அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மட்டரகம்

அந்த ஒட்டகத்துக்கு, ஒரு கால் ஊனமல்லவா?

ஆமாம்
ஒரு கண் பொட்டை
ஆமாம், ஒரு கண் குருடுதான்!
பற்களிலே சில உதிர்ந்துவிட்டிருக்கும்
அடையாளம் சரியாக இருக்கிறது சுவாமி! தாங்கள் கண்டீர்களோ, என் ஒட்டகத்தை. அது காணாமற்போய் இரண்டு நாட்களாகிவிட்டன.

நானா? உன் ஒட்டகத்தை நான் கண்டதே கிடையாதப்பா!

நொன்டி, குருடு, பல்போனது, என்று சர்வ அடையாளமும் சரியாகச் சொல்கிறீர், நீர் ஒட்டகத்தைப் பார்க்காது எப்படி இவைகளைத் தெரிந்து கொண்டிருக்க முடியும்? கள்னே! என் ஒட்டகத்தை நீதான் திருடிக் கொண்டாய், எங்கேயோ ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறாய்.
சாது, இக்கடுமொழி கேட்டுச் சிரித்தார். ஒட்டகையைப் பறிகொடுததவனோ ஓங்காரக்கூச்சலிட்டான். காணாமற்போன ஒட்டகையைத் தேடிக்கொண்டு அவன் போகையிலே, சாதுவை ஒரு சாலை ஓரத்திலே கண்டான், கண்டீரோ, ஒரு ஒட்டகையை என்று கேட்டான். சாதுவுக்கும் அவனுக்கம் நான் மேலே தீட்டிய பேச்சு நடந்தது. இவ்வளவு நுட்பமாக அங்க அடையாளங்களையுங் கூறிவிட்டு, ஒட்டகத்தை நான் காணவில்லை என்றுங் கூறினால், பறிகொடுத்தவன் மனம் பதறாதா! அவன் ஆத்திரமடைந்தான். சாது, பிறகு கூறலானார், அப்பா! உண்மையிலே நான் உன் ஒட்டகத்தைக் கண்டதில்லை. ஆனால் அதன் அங்க அடையாளங்களை நான் தெரிந்து கொண்டது, யூகத்தாலேதான். இதோபார், பாதையை, ஒட்டகம் சென்ற காலடிகள்! இதிலே, ஒரு காலடி மட்டும் சரியாகப் பதியவில்லை; எனவே அதற்கு ஒரு கால் ஊனம் என்று யூகித்தேன். சாலையோரத்திலே தழை மேய்ந்துகொண்டே ஒட்டகம் சென்றிருக்கிறது. அடையாளம் பார் தெரியும். தழை மேய்வதிலே, சிலசில இடங்கள் மெல்லப்படவில்லை. அதிலிருந்து ஒட்டகத்துக்சு சில பற்கள் உதிர்ந்துவிட்டன என்ற தெரியவில்லையா? மேலும் சாலையின் ஒரு ஓரமாக மட்டுமே மேய்ந்திருக்கிறது. கண் ஒன்று குருடாக இருப்பதால், இது நடந்திருககிறது என்பது யூகங்தானே! பைதியக்காரா, இன்றம் கேள்! அது பேசீச்சம்பழ மூட்டையுடன் சென்றிருக்கிறது. இதோ பார் கீழே இரண்டொரு பேசீச்சம் பழமும், அவ்வழியே சாரை சாரையாக எறும்புகள் செல்வதையும், இது போல யூகித்துச் சொன்னேனேயன்றி, கண்டதில்லை உன் ஒட்டகத்தை. சாது கூறிய இம்மொழி கேட்டவன், உண்மையை உணர்ந்து, ஐயா! ஒட்டகத்தை இழந்தேன், ஆனால் பெட்கத்தை இழந்தாகிலும் தங்களுக்குள்ள பெருமதியைப் பெற்றால் நஷ்டமில்லை என்று கூறிச் சாதுவை வளங்கினானாம்.

முந்திய இதழிலே, நன்னிலம் நண்பருக்கு நான் விடுத்த மடல், நேயர்கட்குத் தெரியும். அவர் என் பதிலைப் படித்ததும், மீண்டுமோர் கடிதம் விடுத்துள்ளார் - கோபத்தால் அல்ல, குளிர்ந்த மனதுடன். இது அவருடைய வாசகம்! அதிலே அவர், என்ன ஐயா! என்னைத் தாங்கள் தெரியாதிருந்தும், ஏதோ ஒரு உருவத்தை என்னைப்போல நினைத்துக்கொண்டு, பரதேசிக்கு என்னை ஒப்பிட்டு எழுதினீரே என்று எழுதிக் கேட்கிறார். கண்டதில்லைதான், ஆனால் காணாத ஒட்டகைக்கு அடையாளம் கூறிய சாதுபோல, சானும் யூகித்தே, அந்த நன்னில நண்பருக்குப் பதில்விடுத்தேன். அவர் சாய வேட்டிக்காரராகவோ, சடை முடிதரித்தவராகவோ இல்லாதிருக்கலாம், கதர் வேட்டியும், நாகரிக விபூதிப்பூச்சும் உடையவராக இருக்கலாம். ஆனால் அவருடைய நினைப்பு, நான் முன்பு தீட்டியதற்கு அதிக மாறுபட்டதாக இருக்க முடியாது! அது நிற்க, இம்முறை அவர் விடுத்த மடலுக்குப் பதிலளிக்க நேயர்கள் அனுமதி தரவேண்டுகிறேன்.
நன்னிலத்து நண்பா! என் கடிதம் கண்டு மனங்குளிர்ந்ததாக எழுதியுள்ளய், என்னிடம் நட்பும் மதிப்பும் கொண்டிருப்பதாக நவில்கிறாய், எந்தக்காலத்திலும் என்னிடம் உமக்கு விரோதப்புத்தி உண்டாகாது என்று நான் உறதியாக நம்ப வேண்டுமென்றும் கூறுகிறாய், மெத்தச்சரி, வந்தனம், சந்தோஷம். ஆனால் ஒன்று கவனித்தாயா, எங்கே, உன் மீது எனக்குச் சந்தேகமும், அதனால் சஞ்சலமும் வந்துவிடுமோ என்ற நீ அஞ்சுகிறாய், அது விளைவானேன்? பாலில் துளியும் நீரில்லை என்று கூறும் பால் விற்பவனிடமும், அசல் வெண்ணெய் காய்ச்சிய நெய் என்று அழுத்தந்திருத்தமாகக் கூறும் கடைக்காரரிடமும், முதலிலே சந்தேகம் இல்லையென்றாலும் அவர்கள் தங்கள் சரக்கின் உயர்வைப் பன்னிப்பன்னிக் கூறினால், வாங்குபவருக்குச் சந்தேகம் வலுக்கும். அதுபோல, நீர், உமது நட்பை, கபடமற்ற உள்ளத்தை, கனிவை, சகோதரத் தன்மையைப்பற்றிக் கூறிக் கூறித் தயவு செய்து சந்தேகத்தைக் கிளறவேண்டாம், நமக்குள் முன்பு ஏதேனும் விரோதமா, இப்போது, நட்பைப் பற்றி நீர் அறிக்கைவிட!

எனது உபமான உபமேயங்களைக் கண்டு வருந்தாதீர். அவை புண்ணுக்கு மருந்து பூசிக்கொண்டு மினுக்கும் புனுகல்ல கண்ணுக்கு எட்டி, காட்சிதான், உண்டாலோ, உயிருக்கே ஆபத்து. பலாவோ முட்போர்வை, உள்ளேயோ உன்னதமான ருசி. ஆனால் சுளையோ ஏடுக்கும் பக்குவம் தெரியாவிட்டாலோ கைகளிலே பிசின் ஒட்டும், அதுபோலத்தான் விஷய விளக்கத்துக்கான விவாதமும், தொட்டால் துவளுவதோ, துடிதுடிப்பதோ கூடாது. ஆர அமர யோசிக்கவேண்டும்.
தாங்கள் பல புராணங்களையும், இதிகாசங்களையும் படித்தவரையில், அவைகளிலே பார்ப்பனர் தூஷிக்கப்பட்டி ருக்கின்றனரா? என்று கேட்கிறீர், நண்பரே! இந்தக் கேள்வி, எனக்கு உம்மிடம் முதலில் உண்டான காதலைக் (காதல் என்ற பதத்தைக் கண்டு பயப்படாதீர்) குறைத்துவிட்டது! பார்ப்பனியத்தை நாங்கள் பண்டக்கிறோம், பார்ப்பனியம் என்றால், பார்ப்பனரின் சொல், செயல், சிந்தனை, நடை உடை பாவனை, அவர்களின் முற்கால தற்கால நிகண்டுகள், அந்த நிகண்டுகளால் உண்டான நிலைமைகள், ஆகியவற்றின் கூட்டுச் சரக்கு என்று பெயர்! பார்ப்பனியத்தைக் கண்டிக்கிறோமென்றால், அதிலே முதல் இடிபெறுவது, புராண இதிகாசங்கள். ஏனெனில் அவை ஆரிய ஏடுகள், ஆரியத்தை வளர்க்கக் கோக்கப்பட்டவை, இன்றும் மக்களிடை மனமாக மலைபோல் குவிய இவைகளே பயன்படுகின்றன. இந்த ஏடுகள் ஆரியர் உயர்ந்தோர் என்றும், தமிழர் தாழ்ந்தோர் என்றும் கருத்து நிலைக்கவே எழுதப்பட்டன. விஷயம் இதுவாயிருக்க, நீர் புராண இதிகாசங்களிலே, பார்ப்பனர் தூஷிக்கப்பட்டிருக்கினற்னரா, என்று கேட்கிறீரே, கேள்வி பொருத்தமில்லையே! பார்ப்பன ஏடுகளிலே பார்ப்பனியத்தின் கண்டனம் கிடைக்குமா! எதிலே எதைத் தேடுவது? உண்மையைக் கூறுகிறேன், கேள்வி ரொம்ப, மட்டரகம்! உம்மை, என்னிடம் காட்டிக் கொடுக்கிறது அந்தக் கேள்வி. ஹிட்லர் எழுதிய மின்காம்ப புத்தகத்திலே ஜெர்மன் மக்கள் கண்டிக்கப்படுவரா? சர்ச்சிலின் புத்தகத்திலே, பிரிட்டிஷார் கண்டிக்கப்படுவரா? சனாதனிகளின் ஓலைகளிலே, பார்ப்பனியம் கண்டிக்கப்பட்டிருக்குமா? இதைத் தெரிந்துகொள்ளப் புத்தி தீட்சண்யம் தேவையில்லையே, புததி மட்டுமே இருந்தால் போதுமே. நண்பரே உங்கள் தமிழர் நூற்கள் பார்ப்பனியத்தை இகழ்கின்றதா என்று கேட்கிறீர். தமிழன் பெருங்குணம் படைத்தவன். குன்றெடுக்கும் நெடுந்தோளான், கொடை கொடுக்கும் கையான், குள்ளநரிச்செயல் புரியமாட்டான். இகழவோ, இன்னல் விளைவிக்கவோ, தமிழன் துணிந்திருந்தால், நண்பா, நாட்டிலே இன்றுள்ள பிரச்னையே, இருந்திராது. வெள்ளை உள்ளம் கொண்ட தமிழன், நெடுநாட்கள், ஆரியரை, அகதிகள் என்ற கருதியே ஆதரித்தான், ஆரியத்தின் உண்மை உருவம் வெளிப்பட்ட பிறகே, கண்டித்திருக்கிறான், தமிழன் மட்டுமல்ல, வேறுநாட்டு விற்பன்னர்களும், பார்ப்பனரின் இயல்புகளைக் கண்டித்திருக் கின்றனர், சின்னாட்களுக்கு முன்பு, நான் எழுதினேன் ஆபீடியுபாவின் விமரிசனத்தை, படித்துப்பார். புறநானூறு, அகநானூறு, கலித்தொகை முதலிய ஏடுகளிலே அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பல பாடல்கள் உண்டு, கேட்டுப்பார். மேனாட்டு ஆராய்ச்சியாளர்களின் ஏடுகளை, அடிக்கடி நான் எடுத்தெழுதி வருவேன், தொடர்ச்சியாகப் படித்துக கொண்டுவா, அந்த விஷயத்தில் தெளிவு பிறக்கும், பாட்டின் எடுப்பிலே தவறு ஏற்பட்டால், முடிவுரை தவறுதானே விளையும். ஆரம்பத்திலே கோனல் என்ற மொழி தெரியுமே. அதுபோலக் கடிதத்திலே முதலிலேயே, அபத்தக் கேள்வியைத் தீட்டினதால், போகப்போகக் கேள்விகளின் தரம் கெட்டுக்கொண்டே இருக்கின்றது.

நீங்களும் உங்கள் கூட்டத்தினரும் தற்பொழுது கொண்டாடும் கம்பர் போன்ற பெரும்புலவர் பார்ப்பனரைத் தூஷித்தனரா? - என்று கேட்கிறாயே, நண்பனே, உன்னை நான் எந்த சிகிச்சைச்சாலைக்கு அனுப்புவது! கண்பழுதிருந்தாலன்றி, நாங்களம் எங்கள் கூட்மும், கம்பன் ஒரு ஆரியதாசன் என்று எழுதும் கட்டுரைகள் தெரியாதிருக்க முடியாது, மந்தம் வெவிக்கு இருந்தாலன்றி, கம்ப இராமாயணம் ஒழிக!! கம்ப இராமாயணத்தைக் கொளுத்துவோம் என்ற நாங்கள் முழக்கமிடுவது, யாருக்கும், கேட்காமலிராது. சித்தசுவாதீனமிருக்கும் எவருக்கும், நாங்கள் கம்மபனின் புலமை ஆரியக் கோடாரிக்குக் காம்பு ஆயிற்று என்றுகூறிக் கண்டிக்கும் கூட்டதினர் என்பது புரியும். நாங்கள் கம்பரைக் கண்டிக்க, நீர், எங்கள் சொல் கேட்டு, ஏடுபடித்து, நட்புக் கொண்டவன் என்று கூறிக்கொண்டே, அதனைத் தெரிந்து கொள்ளாதிருந்தால் நான் உம்மை, அனுப்பக் கண், காது, மனம் எனும் மூன்றுக்கும் ஏககாலத்திலே சிகிச்கை தரக்கூடிய சாலையையன்றோ தேட வேண்டும், எங்கே கண்டு தேடுவேன்!!

கம்பன் மீது நாங்கள் சாட்டும் குற்றமே பார்ப்பனரின் உயர்வுக்கு ஆதாரமான நூலை எழுதினார் என்பதுதான். நீர், கம்பன், பார்ப்பனரைத் தூஷித்தானோ, நீங்கள் கண்டிக்கிறீர்களே, என்று கேட்கிறீரோ, பொருத்தமா, யோசியும். குடிகெடுத்து, இனப்பெருமையை அழித்து, எதிரியிடம் அடைக்கலமாகி ஆரியத்துக்கு அடைப்பம் சுமந்த கம்பரைக் கண்டிக்கும் என்னிடம், நீர், கம்பனினும் மிக்கார் உளரோ என்று கேட்கிறீர், ஆஹா! தாராளமாக!! இன்றம், கம்பனை விடக் குறைந்த கூலிக்கு, ஆரியரின் பாதத்தைத் தாங்கும் ஆழ்வார்கள் இருக்கிறார்கள். கம்பனாவது ஆழ்வார் என்ற பட்டப்பரிசு பெற்று, அந்தக் காரித்தைச் செய்தான். இன்று சிலர், ஆரியதாசராக இருப்பதுடன், அந்த வேலையைச் செய்வதற்குத் தாங்களே ஆரியருக்குக் காணிக்கை தருகின்றனர் என்றால், அவர்கள் கம்பரைவிடக் கம்பவேலையிலே மிக்கார்தானே! அவராவது, தமக்கிருந்த அபாரமான புலமையை வைத்துப் பேரம் பேசினார், இன்று சிலர் கம்பனுடைய புலமையை சசிக்கும் கலைவாணர் நாங்கள் என்று கூறிக்கொண்டு, கம்பகாரியத்தைச் செய்கின்றனர்! அந்தக் கள்ளிகளே, திராவிடப் பீங்காவைப் பாழாக்குகின்றன!!

தமிழ் வளர்த்த அகத்தியரே கண்டித்தாரோ? - என்றும் க்டகிறீர், சறுக்கு நிலத்திலே தவறியவன், சரசரவெனக் கீழே வீழ்வதுபோலக் கோளாறான கள்வியிலே கடிதத்தைத் துவக்கினீர், இடறி இடறிக் கீழே வீழ்கிறீர், அதைத்தான் நான் எடுத்துக் காட்டுகிறேன், வேறொன்றுமில்லை, அகத்தியர் தமிழ் வளர்த்தார் என்ற பொய்யுரைக்கு மெய்யுரை கூறுவேன் கேளீர். அகத்தியர் தமிஐக் கற்றார், வளர்த்த குருமுனியல்ல அவர். எந்தப் புராணங்களைச் சாட்சிக்கு அழைத்து, அகத்தியரின் குருத்தன்மையை நிலைநிறுத்தப் பார்க்கின்றனரோ, அதே புராணத்தின் ஆதாரத்தாலேயே, நான் என் மெய்யுரைக்கு அரண் அமைக்கின்றேன், காணீர்.

வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்துவிட்டதான் ஒரு காலத்திலே. இந்தியாவை, விறகு எடைபோடும் தராசு என்றோ, வயலுக்கு நீர் இறைக்க உபயோகமாகும் ஏற்றக்கோல் என்றோ எண்ணிய ஏமாளியின் புளுகு அப்புராணம், கிடக்கட்டும. அதையே சற்று அலசுவோம். இங்ஙனம், ஏறுமாறு ஏற்பட்டதும், பார்த்தாராம் பரமசிவன். அகோ வாரும் பிள்ளாய், அகத்தியனே! தென்கோடு உயர்ந்துவிட்டதால், நீ தென்னாடு சென்று அங்கே தங்கு, அப்போது பரதகண்டம், சமநிலை அடையும் என்று கூறினாராம், ஒரே சிரிப்பினால் மூன்று புரங்களையும் எரித்த முக்கண்ணனால், இந்தச் சமநிலை ஏற்பட, ஒரு சிட்டிகை விபூதியை எடுத்து சீயிருக்கலாம், ஒரே ஒரு உருத்திராககத்தை வீசியிருக்கலாம், தெற்கு நோக்கி, அவர், அகத்தியரின் எடை தென்னாட்டுப் பக்கம் ஏறினால் மட்டுமே, உயர்ந்த தென்னாடு மீண்டும் சமநிலைபெறும் என்று கருதினார். இத்தகைய தவறான கருத்தை அவர் கொண்டதால்தான் போலும், பித்தா! என்று அவரைப் பாடுகிறார்கள் பக்தர்கள்! அம்மொழி கேட்ட அகத்தியன், ஐயனே! ஆலவாய் அப்பனே! நான எங்ஙனம் தென்னாடு செல்ல முடியும்? அது தமிழர் நாடாயிற்றே, எங்கு திமிழிலே விசே பாண்டித்யமடைந்த பெரும்புலவர்கள் இருப்பரே! நான் சென்று அங்கு ததங்குவது முடியுமோ என்று கேட்டாராம். அப்படியானால், அகத்தியா! அருகேவா! என்று சிவனால அழைத்து அகத்தியருக்குத் தமிழ் உபதேசித்தாராம். இது புராணம். இதிலிருந்து அகத்தியர் வருமுன்னரே, தமிழ்நாட்டிலே தமிழ் ஓங்கி வளர்ந்திருந்ததென்பதும், அகத்தியன் போன்றவர்கள் வியந்து கூறக்கூடிய விதத்திலே வளம் பெற்றிருந்ததென்பதும், அகத்தியருக்குத் தமிழ் தெரியாதென்பதும், சிவனார் சொல்லிக்கொடுத்த பிறகே அகத்தியர் தமிழ் கற்றார் என்பதும் தெரிகிறதேயன்றி, அகத்தியர் தமிழ் வளர்த்தார் என்பது ஏற்படுகிறதா? தென்னாட்டுத் தமிழ்ப் புலவர்களிடம் பாடங்கேட்டு! அகத்தியர் தமிஐத் தமிழ் நாட்டிலே வளர்த்தார் எப்து புராணத்தின்படி பார்த்தாலும் பொருந்தவில்லை. பகுத்தறிவின் படி பார்த்தாலோ, படீர் என்று வயிறு வெடிக்கும் இத்தகைய அபத்தக் கதைகளைக் கேட்டால். தமிழ்நாட்டுக்குத் தமிழை ஒருவர், வடநாட்டிலிருந்துவந்து கற்றுக் கொடுத்திருக்க முடியுமா? அது உண்மையெனில், தமிழ்நாட்டிலே தமிழ் தெரிந்ததற்கு முன்பு, வடநாட்டிலல்லவா தமிழ் பரவிற்று என்று பொருள். அது உண்மை எனில், தமிழறியா நாட்டுக்குத் தமிழ் நாடென்றம், தமிழ் வளமிக்க இடத்துக்குத் தமிழ் நாடு என்ற பெயர் இல்லாதிருந்தது எந்த ரகமான ஆச்சரியம்? தமிழ்நாட்டுக்குத் தமிழ்போதிக்கும் ஒரு அகத்தியன் வாழ்ந்த வடநாட்டிலே, என் தமிழ் அறவே காணோம்! தமிழ்நாட்டிலே தமிழ்பரவா முன்பு,இருந்த மொழி என்ன? என்ற இன்னாரன்ன பிற கேள்விகளைக் கேட்க நான் ஆரம்பித்தால், நண்பா! அகத்தியர் கதை கூறும் அன்பர்கள், பதுங்க இடந்தேடவேண்டும்! சரி, அகத்தியர் ஒரு ஆரிய முனிவர், வடவர், ஆரியமார்க்க போதகராயிற்றே, அவர் பிராமணரை ஏனப்பா தூக்கப்போகிறார்? அவர் தூஷித்தாரா என்று கேட்கிறாயே, பொருத்தமா? சனாதனம் சாக்கடைச்சேறு என்று சங்கராச்சாரி உபதேசம் செய்வாரா? அவர்தான் சனாதன சாகராவாசியாயிற்றே. அகத்தியர் ஆரிய முடினவரென்றால், ஆரியத்தை அவர் ஏன் கண்டிப்பார்! இதையும் ஒரு கேள்வி எனக் கருதினாயே, நான் வெட்கமடைகிறேன், நம்மிடம் நட்பு முறை வைக்கும் ஒருவர், இவ்வளவு குழுப்பத்திலிருக்கிறாரே என்று.

ஒரு இடத்தில், ஆரியத்திடம் விருப்போ, தமிழரிடம் வெறுப்போ இல்லாத தூய்மையுள்ளவன் நான் என்று காட்டிக் கொள்ள விரும்பும் நீயே, மற்றோரிடத்திலோ, மறைதிரை நீக்கிவிடுகிறாய். பரிவுபாசத்தாலோ, அன்பு ஆணவத்தாலோ நீ என் முன்னோர்களாகிய தபசிகள், சிஷிகள் நாலு ஜாதி வகுத்தனர் என்ற கூறுகிறாய். நண்பா! பேய்ச்சுரைக்குத் தேன்பெய்து பயன் என்ன? நீ, இடையிடையே சமரசமேற் பூச்சுடன் காட்சிதந்தும் பயன் இல்லைபார்! என் முன்னோர்களாகிய தபசிகள், ரிஷிகள் என்று மார்தட்டுகிறாயே, அதுதான் ஆரிய இன இயல்பு என்று நான் அடிக்கடி கூறுகிறேன். விருப்பு பெறுப்பு அற்ற உனக்கே, அந்த இயல்பு போகமறக்கிறதே, குளத்தங் கரைகளில் கொக்கெனக் குந்தியிருக்கும் உன் குலப்பிரம்மங்களுக்குப் போகுமா! இதை அறிந்தே டாக்டர் நாயர், சிறத்தையின் தோலிலே உள்ள புள்ளி மாறினாலும பார்ப்பனரின் சுபாவம் மாறாது என்று ஓர்நாள் கூறினார். அவருடைய பேச்சை மெய்ப்பிக்க நன்னிலத்திலே ஓர் நடமாடும் ஆதாரம் இன்று காண்கிறேன். நீ குறிப்டும் தபசிகளும் ரிஷிகளும், நாலு ஜாதியை ஜனங்கள் வகுத்தனர் என்று கூறும் நீ, மற்றோரிடத்திலே, நாலு ஜாதியை வகுத்தனர் என்ற கூறுகிறாய். இரண்டலே எது உன் நம்பிக்கையோ தெரியவில்லை. ஆணுமின்றிப் பெண்ணுமின்றி இருத்தல் அழகல்ல. அபிப்பிராயங்களிலேயும் அலிப்பிறவிகள் உண்டு! அதை நான் விரும்புவது கிடையாது.
தமிழரகளுக்கு ஜாதி கிடையாது. ஜவும் கிடையாது. தமிழிலே, சாதி என்று ஏற்பாடு தமிழகத்திலே கிடையாது. நீ குறிப்பிடும் உனது முன்னோர்களாகிய தபசிகளும் ரிஷிகளும், தவம் செய்வதையும், காமக்குரோதமத மாச்சரியாதிகளை அடக்குவதிலும் காலந்தள்ளாது, தமிழ் இனத்தைக் கெடுக்கும் திருத்தொண்டு பிரியவேண்டியே, வர்ணாஸ்ரமத்தைப் புகுத்தினர் வகைகெட்ட மன்னர்கள் வளைவுகளுக்கு ஆசைப்பட்டு, (வளைவுகள் என்றால் விபருத அர்த்தம் செய்ய வேண்டாம், ஆரியர் மன்னர்களின் எதிரிலே வளைந்து நின்று ஏய்த்தனரே, அதனைத்தான் குறிப்பிடுகிறேன்.) அந்த வர்ணாஸ்ரமத்துக்கு இடமளித்தனர், அதனால் இடர்ப்பட்ட தமிழர் இன்று அதனை அடித்து விரட்டுகின்றனர், தபசிகள் செய்த குற்றத்திற்கு என்னைத் திட்டுவதா? என்று கேட்கிறீர், பரிதாபத்தை எதிர்பார்த்து. நண்பரே! குற்றம் செய்த அந்தத் தபசிகளைக் கூசாமல் பெருமையுடன், எனது முன்னோர்கள் என்று கூறினீரே, அந்தக் குல அபிமானம் இருக்க்றிதே, அதைத்தான் கண்டிக்கிறோம். தபசிகள் செய்தது குற்றம் என்று வாயாரக் கூறுகிறீரேயன்றி, நெஞ்சார இல்லை. மனமார அந்த எண்ணமிருப்பின், பூர்வபெருமையைக் கூறிடத் துணியமாட்டீர். என் பாட்டியார் தெரியுமோ, பத்தாவது கள்ளப் புருஷனுக்காக உன்பதாவது பேர்வழியை ஓங்கி அறைந்தவள் என்ற கூறிடும் கன்னியிடம், கனிவு யாருக்குத்தான் பிறக்க முடியும், கூறும்! அந்தக் காலத்துத் தபசிகளாவது வேதமறிந்தோம். ஆத்மாவுக்கும் பரமாத்மாவுக்குமுள்ள சம்பந்தமறிவோம், உலமை வெறத்தோம். உலகுக்கு உபதேசிப்போம் என்று கூறினர். அந்தப் பூர்வபெருமையைக் கூறி, அவர்களின் வழிவழி வந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் உமது இனத்தவர்களிலே பலருக்குக் காயத்திரி தெரியாது, கனபாடியிடம் சிட்கை கிடையாது, வேதமோ வித்தையோ தெரியாது, என்றபோதிலும், வேதியகுலம் என்ற முடுக்கும், அதற்கான கௌரவாதிகளும் இருக்கிறதே, இதனை யார்தான் கண்டிக்கமாட்டார்கள்? பிரம்மத்தை உணர்ந்தவனே பிராமணன் என்பது சூத்திரம். பிழைக்கத் தந்திரமான வழியன்றி வேறொன்றுமறியாதவர்கள் பிராமணர்கள் இன்று. இதைக் கண்டிக்காமலிருப்பரோ! அந்தத் தபசிகள், நாங்கள் நந்தியுடன் விருந்துண்டோம், நாரதரின் கீதம் கேட்டோம், ஊர்வசியின் நடனம் கண்டோம் என்று மேலுலக விஷயம் பேசினர், பேதைகளை மிரட்ட. இன்று பட்லரின் சமயலை உண்டு, கோகில கானத்தின்அசை கேட்டு, ருக்மணி அருண்டேலின் நடனத்தைக் கண்டு வாழும் உன் இனத்தவர், பூர்வபெருமை பேசலாமா? உயர் ஜாதி பிரம்மகுலம் என்ற வாரிசு பாத்தியதை கொருந்துமா? தபசிகளின் மக்கள் என்று கூறித் தர்ப்பையைக் காட்டித் தமிழரை ஏய்த்திடலாகுமா? இதைக் காணும் என்போன்றார் சும்மா இருக்கத்தான் முடியுமா? நீரே கூறும்; கூறமாட்டீர்! மனதிலே யோசியும்! நாட்டைவிட்டுக் காடுசென்று, பர்ணசாலை களிலே வசித்துக் காய்கனி கந்தமூலம் புசித்த தபசிகளின் வழிவழிகள் இன்று, பகோடாவிலே பட்லர் பட்சணத்தைப் பரிபுடன் தின்பதும், மோட்டாரின் மிருதுவான அணைப்பிலே சொக்குவதுமாக உள்ளனரே, மற்ற விஷயங்களிலே மாறுயும், தமிழரை மமதையுடன் நடத்தும் அந்த இயல்பு மட்டு இருந்திடக் கண்டால், யார்தானய்யா, கண்டிக்க மாட்டார்கள். உங்கள் முன்னோர்கள் வர்ணாஸ்ரமத்தை ஒப்புக் கொண்டனர். நீங்களும் அதன்படி நடவுங்கள் என்றா கூறுகிறீர், அந்த அளபுக்கு ஆரியம் உம்மிடம் ஊறி இருக்கிறது. வர்ணாஸ்ரமத்தை ஒப்புக்கொண்டவர் எவருமில்லை. அது தந்திரத்தால் திணிக்கப்பட்டுவிட்டது. மாயமென்றம் மந்திரமென்றும் மகேஸ்வரன் ஏற்பாடென்றம் கூறித் தமிழரைக் குலைத்தனர். அது, காடுமேடும் கட்டைவண்டியும், கஞ்சிக்கலயமும் அகல்விளக்கும் இருந்தபோது இப்போது பறக்கும் விமானமும், பிரகாசிக்கும் எலக்ட்ரிக்கும், ஏ, பி, சி, டி வைட்டமின் உணவு வகையும், ஏகதிபத்தியத்தை விரட்டும் வீரமும் தோன்றிய காலமாயிற்றே, இந்தக் காலத்திலே அது நடக்க யார் அனுமதிப்பார்கள்.

உனது முன்னோர்கள் அந்தக் காலத்திலே இருந்ததுபோல், நீ ஏன் இருக்கக் கூடாது என்று என்னைக் கேட்கும் நெஞ்சுறுதி பெற்றாயே, நண்பனே, அதே பேச்சை உனக்கு நான் கூறினால், நீ, கிடைக்கும் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு, விந்திய மலையைக் கடந்து, கங்கை வெளிசென்ற, அதையும் தாண்டி, கைபர் கணவாயைக் கண்டு, அதன் வழியாக ஆசிய வெளிபோகவேண்டுமே, பூர்வீகம் அதுவல்லவோ, நம்மதமா, அதற்கு என்று கேட்கிறேன். ஏனப்பா, ஆப்பை அசைக்கிறாய்?
பார்ப்பனர்கள் தென்றுதொட்டுச் சாமர்த்தியசாலிகள், எனவேதான் உயர்ந்தனர் என்று கூறுகிறாய். நீ எந்தச் சாமர்த்தியத்தைக் குறிப்பிடுகிறாயோ, தெரியவில்லை. சமர்த்தில், பலரகம் உண்டல்லவா? அதிலே எந்தச் சாமர்த்தியம் ஆரியருக்கு இலாபமளித்தது. சமூக வாழ்விலே முதல் தாம்பூலமளித்தது, அன்றும் இன்றும் வாழ்க்கையிலே வளம் தந்தது என்பதனை, ஆராயத் தொடங்குவோமா, நண்பா! நீ அதற்குத் தயாரா? என்று முன்கூட்டியே கேட்கிறேன். பிறகு கைகளைப் பிசைந்துகொண்டு கண்ணீர் உகுத்திடாதே. எனக்குத் தெரியும் அந்தச் சாமர்ர்தியம். பர்ணசாலைகளிலிருந்து தெடாங்கிப் பங்களாக்கள் வரை வேண்டுமானால் ஆயாய்வோம், உனக்குச் சம்மதமானால்! நண்பா! சாமர்த்தியம், என்பது பொதுவான பேச்சு, ஆல்கபோனின் சாமர்த்தியம் உலகப் பிரசித்தம் - திருட்டுத் தொழிலில். ஆனால் அதற்காக அவனுக்குச் சிலையும் அபிஷேகமும் கிடைக்குமா? கூறு. இந்திரனின் சமர்த்து, அகலிகையைக் கற்பழிக்க உதவிற்று! பத்துக்குடம் கள்ளானாலும் குடிக்கும் வெறியன், அதைத்தன் சமர்த்து என்றுதான் கூறுவான். கருங்குற் சுவரிலும் கன்னம் வைப்பவன், கணவன் தூங்குகையில் கள்ளப் புருடனைத் தேடுபவள், கோர்ட்டார் திணறும்படி கள்ளக் கையொப்பமிடுபவன், இவர்களெல்லாம் சாமர்ர்த்தியசாலிகள்தான். ஆனால் சமூகம் இந்தியர்களை ஏற்றுக்கொள்வதில்லை. சாமர்த்தியம் இருக்கிறது என்பதாலேயே உயர்வு கிடைத்துவிடாது. உலகப் பொதுநலனுக்கு ஊறு உண்டாக்கும் விதமாக ஒருவனுடைய சாமர்த்தியம் இருக்குமானால், அவனுடைய சாமர்த்தியம் மக்களுக்குக் கேடு செய்யுமானால், அத்தகைய சமர்த்தை யாரும் போற்ற மாட்டார்கள். ஒரு பூகம்பத்துக்கு இருக்கும் சக்தியும் சாமர்த்தியமும் எவ்வளவு! ஒரு நாட்டையே, ஆயிரக்கணக்கான சிற்பிகளின் திறனையே, ஒரு நொடியிலே அழித்துவிடும். ஒரு குலுக்கு, ஒரு குமுறல், அவ்வளவுதான் ஒரு நாடே நாசம். இந்தச் சமர்த்துவேறு எதற்கு உண்டு! எனவே பூகம்பம் தலைசிறந்தது என்று பூஜிப்பரோ? ஒரு காலராக் கிருமி, தன்னைவிட எத்தனையோ மடங்கு பெரிதான ஒரு ஆளையே கொன்றுவிடும் சர்வசமர்த்துக் கொண்டது. காலரா கிருமிக்குக் காணிக்கை செலுத்துவரோ? இவ்வளவு ஏன்? மூட்டைப் பூச்சியை வேட்டையாடிப்பார். எவ்வளவு சாமர்த்தியமாக. மேல் போர்வையிலிருந்து மெத்தையிலும், மெத்தையிலிருந்து தலையணையிலும, அதிலிருந்து நமது கையிலும், கையிலிருந்து நம் சட்டையிலுமாக, ரோமலைவிடச் சமர்த்தாக ஓடி ஒளிகிறது. அதற்காக, மூட்டைப்பீச்சிக்கு முடிசூட்டு விழாவா நடத்துவார்கள்? சாமத்தியசாலியா, அல்லவா என்பதல்ல முக்கிமான கேள்வி. ஜனசமுதாயத்துக்கு நம்மை பயக்கிறானா. கேடு செய்கிறானா, என்பதே கேள்வி. அதை எண்ணிப் பாரப்பா! ஒரு சிறு கூட்டம் உழைக்காமல் வாழ்வதும், உயர்தோராக வாழ்வதும்; உல்லாசிகளாக வாவதும், பெருங்கூட்டம் திண்டாடுவதும், உமது இனத்தின் சாமர்த்தியத்தின் விளைவு என்றால், அந்தச் சாமர்த்தியத்தைச் சமூகத்துக்குச் சனியனாக வந்து சேர்ந்த கௌரிபாஷானம் என்றுதானே கூறுவர்.

தமிழரிலே, பிள்ளை இல்லாதவர்கள் பார்ப்பனர்களிடம் சென்று ஜோதிடம் கேட்கின்றனரே, இது ஏன் என்று கேட்கிறாய். உன் இனம் புகுத்தி வைத்திருக்கும் கற்பனைகள், தமிழனை இக் கதிக்குக் கொண்டுவந்துவிட்டது. எனக்கு ஒரே ஒரு சந்தோஷம் இதிலே. உன் பக்திக்கும் பூஜைக்கும் உரித்தான இராமனுடைய தந்தை சென்ற அளவுக்குத் தமிழரிலே அடி முட்டாளாக இருப்பவனும் இன்று வரை செல்லவில்லையே என்ற சந்தோஷந்தான். அறுபதாயிரத்து மூன்று மனைவிகளை அடைந்ததும, தசரதன், புத்ரகாமேஷ்டி செய்தானாமே, வால்மீகி கூற்றுப்படி. குரிரையைக் கொண்டு ஒரு யாகம் நடந்ததாம், ஏதேதோ ஆபாசம் நடந்ததாகக் கதை இருக்கிறதே, அந்த அளவுக்கு, இழிநிலை அடைந்த தமிழனும் போகவில்லை! உயர்குணத்துக்கு இருப்பிடமான தசரதன் போனவழியில் போகவில்லையே, என்ற திருப்திதான். ஜோதிடம், சடங்கு முதலியன ஆரியத் திருப்பிரசாதங்கள், அவை, தன்னுணர்வு பெற்ற தமிழன்முன் தலைகாட்டுவதில்லை.

தெருவில் நடப்பவன்கூட, அந்தப் பார்ப்பான் கடைக்குப் போகலாம், போண்டாவும் காப்பியும் நன்றாக இருக்கும் என்று பேசிக்கொண்டதை நான் காதால் கேட்டிருக்கிறேன் என்று எழுதுகிறாய். உண்மைதான், தவறிய தமிழர்கள் அதுபோலப் பேசிக்கொள்வதை நானும் கேட்டிருக்கிறேன். அதுமட்டுமா? வேறு பல பல பேசுவதுண்டு. நானும் கேட்டதுண்டு, நீரும கேட்டிருப்பீர். காப்பிக்கடையின் பெருமையைப் பட்டிக் காட்டான் பேசுவதை மட்டும் பகிரங்கப்படுத்தினீரே, ஏன் நண்பரே, மற்றவற்றை மறைத்துவிட்டீர்? கோடிவீட்டுக் கோமளம், குலுக்குநடை அழகி, கொண்டையிலே செண்டழகி, பேச்சிலே சமர்த்து, சரசத்திலே முதல்தரம், என்று பேசிக்கொள்ளும் தமிழ்க்காளகைளை நான் கண்டதுண்டு. இது என்னப்பா பிரமாதம்? கமலாவை முடிக்கவேண்டுமானால், காமட்சியம்மன் கோயில் குருக்களைச் சரிப்படுத்திவிட்டால் போதும் என்று, நவக்கிரகப் பிரதட்சணத்தின்போதே பேசும் நவயுவர்கள் எனக்குத் தெரியும்.

என்ன அநியாயம் தெரியுமாடா? அந்த வேதாந்தாச்சாரியார் மகள் விமலா, விடோவாம். அவள் புருஷன் இறந்துவிட்டானாம். மோட்டார் டிரைவர் மோகனசுந்தரம் அவளுக்கு ஜோடியாம். தங்கப் பதுமைபோல இருக்கிறாள் என்று பேசும் பொறாமைக்காரர்களையும் பார்த்திருக்கிறேன். காகிதப் பஞ்சகாலத்திலே இத்தகைய காதற்கதைகளை எழுதமுடிய வில்லை. நீரும், இதைப்போலப்பல, பலர் பேசிடக் கேட்டிருப்பீரே, இவ்வளவையும் விட்டுவிட்டு, ஏதோ எனக்கக் குத்தலாகக் கூறுவதாகக் கருதிக்கொண்டு, என் இனத்தவர் உமது இனத்தவரின் இட்லி, சாம்பாருக்கும் காப்பிக்கும் இளித்துக் கிடப்பதைப் பிரமாதமானதாகப் பகிரங்கப்படுத்துகிறீரே, இந்நாக்கு ருசி கிடக்கட்டும், மற்றப்பேச்சுகளை மறைப்பது ஏன்? ஒழியட்டும், ஏதோ, நாக்கு ருசிக்காரனை மட்டும நையாண்டி செய்தீர். இதற்குக் காரணம் என்ன? பார்ப்பனர் உயர்ந்தவர், ஆச்சார மிக்கவர், அவர்களிடம் உணவு கொண்டால் சிலாக்கியம், என்ற அடிப்படையான எண்ணம், வர்ணாஸ்ரமத்தால் விளைந்தது, அதன் பலன், இன்று கபேக்களும், நிவாஸ்களும், விலாசங்களும், ஆரிய இனத்துக்கு, மிட்டா, மிராசு, ஜெமீன்கள் போல இலாபம் தருகின்றன, இத்தகைய பித்தம் தமிழருக்குக் கூடாது என்பதுதான் எங்கள் பிரசாரம், அதை நீர் துவேஷம் என்று கூறுகிறீர், தடுக்க முயலுகிறீர், தமிழரின் நிலைகண்டும் கேலி செய்கிறீர், பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையிம் ஆட்டுமூ போக்கு ஏன், என்று கேட்கிறேன். எனக்குச் சகோதரர நிலையில் யறோசனை கூறுகிறீரே, நீர் ஒன்று ஆரிய நிலையிலாவது நின்று யோசியும், அல்லது பகுத்தறிவு வாதியாக மாறிப்பாரும். காலங்காட்டியின் கன உருண்டைபோல, நின்ற நிலையிலே ஆடிக்கொண்டே இருந்து விடாதீர். ஒரு தடவை இரண்டு தடவை பொறுத்துக்கொள்ளலாம், மறுபடி மறுபடி எம்மைத் தூஷித்தால், எமக்குக் கோபம் வராதா? என்று போபித்து என்ன பயன்? என்ன நெய்துவிடமுடியும்? உங்கள் வேத புராண இதிகாசாதிகளை மூட்டை கட்டிச எடுத்துககொண்டு, இங்கிருந்து வெளியேறி விடுவீர்களா? அப்படிப் போய்விட்டாலும் சூரியசந்திராதிகள் உடன் கிளம்பி விடுமா? என்ன மிரட்டல்! அதுவும் எந்தக் காலத்திலே!! ஆரியர்கள் சமர்த்தர்கள் என்பதற்கு ஹிட்லராக அகம்பாவம் கொட்னோ, அன்றே அவனுக்கு அழிவு காலம் கிட்டிவிட்டது. அவனை உன் இனத்தான் என்று பாத்யம் கொண்டாடுகிறீர், சற்றுப் பகிரங்கமாக அதைச் செய்தால், தொல்லை வரும், சட்டத்தினால். போகட்டும், அந்த அழிவு வேலைக்காரன், மக்களைக் கொடுமை செய்யும் கடையன், சமதர்மத்தை அழிக்க விரும்பும் சழக்கம், திமிர்பிடித்தலையும் தூர்த்தனை உனது இனம் என்று கூறிப் பெருமை கொள்ளும், எனக்குத் தடையில்லை! போகுமா அந்தக் குணம்! நன்னிலத்திலிருந்து, ஜெர்மனிக்கு மானசீக யாத்திரை செய்து, ஆரியப் பெருமைக்கு ஹிட்லரை உதாரணம் காட்டும் நீர், பெரியார் இராமசாமி, சர்ச்சிலின் ஜலதோஷத்துககும் ஆரியத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர். பெரியார் அதுபோல் சொன்னதில்லை அதுபோன்ற அர்த்தமற்ற சம்பந்தங்களை அவர் கூறினதுமில்லை. ஆரிய அவதாரபுருஷனாகிய இராமன், சம்புகளின் தவத்துக்கு அக்ரகாரப் பிணத்துக்கும் சம்பந்தம் வைத்ததுபோல், ஈரோட்டு இராமன் சொன்னதில்லை. நன்னில நண்பா, பார்ப்பனராகிய நாங்கள் பணிவாக இருக்கிறோம், தமிழரே எங்களைக் கண்டிக்கிறார்கள் என்று எழுதியிருக்கிறாயே, அந்தப் பணிபு, உங்களுக்குப் பிறந்தது எதனால் என்பது உனக்கத் தெரியாதிருக்கலாம். தன்மானத்திலே அக்கரை காட்டாத தமிழர உணராதிருக்கலாம். நாங்கள் அறிவோம் அதன் சூட்சமத்தை, ஈரோட்டுப் பாணமடா அது எங்கும் சென்று பாயுதடா என்று சிந்துபாடுவோம். உங்கள் பத்திரிகையைப் படிக்கும் தமிழருங்கூட இராமாயண காலட்சேபத்துக்ச் செல்கிறார்களே என்று கேலி செய்கிறீர். இராமாயண சத்கதா காலட்சேபத்துக்கு மன்றுவித கோஷ்டிகள் போவதுண்டு, ஒன்று ஆரிய மடைமையில் அமிழ்ந்துள்ள கூட்டம், மற்றொன்று சீதாபஹரணார்த்தம் செல்லும் கூட்டம். மூன்றாவது கூட்டம் நீர் குறிப்பிடும் தோழரகள். இவர்கள் அங்கு செல்வது, இராமயணத்தைப்பற்றி நாங்கள் வெறியிடும் விஷயங்கள் உண்மையா என்பதைத் தெரிந்துகொள்ள! விஷயம் விளங்கியதும், நண்பா! இராமாயண பாராயணமே மகா சிரமமான காரியமாகிவிடும். உன்போன்ற தோழர்களின் கேள்விகள், அந்த நிலைமையை விரைவிலே உண்டாக்கும் என்ற நம்பிக்கையே உனக்காக இவ்வளவு சிரமம் எடுக்கச் செய்தது. சிந்தித்துப் பார், காலத்தை உற்றுநோக்கு, கண்திற, புதுவழியில் நட!!

(திராவிடநாடு - 28.11.1943)