அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்மறைந்தார் மன்னர்!

தூங்கினார்!
எழும்பவில்லை!

இத்துயரச் செய்தி கேட்டு உலகமே அதிர்ந்தது, பிப்ரவரி ஆறாம் தேதி ஆப்ரிக்கா கண்டத்திலே உலவிக் கொண்டிருந்த, அவரது, திருமகள் தேம்பித் தேம்பி அழுதார்.

பிரிட்டிஷ் மன்னர் ஆறாவது ஜார்ஜ் பதினைந்து ஆண்டுக் காலம் பிரிட்டிஷ் சிம்மாசனத்தை அலங்கரித்து விட்டு, கடந்த ஆறாம் தேதி காலை 10.45 !பிரிட்டன் நேரம்) மணிக்கு உயிர்துறந்தார்.

உலகில் மணிமுடிகள் ஒழிக்கப்படவேண்டுமென்ற ஆசைகள் பரவி வருகிற நேரத்தில், மன்னர் பரம்பரையொன்று குறையாத செல்வாக்கோடு, வற்றாத புகழோடு இருக்கிற தென்றால், அது இங்கிலாந்திலேயேயாகும். அத்தகைய அளவுக்கு மக்கள் இதயங்களில், மாறுதலும் கோபமும், எழும்பாத நிலையில், இருந்து பழகி வருகிறது அந்தப் பரம்பரை.

அதிலே, ஒளிச்சுடர்போல்,விளங்கினார், மறைந்த மன்னர்.

பிரிட்டிஷ் சிங்காதனம் அவருக்குக் கிடைத்தவிதம் உலகம் அறியும். காதலிக்காக, சாம்ராஜ்யத்தை இழந்தார் அவரது அண்ணன் – ‘உலக சாம்ராஜ்யத்தைவிட உன் இதய சாம்ராஜ்யமே எனக்கு வேண்டும்‘ என்று வில்சன் சீமாட்டியைத் தேர்ந்தெடுத்தார், விண்ட்ஸர் கோமகன்.

அன்று தொடங்கிய ராஜ்யபாரத்தை, திறமையாக நடாத்தி, மக்கள் உளமெல்லாம் கதறும் நிலையில் பழகி வாழ்ந்துவிட்டு – தூங்கிவிட்டார். ஆறாவது ஜார்ஜ்.

அவரது பிரிவின் விளைவாக, பிரிட்டிஷ் சிம்மாசனம் ஒரு பெண்மணியால் அலங்கரிக்கப்பட்டுவிட்டது. அவரது திருக்குமாரி எலிசபெத், அரியணையில் அமர்த்தப்பட்டிருக்கிறார். விக்டோரியா மகாராணிக்குப் பிறகு, பிரிட்டிஷ் மணிமுடிதரிக்கும், பெண் வாரிசு எலிசபெத்துதான்.

துயரம் தோய்ந்த முகத்துடன் இங்கிலாந்து காட்சி தருகிறதாம்! வீணாடம்பரமின்றி, பழகி, மறைந்த மன்னரை நினைத்து மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். அவர்கள் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம். வருங்காலம், பிரிட்டிஷ் மக்களின், துயரத்தைப் போக்கட்டும்.

திராவிட நாடு – 10-2-52