அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மே தின முழக்கம்

(அடைக்கலமே - அடைக்கலமே என்ற மெட்டு)
கனவு கண்டேன் கனவு கண்டேன்
களிக்கடல் மிதந்திடும் புதுக்குவலயங்கண்டேன் (கன

மனஇருள் விழுங்கிடும் தினகரன் கண்டேன்
மதிஒளி பரப்பிடும் புதுமுறை கண்டேன் (கன

ஆண்டை அடிமையெனும் அவலச் சொல்லங்கில்லை
ஆண் பெண் பேதம் பாராட்டும் அழிகிறுக்கில்லை
வேண்டும் சுயேச்சைப் பேச்சில் விதிவிலக்கில்லை
மீறுஞ்சட்ட திட்டங்கள் கூறுவோரில்லை (கன

மனித சமாஜத்தார் வாழ்வினைக் கண்டேன்
மன்னும் அபேதவாத நன்னிலை கண்டேன்
புனித வாலிபக்காட்சி இனிதுறக் கண்டேன்
பொங்கும் போகபோக்கியம் எங்கணுங் கண்டேன் (கன

கடவுளைக் காத்திடுங் கசடரங்கில்லை
கவைக்குதவாத மதக் கற்பனையில்லை
அடஞ்செயும் புரோகிதத் தடியரங்கில்லை
அநியாயப் பணக்காரச் சனியனங்கில்லை (கன

கவலையில்லா வாழ்க்கைச் சுவைமிகக் கண்டேன்
கருத்தில் துணிவில்யாவும் உருப்படக் கண்டேன்
நவநவமாக இன்பம் தவழ்வதைக் கண்டேன்
நாகரிக உச்சியில் நடனங்கள் கண்டேன் (கன

கசடரின் கனவுகள், தூக்கத்தில் துடிப்பையும், விடிந்ததும் வம்பளப்பையுமே தரும். மேலே நாம், தந்துள்ள கீதம், சமதர்மியின் கனவு. இதனைத் தீட்டிய தோழர் ஜீவானந்தம், இங்கு அக்கனவு இன்னமும் உண்மைக் காட்சியாகவில்லையே என்று உள்ளம் உருகிக் கிடப்பார்; அவர் போன்றே புது உலகங்காண வேண்டுமென்ற நோக்கமுடைய நாமும், உலகிலே பன்னெடு நாட்களாகத் தோன்றி, இன்றும் இடுக்கணின் விளைநிலமாக இருக்கும் கொடுமைகள், களையப்படவில்லையே அநீதி அழிந்து படக்காணோமே, அக்ரமம் அடக்கப்படக் காணோமே என்று ஏங்குகிறோம். கனவு கண்டேன் என்று கூறிடும் சமதர்மத் தோழர்கட்கும் நமக்குமிடையே உள்ள ஒரே வித்தியாசம், நோக்கத்திலேயன்று, நெறியில் இருக்கிறது. நமது பாதை, சமுதாயக் கொடுமை ஒழிப்பு எனும் சுங்கச் சாவடியிலே தாலமுத்துக்களைத் திறையாகச் செலுத்திவிட்டுப் பிறகே, சமதர்மபுரிக்கு நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கக் கூடியது. இஃதன்றி மற்றவை சனாதனச் சுடுகாட்டுக்கோ, ராமராஜ்யமெனும் தர்ப்பைக் காட்டுக்கோ போக உதவுமேயன்றி, உண்மையான உழைப்பாளி ஆட்சி செய்யும் உத்தமபுரிக்குப்போக உதவாது என்ற கருத்துடன், நாம் காரியமாற்றி வருகிறோம்.
இன்பக் கனவுகள் கண்டவர் பலர்; அவைகளை வாழ்விலே உருவாக்கினோர் சிலர். வீணரின் நினைவுகளை உலகு வேண்டாது; வீரரின் கனவை வேண்டி வரவேற்கும். பலப்பல பெரியார்கள், கண்ட கனவுகள், இன்று நடைமுறை உண்மைகளானதைக் கண்டு களிக்கிறோம்.

மேதினியெங்கும் மே தினவிழா கொண்டாடப்படுகிறது. எதன் பொருட்டு? பாட்டாளி மக்களின் விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு, உரிமைக்காக, உழைப்பாளிகள், குருதி கொட்டிடுவர், என்ற உண்மையை ஊராள்வோருக்கும், உதவாக்கரைத் திட்டங்களால் மக்களை உன்மத்தர்களாக்கிடும் உலுத்தர்களுக்கும் உணர்த்துவிக்கும் உன்னதத் திருநாள், மே தினம். பாடுபட்டால், பலன் உண்டு, என்ற பாடத்தைப் பாரிலே, பஞ்சையும் பராரியும், பகல் பட்டினியும், உணரத் தொடங்கினால், உலகில் ஓடப்பர், எப்படி இருக்க முடியும்? கதிரோன் கிளம்பிய பிறகு, மூடுபனி நிற்குமா! மே தின விழா, மக்களின் மேன்மைக்குரிய, சுகவாழ்வுக்குரிய, இன்பத்துக்குத் தேவையான, வசதிகள் நிரம்பிய இவ் உலகிலே, இல்லாமை இருப்பது ஏன்? என்ற புரட்சிப் பொறிக் கேள்வியைத் தோழர்களின் உள்ளத்திலே உலவ வைக்கும் பெருநாள். இயற்கையின் கோபத்தை அடக்கி, இன்பம் வழியச் செய்யும் பாட்டாளிகளின் கண்களிலே நீர்வழியச்செய்து, முதலாளிக் கூட்டம், இலாபமெனும் கோட்டை கட்டிப், போகமெனும் உப்பரிகை அமைத்து, செருக்கெனும் சிங்காரியுடன் சரசமாடிக்கொண்டு, முன் வாயற்படியிலே மதமெனும் கரியைக் கட்டிவைத்து, மற்ற வாயற்படிகளிலே அரசியல் அதிகாரமெனும் சூலாயுதக்காரரை நிறுத்திவைத்து, வெளியே வேதாந்தி எனும் வேவுகாரரை ஏவி மக்கள் மனதில், மாய்கை, மறு உலகு, கர்மம், என்ற விதைகளைத்தூவி கோழைத்தனம் எனும் பாசக்கொடி படரச்செய்து, தமது குதூகல வாழ்க்கையை நடத்துகின்றனர், என்ற அறிவுரையை, உழைப்பவர் உணரச் செய்து உறுதி தரும் நாள், மே விழா. செங்கொடி தாங்கிய வீரர்கள் பல்வேறு இடங்களிலே இவ்விழாவினைக் கொண்டாடினர். சோவியத் நாட்டிலே, இவ்விழா, பீரங்கி வேட்டுச் சத்தத்தைப் பின்னணிக் கீதமாகக்கொண்டு நடந்தேறியது. விண்ணிலே நாஜி விமானங்கள் பறந்திடினும், மண்ணிலே ரஷிய மக்களின் இரத்தம் குழம்பிடினும், நாஜியின் நாசக்கருவிகள் நாட்டை நானாவிதத்திலே நலிய வைத்தாலும், அந்த வீரமக்கள், பாட்டாளியின் விடுதலை விழாக் கொண்டாட மறக்கவில்லை. மாஸ்கோவில் மே விழா, மனோஹரமான காட்சியாக இருந்ததாம். மாளிகைகளிலே மலர்மாலை சூட்டப்பட்டுத் தலைவரின் உருவப்படங்கள் காட்சி தந்தனவாம். மக்கள், செங்கொடி ஏந்தி, முழக்கமிட்ட வண்ணம் ஊர்வலம் சென்றனர்.

மாஸ்கோவுக்கு வெளியே, க்யூபாவிலே, குற்றுயிராகச் சோவியத் வீரர் கிடக்கக்கூடும், சிகிச்சைச் சாலைகளிலே செஞ்சேனை வீரர்கள், நோயுடன் போராடிக் கொண்டிருக்கக் கூடும். ஆம்! சொல்லொணாத் துக்கத்துக் கிடையேயுங்கூட அந்தச் சோர்விலாச் சூரர்கள் மே தின விழாவை மறக்கவில்லை, எப்படி மறக்கமுடியும்!

மூச்சை அடக்கிக் கடலுள் மூழ்குவோர், குடல் நோகக்குன்று மீதேறுவோர், கைகால் அலுக்கக் காடுகளைவோர், விலாநோக வயலிலே வேலை செய்வோர், உடலும் உள்ளமும் வெந்திடத் தொழிற்சாலையிலே உழைப்போர், எனும் இன்னோரன்ன பிற தோழர்களின் இருதய கீதமல்லவா, மே விழா! அதனை எங்ஙனம் மறக்க முடியும்?

அவன் குளித்தெடுத்த முத்து ஒரு குமரியின் செவியிலே கூத்தாடுவது காண்பான், வீட்டிலேயோ அந்தத் தொழிலாளியின் குமரி குளிர்போக்கும் போர்வையின்றி உடல் நடுங்கிடக் காண்பான், அவன் உள்ளம் குமுறும், எரிமலைபோல்! அவன் வெட்டி எடுத்த தங்கத்தை ஆபரணங்களாக அணிந்த ஆடலழகிகளை அவன் வேலிக்கு அப்புறம் இருந்தே பார்ப்பான், அவன் வீட்டிலேயோ தரித்திரமன்றி வேறோர் அணி இல்லை. அவன் கட்டிய மாளிகையை அண்ணாந்து பார்த்து விட்டு, குடிசைக்குள் அவன் குனிந்து நுழைவான். வெப்பத்தைப் போக்கிக்கொள்ளச், சீமான்கள், நந்தவனம் அமைக்கத் தொழிலாளியை ஏவுவர்; அதைச் செய்து முடித்த தொழிலாளியின் உள்ளும் புறமும் தாங்கொணா வெப்பத்தால் தவிக்கும்.

அவன் செவியிலே, வேத ஒலி கேட்கிறது, வீட்டிலே வறுமையால் வாடிடும் குடும்பத்தின் அழுகுரல் கேட்கிறது. அவன் காணும் கோயில்கள் வானை முட்டுவது போலக் கெம்பீரமாக இருக்கிறது, அவன் வாழுமிடத்திலேயோ சரிந்த சுவரைத் தாங்க மூங்கிற்கொம்பு, அது முறிந்தால், அதற்குக் கயிற்றுச் சுருளைக் காப்பு! அவன் காணும் கோயில்களிலே மணியோசை கணீர் கணீர் எனக் கேட்கிறது, அவன் மனைவியோ, பசியால் அழும்பாலகனுக்குப் பால் தர இயலாததால், குழந்தையின் முதுகில் பளார், பளார் என்று தரும் அறைச்சலின் சத்தம் காதிலே விழுகிறது. அவன் வணங்கும் தேவனும் தேவியும், பொன்னாபரணமும் நவரத்தினாபரணமும் பூண்டு, பட்டுப் பீதாம்பரம் அணிந்து, பரிவாரம் புடை சூழ, பவனி வருவதைக் காண்கிறான். அவனும் அவனுடைய குடும்பமும், கந்தல் ஆடையுடன், கூலி தருவாருண்டோ வேலை செய்கிறோம் என்று கூவித்திரிய வேண்டியிருக்கிறது. அவன் திகைக்கிறான்! அந்தத் திகைப்பின் விளைவு தான், கூப்பிய கரத்தோனை குமுறிய நெஞ்சிலனை, நீர் சுரக்கும் கண் கொண்டோனை, கோழையை, வீரனாக்கி விட்டது - மற்ற இடங்களிலே - இங்கோ, அவனுக்கு நாலு வேதம், ஆறு சாஸ்திரம், பதினெண் புராணம், 64 கலை, சைவ வைணவ நூற்கள்; துவைதம், அத்வைதம் விசிஷ்டாத்வைதம், என்பன போன்றவைகள் தரப்பட்டு, எழுச்சிக்குப் பதில் விசாரமும், வீரத்தகுப் பதில் கிரகசாரச் சிந்தனையும் உண்டாகும் படி செய்து, நடைப்பிணங்களாக்கப் பட்டனர். காந்தீயம், அவர்களைத் “தேசீயம்” எனும் தொட்டிலிலிட்டு ஆட்டித்தூங்க வைக்கிறது! இந்நாட்டுப் பாட்டாளிகள் நிலை இது. எனவே, மே தின விழாக்களை ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடினாலும், மார்க்சின் கொள்கையைப் படித்தாலும், லெனினைப் புகழ்ந்தாலும், இங்குள்ள தொழிலாளர்களின் உள்ளத்திலே, புதுமை உணர்ச்சியோ, புரட்சிகரமான எழுச்சியோ இன்று வரை ஏற்படக்காணோம்.

உலக மக்கள் யாவரும் நல்வாழ்வு நடத்தத்தக்க இயற்கை வசதிகளும், அவைகளைப் பயனுள்ளதாக்கிடும் தொழில் சத்தியம், அமோகமாக இருந்தும், கஷ்டமனுபவிப்போரின் தொகை ஏராள மாகவும், சுகமனுபவிப்போர் சிறு கூட்டமாகவும் இருக்கும் பேதக் கொடுமை இருக்கிறது. களஞ்சியங்களிலே தானியங்கள் குவிந்து கிடக்க, காய்ந்த வயிற்றுடன் கஷ்டப்படும் தோழர்கள் வேறோர் புறம் குமுறுகின்றனர். தேக்கம் ஓரிடத்தில், தவிப்பு மற்றோரிடத்தில்; ஒரு சிலர் பூந்தோட்டத்தில் பாலைவனத்திலே மிகப் பலர் என்றுள்ள இம்முறையை உலக முரண்பாடு என்றுரைத்தார், காரல் மார்க்ஸ். ஆனால், இந்த முரண்பாட்டினைக் கண்டு கலங்கி, அவர் ஒடுங்கி விடவில்லை. கைவிரிக்கவுமில்லை. கடவுளாணை என்று சூதுரைக்க வில்லை. பொறுத்துக் கொள்க என்று போதனை புரியவுமில்லை - உழைத்திடும் தோழர்களே! உங்கள் உழைப்பின் பலனை, ஒரு சிறு கூட்டம் இடையே நின்று தடை செய்து, தேக்கிக் கொள்கிறது, எனவேதான், உங்களுக்கு வரவேண்டிய பலன் உங்கட்குக் கிடைப் பதில்லை, எனவே, இந்த “இடைச்செருகல்களை” அப்புறப்படுத் துங்கள் என்று கூறினார். பாட்டாளியின் பரணி இடிமுழக்க மென்றெழுந்ததும் நச்சரவுபோன்ற போகப்பிரியர்கள் பிடரியில் கால்பட ஓடினர். இங்கோ, பிரபஞ்ச முரண்பாடு, ஏன் இருக்கிறது என்பதற்கு, வேதாந்தம் பதில் கூறிவிட்டது; சுகமும் துக்கமும் மாறி மாறித்தான் வருமப்பா, இந்த லோகத்திலே கஷ்டமனுபவித்தால் அடுத்த லோகத்திலே சுகம் உண்டு என்று நயவஞ்சகம் பேசி, மக்களை நலியச் செய்தனர்.

எனவேதான், நமக்குச் சமதர்மத்திலே ஆர்வம் நிரம்ப இருப்பினும்; அதற்காக உழைக்கச் சளைக்க மாட்டோம் என்றாலும், காந்தீய வேதாந்திகளும், மத போதகர்களும், பார்ப்பனியப் பாதுகாவலரும், பீடங்களில் இருக்கும்வரை, வழி மறைத்திருக்குதே என்றே குமுற வேண்டும் என்பதை உணர்ந்து, இந்தக் கூட்டத்தின் கொட்டத்தை அடக்கும் பணியாற்றி வருகிறோம். ஜார்சாயுமுன் ரஸ்புடீன் சாயவேண்டும் என்பது எமது நோக்கம்; அதற்கேற்பவே, எமது போர் முறையை அமைத்துள்ளோம்.

துப்பாக்கிக்கும் ஈட்டிக்கும், தடியடிக்கும் மார்பு காட்டியே, மேதின விழாவின் காரணகர்த்தர்கள், மேதினியில், இந்நாள் தோன்றிடச் செய்தனர். 16, 12, 10 மணி நேரங்கள் செக்கு மாடுகள்போல் உழைத்து அலுத்த தோழர்கள், நாளொன்றுக்கு 8 மணி நேரமே வேலை செய்வோம் என்று உறுதியுடன் கூறினர். 1880ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி, இச் சூள் உரைத்த, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டம் கிளர்ச்சி நடத்திற்று. கிளர்ச்சியை அடக்கக் கடுமையான தண்டனைகள் தரப்பட்டன. கஷ்ட நஷ்டம் அதிகம். ஆனால், தோழர்கள் துளியும் அஞ்சாது கிளர்ச்சியில் உறுதியுடன் நின்றனர், வென்றனர், அவர்கள் அன்று சிந்திய இரத்தத்தை ஆண்டுதோறும் மேதின விழாவில், பாட்டாளி மக்கள் தமது நினைவினில் இருத்துவர். அதனால் உண்டாகும் உணர்ச்சியே ‘கவைகளை’ உண்மைக் காட்சிகளாக்கும். இவ்வாண்டு மே விழாவில் ஸ்டாலின் பேசுகையிலே இதுபோது உலகுக்கும், சோவியத் நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள இடுக்கணைத் தீர்க்கத் தீரமாகப் போரிட வேண்டும் என்பதனை வலியுறுத்திச் செஞ்சேனையின் வீரத்தையும் தியாகத்தையும் பாராட்டியதுபோல, மேதின விழாவன்று, பொதுவான இலட்சியத்தை பற்றி அறிந்து கொள் வதுடன், திராவிடத் திருநாட்டினைக் கெடுத்துவரும் ஆரியத்தை அழிப்போம், என சூள் உரைத்து சோர்வின்றி உழைக்கத் திராவிடத் தோழர்கள் முன் வேண்டுகிறோம். ஏனெனில், ஆரியம் அழிந்தாலன்றி இங்கு அபேதவாதம் ஏற்படாது. புகுத்தப்படினும் நிலைக்காது. எனவே மே தினவிழா முழக்கமாகத் திராவிடத் தோழர்கள்,

ஆரியம் அழிக,
அபேதவாதம் வாழ்க
சனாதனம் வீழ்க
சமதர்மம் வாழ்க
என்ற சூளுரைகளைக் கொள்ள வேண்டுகிறோம்.

(9.5.1943
)