அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மாஸ்கோ மணம்

குதிரை வாங்கப்போன மந்திரி, கழைக் கூத்தாடினார். அவரது தாண்டவத்தைக்கண்டு மகிழ்ந்த கண்ணன், நரியைப் பரியாக்கியத் திருவிளையாடலைத் திருப்பாசுரத்தால்கூறி, நீறு பூசி, திருத்தல யாத்திரை திருநாளைப்போவார்களாக இந்தத் தில்லும் முல்லும் இந்த நாட்டிலே! “ஆண்டவன்” நரியைப் பரியாக்கினாரே தவிர, மீண்டும், நரியெனும் பழைய வடிவுகொண்டு, ஊளையிட்டு ஓடிவிட்டதென்றே கூறினர். ஏன் எனில், நரி பரியாகும் பாட்டை ஈசனைக் கொண்டு புரியவைக்கும் “மாணிக்கவாசகர்கள்” ஆயினும், நரி நரிதான், பரி பரிதான், நரி, பரியாகவே ஆகிவிடாது, உண்மையைக் கண்டு பயந்து! அர்த்த மற்ற, திருவிளையாடல்கள் எண்ணி, நெஞ்சு நெகிழ்ந்து, கண்ணில் நீர் புரள, கழுத்திலே உருத்திராக்கம் புரள, கைகூப்பித் தொழுது கடம்பா! கச்சி ஏகம்பா! மணாளா! என்று கசிந்துருகும் மெய்யன்பர்களுக்கு, இவ்விதழ் வாசகமோ, மகேஸ்வரன் இன்றி, ஓடப்பர் ஒப்பப்பர் உண்மையை உரைக்கிறது. சோவியத் மலர்! சோர்ந்தவர்களாகி, பாமரர் விவேகிகளாகி, பாட்டாளியும் பராரியும் ஆட்சியாளர் பாலைவனம் புன்னகைப் பூந்தோட்டமாகி, எலும்பு எழில்மிகு உருவமாகி, ஏவலர் ஏறுகளாகி, முயல்களின் முழக்கத்தைக் கேட்டுப் புலிகள் பயந்து செத்து, அன்னக் காவடிகளின் ஆவேசங்கண்டு சொர்ணக்காவடிகள் சுருண்டுவிழுந்து, குப்பை மேட்டுக் கூக்குரல், கோபுரத்தைக் குமுற வைத்த, வீரவிளையாட்டை, செய்துகாட்டி, அற்புதத்தை நிரந்தரமாக்கி அவனியெங்கும் அந்த அற்புதத்தை நிரந்தரமாக்கி அவனியெங்கும் அந்த அற்புதத்தை ஏற்படுத்தமுடியும், ஏற்படுத்த, இமையவளிடம் ஞானப்பால் உண்டவரோ, ஏடு எதிர்நோக்கிச் செல்லச் செய்யும் ஜாலக்காரரோ தேவையில்லை, எவரும் செய்யலாம், உறுதியுடன் உழைத்தால், என்ற உண்மையை உலகுக்கு உரைத்த சோவியத் ரஷியாவிலே, இருபத்தி ஐந்தாண்டு களுக்கு முன்னம் ஏற்பட்ட புரட்சிக் கொண்டாட்டத்தின் நினைவுக்குறியாக, இவ்விதழ் வெளியிடுகிறோம். சோவியத் புரட்சியின் போதிருந்த காட்சிகள் சில தீட்டியுள்ளோம். சோவியத் நாட்டிலே இதுபோது நடைபெறும், போரிலே, உள்ள நிலைமை பற்றிய கட்டுரைகளும் உள்ளன. சோவியத் மக்கள் சோர்வின்றி நடத்தும் இந்தப்போர், உலகிலே நடைபெறும், இரண்டாவது மாபெரும் புரட்சியின் முதலாவது கட்டம் என்பதே நமது கருத்து.

இருபத்தைந்தாண்டுகட்கு முன்பு ஏற்பட்டது சோவியத்திலே, புரட்சி. அதன் வாடை, ஐரோப்பா, ஆசியா கண்டங்களிலேயும் வீசலாயிற்று. இன்று பொதுஉடைமையைப் பொசுக்கவேண்டு மென்று பீர்கடையிலே பிதற்றும் பேயன்வாழும், ஜெர்மனியிலேயே, சமதர்ம வாடை வீசிற்று. சீனாவிலே சமதர்மம் முளைத்தது. பிரான்சிலே சமதர்மிகள் ஆட்சியும் நடத்தினர். சமதர்மப் பிரசாரமும், சமதர்மக் கிளர்ச்சியும் பலமாகிக்கொண்டே வந்தது. முதலாளிகள் மூலையில் அமரவும், மன்னிப்புகோரவும், தமது முறைகளுக்குப் புதிய கருத்துரைகளைக் கூறவும், தொழிலாளரைத் தட்டிக் கொடுக்கவும், தயவு செய் என்றுரைக்கவும், இலாபப் பங்கீடு தருவோம் என்று கூறவும் தொடங்கினர்.

இந்த வேகத்தைக் குறைத்து, சமதர்மப் பூங்காவை அழித்து, சர்வாதிகாரக் கள்ளியைப் படரவைத்த குடிலர்கள் மூவர், முதலிலே, முசோலினி, பின்னர் ஹிட்லர், மூன்றாவதாக, பிராங்கோ, மூலைக்குச்சென்ற முதலாளித்தனத்துக்கு, முலாமிட்டழைத்து, முடிசூட்டி வைத்த மூன்று முரடர்களிலே, ஸ்பெயினிலே இருப்பவர், சக்தியுடன் கொஞ்சம் யுக்தியுங் கொண்டவர் எனவே, அவர் சபை புகாமல், திரைமறைவிலேயே இருந்து வருகிறார். தோல் கிழிந்த முரசானான் முசோலினி! ஹிட்லர்மட்டுமே, ஒரு வீர இனத்தின் மூடபக்தியை முதலாகவைத்து, சமதர்மத்தைச் சாய்க்கும் சூதாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். இந்த வெறியை, அடக்க நடக்கும், மாபெரும் இரண்டாம் புரட்சியின் ஒரு கட்டமே, இன்று நடைபெறும், போர். எனவேதான், உண்மையில் சமதர்ம உள்ளங்கொண்டவர்கள், இந்தப் போரிலே, நேசநாடுகளின் முகாமிலே இருப்பதைப் பெருமையெனக் கொள்கின்றனர். இந்தப்போரிலே, சமதர்மம் சாய்ந்து போகுமானால், முதலாளித் தனத்தின் எதிர்த்தாக்குதல் வெற்றி பெற்று, காரல்மார்க்சின் கல்லறை பிளந்தெறியப்பட்டு, லெனின் சிலைகள் தூளாக்கப்பட்டு, ஸ்டாலின் சித்திரவதை செய்யப்பட்டு, சமதர்ம வரலாறுகள் சாம்பலாக்கப் பட்டு, ஏழை அழுத கண்ணீரில், ஏழைகளின் தலைகள் அறுபட்டு மிதந்துகிடக்கவும், அதிலே, முதலாளிமார்கள், ஒய்யார ஓடத்தைச் செலுத்தி, உல்லாசப் பயணம் புரிவர் என்பதும், தெரிந்தவர்கள், இன்றைய போரிலே, அச்சு நாட்டுக்கு எதிரிடையாக இருப்பவர் எவராயினும் நம் தோழர், அச்சு நாட்டுடன் இச்சை கொண்டோர் எவராயினும் அவர் தமது எதிரி, என்ற எண்ணத்தை உறுதியாகக் கொண்டுள்ளார்.

உலகிலேயே, ஓடப்பர் ஒப்பப்பராக முடியும் என்பதை புரட்சி மூலம் நடத்திக்காட்டியது போலவே இப்போதும், ஜெர்மன் படைகளை எதிர்த்து நின்று தாக்க முடியும் என்பதையும், எதிரி ஓர் இடத்
திலே ஜெயிப்பினும் அவனது இடுப்பை முறிக்க, வேறு அரங்கங்களை ஏற்படுத்தவேண்டும் என்பதையும் ஜெயித்துவரும் எதிரியை, வெற்றியிலேயே வேதனை உண்டாகும்படி, பொருளையே பொசுக்கித்தள்ள வேண்டுமென்பதையும், உலகுக்கே எடுத்துக் காட்டியதும், சோவியத் ரஷியாதான்! போர் துவங்கியதிலிருந்து ஜெர்மன் படைகள், எல்லைக்கருகே வந்து விட்டனவென்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், வெள்ளைக் கொடியை ஏற்றாதநாடு, சோவியத் ரஷியாவே! இரத்தம் புரண்டோடுவதையும், பிணங்கள் புதைக்கவும் நேரமின்றி கோரச்சண்டை நடப்பதையும், கண்டும், மனங்கலங்காத மக்கள், சோவியத் மக்களே! இந்தப் போரிலேயே பிரம்மாண்டமான சண்டைகள் பிடிவாதமான தாக்குதல்கள், தந்திரமான பதுங்கிப்பாயும் முறைகள், சோவியத் நாடுதான் செய்து காட்டிற்று. வாரக்கணக்கிலே, மாதக்கணக்கிலே, முடித்துவிட முடியும் என்று, கூறிய ஹிட்லரின், திட்டத்தைத் தகர்த்த பெருமையும் அந்த நாட்டுக்கே உண்டு.

மாஸ்கோ வெளிப்புறத்திலே வேட்டொலி, மாஸ்கோ நகர் ரேடியோ நிலையத்திலே மதுரமான கீதம்! இதைவிட, வீரம் வேறு, என்று, எங்கே காண்பது. தொழிற்சாலை மிகுந்த பிரதேசத்திலே போர் என்றால், போர் நடத்திக்கொண்டே ஒரு பகுதியினர், தொழிற்சாலை இயந்திரங்களைக் கழற்றிக்கொண்டு, மற்றோர் பகுதியினர் வேறு பாதுகாப்பான இடங்களிலே அவைகளை அமைக்க எடுத்துச் சென்றபடி இருப்பர், அது முடிந்ததும், எதிரி உள்ளே நுழைவான். காண்பது என்ன! கட்டாந்தரை இடிந்த கட்டடங்கள் இவையே! போர் வீரன் உடை, தொழிலாளி முகம், படிப்பாளி உள்ளம் - இது ஸ்டாலின் சித்திரம். 1918லிருந்து 21 வரை, பத்து நாட்டுப்பட்டாளங்கள். பச்சைக்குழவியென்றிருந்த பொது உடைமை ஆட்சியை நசுக்கக்கிளம்பியபோது ஸ்டாலின், ரணகளத்தினராக நின்றான். இன்று நாஜிகள் பாய்ந்து போரிடும் களமத்தனையும், ஸ்டாலின் வீரப்போரிட்டு உலவிய இடங்களே. எனவே போர்த்தந்திரமத்தனையும் தெரியும். ஸ்டாலினுக்கு உறுதுணையாக உள்ள, வரஷிலாவ், டிமோஷெங்கோ, ஆகியோரும், பாட்டாளிக் குடி பிறந்தோர், புது ஆட்சி அமைப்பிலே சிற்பிகள்! எனவேதான், வீர ரஷியரின் வெஞ்சமர், உலகமே கேட்டு வியக்கும்படியானதாக இருக்கிறது.

சோவியத் வாரவிருந்துபோல், இதுபோது, உலகப் போர்க் களத்திலே, அச்சு நாட்டுப்படைகட்கு அவதியும், நேசநாட்டினருக்கு வெற்றியும் ஏற்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளை கேட்டின்புறுகிறோம்.

வட ஆப்பிரிக்காவிலே, ஜெர்மன் படைகள் பின்வாங்கி ஓடும் ஓட்டமும் அவைகளைத் துரத்திக்கொண்டும், இதுவரை 20000 பேருக்குமேல் கைதிகளைப் பிடித்துக்கொண்டும் போகும், பிரிட்டிஷ் படைகளின் கொண்டாட்டமும் வடஆப்பிரிக்காவிலே விஷி (விச்சி)க்குச் சொந்தமான பிரதேசத்திலே அமெரிக்கப் படைகளின் பிரவேசமும், விஷிப்படைகளின் விரசமும், டார்லான் எதிரிகளிடம் பெற்றுள்ள சுகவாசமும், குடால்கனார் போரிலே, ஜப்பானியப் படையைத் தலைதூக்க ஒட்டாது, அமெரிக்கப் படைகள் தாக்குவதும் ஸ்டாலின்கிராடிலே ரஷியர்கள் ஒருபுறமும் குளிர் மற்றோர்புறமும் தாக்குவதுகண்டு ஜெர்மானியர் தவிப்பதும் பிரிட்டிஷ் விமானங்கள் விடாமல் தாக்குவதுகண்டு, பீர்கடையிலே நின்று ஹிட்லர், “மனம்வேகிறது! என் செய்வது. எனக்குக் காலம் வரட்டும். பார் அப்போது” என்று ஓலமிடுவதும், சோவியத் வாரம், உலகுக்கு விருந்தென அளிக்கும் செய்திகள். பணிந்தவர் கதியாது? என்பதற்குப் பாடம் புகட்டுவது வட ஆப்பிரிக்காவிலே அமெரிக்க பிரிட்டிஷ்படைகள் வெற்றிபெற்று வருவதைக் கண்டதும் விஷி ஆண்டு பிரதேசத்திலும், ஹிட்லரின் படைகள் புகுந்துவிட்டன. மேலே, மேல்மூச்சு வாங்கியபடி அச்சுப்படைகள் வெற்றி ஆனந்தத்துடன், ஆப்பிரிக்கக் கரைபக்கமாக நேசநாட்டுப் படைகள், இடையே மத்யதரைக்கடலில் இது சமர்சதுரங்கம் இன்று.

இரண்டாம் போர்முனை அடுத்த ஆண்டுதான் - என்று அமெரிக்கத் தலைவர் கூறிவிட்டார். ஐரோப்பாவிலே, இரண்டாம் போர்முனை பற்றி அதை அவர் கூறியிருக்கக்கூடும். ஆனால், ஆப்பிரிக்காவில் கால் ஊன்றிக்கொண்டு, மத்யதரைக்கடலிலே முகாமமைத்து, இத்தரையைத் தாக்குவது, இனி நடவாது என்று கூறமுடியுமா! வட ஆப்பிரிக்காவிலே. திடீரென்று அமெரிக்கப் படைகள் வெற்றிவலம் வருவதுபோல அந்தமானைத் திருப்பிப் பிடித்தாகிவிட்டது. அசாமிய எல்லையிலிருந்து பர்மாவிற்குள் நேசநாட்டுப்படைகள் பிரவேசித்துவிட்டன என்ற செய்தியை நாம் கேட்க அதிகக்காலம் பிடிக்கும்.

நேசநாடுகள், வெற்றிபெற பலவழிகள் உண்டு. சோவியத் நாட்டு நிகழ்ச்சிகள் நேசநாட்டினருக்கு, வீரக்கனல் மூட்டா திருக்குமா!

ஓடப்பராக, இருந்த ரஷியர்கள், உதையப்பராகி, முதலாவது ஆட்சியை முறியடித்து, மக்கள் யாவரும். ஒப்பப்பர் என்பதை சோவியத் நாட்டிலே 25 ஆண்டுகட்கு முன் நிலை நாட்டினர், வாழ்க சோவியத்!! வெல்க சோவியத்!! மாஸ்கோ மணம் மானிலமெங்கும் பரவுக!!

15.11.1942