சாரியார், செல்லுபடியாகாத செக்! என்பதைக் கூறிவிட்டார், பிறகே ஆச்சாரியாரும், சமரசத்தூதர் என்று கூறுகிறார். எதற்குத்தூது? காங்கிரஸ் - லீக் சமரசத்துக்கு! இரு கட்சிகளுக்குள் இருக்கும் சர்க்கார் மீது காங்கிரஸ் காரணம் என்ன? சர்க்காருக்குச் சங்கடம் விளைவிப்பதன் மூலம் அதனை தாண்டித் தன்பக்கம் சேர்த்துக் கொண்டு, லீகை ஒழிக்கலாம் என்ற நோக்கம். இதை ஜனாப் ஜின்னா தெளிவாகக் கூறிவிட்டார், “இன்று நடைபெறும் நாசகாரியம், லீகின் மார்புக்கு நேராகக் காங்கிரஸ் நீட்டிக்கொண்டிருக்கும் கைத்துப்பாக்கிக்குச் சமாதானம் என்று. இந்த நிலையிலே தூது அது வெற்றி பெறப்போவதே துரைமாரின் “தோடா” கிடைக்கப் போவதேது! அன்பரே! ஆச்சாரியாரே, அருமையான காலத்தையும் கருத்தையும், வீணுக்குச் செலவிடுகிறார், என்று நாம் கூறினால், அவர் வாதத்தை நம்மீது வீசுகிறார், சல்லியர் வேண்டாம் என்று. கர்ணனுக்குத் தேரோட்டிய சல்லியன், களத்திலே, கர்ணனுக்குச் சந்தேகத்தையும் சஞ்சலத்தையும் உண்டாக்கித் தொலைத்தாலும், அது போல், இந்தக் கர்ணனரரை, நாம் சல்லியர்கள் போல் சஞ்சலத்துக்குள்ளாக்குகிறோம். பாரதத்திலே, ஆச்சாரியார் எடுத்தாண்ட சம்பவத்தைப் போல், நாம் ஒன்றல்ல, இரண்டு தருவோம், அவருடைய நிலைமையையும், அவருடைய சகாக்களின் நிலைமையையும் விளக்க, குந்திபெற்ற பிள்ளைகளைக்கண்ட திருதிராஷ்டிரனின் பதவி பொறாமையால், தன் வயிற்றுக் குழவி பொறாமையால், தன் வயிற்றுக் குழவி கொண்டு இடித்துக் கொண்டாளாம், கரு சிதைந்து, நூறு கருக்கள், துரியோதனராதியர், பிறந்தனர். அதுபோல், டாக்டர் அம்பேத்கார் (ஒரு ஆதிதிராவிடர்) சர். முகமது உஸ்மான் (ஒரு முஸ்லீம்) மத்திய சர்க்காரிலே பதவி பெற்றுப் பரிபாலனம் செய்வது கண்டு, ஒரு சர். ராமசாமி முதலியார், பிரிட்டிஷ் யுத்த மந்திரி படையிலே அங்கம் வகித்தது கண்டு, மனம் குமுறி, “ஐயோ! தெய்வமே! ஆலமரம் சுற்றி, அபிஷேகம் செய்தும், அடி வயிறு கனத்ததே யொழிய, பிள்ளை காணோமே என்று திருதிராட்டிணன் மனைவி தேம்பினது போல, எட்டு மாகாணமாண்டோம், கொட்டு முழக்கடித்தோம், கோல் சுழற்றி நின்றும், கூடுவோம் சிறையிலே என்று என்னென்னமோ செய்தும், ஆட்சி நமக்குக் கிடைக்கவில்லையே என்று குமுறி, குழவி கொண்டு இடித்துக்கொண்ட கோணற் புத்திக்காரிபோல் காங்கிரஸ் கூத்தாடுகிறது, என்போம்.

பாரதத்திலேயே வரும் உத்திர குமாரன், உரத்த குரலிலே பேசினான் அந்தப்புரத்திலே மாதர்கள் முன்பு, “மாடு பிடிசண்டைக்கு வந்துள்ள மாற்றான்களை, ஒரு விநாடியிலே நான் ஓட்டிடுவேன், ஒரு நல்ல சாரதி மட்டும் கிடைத்தால்” என்று. விராட இளவரசனின் வீரத்தின் போலித்தன்மை பெண் உருவிலிருந்த அர்ஜுனனுக்குத் தெரியும், ஆகவே அந்த பிருஹன்னனை, நான் சாரத்தியம் செய்வேன் என்று கூறி, களத்திற்கு உத்திர குமாரனைக் கூட்டிச்செல்ல, நால்வகைச் சேனையைக் கண்டு, நாடி நடுங்கி, நாக்குழறி, தேரின் பின்புறமாகக் குதித்தோடியே விட்டானாம் உத்திர குமாரன், காங்கிரசின் வீரம், இதற்கு மாறானதன்று!

புராணம் பேசிப் பொழுதைப் போக்குவதை ஆச்சாரியார் விட்டு, சரிதம் போதிக்கும் பாடத்தின்படி காரியம் நடக்க வேண்டும் என்ற நினைப்பு கொண்டால், ஒரு சமயம், பிரச்சனை தீரும்.

“பிரிட்டிஷார் போய்ச்சேர ஒரு பிரிட்டன் இருக்கிறது. நான் எங்கே போக முடியும்! இதுவே என் தாயகம். ஆனால் சொந்த நாட்டில் பிறருக்கு அடிமையாக இருக்க நான் சம்மதியேன்” என்று ஜனாப் ஜின்னா, சின்னாட்களுக்கு முன்பு சிங்கமெனச் செப்பினார். தந்திரத்தாலோ மந்திரத்தாலோ ஆங்கில ஆட்சியை நீக்கிவிட்டு வந்தேமாதரத்தின் ஆட்சியைப் புகுத்த விரும்பும் முயற்சியை முறியடிப்பதே, முஸ்லீம் சுயராஜ்யப் போரின் முதற்கட்டம். சாணக்கியர்கள் அதை உணரவேண்டும். அதை உணராது, ஊராள எண்ணினால், சுயராஜ்யம் கிட்டாது. மனோராஜ்யமே மிச்சமாகும்.

6.12.1942