அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மறைந்த மஜீத்

நெல்லிக்குப்பத்தின் நெடுவீதிகளெல்லாம் தாண்டி, சின்னஞ்சிறு சந்துக்குள்ளே புகுந்து அழைத்துச் சென்றார்கள். அந்தச் சந்து, சாக்கடையும், சகதியும் இரண்டு பக்கங்களிலும் புடைசூழ, காட்சியளித்தது! அந்தச் சந்தைத் தாண்டியவுடன், சிறு மைதானம். அதில் நாலைந்து சிறு கூரைவீடுகள். அதிலே, கூரையும் சிதைந்து ஒரு குடிசைவீடு அதன் முன்னால் போய் நின்றோம்.

தோழர்கள், வீட்டிலிருப்போர்களை அழைத்தார்கள்.

வயதான கிழவி வெளியில் வந்தார்கள். அக்கம் பக்கம் ஓடி ஈச்சம் பாய்களை வாங்கிவந்து, சுதசுதவென நீரோதம் நிரம்பிக் கிடந்த தரையின்மீது விரித்தார்கள். எங்கோ ஒரு வீட்டிலிருந்து கயிற்றுக் கட்டிலை இழுத்து வந்து போட்டார்கள். பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் விரைந்து சென்று, சிறுவனொருவனை அழைத்து வந்து நி்றுத்தினார்கள்.

மஜீத் குடும்பத்தை நேரில் காணச்சென்றவர்கள் கண்ணீருடன் தான் திரும்ப முடியும்.

அவர்கள் குடும்பம், ஏழ்மைக்கு இலக்கியம்! வறுமைக்கு உதாரணம்!

மஜீத் தந்தை வயதானவர் – வாழ்வின் அந்தி நேரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பவர்.

ஷேக் பாபு என்று கூறினால் அந்த ஊர் மக்களுக்கு நன்கு தெரியும். ஏனெனில் அவர் தொழில் கலாப் பூசதல். ஆகவே, அந்த ஊரில் எந்தவீட்டுப் பாத்திரமும், அவரது கையால் ஈயம்பூசப்படாமலிக்க முடியாது. அவர் தெருக்கோடிகளில் துருத்திக்கு இடம் அமைத்து, தொழில் தொடங்கும் பொழுதெல்லாம், துணைபுரிவாள் அவர் மனைவி தாவுத்தம்மாள்.

இந்த இருவர் பெற்றெடுத்தவரோ ஒன்பது பேர் ஐந்து குழந்தைகள் இளமையிலேயே இறந்துவிட்டன.

மிகுதி நால்வரில் மூத்த சகோதரிக்கு திருமணம் முடிந்துவிட்டது இளைய சகோதரி ஜீனத் பாய், தம்பி அப்துல் கரீம் இருக்கிறார்கள், மறைந்த மஜீத்துக்கு.

பழுத்த இலைகளும், பசுமை நிறைந்த துளிர்களும்தான் மிச்சம் இவைகளைக் காப்பாற்றும் பொறுப்பிலே இருந்த மஜீத் மறைந்துவிட்டான்.

மஜீத், குள்ள உருமானாலும், கொள்கையிலே மிக உயரம், திராவிட கழகத்திலே பணியாற்றிய பொழும், பிரிந்து முன்னேற்றக் கழகம் அமைத்தபொழுதும் மஜீத்தின் தொண்டு நல்ல முறையில் பயனளித்தது.

அண்மையிலே வந்துபோன தேர்தலில், காங்கிரசுக்கு எதிராக இருந்து பணியாற்றினான். தெருத்தெருவாக சென்ற, ஊழல் மலிந்த காங்கிரசின் கேடுகளை மக்களுக்கு எடுத்துரைத்தான்.

தென்னாற்காடு மாவட்டம், இந்தத் தேர்தலால், இந்தியாவிற்கே ஒரு அபாய அறிவிப்பாக அல்லவா மாறிவிட்டது.

இந்த மாவட்டம், வடநாட்டு முதலாளிமார்களுக்கு எச்சரிக்கையல்லவா விட்டது கோயங்காவை விரட்டியடித்தது மூலம்.

இந்த மாவட்டம், காங்கிரசுக்கே சாவுமணியடித்துவிட்டது.

இதற்கு மஜீத் போன்றவர்களின் தொண்டுதானே காரணம் என்று கண்ட ஒரு காங்கிரஸ் வெறியன், கொலைகாரனானான்.

கண்ணன் என்ற பெயருடைய பாதகன் 24-1-52 அன்று இரவு 10-30 மணிக்கு, ஆலையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த மஜீத்தை கத்தி கொண்டு தாக்கினான். கொலை செய்துவிட்டோடினான்.

வழக்குப் பதிவாகி நடந்து வருகிறது. இதோடு நான்கைந்து வாய்தாக்கள் போட்டு விட்டார்கள்.

கண்களை இழந்துவிட்டதுபோல், தடுமாறுகிறார்கள் மஜீதின் குடும்பத்தினர்.

தந்தைக்குத் தள்ளாத வயது – எந்த வேளையும் செய்து பிழைக்கும் பருவம் கடந்துவிட்டவர்.

தாயும் அப்படியே – என்ன செய்யும்? பிஞ்சுக் குழந்தைகள்தான், மற்ற இரண்டு பேரும்.

தம்பி ரகிமை, ஆலையில் சேர்த்துக் கொள்ளும்படிக் கேட்டால் வயதாகவில்லையென்று திருப்பியனுப்புகிறார்கள்.

அன்றாட வாழ்க்கைக்கே, அலைமோதுகிறார்கள்.

இந்த ஏழைக்குடும்பத்தின் நிலையைக் கண்டு, கொள்கைக்காக உயிர் விட்ட ஒரு வீரனின் குடும்பம் இப்படித் தவிக்கப் பார்த்திருப்பது சரியல்லவென்று ஒரு நிதிதர முடிவு செய்து, நிதியும் சேர்ந்து வருகிறது.

நெல்லிக்குப்பத்திலேயே, ஒரு நிதிக்கமிட்டி அமைத்தார்கள் – ஆரம்பித்தில் ஆனால், திராவிட முன்னற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சி.என்.ஏ. அவர்களே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளதால். அவர்கள் தாங்கள் சேர்த்துள்ள தொகையைக் காஞ்சிக்கு அனுப்பிவிடுவதாக அறிவித்துள்ளார்கள்.

அந்தக் குடும்பம் நம் உதவியைக் தினந்தினம் எதிர்பார்க்கிறது. மஜீத் மரணத்திற்குப்பிறகு, இன்றுவரை. நகர தி.மு.க. கழக உதவியால்தான் குடும்பம் நடைபெற்று வருகிறது. ஆகவேதான் நிதி முயற்சியை விரைவில் முடிக்கவேண்டும்.

அந்த மாவட்டத்தில், காங்கிரசுக்கு எதிர்ப்பாக நின்ற எம்.எல்.ஏக்கள் மனம் வைத்து, இந்த ஏழைக் குடும்பத்திற்கு உதவி செய்திருக்க வேண்டும். ஒருவர், இருவர் உதவியிருந்தாலும் எல்லோரும் செய்ய வேண்டும்.

மற்றும் கழகத் தோழர்கள், விரைவில் நிதிஉதவி தவிக்கும் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவேண்டும்.

தோழர்களே, நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் என்ற அடியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

!செய்தி - திராவிட நாடு – 1-6-52)