அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மீண்டும் தோல்வி!

தமிழருக்கு, இதோ, மீண்டும் ஒரு தோல்வி. கிடைத்துவிட்டது. இம்முறை, காங்கிரஸ் - ஜஸ்டிஸ் என்ற போர் இல்லை, வெள்ளையரை விரட்டும் வீரர் ஒருவர், மற்றவர் குலாம் என்ற சவடாலும் இல்லை, பச்சையாக, பகிரங்கமாக நடந்த பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போட்டி! இதிலே, பார்ப்பனர், ஸ்ரீகோபாலசாமி ஐயங்கார் ஜெயித்தார், தமிழர், தமிழரின் நலனுக்காக உழைத்து வருபவர், வகுப்புவாரி நீதியை வகுத்த செம்மல், தங்கமான குணமும் தயாளசிந்தையும், நிர்வாகத்திறனும் கொண்ட, நமது முத்தைய்ய முதலியார் தோற்றார்.

என்ன இருந்தாலும் காங்கிரசை ஆதரிக்கவேண்டுமே - என்று வாதம் செய்தனர் முன்பெல்லாம். காட்டிக் கொடுக்கும் தமிழர்களுக்கு இந்தத் தேர்தலில் இந்த வாதமும் செய்ய வழியில்லை. ஏதோ, சுயராஜ்யத்தை அவர்கள் வாங்கித் தருவதாகச் சொல்கிறார்கள், பார்ப்போமே அவர்களுக்குத்தான் ஓட் அளித்து என்று முன்பு சாக்கு கூறுவார்கள், எதிரியிடம் ஏவலராக இருக்கும் இனத் துரோகிகள். இம்முறை அந்தச் சாக்குக் கூறவும் இடமில்லை. நடந்தது மத்ய சர்க்காரின் மேல்சபைத் தேர்தல். சட்டத்தை நொறுக்க, வெள்ளையரை விரட்ட வரியே இல்லாமல் செய்ய நடந்த தேர்தலும் அன்று! ஓர் ஐயங்காருக்கும் ஒரு முதலி
யாருக்கும், ஆரியருக்கும் திராவிடருக்கும், வெளிப் படையான போர், இதிலே, ஆரியருக்கே வெற்றி கிடைத்தது.

முதலியார் ஏகாதிபத்யதாசர், ஐயங்காரோ, ஏழை பங்காளர், முதலியார் பதவி வேட்டைக்காரர், ஐயங்கார் பதவி என்ற பேச்சு கேட்டாலே பத்து காதம் பறப்பார் என்று, புளுகில் புரளுவோரும் சொல்ல முடியாது. சாதாரண முதலியாருக்கும், சர். ஐயங்காருக்கும், மாஜி மந்திரிக்கும் மாஜி திவானுக்கும், போட்டி, இதிலே ஆரிய, சர், வெற்றி பெற்றார். இதன் பொருள் என்ன? பார்ப்பனர் வெற்றி பெறக் காங்கிரஸ் இருந்தாலும் சரி, இல்லாமற் போனாலும் சரி, பார்ப்பனீயத்தை நம்பிடும் பதர்கள் உள்ளவரையிலே, தேர்தல் வெற்றியை எந்தத் தெகிடுதத்தக்காரனும், பார்ப்பனரின் தயவு பெற்றுவிட்டால், அடையலாம், என்பதுதான்! திராவிட நாடு ஆரியத்துக்கு அடிமைப்பட்டிருக்கும் வரையில், திவானாக இருந்த கோபாலசாமி ஐயங்கார் மட்டுமா, திவாலாகப் போனத் திருப்பிரம்மம் கூட, எந்தத் தமிழர் தலைவரையும் தோற்கடிக்க முடியும்.

இன உணர்ச்சி எழா முன்னம், தமிழகத்திலே சூடும் சொரணையும் எப்படி இருக்க முடியும்? சொரணையற்ற சமுதாயத்திலே, கோடரிகளும் கோள்புரிவோரும், குடிலரும் குடிகெடுப்போரும், இருந்தே தீருவர். அவர்கள் ஆரியரின் தாசராக வாழத்தான் இலாயக்குள்ளவர்கள். தமிழர் அடையும் ஒவ்வொரு தோல்வியும் இந்த உண்மையைத்தான் நமக்கு உணர்த்துகின்றது. இன்று ஆரிய - திராவிடப் போர் மூண்டு விட்டது. இதை உணருவோர், முதலிலே, இன உணர்ச்சி, இன எழுச்சி, இன ஒற்றுமை என்பவைகளைப் பரப்பவேண்டும். இன எழுச்சி பெறாமுன்னம், தமிழகம் ஏமாளிகளின் இருப்பிடமாகத் தான் நலியும். ஏமாளிகள் நிறைந்த இடத்திலே ஆரியருக்கு, எந்த வேடத்திலே வெளிப்போந்த போதிலும், காணிக்கைக்குக் குறைவில்லை. இன்று காஷ்மீரத்தின் மாஜி திவான், சர். கோபாலசாமி ஐயங்கார் அடைந்த வெற்றி, ஆரியருக்குத்தான் திராவிட நாட்டிலே இன்றும் செல்வாக்கு இருக்கிறது, திராவிடரிலே தன்மானத்தை இழந்தவரும், எதிரிக்கு ஏவல்புரிவோருமே அதிகமாக உள்ளனர், என்ற உண்மையைத்தான் நமக்கு உணர்த்துகிறது. தன்மானமிழந்த திராவிடமே! இன்னம் எத்தனைகாலம் ஆரியத்தின் வெள்ளாட்டியாக வதையப்போகிறாய்! உனக்கு மீட்சி கிடையாதா? உன் கதி, மாறாதா? தலை சுழலுகிறது, திராவிடத்தின் நிலையை எண்ணும்போது!

17.10.1943