அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மாஸ்கோ மறந்தாலும்!

அந்தக் கொடுங்கோலனா, இங்கு வருகிறான்? அவன் கெட்ட கேட்டுக்கு வரவேற்பாம், வைபவமாம். சொரணை கெட்ட சோற்றுத் துருத்திகளல்லவா, இதைச் சரி என்று கூறும்.

“ஆமாம், அந்த அக்ரமக்காரன் இங்கு வரக்கூடாது.”

“அவனுக்கு விருந்து, வைபவம், வரவேற்பு நடக்கக்கூடாது.”

“கிளர்ச்சி செய்வோம்! வரவேற்பைத் தடுப்போம். ஜார் இங்கு நடமாட விடமாட்டோம். ஒழிக ரஷிய ஜார்! ஏழைகளை வதைக்கும் கயவன் ஒழிக!!

“எடுங்கள் செங்கொடியினை! நடவுங்கள், ரஷ்ய அதிகாரியின் மாளிகை நோக்கி! மக்களின் கொதிப்பை அவன் காணட்டும், மாநிலம் அறியட்டும், நாம் மமதை கொண்டோனை வெறுக்கிறோம் என்ற செய்தியை. கிளம்புங்கள்.”

ஜாரின் கொடுங்கோலாட்சியிலே சிக்கிச் சிதைந்தது ரஷிய மக்களன்று, மேலே நாம் தீட்டியபடி, தீப்பொறி பறக்கப் பேசியது, ரஷியாவிலே, ஜார், படாடோபமாகப் பவனிவந்து கொண்டிருந்த நாட்களிலேயே, அவன் தீயன் - அத்தீயனைக் காண்பது தீது - அத் தீயனின் வருகையைத் திருவிழாவாகக் கொண்டாடுவது அதனினுந் தீது - என்று கோபித்துக்கூறிப், புயலென ஒரு கூட்டம் கிளம்பிற்று, ரஷியாவில் அன்று!

ஏககாலத்திலே ஆறு கண்டனக் கூட்டங்கள், ரஷிய ஜார், நிக்கோலஸ், வருகை கூடாது என்று முழக்கம் - மாஸ்கோவிலன்று, இம்மாபெருங் கூட்டங்கள், இலண்டனில்! சொற்பொழிவாளர்கள், ரஷியரல்ல, பெர்னார்டுஷா, போன்ற பிரிட்டிஷ் அறிஞர்கள் 1905-ல், ரஷிய மன்னன் ஜார் நிக்கோலஸ், இலண்டனுக்கு விஜயம் செய்ய ஏற்பாடாகி இருந்தது, மாரிகாலம். மன்னனை மகத்தான முறையிலே வரவேற்கப், பிரிட்டனிலே அரசாளும் கூட்டம், ஏற்பாடு செய்து வைத்தது, ஜார், இரத்தக்கரை படிந்த கரத்துடன் இலண்டன் வர இருந்தான். ரஷியாவிலே, ஜாராட்சியை எதிர்த்தவர்களைச் சுட்டுக் கொல்லும்படி உத்தரவு பிறப்பித்த, அந்தத் தூர்த்தனின் வருகைக்கு இலண்டனில் துந்துபி முழங்குவதா, அதை நாம் கேட்பதா, என்று கூறிச்சீறி எழுந்த பிரிட்டிஷ் மக்கள், பெருங்கிளர்ச்சி செய்து, வெளிநாட்டு அலுவல்களைக் கவனிக்கும் பணிமனை முன்சென்று, முழக்கமிட்டு ரஷியத்தூதர் மாளிகைமுன் நின்று ஆர்ப்பரித்தனர். போலீஸ் தடியடியும், சட்டச் சவுக்கும், கிளர்ச்சிக்காரர்மீது வீழ்ந்தது - ஆனால், அவர்கள் வெற்றி பெற்றனர், ஜார், இலண்டன் வரவில்லை - வந்து ரசாபாசம் நேரிடுவதைவிட, வராதிருப்பது மேல் என்று கருதினான், வீரத்தைவிட விவேகமே மேல், என்று தீர்மானித்தான்.

புரட்சிக்கு முன்பே, ரஷிய மக்களிடம் அக்கறை காட்டியும், ஜாரின் ஆட்சி முறையைக் கண்டித்தும், மனித விடுதலை உணர்ச்சிக்கு ஆக்கந்தேடியும், இலண்டனில் கிளர்ச்சி நடைபெற்றது. ஆனால்...

எந்தப் பிரிட்டனிலே ஜார் காலடி வைக்கக்கூடாதென்று மக்கள் கூறினரோ, அதே பிரிட்டனிலே ரஷியப் புரட்சியின் முதல் கூட்டம் முடிந்து, சீமான்கள் விரண்டோடியபோது, வெளிநாடுகளிலே அடைக்கலம் புகுந்து ரஷியாவிலே நிறுவப்பட்ட பொது உடைமை ஆட்சியைக் கவிழ்க்கச், சீமான்கள் சதிசெய்தபோது, அந்த வெள்ளை ரஷியருக்கு, அபயமளிக்கவும், ஆயுதந்தரவும், படைபலம் தரவும், பொதுஉடைமை ஆட்சிக்கு உலை வைக்கவும், முனைந்து வேலை செய்ததும், பிரிட்டனே! இந்நாள் முதலமைச்சர், மிஸ்டர் சர்ச்சில், வெள்ளை ரஷியருக்காகப் பரிந்து பேசினார், கச்சை கட்டினார், படை திரட்டினார், பணம் உதவினார். 28,000,000 பவுன், கோல்சாக், டெனிகின் எனும் இரு வெள்ளை ரஷ்யருக்குப் பிரிட்டிஷ் சர்க்காரால் கடனாகத் தரப்பட்டது. ஜெர்மன் சண்டையிலே பிரிட்டன் வெற்றி பெறச், சர்ச்சில், அது சமயம், போர் மந்திரியாக இருந்து உழைத்துக் கீர்த்தி பெற்றார். போர் முடிந்ததும் பொது உடைமைமீது சர்ச்சில் பாயத் தொடங்கியதும், முன்பு அவரை மாலையிட்டு வாழ்த்தியவர்கள், கண்டிக்கலாயினர். இப்பெரும்பொருளை வீணுக்கு இறைக்கலாமா? என்று, பார்லிமெண்டிலே சரமாரியான கேள்விகள் கிளம்பின.

எந்தச் சர்ச்சில், நாடோடிகளாக வந்த இரு ரஷியச் சுயநலமிகளுக்காகப் பண உதவியும் படை உதவியும் செய்தாரோ, அதே சர்ச்சில், முதலமைச்சராக இருக்கும் இதுபோது, ரஷியாவுக்குத் தளவாட உதவி செய்யும் நிலைமை ஏற்பட்டதை, உலக மாறுதலால் விளையும் விசித்திரங்களில் ஒன்று என்போம்.

எந்தப் பிரிட்டன், காரல் மார்க்சுக்கும், லெனினுக்கும், புரட்சி முறை பற்றித் திட்டம் வகுக்கும் மாநாடுகள் நடத்த இடமளித்ததோ, அதோடு, புரட்சிக்குப் பிறகு, லிட்வினாப்பை, நாட்டை விட்டு வெளி ஏற்றியது. இங்ஙனம், ரஷிய மக்கள் கஷ்டப்படும்போது, அனுதாபமும் அக்கறையும் பிறப்பது, ரஷியக் கொள்கையிடம் மட்டும் வெறுப்பு உண்டாவதுமான நிலைமை இருக்கக் காரணம், ரஷியா, பொதுஉடைமைக் கொள்கையை உலகெங்கும் பரவச் செய்யும், பல்வேறு நாடுகளிலேயும், பொது உடைமை அரசு அமைப்பதற்கான புரட்சியை மூட்டிவிடும், பல்வேறு நாட்டுப் பாட்டாளி மக்களையும், அந்தந்த நாட்டு அரசியலுக்கு விரோதமான காரியத்தைச் செய்யும்படி தூண்டிவிடும், என்ற கிலியேயாகும். இந்தப் பீதி, வல்லரசுகளிடையே வலுக்கவலுக்க, அவைகளுக்கு ரஷியாவிடம் சந்தேகமும், வெறுப்பும் வளரலாயிற்று. அந்த வல்லரசுகளின் மனதை மிரட்டும் ஒரு ஸ்தாபனம் ரஷியாவிலே ஆரம்பிக்கப்பட்டது, அச்சம் பதின் மடங்கு அதிகரித்தது.

கோமின்டர்ன் - அகில உலக பொது உடைமைக் கழகம் - மாஸ்கோவிலே, நிறுவியதன் காரணம், மற்ற நாடுகளிலே, இரத்தப் புரட்சியை உண்டாக்கவே என்று, வல்லரசுகள் நினைத்தன.

அச்சம் பிறந்திடக் காரணமாக இருந்த மற்றோர் சம்பவம், டிராட்ஸ்கீ - ஸ்டாலின் தகராறு.

சுற்றிலும் முதலாளி அரசுகள் இருக்குமானால், இடையே ரஷியா மட்டும், பொது உடைமை அரசாக இருக்க முடியாது, ஆகவே ரஷியாவின் இலட்சிய பூர்த்திக்காக, உலகெங்கும் முதலிலே, பொது உடைமை அரசு காணப் புரட்சிகளை மூட்டிவிட வேண்டும், என்பது டிராட்ஸ்கியின் கருத்து. அவருடைய இலட்சிய ஆவேசம் ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை. ரஷ்யாவிலே, முதலிலே பொது உடைமை அரச¬ப் பலப்படுத்த வேண்டும், இதற்கு, ரஷ்யாவைச் சுற்றிலும், முதலாளி அரசுகள் இருப்பது பெருந்தடையாகாது, உலகெங்கும் பொது உடைமைக்கான புரட்சியை மூட்டிவிடும் வேலையை ரஷ்யா செய்து கொண்டிருந்தால், ரஷ்யாவே, பொது உடைமை அரசை இழக்க வேண்டி நேரிடும், என்பது, யூகமிக்க ஸ்டாலின் எண்ணம், இந்த இருதலைவர்களின் போராட்டத்தின் போது ரஷ்யாவிடம், வல்லரசுகளுக்கு இருந்த சந்தேகம், பலப்பட்டது. கோமின்டர்ன், ஒரு விஷப்புகைச்சாலை என்று வீணாகச் சந்தேகிக்கலாயினர்.

இன்றையப் போரிலே, பிரிட்டன், அமெரிக்கா, ஆகிய நேசநாட்டுக் கூட்டு முன்னணியைக் குலைக்கக் கருதிய ஜெர்மன் பிரசாரகர், கோமீண்டர்ன் இருப்பதைக் காட்டி, ரஷியாவின் நோக்கம், எங்கும், பொது உடைமையை நிறுவுவதற்கான புரட்சி மூட்டுவதுதான் என்று கூறிக் கலகமூட்டவே, பிரிட்டனிலே சில சீமான்களுக்குச் சஞ்சலமும், அமெரிக்காவிலே சில பூமான்களுக்குப் பீதியும் உண்டாயிற்று. ஜெர்மன் பிரசாரகர் இதுதான் தக்க சமயம் என்று கருதி, இந்தச் சந்தேகத்தை மேலும் மேலும் வளர்க்கவே, ஸ்டாலின் தீரமாகக் கோமீன்டர், கலைக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்துவிட்டார். இனி, ரஷ்யாவிடம், இந்தப் பணக்கார நாடுகளுக்குச் சந்தேகம் எழக்காரணம் இல்லை. ஜெர்மன் பிரசாரமும் இனிப் பயன்பட மார்க்கமில்லை.

ஆனால் கோமின்டர்ன், கலைக்கப்பட்டதால், உலகில் பல்வேறு நாடுகளிலே, தோன்றியுள்ள சமதர்ம அரும்பு, கருகிவிடும் என்று பித்தரன்றி மற்றவர் கருதிடார், மாஸ்கோ, மாநிலத்தை மறக்கினும், மாநிலம் மாஸ்கோவை மறக்காது. சமதர்மத்தைச் சாய்த்திடக் கோமீண்டர்னைக் கலைக்கச் செய்ததுபோதும், என்று முதலாளிகள் எண்ணுவார்களானால், அவர்களின் மந்தமதிகண்டு நாம் பரிதாபப் படுகிறோம். சமதர்மம், இனி, கோமின்டர் உதவியின்றியே, உலகெங்கும், பரவிவிடும், அதைத்தடுக்க இனி எவராலும் முடியாது, என்பது ஸ்டாலினுக்குத் தெரியும்.

கோமீன்டர்ன் கலைந்தது; சமதர்மம் நிலைத்தது.

30.5.1943