அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


‘மத்யப் பிரதேசம்‘ கூறுகிறது!

“இந்தி மொழியைப் புகுத்துவதேன்?“

“இமயமுதல் குமரிவரையில் எல்லோரும் கற்றுப் புழகவே!“

“ஏனிந்தத ஆசை?“

“இந்தியா ஒரேநாடு – எல்லோரும் இந்தியர். அதற்காகத் தான்“

“உண்டாக்க முடியுமா, இது? காற்றில் கோட்டை கட்டுவதும், ‘அதைக் காண்பீர் விரைவில்‘ எனக் கர்ஜிப்பதும் அழகாமோ?

“குறும்புக்காரன் நீ – குதர்க்கம் பேசுகிறார்“

“நான் குறும்புக்காரன் – சரி, என்னைப் போலவே, பேசும் காங்கிரஸ் தலைவர்கள்“

“காங்கிரஸ் தலைவர்களாயிருந்தாலென்ன? – இந்த விஷயத்தில் எல்லோரும் ஒன்றாகவே ‘பாடம்‘ ஒப்பிக்கிறார்கள்.“

தென்னாட்டுக்கு வரும் டில்லித் தலைவர்கள் யாவரும், “இந்தி கற்க வேண்டியதன் அவசியம் குறித்து“, பேசாமல் திரும்புவதில்லை.

தெற்கிலோதான இந்தி எதிர்ப்பு இருக்கிறது – காங்கிரஸ் காரர்களும் அதனை ஆதரித்தால்தான் மக்களிடம் உலக முடியும் ஆகவே அவர்களில் சிலரும் அவ்விதம் பேசுகிறார்கள் – என்கிற கருத்துக் கொண்டிருக்கம் வடநாட்டினர், ஏராளம்.

வடநாட்டினர் மட்டுமல்ல – இங்குள்ள காங்கிரஸ்வாதிகளும் கூட, அவர்களைப் போலவே, தவறான கருத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதனாலேயே, “தமிழ்! தமிழ்!! என்று சொல். இந்தியின் மீது கோபாவேசங்காட்டு. தாய்மொழி பால் உனக்குள்ள ஆர்வத்தைக் கண்டு மெச்சுவார்கள். சிலம்புச் செல்வத்தைப் பற்றிச் செப்பு – சிந்தை மகிழ்வார்கள்! வள்ளுவர் குறளில் சிலவற்றை வீச – ‘ஆகா‘ என்பார்கள்! தமிழ் பாலுள்ள ஆசையைக் காட்டிக் கொள். துவேஷ புத்தியுள்ளவர்களை மட்டந்தட்டி விடலாம்“ – என்கிற தவறான ‘கணக்கைப் போட்டுக் கொண்டிருக்கும் தேசீய நண்பர்களும் உண்டு.

தாய் மொழிப்பற்று என்பது, இயற்கையாகவே வளர்வது. போலி ஆர்வத்தாலோ பிறமொழியினைத் தூற்றுவதாலோ அதனைக்காட்டிக் கொள்வதென்பது, போலி வேஷமாகவே ஆகும்.

இத்தகைய போலிகளையும், வடவர் ஆதிபத்யத்தையும் மத்யப்பிரேதேசம் தட்டியெழுப்புகிறது.

‘ஏதோ! தாய்மொழியைப்பற்றிப் பேசுகிறார்கள் – மக்களின் ஆர்வத்தை இழுக்க இந்தியின் மீது சீறுகிறார்கள்!‘ என்று நம்மைப்பற்றி தவறான கண்ணோக்கும், அதே வழியைக் கடைப்பிடித்தால் தாமும் பாராட்டுறை பெறலாமெனும் தப்புக் கணக்கும், போட்டுக் கொண்டிருக்கும் ‘சிலம்பு நாவினரை‘ மத்தியப்பிரதேசம் – அழைக்கிறது.

மத்யப் பிரதேசம்! டில்லியின் கடாட்சம் பெறக்கூடியவாறு, அருகிலிருப்பதாகும். இந்திய மொழியினர், உலவும் மாகாணம், அங்கே, இந்திய எதிர்ப்பு! ஆச்சரியமாயிருக்கும்! மத்யப் பிரதேசத்தில் இந்திக்கு ஆதிக்கம் ஏற்படுவதாக அஞ்சுகிறார்கள்.

சர்க்காரின் மொழியாக இருக்கும் அந்தஸ்து இந்திக்கும் மராத்திக்கும் உண்டு என்றோர், சட்டம் கொண்டு வருவதென மத்யப்பிரதேச சர்க்கார் யோசனை செய்துள்ளார்கள்.

அதனை எதிர்க்கிறார்கள் – மத்யப் பிரதேச மக்கள்.

எல்லா அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவர்களும் –காங்கிரஸ் உள்பட – இந்த யோசனையை எதிர்க்கிறார்கள்.

இவ்விதம், இந்தியையும் மராட்டிய மொழியையும் சம அந்தஸ்தில் வைத்தால், தமது மராட்டிசய மொழிக்குத் தீங்கு வந்துவிடுமென அஞ்சுகிறார்கள். ஆகவே, அதனைத் தெரிவித்து, மேற்படி யோசனையைக் கைவிடுமாறு முதலமைச்சர் ரவிசங்கர் கல்லாவைக் கோரியிருக்கின்றனர்.

மத்யப் பிரதேசம் – ‘நாம்‘ இல்லாத இடம். அங்கே, எப்படி வந்தது, இந்த ஆர்வம்? தாய்மொழிக்குத்தர வேண்டிய இடத்தில் இந்திக்குப் பங்கா! - என்று கேட்கக் கூடிய – ஆர்வம் எவ்விதம் வந்தது. இதனைத்தான், நம்மைப் பற்றி, தவறான கருத்துக் கொண்டிருக்கும் வடவரும் பிறரும் உற்று நோக்க வேண்டும்.

தாய் மொழிப்பற்று, என்பது இரத்தத்தோடு கலந்தது – அது சிருஷ்டி செய்ய முடியாதது. அந்த ஆர்வம் இருப்பவனே, தனது மக்களுக்கு, ஏதாவது செய்ய முடியும். அவனே, தாய்க்கு அடுத்த படியாக நாட்டையும் மொழியையும் பேணுவான்.

இந்த ஆர்வம், பிறமொழியின் பால்வைக்கும் பாசத்தால், மங்கி பிறகு மக்கிவிடும் அந்நிலை பெற்ற காங்கிரஸ் நண்பர்கள், பலருண்டு அதனாற்றான், தவறான பார்வையை வீசுகின்றனர்.

“இந்தி ஒரே மொழி!“

“இந்தியா ஒரே நாடு!“

இந்த மயக்கம் தெளிந்தால், தாய் மொழியின்பால், தானே பற்றும் பாசமும் படரும்.

அவர்களுடைய மயக்கத்தை, இந்த மத்ய பிரதேச சம்பவம் தெளிய வைக்கலாம்.

இங்கு மட்டுமல்ல, இந்தியை எதிர்ப்போர் இருப்பது தாய்மொழிமீது ஆர்வம்கொண்ட எங்கும் இந்திக்கு எதிர்ப்பு இருக்கிறது.

அவ்விதம், பலப்பல மொழிகளை தாய்மொழிகளாகக் கொண்ட பற்பல இனமக்கள் வாழும்பூமி, இது.

இதனற்றான், இந்தியை – அருகேயிருப்போரும் சரி, ஏற்க முடிவதில்லை.

இதனை, இந்தி மயக்கம் கொண்டோர் அறிந்துவிட்டால், அது பற்றிய அநாவசியமான பிரச்னைகளும் தகராறுகளும் எழும்பாது.

திராவிட நாடு 22-3-53