அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மற்றோர் பரணி!

சற்றே விலகியிரும் பிள்ளாய், கன்னிதானம் மறைக்குதாம், என்று மகேசுவரன், கூறினதுகேட்டு, வழி மறைத்திருந்த மாடு, விலகிற்றாம்! முடியாது என்ற கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது பழமையிலே புரளும் சில பண்டிதர்கட்கு அடுத்த ஆராய்ச்சியாக இருக்கட்டும என்ற விட்டுவிடுகிறோம். வழி மறைத்திருக்கும் வர்ககத்தைச் சென்ற திங்கள் வாருகோலால் சர்.சண்முகம் சாடினார். அண்ணாமலை பல்கலைக்கழகப் பட்டமளிப்புவிழாச் சொற்பொழிவிலே! விலகி நிலும் பிள்ளாய். என்று வினயமாக உரைத்ததோடு விட்டாரில்லை. சர்.சண்முகம், எட்ட நில்! முட்டவருகிறது ஜனநாயகம்! என்று எச்சரித்தார். அவர் பரணி பாடியது போலவே இந்தத் திங்கள் ஜெயப்பூர் சமஸ்தானத்திலே கூடிய எல்லா இந்தியக் கல்வி மாநாட்டிலே தலைமை வகித்த, டெல்லி சர்வகலாசாலை வைஸ் சான்சலர், சர்.மாரிஸ்குவையர், பழமை ஒழிக! ஜாதிக்கொடுமை அழிக! தீண்டாதாரைத் தீய்க்கும் தீயர் ஒழிக! என்ற பரணி பாடினார். அறிவு பொதுவன்றோ! ஜாதிக்கொடுமை புரியாதீர்! தீண்டாதவர் என்ற ஒரு வகுப்பினரை அக்ரமமாக ஒதுக்க்கிவைக்கிறீர்கள். இது நல்லதல்ல, நியாயமல்ல. இது நிலைக்காது. சாராரண மக்களம், சரிசமமாக வாழவேண்டும், என்ற உரிமை கேட்கும் காலம் வரப்போகிறது விரைவிலே அதற்குள் இந்த அநீதியைத் துடைத்துவிடுக. நீங்களாக இந்த நேர்மையான செலைச் செய்யாது விடுவீர்களானால், தாழ்த்தப்பட்டு, அடக்கப்பட்டுள்ள மக்கள் நாளைத்தினம், தங்கள் விடுதலைக்கான மார்க்கத்தைத் தாமாகவே தேடிக்கொள்ள முற்படுவர். அப்போது நிலைமை, உங்களால் கடுப்படுதத முடியாததாகும் - என்பதாக, சர்.மாரிஸ் குவயர் பேசினார். உண்மை. சேரிகளிலிருந்து கிளம்பிய அழுகுரல். வேத ஒலியிலே இலயித்துளள மக்கள் செவியிலே புகவில்லை. அபிஷேக ஆராதனையிலும், அரசியல் அமளியிலும், கவிதா ஆராய்ச்சியிலும் காலந்தள்ளும் மக்களுக்கு இன்னமுமூ அக்ரமமாகப் பலகோடி மக்களைக் கேவலப்படுததி விடுவதன் விளைவு என்ன என்று சிந்திக்க நேரமில்லை. ஆனால் அவர்களை நோக்கிப் புது வேகத்துடன் விரைந்து வருகிறது புரட்சித் தீ! அது பூசாரியின் தாட்சணியத்துக்குக் கட்டுப்படாது. பூமான்களின் தயவுக்குக் காத்துக் கிடக்காது. புலவரின் மேற்கோள்களுக்கு அச்சாரம் அளிக்காது. நெடுநாளைய இடுப்பு வலியை நீக்கிக்கொள்ள முற்படும், உடலும் உள்ளமும் ஒருங்கே பதற விடுதலை! பிடுதலை! என்ற பெருமுழக்குடன் பவனிவரும்! அந்தப் பவனியின் முன் பாராளும் மன்றங்கள் குறுக்கிட முடியாது, பண்டை ஏடுகள் அதன் பாதையை அடைக்க முடியாது. எதிர்ப்பை அது சட்டை செய்யாது தீ, திக்கெட்டும் பரவும், சர்.மாரிஸ், கூறுவது, உலகிலே, விவேகம் குறைந்தால் நேரிடக் கூடிய விளைவு என்ன என்பதுதான். ஒவ்வோர் உலக அமளிக்குப் பிறகும், உள் நாட்டிலே கொடுமைகளைக் களையும் வேலை விறுவிறுப்புடன் நடந்தே வந்திருக்கிறது. இங்கும், அது நடந்தே தீரும், ஆனால் நல்லோர் உரை கேட்கும் றந்போக்குக்கு நாட்டினர் இடமளித்தால், சாந்தியுடன் கூடிய சமரசம் நிலவச் செய்திட முடியும் சர். மாரிஸ்குவையர் பரணியைச் செவிமடுக்க, வைதிக உலகு, ஜாதி அகம்பாவத்திலே தன்னை மறந்திருக்கும் உலகு, முன்வருமா, அன்றி வழி மறைத்திருந்து, வழிந்தோடி வரும் புரட்சி வெள்ளத்திலே சிறு துருமபாகிச் சீரழியுமா, என்பதைச் சிந்திக்கும் பொறுப்பு அந்தச் சீலர்கட்கே உரியது. நமக்கிருக்கும் மகிழ்ச்சி எல்லாம் உண்மையிலேயே அகில இந்தியாவுக்கும் அவசியமாக வேண்டிய கல்வியை, சமரச ஞானத்தை, ஜாதி வெறியைச் சாகடிக்கும் சமஉரிமைப் போதனையை, சர்.மாரிஸ், தக்க நேரத்திலே போதித்தாரே என்பதுதான் உயர் ஜழதிக்காரர்களின் உள்ளத்திலே ஒரு அசட்டு நம்பிக்கை இருக்கக் கூடும். இவ்வளவு குங்களாக வளர்க்கப்பட்ட வைதீக விருட்சத்தை இவ்வளவு சுலபத்திலே வெட்டி வீழ்த்த முடியுமா, நடவாது என்று அந்தக் கூட்டம் மனப்பால் குடிக்கக்கூடும் மமதையின் கூட்டுத் தோழன் அசட்டுத் தைரியம், அது அழிவுக்குத் தூதனேயன்றி வாழ்வுக்கு வழி காட்டியல்ல. என்ன செய்ய முடியும், என்ற மனப்லைக் குடித்துககொண்டிருந்த ஜாரின் கதி என்ன! பட்டாமும் பணபலமும், பூஜைக் கூட்டமும் ஜாருக்கு, சுடலைத் தோழராக முடிந்ததேயன்றி, பக்கபலமாக நிற்கவில்லை. இங்கு, தீண்டாதாரை அடக்கும் திருக்கூட்டத்திடமோ, காய்ந்து ஓலையும் கந்தல் பித்தகமும், தவிர வேறென்ன உண்டு!!

சர்.மாரிஸ்குவையாரின் பரணி, கேட்ட பின்னராவது, ஜாதி அகம்பாவத்தை ஒழிக்க, அறிவுடையோர் அறப்போர் நடத்தவேண்டும். அழிவு ஆர்ப்பரிக்கு முன்னம்!!

(திராவிடநாடு - 16.01.1944)