அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மனு சிரிக்கிறான்!

ஸ்மட்ஸ், சட்டத்தை மீறும் கிளர்ச்சிக்கு எவ்வளவு ஆதரவு நம் நாட்டுத் தலைவர்களா லும், பத்திரிகைகளாலும் தரப்பட்டுள்ளன என்பதையும் மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் மமதையை ஆப்பிரிக்காவிலே எதிர்க்கும் வீரர்கள் போலவே, மனிதனை மனிதன் அதிலும் ஒரே நாட்டு மக்களிலேயே ஒரு பிரிவினர் மற்றோரு பிரிவினரை, அதிலும் இந்து மதத்தின ரிலேயே ஒரு பகுதியினார் மற்றோர் பகுதி யினரைக் கேவலப்படுத்தும் சாஸ்திர ஆதாரமான சம்பிரதாயமாகிவிட்ட சட்ட திட்டத்தை இங்கே எதிர்ப்பவர்கள், எப்படி அனாதைப் பிள்ளைகள் போல் தலைவர்களாலும் பத்திரிகைகளாலும் நடத்தப்படுகின்றனர் என்பதையும், ஒப்பிட்டுப் பாருங்கள்- உங்கள் நெஞ்சிலே கை வைத்துக் கூறுங்கள். சட்ட மறுப்புப் போலவே, சாஸ்திர மறுப்பும் அவசியந்தானே, அப்படி இருக்க, சட்ட மறுப்புக்கு ஆதரவு திரட்டுவது போல, சாஸ்திர மறுப்பு ஏன் திரட்டக்கூடாது, ஏன் திரட்ட முடிவதில்லை, என்பதின் சூட்சமம் என்ன?

வெள்ளைக்கார இனம், உயர்ந்த ஜாதி; கருப்பு நிறத்தவர்கள் தாழ்ந்த ஜாதி, என்ற நிறத் திமிர் பிடித்தவர்கள், கருப்பரைக் கேவலமாக நடத்துகிறார்கள், இழிவுபடுத்தும் சட்டம் செய்கிறார்கள், கொடுமை நடக்கிறது. அதிலே சில வெள்ளையர்கள் வெளிப்படையாகவே வெள்ளைக்காரர்கள் உயர்ந்த இனம் என்று பேசுகிறார்கள். நிற பேதம் கூடாது. அதனைப் போக்க வேண்டும் என்று கொண்டுவரப்படும் திட்டங்களை தவறு என்று ஏசுகிறார்கள். அத்தகைய வெள்ளைக் குண்டர்களின் வாய்க் கொழுப்பு ஒரு கட்டத்திலே பொறிக்கப்பட்டிருக்கிறது.

பக்கத்து கட்டத்திலே பாருங்கள். வேதப் பிராமணர்களின் பேச்சு இருக்கிறது. சனாதனம், வர்ணாஸ்ரமம், வைதிகம், பழைய வாழ்வுமுறை, லோகாச்சாரம், தேசாச்சாரம் என்று பலவிதமாக அழைக்கிறார்களே, ஜாதி பேதம் என்ற ஏற்பாட்டை அந்த ஜாதி பேதம் போக்கப்பட வேண்டும், பிராமணர், இதராள் என்று வித்தி யாசம் காட்டக் கூடாது, எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை என்று பேசிப்பாருங்கள் வேதப் பிராமணாளிடம். என்ன பதில் வரும்? ஜாதி முறை கெடக்கூடாது, கெடவிடக்கூடாது என்று பேசுவார்கள். அவர்களின் பேச்சு 2-வது கட்டத்திலே இருக்கிறது.

வெள்ளையரின் நிற பேதம் காட்டும் போக்கைக் கண்டிக்க நாம் தயங்குவதில்லை. தலைப்பிலேயே தைரியமாகக் கண்டனம் இருக்கிறது, வெள்ளைக் குண்டர்கள் என்று.
ஆனால் அதே தைரியத்துடன், பிராமணப் பிண்டங்கள், வைதிகப் பிச்சுக்கள் என்று கூற முடியுமா? நீங்கள்தான் உடனே சொல்வீர்களே, ``ஏண்டா தம்பி! பிராமண துhஷணை செய்கிறாய்'' என்று. நான் அவர்களை நீங்கள் திட்ட வேண்டும் என்று தூண்டுகிறேன் என்பதாக எண்ண வேண்டாம். நிற பேதம் இருக்கத்தான் வேண்டும் என்று கூறும் வெள்ளைக்காரனைக் கண்டிக்கும் நம்முடைய வீரதீர பராக்கிரமம் அவ்வளவும், வைதிகத்தின் பேரால், ஜாதிபேதம் இருக்கத்தான் வேண்டும் என்று பேசும் வேதப் பிராமணர் களைக் கண்ட உடனே, சப்த நாடியும் அடங்கி கைகால், வெடவெடவென நடுங்கி, நாக்குக் குளறி விடுகிறதே! வீரம் விரையமாகிறது. தீரம் ஈரமாக மாறிவிடுகிறது, பாராக்கிரமம் பாதசேவா உணர்ச்சியாகி விடுகிறதே, இதைத் தீவிரத்திலே திளைத்த தோழர்கள் கொஞ்சம் கவனித்துப் பார்க்கட்டும் என்பதற்காகவே, சொல்கிறேன்.

நிற பேதம் இருக்க வேண்டும் என்று பேசிய உடனே, வெள்ளைக் குண்டர்கள்- கொக்கரிப்பு- என்று நமது தலைவர்கள் முழுக்கமிட, நமது பத்திரிகை ஆசிரியர்கள், கோபமென்ற பேனாவின் ஆத்திரமென்ற முள்ளைச் செருகி, தேசியம் என்ற மையிலே தோய்த்துக் கிளர்ச்சி என்ற காகிதத்திலே தீட்டுகிறார்கள், அதைப் படித்த உடனே நமது ``மகா ஜனங்கள்'' ஆஹா! இந்த வெள்ளைக் குண்டர்களைச் சும்மா விடக்கூடாது, விரட்டி அடிக்க வேண்டும், எட்டி உதைக்க வேண்டும் என்று வீர கர்ஜனை புரிகிறார்கள். ஆனால் நிற பேதம் இருக்க வேண்டும் என்று வெள்ளைக் குண்டர்கள் பேசுவது போலவே, ஜாதி முறை இருக்கத்தான் வேண்டும் என்று பார்ப்பனர் பேசும் போது, அதனை நமது தலைவர்கள், ஸ்ரீமான் சீனுவாசாச்சாரியாரின் வியாக்யானம்'', ``ஸ்ரீசங் கராச்சாரியாரின் ஸ்ரீமுகம்'', ``மகாமகோபாத்தி யாயரின் மனுஸ்மிருதி பாஷ்ய உரை'' என்று கூறிவிட, நமது ஏடுகள் ``நம் நாட்டுப் பூர்வீகப் பெருமையும், கீர்த்தியும், வேதபுராண இதிகாசாதி கள் மூலம் வியக்தமாகத் தெரிவதால், இக்கால நாகரிகம் என்ற மோகத்திலே மூழ்கி, சமூகக் கட்டுப்பாட்டையும், தார்மீக முறைகளையும் பாழ் பண்ணும் காரியாதிகளிலே கண்மூடித்தனமாக இறங்கி, நாட்டையும், நாட்டின் நற்பெயரையும் கெடுக்கும் நாசகாரியத்திலே இறங்க வேண்டா மென்று நம் யுவர்களையும், யுவதிகளையும் கேட்டுக் கொள்கிறோம்'' என்று எழுதிவிடும். அதைப் படிக்கும் நமது `மகாஜனங்கள்'' ஜாதி முறை இருக்க வேண்டுமென்ற கொள்கையை நிலைநாட்டும் சூழ்ச்சியிலே தாங்களாகவே சிக்கிக் கொள்வர்.

நிறத்திமிர் பேசுபவர்களைத் கண்டிப்பது போல, ஜாதி முறை பேசுபவர்களையும், கண்டித்திருந்தால், நம் நாட்டு ஏடுகளின் பேனா முனை, ஸ்மட்ஸ் துரையின் இருப்பிடத்தைத் தாக்குவது போலவே, இங்கே ஜாதி இருக்கத்தான் வேண்டும் என்று பேசுபவர்கள் இருக்கச் செய் வதற்கான முறைகளை வகுப்பவர்கள் ஆகி யோர்களையும் தாக்கியிருந்தால், நாடும் மக்களும் எப்போதோ நல்ல நிலைமையை அடைந்திருக்க முடியும். போனது போகட்டும், இனியேனும், ``தலைவர்களும், தாள்களும்'' இந்தக் காரியத்தைச் செய்யுமா? மக்களே! பதில் கூறுங்கள்!! ஸ்ரீரங்கம் பார்ப்பன அம்மையார் கண்ணிலே மிளகாய்ப் பொடியைத் தூவிய போதுகூட, டாக்டர் ராஜன், ஒரு வார்த்தை அவர்களைக் கண்டிக்க முடியவில்லையே! கண்டிக்க முடியுமோ! ``அதோ நிற்பது கமலா, நம்ம அத்திம்பேருக்கு பந்து. கூச்சல் போடுவது, சீனு சம்சாரம், சகுந்தலா! பக்கத்திலே நிற்பது பர்வதம், சுந்தராச்சாரியாரின் இரண்டாந்தாரம்எல்லாம் நம்மவா'' என்று இந்த விதமாகத்தானே எண்ணி யிருக்க முடியும். அதை, ஆச்சாரியார் சொல்லியே விட்டார் ஒரு சமயம், ``சனாதனி களின் மனதை நோகச் செய்யமுடியாது. அவர்கள் என் இரத்தம், என் சதை' என்றார்.

இந்தத் தலைவர்கள் கண்டிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். போகட்டும். இருக்கிறார்களே நமது இனத் தலைவர்கள். காமராஜர்கள், தேவர்கள் முதலியவர்கள், இவர்களாவது கண்டிப்பார்களா? முடியாது. அவர்களெல்லாம், ``கேவலம் வகுப்புவாதம் பேச மாட்டார்கள்'' போகட்டும். ஜாதி என்ற சொல்லே தமிழனுடையது அல்ல என்று இலக்கிய மூலம் கண்டறிந்த கதிரேசர்கள் கலியாண சுந்தரங்கள் மீனாட்சி சுந்தரர்கள் சேதுக்கள் சாதுக்கள் ஆகியோர் கண்டிப்பார்களா? முடியாது. அவர்கள், ``சுடு சொல் புகலாதே, சினமது கைவிடு, சிவனது பதம் தொடு, அன்புவித்தினை நடு, அரனை எண்ணிப்பாடு'' என்னும் சித்தத்தினர். இப்படிப் பலரும், கண்மூடி மௌனியானதாலே தான், ஜாதி பேதம் நிலைத்து இருக்கிறது. அது இருக்கத்தான் வேண்டும் என்று கூறும் வேதப் பிராமணர்கள் உள்ளனர். அவர்கள் பேசுவதைக் கேட்டுக்களிக்கும் மக்களும் உள்ளனர்.
* * *

தென் ஆப்பிரிக்காவின் லைடன்பர்க் என்ற ஊரிலே, வெள்ளையர்களின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தியர்களைப் பகிஷ் காரம் செய்ய வேண்டியதென்று அதிலே பேசினார்கள். வெள்ளையர், கருப்பர் என்ற நிற பேதத்தைப் போக்குவதற்காகக் கொண்டு வரப்படும் முயற்சிகள், முறைகள் ஆகிய வற்றைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவ தில்லை என்றும், அந்தப் பேதத்தைப் போக்கக் கூடாது என்றும், வெள்ளையர்கள் கூட்டத்திலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* * *

ராய்ட்டர் இப்படி ஒரு செய்தியை வெளி யிட்டிருக்கிறது. இதைப் படிக்கும்போது நமக்கெல்லாம் இரத்தம் கொதிக்கிறது, கோபம் பொங்குகிறது, ஒரு கண்டனக் கூட்டம் போட லாமா என்று தோன்றுகிறது. உண்மையிலேயே கண்டிக்கத்தான் வேண்டும். ஆனால் இந்த வெள்ளைக்குண்டர்கள், நிற பேதம்- இருக்கத் தான் வேண்டும் என்று பேசியது போல, ஜாதி பேதம் இருக்கத்தான் வேண்டும், பிராமண முதல் ஜாதி, மற்றவர் அடுத்தடுத்துத்தான், என்று இங்கே வைதீகர்கள் சனாதனிகள், வேதப் பிராமணர்கள் குளத்தங்கரை மாநாடுகள் நித்த நித்தம் நடத்துகிறார்கள்- விசேஷ மாநாடுகளிலே, பெரிய பண்டித சிரோமணிகள், வேத வியாக்யான கர்த்தாக்கள் பிரதிவாதிபயங்கரங்கள், திருவாய் மொழி திவ்யப் பிரபந்தம் முதலிய ஆதாரங்கள் காட்டிப் பேசுகின்றனர்.- சங்கராச்சாரிகளின் ஸ்ரீமுகம் பிறக்கிறது. சதகதாகாலட்சேபங்களிலே உபதேசிக்கப்படுகிறது- சங்கீத சபைகளிலே கூத்துக் கொட்டகையிலே, சினிமாக்கோலாகல மண்டபங்களிலே ஜாதிமுறையின் அவ சியத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.

வேதப் பிராமணர்களின் பேச்சுக் கேட்கும் போது, வெள்ளைக் குண்டர்களின் பேச்சைக் கேட்டதும், கிளம்பிய ரோஷம் எங்கே? வீரம் எங்கே? தைரியம் எங்கே? எங்கே?

அவை போகுமிடத்தைத் தேடுங்கள், எல்லோரும் ஒன்றாய்க் கூடுங்கள், பேத உணர்ச்சியை, யார், எந்தக் காரணத்துக்காகப் புகுத்தினாலும் சாடுங்கள், பிறகு பாருங்கள், நாடு எவ்வளவு விரைவில் முன்னேறுகிறது என்று.

இதைச் செய்யாதவரையில், மனுவின் மமதை நிறைந்த சிரிப்பு அடங்காது.

(திராவிட நாடு - 7.7.1946)