அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


மொந்தையும் ‘கிளாசு‘ம்!

“என்ன அக்கிரமம் இது? – அடுக்குமோ, ஐயன்மீர்! ஆச்சாரியார் இப்படியெல்லாம் பேசுகிறாரே – ஐந்து ஏக்கர், இவர் வீட்டுச் சொத்தா என்ன!“, இவ்விதம், ஆங்காங்குள்ள காங்கிரஸ்காரர்கள் உறுமத் தலைப்பட்டுள்ளனர்.

தோழர் காமராஜ், அரசியல் தியாகிகளின் வக்கீலாகி, ஐந்து ஏக்கர் அவசியம் தரப்பட வேண்டுமென்பதை, ஆத்திரமான வார்த்தைகள் மூலம், ஆச்சாரியார், யார்? என்று பிறரைக் கேட்கும்படித் தூண்டி விடுவதன் மூலமும், கூறி வருகிறார்.

சுயராஜ்யப் போராட்டத்தின்போது, உயிரையும் வியர்வையும் தத்தம் செய்த வீரர்களின் கல்லறைகளைக் கேலி செய்வது பித்தனின் செயல். நாட்டின் விடுதலைக்காக, உயிரையும், பொருளையும், குடும்ப சுகத்தையும், குழந்தை மழலையைம், தத்தம் செய்தோர் பலர் இந்திய பூமியில் என்று மட்டுமல்ல, அடிமைப்பட்ட நாடுகளை மீட்கும் அறப்போரிலீடுபடும் இந்த அரசியல் வீரர்களின் பெயர்கள் அந்தந்த விடுதலை வரலாறுகளின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். தவறல்ல, இது மக்கள், அந்த அரசியல்வாதிகளுக்கு மாலையிடுவதும் மாவீரர் எனப் போற்றப்படுவதும், சகஜம். இதுவும் தவறல்ல. ஆனால், அவ்விதம் போரிட்டோர், அரசியல் அதிகாரித்தைப் பெற நேர்ந்தால், மாரடித்தற்குக் கூலி கொடு!“ என்று கேட்பதுபோல, விடுதலைப் போரில் கலந்து கொண்டேன் – எடு பணம், கொடு நிலம்‘ என்று கேட்கிற காட்சியை, இங்கே தான் – அதுவும் காங்கிரஸ் கூடாரத்தில் – காண முடிகிறது.

விடுதலைப் போரில் கலந்து கொண்டதற்குக் கூலி!

சுயராஜ்யப் போரிலீடுபட்டேன், கொடு, நிலம்!

இவ்விதம், காங்கிரஸ் அதிபர்களே முடிவு செய்து ஆளுக்கு ஐந்து ஏக்கர், பங்கு போட்டுக் கொள்ளலாயினர்.

இவ்விதம் பங்கு போடும் வேலை, ஒவ்வோர் ஜில்லா கலெக்டரையும் இழுத்து அடித்தது.

நேற்றுவரையில் நிலத்தை உழுது பயிரிட்டவனிடமிருந்து, கதிர் காண உழைத்த உழவனிடமிருந்தும், பற்பல நிலங்கள் பலாத்காரமாகப் பிடுங்கப்பட்டு, செல்வாக்குமிக்க காங்கிரஸ்காரர்கள் வசம் போயிற்று. பல இடங்களில், இந்த அக்கிரமத்தைக் கண்டு, குமுறினர் – கொந்தளித்தனர், மக்கள். அவர்கள், மக்கள்தானே? தடியையும், சட்டத்தையும் காட்டி மிரட்டினர், காங்கிரஸ் அதிபர்கள்.

இப்போது, அன்பர் ஆச்சாரியார் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கும் முறையைக் கண்டிக்கிறார்.

“ஆச்சாரியார், யார்? அவர்மட்டும் அரசியல் பென்ஷன் வாங்க வில்லையோ! மாதா மாதம் கவர்னர் ஜெனரல் பென்ஷன் வருகின்றதே! - அது என்னவாம்?“ என்று காங்கிரஸ்காரர்கள், சீறுகிறார்கள்.

மொந்தைக் குடியன், ‘கிளாஸ்‘ குடியனைக் கேலி செய்வதை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்.

உண்மைதான்! காங்கிரஸ்காரர்களுக்கு, ஐந்து ஏக்கர் நிலமளிப்பது கூடாதென்று ஆச்சாரியார் இது போது பேசி வருவதையும், அதே நபர் மாதம் அரசியல் பென்ஷனைக் கைநீட்டி வாங்கி வருவதையும், சிந்திப்போர், திகைக்கவே செய்வர் – குடியன் கதை, ஞாபகம் வரும்.

அன்பர் ஆச்சாரியார், காங்கிரஸ் ‘தியாகிகள்‘ மீது பாய்வதற்குக் காரணம் உண்டு. அந்தத் ‘தியாகி‘கள் யாவரும், காமராஜின் எடுபிடிகளாக இருக்கிறார்கள். அதனால்தான், ஆச்சாரியார் கூடாதென்றதும், சல்லடம் கட்டிக்கொண்டு தனது தோழர்களின் ‘வக்கீலா‘கிறார், தோழர் காமராஜ்.

காமராஜை மக்கள் மன்றத்தில், இழுத்து விடுகிறார், ஆச்சாரியார் தன்னை ‘நல்லவன்‘ எனும் போர்வை மூலம் போர்த்திக் கொண்டு!

ஆச்சாரியாரின் தந்திரம் அறிந்தவரென்றாலும், சூழ்ந்திருக்கும் காங்கிரஸ்காரர்களின் தொல்லைகளை ‘அடைக்க‘, தோழர் காமராஜ், ஐந்து ஏக்கர் குறித்து சிரத்தைக் கொண்டு அலைகிறார்.

மூலைத்தெரு, முத்தன், கொடி தூக்கி கோவிந்தன் குப்பையர் தெரு குப்பன், இத்தகைய பட்டியலில் வருவோரா யிருந்தால், ஜெய்ஹிந்த்‘! இதெல்லாம், மகாத்மாவுக்குப் பிடிக்காத விஷயம். போலோ, பாரத்மாதாகி ஜே! பிறகு வருகிறேன்‘ என்று வந்து விடலாம் – ‘வக்கீல்‘ ஆக வேண்டிய அவசியமும் நேராது.

ஆனால், தோழர் காமராஜரைச் சூழ்ந்தவண்ணம், ‘ஐந்து ஏக்கர்! ஐந்து ஏக்கர்! என்று பஜனை செய்து கொண்டிருக்கும் கும்பலிருக்கிறதே, அது சாதாரணமானத்ல்ல – குடிசை புரிசைச் சேர்ந்ததல்ல! கொடிதூக்கும் தொண்டர் குழாமல்ல!.

இருமினால் ஏழு எட்டுப் பேர் ஓடி வந்து நிற்கக் கூடிய வசதி இரண்டு மூன்று கார், நஞ்சை, புஞ்சை, இத்யாதி, வைபவங்களுடன் வாழும் ‘ஏழைகள்‘ எனவேதான், அரசியலில் தியாகப் பரம்பரையை ஆதரிக்கக் கிளம்புகிறார்.

“ஆச்சாரியார் கூறுவது நியாயம்தானே? அரசியல் தியாகம்எனும் பேரால் ஐந்து ஏக்கர் கூலி கேட்பது அநாகரிகமான காரியமாச்சே! காமராஜ் ஏன், இப்படிக் கதறவேண்டும்?“ என்று காமராஜின்பால் பொதுமக்களுக்குக் கெட்ட எண்ணம் ஏற்பட்டுவிடக் கூடாதேயென்கிற சிந்தை கொண்டோர் கேட்கலாம் – பலர், கேட்கிறார்கள்.

ஆனால், காங்கிரசின் இன்றைய அமைப்பை அறிந்தோர், இந்த ‘பாகப்பிரிவினை‘ச் சண்டையை, நன்றாக அறியலாம்.

“தரிசு, நிலம், சாமி! தைவான் வசம் உள்ளது. நமது கழனிக்கு அடுத்தாப் போலிருக்கிறது“ – என்று தலையாரி சொல்லக்கேட்கும் தர்மலிங்கம் ஒரு மிராசுதாரர், காங்கிரஸ் கட்சியிலிருந்து வருபவர். ஐந்து ஏக்கருக்கு, ‘அப்ளை‘ செய்யும் அருகதையும் உண்டு. என்ன செய்கிறார், அவர்? எடுக்கிறார் கடிதம்! விடுக்கிறார். தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவருக்கு!! கொடி தூக்கி கோவிந்தனல்லவே, தர்மலிங்கம். மறுக்கவா முடியும்? நாளைய தினம் எலக்ஷனுக்கு தர்மலிங்கமன்றோ வண்டிவாகனமும், பெட்டியைத் திறந்து பணமும், ஆள்வசதியும் அளிப்பவர். சிந்தை சுழல்கிறார் காமராஜ்!

இதுபோன்ற, ‘தர்மலிங்கங்கள்‘தான் ஐந்து ஏக்கருக்கு அடிபோடுகிறார்கள். மண்டையுடைந்த மாணிக்கம், மார்பு வீங்கி மாய்ந்த மணாளனை இழந்த விதவை விமலா, தந்தையை சுயராஜ்யப் போரிலிழந்த குழந்தைகள், இன்னோரன்ன உண்மை வீரர்களின் குடும்பங்கள், எங்கோ! எப்படியோ! ஆனால், செல்வாக்குள்ள சீமான்கள் மட்டும் ‘தியாகமே தியாகம்!‘ என்று, ஏலம் கூவுகின்றனர்.

காஞ்சிபுரத்தை பொறுத்தமட்டில் வசதியும் வாய்ப்பும் பெற்றோர் சிலர், ஐந்து ஏக்கரின் அதிபதிகளாயினர். அவர்களைக் குறிப்பிட்டு, ‘ஐயன்மீர்! ஏனிந்த, நிலம்? திருப்பிக் கொடுத்து விடுங்கள்! தியாத்துக்கேன் கூலி? என்று கேட்டு பொதுக் கூட்டங்களிலும் துண்டறிக்கைகள் மூலமும், நகரக் கழகத்தார், வேண்டுகோள் விடுத்தனர். கேட்பரா? ஏற்கத்தான், முடியுமா? இதே நிலைதான் எங்கும் வாய்ப்பும் செல்வாக்கும் மிக்கோர், ‘அகப்படவில்லை லாபம்!‘ என்று சுருட்டிக் கொள்வதிலேயே கண்ணுங்கருத்துமாயிருந்து வருகின்றனர்.

பெரிய வியாபாரி! ஆஸ்திபூஸ்தி ஏராளம்! அத்தகைய ஒரு நபர் ‘தியாகம் மான்யம்‘ கோருகிறார்.

அவரையணுகி நெருங்கிய நண்பராக இருந்தால் விசாரித்துப் பாருங்கள் – “என்னங்க நமக்கு இதுதாங்க, சான்சு! அவனவன் என்னென்னமோ, சுருட்டுகிறான். மந்திரிங்கிறான், ஒருத்தன் மந்திரிக்குக் காரியதரிசிங்கிறான்! எப்படியெப்படியோ? பணம் சேர்க்கிறார் நம்ப அதிர்ஷ்டம் இந்த அளவோட நிக்குது“ என்று விசாரப்பட்டுக் கொள்வாரே தவிர, ‘நாட்டின் சொத்து நமக்கேன்?‘ என்கிற உணர்ச்சி எதிரொலிக்காது.

எல்லோரும் சுருட்டுகிறாகள். இந்த எண்ணம், காங்கிரஸ் கூடாரத்தில் அலை மோதுகிறது – அதுவும், மிகமிக அதிகமாக.

‘ஐந்து ஏக்கர்‘ கூடாதென்கிறார், ஆட்சியிலிருப்பவர்!

அவர் ஆட்சியிலிருக்கிறார் – அகப்பட்டதைச் சுருட்டுகிறார். நாம் மடுடம் சொத்தையோ? – என்கிறார், கட்சியிலருப்பவர்.

இந்த ‘அடிபிடி‘ச் சண்டை, காங்கிரஸ் கட்சியில், சர்வ சாதாரணமாகிவிட்டது.

ஆட்சியிலிருப்போர்மீது கட்சிப் பிரமுகர்களுக்கு எரிச்சல்.

கட்சிக்காரர் மீது, ஆட்சியாளருககு, அதிருப்தி.

இந்த இக்கட்டான நிலை, காங்கிரஸ் ஆட்சியிலும் கட்சியிலும் வளர்ந்திருக்கிறது.

இந்த உண்மையை நாம் கூறினால், ‘இவர்கள் இப்படித்தான் கூறுவார்!‘ என்பார்கள், தேசீய நண்பர்கள்.

இந்த உண்மையை ஆந்திரக் காங்கிரஸ் தலைவரான சஞ்சீவிரெட்டி கூறுகிறார். தோழர் சஞ்சீவிரெட்டி, ஆந்திரக் காங்கிரஸின் தலைவர் – ஆகவே, அவர் கூறுகிறார். “கவர்னர் ஜெனரல் ஆயிரமாயிரமாகப் பணம் வாங்கிக் கொள்கிறாரோ! அது மட்டும் கவுரவமோ? ஏதோ அஞ்சு ஏக்கர் கேட்டால் தேசபக்திக்கு எப்படி குறைவேற்பட்டுவிடும்! அவர்களெல்லாம் அப்படி வாங்கும்போது, நாங்கள் இதைகூடக் கேட்கக் கூடாதா!“, என்கிறார்.

விஜயவாடா தாலுக்கா அரசியல் தியாகிகள் மாநாட்டில் கடந்த 21ந் தேதி பேசுகையில், இவ்வண்ணம் கேட்கிறார்.

கவர்னர் ஜெனரல் – கவர்னர் – மந்திரிகள் –இவ்விதம், பலர், சம்பாதிக்கின்றனர்.

சாதாரண எங்களுக்கேன், ஐந்து ஏக்கர் தரக்கூடாது?

சஞ்சீவி ரெட்டி, கேட்கிறார்! ஆந்திரத் தலைவர், இவ்விதம் கேட்கிறார்.

‘ஜனநாயகம்‘, பூத்துக் குலுங்குவதாகப் பண்டித நேருவைப் பேட்டி கண்ட அமெரிக்க அரசு உறுப்பினர் டல்லஸ், வாயாரா, நாவாரப் புகழ்கிறார்.

ஆனால் அந்த ஜனநாயகத்தைத் தூக்கிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியின் நிலையே. இவ்விதம் இருக்கிறது.

ஒரு பக்கம் – பதவிகள் பேரால் பணம் கொள்ளை!

மற்றோர் பக்கம் – கட்சியைக் காட்டி சொத்து கொள்ளை!

அதுவும் ஒருவரையொருவர் போட்டி போட்டவண்ணம், உரிமையோடு கொள்ளை அடிக்கிறார்கள்.

இவர்கள் கொள்ளைக்குப் பணம் செலுத்திக் கொண்டிருக்கும் மக்களோ, எலும்புந் தோலுமாகிக் கொண்டிருக்கிறார்கள் எதிர்த்துக் கேட்டால், கட்சியும் சீறுகிறது! ஆட்சியும் பாய்கிறது!

திராவிட நாடு – 31-5-53